அத்தியாயம் 9
செயலை செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு! பலனில் ஒரு போதும் இல்லை. பலன் என்பது இல்லவே இல்லை என எண்ணிக் கொள். பலனில் மீது ஆசை வைக்காதே. செயல் செய்வதில் நம்பிக்கையின்மையும் இருக்க கூடாது.
-பகவத் கீதை.
“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு எல்லாம் ஆசை இல்லை, உங்களுக்கு வேணும்னா நீங்க வேண்டிக்கோங்க” என்று ஓரக்கண்ணால் இவனைப் பார்த்துத் துடுக்காய் சொன்ன தேன்யாழி, ராமர் பாதம் இருக்கும் இடம் நோக்கி நடந்து அதனை சுற்றி வந்தாள்.
பின்னர், உயரமாய் எழும்பியிருந்த படிகளில் வந்து அமர்ந்தவள் தூணில் சாய்ந்து கொள்ள, தென்னவனும் அவள் அமர்ந்திருந்த படியின் கீழ் படியில் உட்கார்ந்தான்.
“தேனும்மா! நான் அவ்வளவா கோவிலுக்கெல்லாம் வர மாட்டேன், எக்சாம் டைம்ல் மட்டும் தான் கடவுளை தொந்தரவு செய்வேன், குந்தவை தான் நீ வாராவாரம் சனிக்கிழமை இங்க வருவன்னு சொன்னா, அதான் உன்னைப் பார்த்துப் பேசலாம்னு” என்று தென்னவன் பேச தேன்யாழி உடனே
“போலீஸா இருந்துட்டு என் பின்னாடி சுத்துறீங்களே? இது தப்பா தெரியல உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“ஹேய்! இதுல என்ன தப்பு இருக்கு போலீஸ்னா அவனும் மனுஷன் தானே? வாழ்க்கையில வேலைப் பார்த்து சம்பாரிக்கறதுக்கு என்ன யூஸ் இருக்கு? நமக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா? நானெல்லாம் சைட் அடிக்கவே லேடீஸ் காலேஜ் வாசல்ல நின்ன ஆளு!! எனக்கு மனைவியா வரப்போற பொண்ணைப் பார்க்க இவ்வளவு தூரம் கூட வரலன்னா எப்படி?” என்றதும் அவள் அவனை விளங்கா விழிகளோடு முறைத்தாள் தேன்.
“ஓஹ்! நீ நான் ரொம்ப நல்ல பையன்னு நினைச்சியோ? எங்கப்பாவோட பெல்ட்டு நாலஞ்சுது என்னை அடிச்சே பிஞ்சிப்போச்சு! அவ்வளவு வால் பையன் நான்! ஆனா இப்ப வால்தனமும் இல்லை கண்டிக்க எங்கப்பாவும் இல்லை” என்றவனின் குரல் உள்ளே சென்றிருக்க, தேன்யாழிக்கும் கேட்க கஷ்டமாய் இருந்தது.
“இப்ப உங்களுக்கு என்ன குடும்பம் இல்லன்றீங்க, குந்தவை உங்க தங்கச்சி தானே?” என்று தேன்யாழி முறைக்க
“நாளைக்கே குந்தவைக்குக் கல்யாணமாச்சுன்னா நான் தனிமரமா தான் நிக்கனும் தேனு, கூட துணை மரமா நீ வேணும்! எனக்கு இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நந்தவனத்தை உருவாக்கிடலாம்” என அவன் உணர்வுகளை சொன்னாள்.
“இப்படியெல்லாம் பேசி என்னை இம்ப்ரெஸ் செய்ய நினைக்கிறீங்களா?” என இவள் கேள்வியாய் நிறுத்த
“பேசி இம்ப்ரெஸ் செய்ய நான் என்ன பேச்சாளனா? ஏன் யாழி நீ வேற” என்றான் சலிப்பாய்.
“ப்ச் முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கோங்க நான் இப்பதான் தர்ட் இயர் படிக்கிறேன், இன்னும் நான் பீஜி பண்ணனும், அடுத்து குந்தவைக்கு நீங்க மட்டும் தான் இப்போ நெருங்கின உறவு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கனும் அதான் நீங்க உங்கப்பா அம்மாவுக்குக் கொடுக்கிற நிம்மதி. அதை விட்டுட்டு சின்னப்பையன் மாதிரி இப்படி பின்னாடி வரதெல்லாம் வச்சுக்காதீங்க. இதே நீங்க குந்தவையோட அண்ணனா மட்டும் இல்லன்னா, நான் இப்படியெல்லாம் உட்கார்ந்து பேசற ஆளே கிடையாது.” என்றாள் நிதானமாக.
“உனக்கு ஒரு விசயம் சொல்லட்டுமா? உனக்கும் குந்தவைக்கும் ஒரே வயசுனாலும் நீ ரொம்ப மெச்சுர்ட்! நீ சொல்றதையெல்லாம் நான் யோசிக்காம இருப்பேன்னு நினைக்கிறியா? குந்தவை எனக்கு முக்கியம்! ஒரு அண்ணனா அப்பாவா இருந்து அவளுக்கு நான் எல்லாம் செய்வேன். ஆனால், அதெல்லாம் வேற, என்னைப் பார்த்தா சின்னப்பிள்ளை மாதிரி இருக்கா உனக்கு? என் வயசு இருப்பத்தேழு ஆகுது.”
“இத்தனை வயசுல நான் எவ்வளவு பொண்ணுங்களைப் பார்த்திருப்பேன், இப்பவும் சொல்றேன் நிறையா பேரை பார்த்தா அழகா இருக்காங்கன்னு திரும்பி கூட பார்த்திருக்கேன், அது ஜஸ்ட் ஒரு ரசிப்பு அவ்வளவுதான் ஆனா இவங்களோட வாழணும்னு எல்லாம் தோணினது இல்லை. நீ அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்தப்போ எனக்குக் கிடைச்ச மன அமைதி எங்க வீடு அன்னிக்குத்தான் வீடாவே தெரிஞ்சது” என உயிர் வரை உணர்ந்த உணர்வினை உரைத்தான் தென்னவன்.
தேன்யாழியோ , ”இதே அன்னிக்கு தாமரையோ இல்ல வேற யாராச்சும் வந்து சமைச்சு. . குந்தவையைப் பார்த்திருந்தா கூட உங்களுக்கு அப்படி தன் தோணியிருக்கும் இது வச்சு காதல்னு முடிவு செய்வாங்களா?” என அவன் விளக்கத்தை இவள் விளாசிட
“எனக்கு நிஜமா இப்போ எவ்வளவு கோவம் வருதுன்னு உனக்குத் தெரியுமா? குந்தவை ஃப்ர்ஸ்ட் இயர் படிக்கிறப்ப எங்க வீட்டுக்கு ப்ரண்ட்ஸ் யாரும் வந்ததே இல்லையா? இல்ல எனக்கு அத்தை பொண்ணுங்க மாமா பொண்ணுங்க யாருமில்லையா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணி வாழணும்னு நினைக்கிற அளவுக்குப் பிடிச்சிருக்கு! எனக்கு மனைவின்னா அது நீ மட்டும் தான் தேன்யாழி!! காதல்ல காரணத்துக்கு இடமே இல்லைன்னு ரூமி சொல்லியிருக்கார். இதுக்கு மேல என்னால எந்த விளக்கமும் சொல்ல முடியாது” என்று அவன் தேன்யாழியை தீர்க்கமாய் பார்த்து சொன்னான்.
அவளோ எதுவுமே பேசாமல் இறங்கிப் போனாள்.
“ஏய் எதுவும் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” என இவன் அவள் முன்னால் வந்து நின்றான்.
“என்ன சொல்லணும்?”
“பிடிச்சிருக்கா இல்லை பிடிக்கலையான்னு”
அவன் கேட்கவும் தன் வலது கையை விரித்து, அவன் முன்னால் காட்டினாள்.
ஆவலில் விழிகள் விரிந்திட, அவனவளின் கை பார்த்தவன், “வாவ்!! உனக்கு மருதாணி ரொம்ப அழகா சிவந்திருக்கு. கேன் ஐ ஸ்மெல் இட் ப்ளீஸ்” என கையைப் பிடிக்க வர, கைகளை மடக்கிக் கொண்டாள் தேன்யாழி.
“ஐஞ்சு விரலும் ஒன்னா இருக்கா? இல்லையில்லை! அது மாதிரி தான் மனுஷங்களும்! உங்களுக்கு என்னைப் பிடிச்சா உடனே எனக்கும் பிடிக்கனுமா? பிடிக்கனும், பிடிக்காதுங்கறதுக்கு நடுவுல எதுவும் இருக்க கூடாதா? என்ன செஞ்சீங்க எனக்குப் பிடிக்கறதுக்கும் பிடிக்காம போறதுக்கும்? பிடிச்சாலும் சரி பிடிக்கலன்னாலும் சரி, நானே வந்து சொல்றேன். இனிமே இப்படி பின்னாடி வராதீங்க” என்றாள் தேன்யாழி.
போகும் அவனையே பார்த்திருந்தவனுக்கோ பாலை வனத்தில் பகல் பொழுதில் புழுதி பறக்க நின்ற நிலை. வேவமும்(தனிமை, துன்பம்) வெட்பமும் தலைவனை வாடிட செய்ய, அப்படியே படிகளில் அமர்ந்து கொண்டான்.
‘எத்தனை காதல்ல பிரிச்சு வச்ச? அவனுங்க விட்ட சாபம் தான் டா தென்னவா’ என அவனே சொல்லி சிரித்துக் கொண்டான்.
அடுத்து வாரம் சனிக்கிழமை வழக்கம்போல் கோவில் உள்ள நுழையும் முன்னே, கோவில் யானை செங்கமலத்துக்கு தேன்யாழி பழம் தர, அதனிடம் ஆசி வாங்கையில் தென்னவனும் வந்து அருகில் நின்றான்.
“செங்கமலம் பேபி! சீக்கிரமே எங்க பேபியோட வந்து குடும்பமா ஆசிர்வாதம் வாங்கணும்” என்று சொல்ல
“என்ன வம்பு பண்றீங்களா? என்னைப் பத்தி தெரியல உனக்கு” என்று தேன்யாழி கோபமாய் கை நீட்டி சொல்லிவிட்டாள்.
“ஹா ஹா!! உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணினேனா? நான் பாட்டுக்கு வந்து வேண்டிக்கிறேன் உனக்கு என்ன வந்துச்சு? இங்க பாருடா ராஜாத்தி! நீயே இப்படி வந்து பேசி என்னை உனக்கும் தெரியும்னு காட்டிக்கொடுக்காத, நீ பாட்டுக்கு வந்தோமா சாமியைக் கும்பிட்டோமான்னு போ! நானும் வந்தோமா சைட் அடிச்சோமான்னு போறேன்.” என்று சொல்ல, அவள் பார்வையில் அனல் ஏறிட, அதன் பாஷை இவனுக்குப் புரிந்தது,
“அய்யோ என் செல்ல ராசாத்தி! உன்னை தான் டி சைட் அடிப்பேன்னு சொன்னேன். உன் ஒருத்தியை சைட் அடிக்கவே எனக்கு டைம் பத்தல, என்னை என்ன பண்ண சொல்ற? உன் ஊருக்கு வரலாம்னு பார்த்தா அந்த டீக்கடை பெருசுங்க முன்னாடி சிசிடிவியே தோத்துடும் போல! அப்படியே முன்னூத்தி அறுபதி டிகிரில சுத்துதுங்க, இப்ப கூட உன்னை நான் தொந்தரவு செய்யலயே யூ கேரி ஆன்” என்று சொல்ல
“உங்க தங்கச்சி பின்னாடி இப்படி ஒருத்தன் சுத்தினா, அப்ப என்ன செய்வீங்க நீங்க?” என்று தேன்யாழி இவனை முறைத்த வண்ணம் கேட்டாள்.
“இப்படி ஒருத்தன் சுத்தினா நீ தான் டா என் மாப்பிள்ளைன்னு சொல்லி, என் தங்கச்சிக்குக் கட்டி வச்சிடுவேன். என் வொர்த் உனக்குத் தெரிலடி தங்கம்!! என்னை மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும்” என்று விளையாட்டாய் சொன்னவன்,
பின் பாவையின் பார்வையோடு கலந்து, ஆழ்ந்த குரலில்,
“உன்னை நான் தொந்தரவு பண்ண மாட்டேன் டா, ஒரு பொண்ணோட சுதந்திரத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை, அதே நேரத்துல என்னோட காதலியை பார்க்கறதும் தப்பில்லை, ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” என்றான்.
‘இவனை எல்லாம் திருத்த முடியாதுடி’ என்று எண்ணிய தேன்யாழி அவனை கடந்து சென்றிட, அதன் பிறகு இவள் பார்வையில் அவன் படவே இல்லை.
வாராவாரம் இது ஒரு தொடர்கதையானது.
***********************************************
அன்று ஊரில் அவர்கள் பங்காளி வீட்டினில் காரியம் என்று அமிர்தவள்ளியும் சிதம்பரமும் சென்று விட, தேன்யாழியும் செந்தூரனும் மட்டுமே வீட்டினில்.
இரவு உணவினை சாப்பிட்டு டீவி பார்த்த தேன்யாழி செந்தூரன் வந்ததும், அவன் முகம் கழுவி உடை மாற்றி வரும் வரை காத்திருந்தவள்,
“அண்ணா சாப்பாடு எடுத்து வைக்கவா சோறு சாப்பிடுறியா? இல்லை தோசை ஊத்தவா?” என்று கேட்டாள் தேன்யாழி.
“நான் கஞ்சி குடிச்சிக்கிறேன், நீ போ” என சொல்ல
“நான் எடுத்து வைக்கிறேன் அண்ணா” என்று தேன்யாழி கஞ்சிக்கு வெங்காயம் உரிக்கப் போனாள்.
“உன்னை நான் எதுவும் செய்ய சொல்லல போ” என இவன் மீண்டும் அதட்டல் போட,
“ஏன் நான் செஞ்சா என்ன?” என்றாள் இவளும் கோபமாய்.
“நீ செய்ய வேண்டாம் எனக்குப் பிடிக்காது”
“ஏன் ஏன் பிடிக்காது?” என்று தேன்யாழி பதிலுக்கு பதில் பேச, இவனுக்கு அவளது செயல் திமிராய்த் தோன்ற,
“ச்ச! உயிர வாங்குறதுக்குன்னே எங்கப்பாரு உன்னைப் பெத்து வச்சிருக்காரு” என்று திட்டினான்.
அந்த வார்த்தைகள் வதுவையவளுக்கு வலியினை வஞ்சனை இல்லாது வழங்கிட, வடுக்கள் சுமந்த இதயத்தோடு,
“யார் உயிரையும் நான் வாங்கல” என தேங்கி நின்ற விழி நீரோடு, தேம்பலாய் உரைத்துப் போனாள் தேன்யாழி.
“பிடிக்கலன்னா வற்புறுத்துறது எந்த வகையில நியாயம்?” என்றவனும் சாப்பிடாமல் படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் இவன் பார்க்க, தேன்யாழி அமைதியாய் வாசலில் சாணி தெளித்துக் கோலம் போட்டு, வீட்டை பெருக்கினாள். இவன் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் காட்டி, கோழிகளைத் திறந்து விட்டு , டைமண்டை சங்கிலியில் பிணைத்து வைத்தான்.
தேன்யாழி கல்லூரிக் கிளம்பி போனதும், இவன் சாப்பிட சென்று என்ன இருக்கிறது என்று பார்க்கப் போனால் , பழையது மட்டும் இருக்க, காலையில் சமைத்த அறிகுறியே இல்லை.
பழையதை எடுத்து, அதற்கு பச்சமிளகாயும் எடுத்து வைத்து சாப்பிட்ட போதும், தேன்யாழியிடம் நேற்று கொஞ்சம் அதிக கடுமையுடன் நடந்து விட்டதாய் தோன்ற, அவள் சாப்பிடாமல் சென்றது வேறு குற்றவுணர்வினை விதைத்து வைக்க, மனம் கேட்கவில்லை.
அமிர்தவள்ளி தனது தேவைக்காக அனைவரின் எண்ணையும் ஒரு டைரியில் குறித்து வைத்திருப்பார். தாமரைக்கு அழைத்தால் அவள் எப்படியும் அனைவருக்கும் டமாரம் அடிப்பாள் என தெரியும். எனவே அதில் குந்தவையின் எண்ணைக் கண்டுபிடித்து அவளுக்கு அழைத்தான் செந்தூரன்.
அப்பொழுதுதான் இடைவேளை விட்டிருக்க, மிஸ்ட் காலினைப் பார்த்து குந்தவை அந்த எண்ணிற்கு அழைத்தாள்.
“ஹலோ…. ”
“ஹலோ!! நான் செந்தூரப் பாண்டியன் பேசுறேன்” என்ற குரலில் இவளுக்குள் அதிர்வலைகள்.
“சொல்லுங்க” என்று இவள் சொல்ல
“தேனு எங்க?”
“அவ க்ளாஸ்ல தலைவலின்னு படுத்திருக்கா, நான் கேண்டீன் வந்தேன்” என்றாள்.
மிகுந்த தயக்கத்துக்குப் பின்,
“அது நேத்து ஒரு சின்ன சண்டை, தேனு காலையில சாப்பிடாம வந்துட்டா, நீ அவளை சாப்பிட வச்சுடுறியா?” என மென்மையாய் சொல்ல
‘பாசமுள்ள பாண்டியரே’ என மனம் சத்தமிட்டது.
“சரி சாப்பிட வைக்கிறேன்” என இவள் உடனடியாய் ஒத்துக்கொள்ளவும்
“தேங்க்ஸ்! நான் போன் செஞ்சேன்னு அவகிட்ட சொல்லாத” என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.
‘ஏன் சொன்னா என்ன என்று தோன்றினாலும், தேன்யாழியிடம் சொல்லத் தோன்றவில்லை. இவர் கொஞ்சம் நல்லவரோ என்ற எண்ணம் பிறந்தது குந்தவைக்கு.
அன்று ஒரு சனிக்கிழமை. வழக்கம்போல் தேன்யாழி ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு செல்ல, தென்னவன் வரவே இல்லை. கிட்டத்தட்ட இந்த இரண்டு மாதமாய் தவறாமல் அவன் வந்துவிடுவான். அவன் பாட்டிற்கு வருபவன் இவளிடம் பேச கூட மாட்டான். இவளைப் பார்த்துக் கொண்டு இருப்பான். அவ்வளவே. .
ஆனால், இன்று தென்னவன் வராததுக்குக் காரணம் உண்டு. இன்று அவனின் பிறந்த நாள். அதனாலயே அவன் கோவிலுக்குச் செல்லவில்லை. சென்றால் தேன்யாழியைப் பார்க்க நேரிடும். அவளும் பேச மாட்டாள். மனம் ஏதோ ஒரு வித தனிமையில் தவித்திட எதுவும் பிடிக்கவில்லை.
நெடுநல்வாடையாய் இவன் நிலை இருந்திட, அவன் அலைப்பேசி சத்தம் போட, பார்த்தால் அதில் இவன் சேமித்திருந்த தேன்யாழியின் எண் ஒளிர்ந்தது.
“ஹலோ!” என அந்த பக்கம் தேன்யாழியின் குரல் கேட்க,
இவனவளின் குரல் கேட்டு இதயத்தில் இனிதாய் ஒரு இன்பவெள்ளம். யாழன்ன குரலில் தன்னையும் மறந்தவன் தனிமையையும் மறந்தான். உள்ளம் முழுவதும் உற்சாக குளியலிட, எதுவும் பேசாமல் உடனே போனை கட் செய்தவன் கோவிலுக்கு விரைந்தான்.
பயணம் செய்கையில் என்னவோ பாவை குரலே இவன் பாடலாகிட, தென்னவனுக்குள் தீரா தேன்மழை மட்டுமே!
‘எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ளக் குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது’