தென்னவனும் தேன்யாழியும் – 3

அத்தியாயம் 3 

 

‘வாழ்க்கை ஒரு குழப்பம், அதன் விடை காணுங்கள். வாழ்க்கை ஒரு இலக்கு, அதனை எட்டிப்பிடியுங்கள்’ 

-பகவத் கீதை

தேன்யாழி ‘தான் போலீஸ்தானா’ என உறுதி செய்ய அடையாள அட்டை கேட்கிறாள் என அறிந்ததும், தென்னவனின் அகத்திற்குள் அழகாய் சேர்கிறது ஆச்சரியக்குமிழி ஒன்று. 

‘கிராமத்து பைங்கிளின்னு நினைச்சா,  இது கிரைம் ப்ராஞ்ச் கிளி’ போல என அவன் மனம் சொல்ல, அதற்குள் அவனிடம் அடையாள அட்டையை அவள் நீட்டினாள்.

அவளது சமயோசிதம் புரிந்தாலும், சீண்டிப் பார்க்க விழைந்தது தென்னவன் மனம். அது அவன் குணம். 

“இது டூப்ளிகேட்டா கூட இருக்கலாம்” என்று   நக்கலாய் சொல்ல, அந்த பழைய ஐடியைப் பார்த்தாலே தெரிந்தது, பயன்படுத்தி பாழாய்ப் போயிருக்கிறதென.  ஆனாலும்,  தேன்யாழி, 

“ஓ” என்றவள் கூகுளில் திருவாரூர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்  என தேடி,  இவர்கள் தாலுக்காவிற்குப் பார்த்தால் அதிலும் ‘தென்னவன் தேன்தமிழன்’ என இவன் பெயரே.  அவள் செயலில் இன்னும் ஏறிக்கொள்கிறது அவள் மீதான ஆச்சரியம். 

தெரிந்து தெளிதல் அறிவல்லவா…??

அதற்குள் அங்கிருந்த மாமா, இவள் இப்படி தெரியாத ஆணோடு பேசுகிறாளே என கோபம் கொண்டு, 

“இன்ஸ்பெக்டர் தம்பிக்கிட்ட என்ன புள்ள பேச்சு வேண்டிக் கிடக்கு உனக்கு?” என அதட்டினார்.

“என்ன பேச்சுன்னு பேசறப்ப தெரிஞ்சிக்கங்க மாமா.  உங்க எதுக்க தானே பேசுறேன்” என்றவள்

“ஏன் சார் போலீஸா இருக்கீங்க? ஆனா கண்ணை எல்லா சைடும் வச்சுப் பார்க்க மாட்டீங்களா?” என அவன் உட்கார்ந்திருந்த இடத்தின் அருகில்  இருந்த குட்டி சந்தினைக் காட்டினாள்.

‘இதுக்கு நான் என்னடா செய்றது?’ என்பதாய் அவனின் பார்வை  இருக்க, 

“இது கேஸா வருமா,  இல்ல கம்ப்ளைண்ட் செய்ய        முடியுமான்னு.   எல்லாம் தெரியல. ஆனா தப்புன்னு பட்டுச்சு,  போலீஸ் கேட்பாங்கன்னு தான் உங்க கிட்ட சொல்றேன்.  பாருங்க ஸார் எவ்வளோ பாட்டில்னு? குடிச்சிட்டு இங்க போடுறாங்க. நீங்களும் அது பக்கத்துல உட்கார்ந்திருக்கீங்க, அந்தோல இருக்க பஸ் ஸ்டாண்ட் குள்ள இராத்திரியானா நாலஞ்சு பேரு கூடி உட்கார்ந்திருக்காங்க, அப்புறம்  மாணிக்கக் குளத்துக்கிட்ட  இருக்க திண்டுல குடிக்கிறாங்க. இவங்க எல்லாம் டாஸ்மாக்ல தான குடிக்கணும். இப்படி நாங்க போற  வர வழில குடிச்சா என்ன செய்ய? நைட் எப்படி நாங்க பொம்பளைங்க வெளியூர் போகணும்னா பஸ் ஸ்டாண்ட் வர முடியும்?” என்று கேட்டாள் தேன்யாழி.

“அதெல்லாம் நாங்க இந்த பயலுங்க கிட்ட சொல்றோம். நீ போ                                   புள்ள” என அந்த மாமா விரட்ட, 

‘யோவ்! நீயும் தானேயா அப்படி செய்ற’ என்று மனம்ள் திட்டியவள் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

“இவங்க எங்காவது போய் ஆள் நடமாடாத இடத்தில் குடிக்க சொல்லுங்க சார். நாங்க ஏன் இவங்க சந்தோசத்துக்காக எங்க சுதந்திரத்தை விடணும்? சின்ன பசங்க டியூசன் போய்ட்டு நைட்டு வரணும்னா கூட வீட்டு ஆளுங்க அழைச்சிட்டு வரவேண்டி இருக்கு”

“ஏன் யாராவது மிஸ் பிகேவ் பண்ணினாங்களாம்மா?” என்ற தென்னவன் பேச்சினில் தெளிவாய் காரம் தெரிய, 

“இல்ல சார்! ஆனாலும்,   ஒரு சேஃப்டிக்கு” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கையில் பேருந்து வரும் சத்தம் கேட்டது.

“அச்சோ பஸ்! சார் நான் வரேன்” என்றபடி வேகமாய் சாலையைக் கடந்து வந்த பேருந்தில் ஏறிச் சென்றாள். 

“அது விளையாட்டுப் பிள்ளை சார். நம்ம பயலுங்க கிட்ட நான் சொல்லி வைக்கிறேன்.” என அந்த மாமா சொல்ல

அவரிடம் தலைசாய்த்து வண்டியை எடுத்துக் கிளம்பினாலும், 

‘நீங்க சொல்லியிருந்தா அந்த பொண்ணு ஏன் டா எங்கிட்ட சொல்லுது?’ என நினைத்தவன், எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தான். 

கல்லூரி சென்றால் அங்கு தாமரை செல்வி அளவுக்கு மீறி அமைதியோடு இருக்க, அதைக் கண்ட குந்தவை , 

“என்னடி இவ ரொம்ப அமைதியா இருக்க?” என தேன்யாழியிடம்     விசாரிக்க, 

“ம்ம். தாமரை இன்னிக்கு மலருமா மலராதான்னு யோசிக்கறா” என சொல்லி சிரித்தாள்.

“உன்னை” என தாமரை முறைக்க, 

“என்ன விசயம் சொல்லுங்கடி” என குந்தவை மீண்டும் கேட்டாள்.

“அது இண்டர்னல்ஸ் முடிஞ்சதுல பேப்பர் கொடுப்பாங்களே. அதான்  தாமரை மலருமா மலராதான்னு ?” என தேன்யாழி இழுக்க

“ஏன் தேனு அவளை பயப்படுத்தற? அதெல்லாம் நீ பாஸ் ஆகிடுவ லோட்டஸ்” என ஆறுதல் சொன்னாள் குந்தவை. 

“இப்படி மலர்ந்தும் மலராத பாதி மலர் போல் ஆகிட்டியே தாமரை, ஆயிரம் தாமரை மொட்டுகளே எல்லா வாத்தியாரும் வந்து இவளைக் கொட்டுங்களேன்.” என தேன்யாழி பாட, கூட சேர்ந்து அவர்கள் இன்னொரு தோழி சூரியகாந்தியும் உடன் சேர்ந்து பாட, ஒரே பாட்டும் கும்மாளமுமாய் இவர்கள் இருக்க, ஆசிரியர் வரவும் அப்படியே கப் சிப் ஆயினர். 

ஒரு வழியாக தாமரை மலர்ந்த பின் தான் அவள் முகமும் மலர, உடனே தேன்யாழியை நாலு அடி அடித்தவள், 

“திருவிழாவுக்கு  என்ன பண்ண போறாங்களாம்டி இந்த வருசம்?” என ஆர்வமாய்க் கேட்க

“நான் தான் எல்லாம் பார்க்கிறேன் பாரு, போடி” என தேன்யாழி முகம் திருப்பினாள்.

“ஹேய்! பாண்டி அண்ணா அதெல்லாம் பார்க்கும் தானே, அண்ணன் கிட்ட கேட்க வேண்டியது தானே?” என சூர்யகாந்தி கேட்க

“யோசனை மஞ்சவாடிதான், போடி.  கொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் கூட பேசியாச்சு.  இவளும் இவங்க அண்ணனும் அப்படியே பேசிட்டாலும்” என அழுத்துக் கொண்டு தாமரை சொல்ல தேன்யாழி அவளை முறைத்தாள்.

தேன்யாழிக்கு எப்போதும் இந்த பேச்சு வருத்தம் தருமென உணர்ந்த குந்தவை, 

“சரி திருவிழாவில என்ன செய்வீங்க?” என ஆர்வமாய் விசாரிக்க

“ஏன் புள்ள நீ போன தடவ வரல?” என்று தாமரை கேட்டாள்.

அதற்குள் தேன்யாழியே, “அவ திருவிழா முடிஞ்சு தானே ஜாயின் பண்ணினா” என்று சொல்ல, தாமரையும் சூர்யகாந்தியும் திருவிழாவைப் பற்றி சொல்ல, அதை ஆர்வமாய்க் குந்தவைக் கேட்பதை கண்டுகொண்டவள், 

“ஹே குவா! இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தான் திருவிழா.  சனிக்கிழமையே சாமி ஊர்வலம் வரும். அதனால நீ வெள்ளிக்கிழமை காலேஜ் முடிஞ்சதுமே எங்க கூட எங்க ஊருக்கு வர, என் வீட்ல தங்குற.  திருவிழா முடிஞ்சதும் உன்னை பத்திரமா பார்சல் பண்ணுவோம்” என தேன்யாழி சொல்ல சில நொடிகள் விழிகளில் ஒரு ஆர்வம் பளிச்சிட்டாலும் 

“வேண்டாம்டி” என குந்தவை மறுத்தாள். 

“அதெல்லாம்  கிடையாது, நீ வர அஞ்சு நாள் டைம் இருக்கு, உங்க அண்ணன்ட்ட பேசி சம்மதம் வாங்கிட்டு வர” என தேன்யாழி சொல்ல

“அதானே  நீ திருவிழா பார்க்கல தானே? பக்கத்து ஊர் தானே டி, அஞ்சு ரூபா காசு கொடுத்து டிக்கெட் எடுத்தா எங்க ஊர் வந்துடும்.  ஒழுங்கா வர ” என அனைவரும் அன்பால் மிரட்டினர்.

அதன்பின் கல்லூரி முடிய, தேன்யாழி வீடு சென்று பாத்திரங்களைக் கழுவி, ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாள். ஆறு மணிக்கு வந்தவள், அவர்கள் மாடுகளுக்குத்  தவிட்டும் புண்ணாக்கும்  வைத்தவள், பருத்திக்கொட்டையை ஊற வைத்தாள். ஆடுகளுக்கு 

சோறு வடித்த தண்ணீரைக் குடிக்க வைத்தாள். 

அதற்குள் தண்ணீர் பிடித்து செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் விட்டு வந்த அமிர்தவள்ளி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, 

“ஏன் ஆயீ? இன்னிக்கு யார் கிட்ட பஸ் ஸ்டாண்ட்ல நின்னு பேசின?” என சாதாரணமாய்க் கேட்டார்.

கண்டிப்பாக இது அந்த மாமாவின் வேலையாக இருக்கும் என்று தெரிந்தவளுக்குக் கோபம் வந்தாலும், 

“அதும்மா நம்ம கிராமத்து குடிமக்களை எல்லாம் நல்லா கவனிக்க சொல்லி அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னேன்” என்றாள். 

“அவன் கிடக்கிறான் வெட்டிப்பய, என் பொண்ணு சரியாத்தான் பேசியிருப்பா.” என்றபடி சிதம்பரம் வர

“பாரும்மா அப்பாவே சொல்லிட்டார், நீதானே போன வாரம் பஸ் ஸ்டாண்ட் கிட்ட  வரப்ப நம்ம கல்யாணி பெரியம்மா கால்ல பாட்டில் குத்திச்சு சொன்ன,  அதைப் பத்தி தான் பேசினேன்”. என்று பொறுமையாய் சொன்னாள்.

“அது சரி தேனு. ஆனாலும்,  இப்படி ஆளுங்க இருக்கப்ப போய் பேசாத, பெயரைக் கெடுத்துடும்.” என்று சொல்ல அமைதியாய்க் கேட்டுக்கொண்டாள். 

“நாலு சுவத்துக்குள்ள பேசினாலும் தப்பு, நாலு பேரு பார்க்க பேசினாலும் தப்பு! தப்பு எங்கிட்ட இல்ல, அவங்க கிட்ட தான் இருக்கு”.  என அவள் அகம் ஆக்ரோஷக் கூச்சலிட்டாலும், வெளியே அதைக் காட்டி அவள் அம்மாவை கோபப்படுத்த விரும்பவில்லை. 

அவள் அப்பாவிடம் திரும்பி,  “அப்பா, திருவிழாவுக்கு என்ன பண்றாங்க ஆர்கெஸ்ட்ராவெல்லாம் உண்டா? கரகம் நம்ம தெருக்குள்ள வருமா?” என கேட்க, அவரும் பதில் சொன்னார். 

அமிர்தவள்ளியின் சேலை முந்தானையைப் பிடித்தவள், 

“அம்மா, உங்கிட்ட சொல்லியிருக்கேன்ல என் ப்ரண்ட் குந்தவை நாச்சியார்” என ஆரம்பித்தார். 

“தெரியலடி” என்று அவர் யோசிக்க.

“அந்த மெட்ராஸ் புள்ளம்மா” என இவள் எடுத்துக் கொடுக்க

“அம்மா அப்பா கூட தவறிட்டாங்கன்னு சொன்னியே”.

“ஆமாம்மா, அந்த புள்ள திருவிழாவெல்லாம் பார்த்ததில்லை இன்னிக்கு ரொம்ப ஆசையா அதைப் பத்திக் கேட்டுச்சு. நான் நம்ம வீட்டுக்குத் திருவிழாவுக்கு வர சொல்லிக் கேட்டேன் வரட்டுமாம்மா”, என கொஞ்சிக் கொண்டு கேட்க

“அதுக்கென்னடா தாயில்லா புள்ள வேற சொல்லிட்ட தாராளமா வரட்டும்” என்றார். 

“நீ சொல்லிட்ட, அண்ணன்?” என அவள் தயங்கி சொல்ல

“அம்மாடி அவன் கட்டின வீடா இது? அவனுக்கு என்ன உரிமை இருக்கோ உனக்கும்  இருக்குடா” என்றார் சிதம்பரம். 

“அண்ணன் இதுக்கெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான், நீ அந்த புள்ளையை நம்ம வீட்டுக்குக் கூப்பிடு” என்றதும் அவள் உற்சாகமாய் ஓடிப்போக, 

“ஏங்க பையன் இருக்க வீட்டுல,  ஒரு பொம்பளை புள்ளையைக் கூப்பிட்டா யாராவது எதாவது சொல்லுவோளோ?” என்று அமிர்தவள்ளி தயங்கி கேட்டார்.

“என்ன வள்ளி நீ? திருவிழா விஷேஷம்னா  எல்லார் வீட்டுக்கும் நாலு பேரு வரது போறது தானே செந்தூரனும் கோவில் வேலைன்னு தான் சுத்துவான்.  ஒன்னும் பேச்சு வராது” என்று சொல்லவும் தான் அமிர்தவள்ளி மனம் தெளிந்தது. 

அன்று மாலை தனது போர்செட்டில் மோட்டாரை பழுது பார்த்து விட்டு, அங்கேயே குளித்து அவர்கள் நண்பர்கள் குழுமியிருக்கும், ஆற்றங்கரை பாலத்துக்கட்டைக்கு வந்தான் செந்தூரப் பாண்டியன். 

அங்கு ஏற்கனவே வந்திருந்தனர் கலையரசனும் ராமலிங்கமும். 

“ஏன் டா இந்த கபீர் பயல ரவி அண்ணா கிட்ட போய், மருந்து அடிக்கிற பம்பை கொடுக்க சொன்னேன். அவன் இன்னமும் போகல, அண்ணன் போன் பண்ணி கேட்குது, எங்க அவனுங்க?” என்று செந்தூரன் கோபமாய்க் கேட்க

“பட்டுக்கோட்டைக்குண்ணா”.

“கும்பகோணத்துக்கு பாண்டின்னே” என இருவரும் மாறி மாறி பதிலளித்து முழித்தனர். 

கண்கள் சுருங்க கோபம் தலைக்கேறி குரல் உயர்த்தி, “என்னங்கடா நடக்குது என்ன தப்பு பண்ணீங்க?” என செந்தூரன் கேட்கவும் பயந்தவர்கள்,

“அது அது” என திக்க

“டேய் உண்மையை சொல்லுங்கடா, அவனுங்களை மத்தியானத்திலேர்ந்து காணும், இரண்டு பேருமே சொன்ன வேலையை செய்யல என்ன பண்றீங்கடா?” என்று கத்தினான். 

“அது அண்ணே?” என்று கலையரசன் இழுக்க, 

உடனே ராமலிங்கம், 

“அண்ணன், அது நேத்து நம்ம பெரியப்பாவை அந்த இன்ஸ்பெக்டர் லாக் அப்புல வச்சான்ல, அதனால அவன் தங்கச்சியை” என்று அவன் சொல்ல, அவன் சட்டையினைப் பிடித்தான் செந்தூரன்.

“தங்கச்சியை, என்ன செஞ்சீங்கடா மழுங்க பயலுங்களா” என விழிகள் சிவக்க கேட்க

“கடத்தி வச்சு அவனை மன்னிப்புக் கேட்க வைக்க. அந்த பிள்ளையைத் தூக்கிட்டு பட்டுக்கோட்டை போறதா சொன்னானுங்கண்ணே! நாங்க இரண்டு பேரும் எவ்வளவோ சொன்னோம் கேட்கவே இல்ல” என அவசரமாய் கலை சொல்ல அவனின் கன்னத்தில் அறை விட்டான் செந்தூரன். 

“அவனுங்க கேட்கலன்னா, எங்கிட்ட சொல்லணும்டா. நம்ம வீட்டுப்பொண்ணைக் காப்பாத்திக் கொடுத்தான் அந்த இன்ஸ்பெக்டர், அவன் வீட்டுப்பொண்ணைத் தூக்கியிருக்கீங்க, பொம்பள புள்ள விசயம் விளையாட்டாப் போச்சா உங்களுக்கு?” என்று பல்லைக் கடித்தான். 

“அந்த பயலுங்க கிட்ட போன் போட்டு சொல்லுங்க, அந்த பொண்ணை எங்க வச்சிருக்கானுங்களோ அங்கேயே வச்சு இருக்கனும்னு, அந்த புள்ளைக்கு எதுவும் ஆக கூடாது! இல்ல தம்பிங்கன்னு கூட பார்க்க மாட்டேன் கொன்னுடுவேன் எல்லோரையும்” என்றவன் வேகமாய்த் தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு பட்டுக்கோட்டை நோக்கிப் புறப்பட்டான். 

Scroll to Top