அத்தியாயம் 8
வாழ்க்கை ஒரு உணர்வு. அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு போராட்டம். அதனை எதிர்கொள்ளுங்கள்
-பகவத் கீதை.
குந்தவை எழுந்ததுக்கும் விழுந்ததுக்கும் அப்படியே தரையில் சாய்ந்திருப்பாள். ஆனால், செந்தூரன் அவள் கால்களைப் பிடித்து விழாமல் கட்டிலில் உட்கார வைத்து விட்டான்.
உட்கார்ந்தவள் செந்தூரனை முறைத்து,
“அறிவில்ல உங்களுக்கு?” என திட்ட
“உன்னை விழாம காப்பாத்திருக்கேன் இல்லன்னா, அப்படியே நீ எழுந்தரிச்ச வேகத்துல மல்லாக்க விழுந்திருப்ப” என்றான் செந்தூரன்.
“நல்லவர் மாதிரி நடிக்காதீங்க வேணும்னே நீங்க தானே டைமண்ட்னு சத்தம் போட்டீங்க”
“நான் டைமண்டைக் கூப்பிட்டா உனக்கு என்னடி வந்துச்சு” என்றான் இவனும் கோபமாய்.
அதற்குள் தேர் இவர்கள் வாசல் வந்துவிட, தேன்யாழி குந்தவையை அழைக்க, செந்தூரனை முறைத்துக் கொண்டே குந்தவை வாசலுக்கு சென்றாள்.
தேரில் அம்மனின் சிலை அழகாய் அலங்கரிப்பட்டு இருக்க, தேருக்கு முன்னால் குறவன் குறத்தியரின் நடனம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் எல்லாம் நடைப்பெற்றுக் கொண்டிருக்க, சின்ன சின்ன வாண்டுகள் எல்லாம் தூங்காமல், தப்பு அடிப்பவர்கள் தப்பினை அடிக்க, இவர்களும் சேர்ந்து ஆட்டம் போட்டனர்.
ஒருவழியாக கற்பூரம் ஏற்றி ஆரத்தி வாங்கி, சாமிக்கு மாலைப் போட்டவர்கள் வந்து உறங்கிட மணி மூன்றாகியது.
அடுத்த நாள் மதிய உணவு முடிந்து வெயில் தாழ்ந்த பின் கோவிலுக்குப் போகலாம் என அமிர்தவள்ளி சொல்ல, தேன்யாழியும் குந்தவையும் புடவையில் தயாராயினர்.
கோவிலுக்குப் போய் அரைத்து வைத்திருந்த மாவினில், வாழைப்பழத்தைக் கலந்து அதன் தோலை அந்த பாத்திரத்தின் மீது விளக்கினைப் போல் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி மாவிளக்குப் போட்டனர்.
பின்னர் கோவிலை சுற்றி வந்தவர்கள் , கடைகளை சுற்றினர். தாமரையும் இவர்கள் வருகிறார்கள் என கோவிலிலேயே காத்திருந்தாள்.
தாமரை “ஹே அங்கிட்டு வா ரோஸ்மில்க் மோர் எல்லாம் தரானுவோ” என்றழைக்க
“ம்மா நீ இரு வரோம்” என்றபடி குந்தவையை இழுத்துக் கொண்டு தேன்யாழியும் தாமரையோடு போனாள்.
அங்கு போய் ஆளுக்கொரு ரோஸ்மில்க் வாங்கிக் குடிக்க,
“நல்லாயிருக்கியாமா?” என்றான் அங்கு வந்த சசி.
“நான் நல்லாயிருக்கேன் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க?” என குந்தவையும் பதிலுக்குக் கேட்க,
“நல்லா இருக்கோம்மா ஏட்டி தங்கச்சிக்கு என்னடி வாங்கி கொடுத்தீங்க” என சசி கேட்க
“டேய் நாங்களும் உனக்குத் தங்கச்சிங்கத்தான் வேணும்டா” என்றாள் தேன்யாழி முறைப்போடு.
“ஏட்டி நீங்க தான் வருசம் வருசம் வாங்கி ஊத்திக்கிறீங்களே? இந்த பிள்ளை இப்பத்தானே இந்த ஊருக்கு வந்திருக்கு, நம்ம ஊர் திருவிழாவுக்கு வந்த புள்ளையை நாம தான தேனு கவனிக்கனும்” என சசி சொல்ல
“டேய் நீங்க கவனிச்சதெல்லாம் எனக்குத் தெரியும்” என்றாள் தேன்யாழி சிரிப்பை அடக்கியபடி.
“சசி இவ்வளவு பேசிறியே எங்களை தொட்டி ராட்டினத்துல ஏத்தி விடுடா, இவ அதுல போனதே இல்லை” என தாமரை சொல்ல
“ஏன் டி பொய் சொல்றீங்க? அந்த பிள்ளை அங்க எம்ஜிஎம், விஜிபி எல்லாம் போயிருக்கும், அது பார்க்காத ராட்டினமா, பக்கத்து இலைக்கு ஏன் டி பாயாசம் கேட்கிற செல்வி” என சசி சொல்லவும்,
“இல்லண்ணா நான் இதுல போனதே இல்லை” என்று குந்தவை சொல்லவும், சசி குந்தவை, தாமரை, தேன்யாழி மூவரையும் ராட்டினத்தில் ஏற்றி விட்டான்.
ராட்டினத்தில் தாமரையும் குந்தவையும் ஒன்றாய் உட்கார்ந்திருக்க, தேன்யாழி தனியாய் உட்கார்ந்திருந்தாள். ராட்டினம் சுற்றும்போது, அதில் தேன்யாழி இருப்பதைக் கண்டு வியப்பிலும் களிப்பிலும் சிரித்தன இரு கண்கள்.
தேன்யாழியைக் கண்டான் தென்னவன். பக்கத்தில் பார்த்தால் குந்தவையும் இருக்க, அவர்கள் இறங்கி வரும்வரை காத்திருந்தான். திருவிழா என்பதால் எல்லாம் சரியாக நடக்கிறதா என சரி பார்க்க வந்திருந்தான்.
அப்போது கபீரின் அப்பா வர அவரிடம் நன்றாகவே பேசினான்.
இப்படி இவன் ஊர் பெரியவர்களோடு பேசிக் கொண்டிருக்க,
அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.
ஐஸ் வண்டியைப் பார்த்து , “ஹேய்ய் பெப்ஸீ ஐஸ்” என தாமரை சொல்லவும், மூவரும் பெப்ஸி ஐஸ் வாங்கிக் கொண்டனர்.
இவர்கள் காசு கொடுக்கும் முன் சசியே காசு கொடுத்தான்.
“ஐயோ அண்ணா நீங்க ஏன் தரீங்க?” என குந்தவை கேட்க
“குவா அவனுங்க தான் திருவிழான்னா எங்களுக்கு கேஷியர், அதனால் நீ கவலைப்படாத” என்று சொல்லி தாமரை ஐஸை உறிஞ்சினாள்.
அதன்பின் இவர்கள் ஐஸை ருசித்துக் கொண்டே அமிர்தவள்ளி இருக்கும் இடத்துக்குச் செல்ல, தாமரை பேசிக் கொண்டே வந்தாள்.
“குவா திருவிழான்னா எல்லா பசங்களும் இங்க தான் இருப்பாங்க, வீட்டுப்பிள்ளைங்க என்ன கேட்டாலும் அன்னிக்கு வாங்கித் தருவாங்க, நீங்க மாலுக்கு போவீங்கள்ள, அது மாதிரி இங்க எல்லோரும் ஃபீரியா இருக்க ஒரே நாள் திருவிழா! அப்போ பங்காளி விட்டு அண்ணன் தம்பியெல்லாம் வேறுபாடு காட்டாம வாங்கித் தருவாங்க” என்று சொல்லவும் குந்தவையும் கேட்டுக் கொண்டே வர
அமிர்தவள்ளி மூவரையும் அழைத்து வளையல் வாங்கிப் போட்டார்.
தேன்யாழி ஒரு சின்ன ரோபோ கார் வாங்கவும்,
“யாருக்குடி வாங்குற?” என குந்தவை கேட்க
“அக்கா பையனுக்கு டி” என்றாள் தேனு.
“அங்க இதை விட நல்லா காராவே கிடைக்குமே டி”
தேனு குந்தவையிடம், “கிடைக்கும் குவா! சின்னப்பையன் சித்தி திருவிழாவுக்கு என்ன வாங்கின்னனு கேட்பான், எனக்கும் அவனுக்காக வாங்கிக் கொடுத்தா சந்தோசம், அதான் எவ்வளவுதான் காஸ்ட்லியா வாங்கினாலும் நமக்குப் பிடிச்சவங்க வாங்கித் தர சின்ன பொருளுக்கு ஈடாகாது” என்றாள்.
அப்போது பார்த்து குந்தவை , ”ஐ அண்ணா” என குரல் கொடுக்க
பார்த்தால் தென்னவன்.
“யாரும்மா?” என அமிர்தவள்ளி கேட்க
“எங்க அண்ணன்! அத்த” என்று சொல்ல, அதற்குள் தென்னவனே அருகில் வந்துவிட்டான்.
“வரேன்னு சொல்லவே இல்லைண்ணா, இவங்க தேனு அம்மா, இது தாமரை” என்று அவள் அறிமுகம் செய்தான்.
“அண்ணா நல்லா இருக்கீங்களா?” என தாமரை பாசமாய்க் கேட்க
“நல்லாயிருக்கேன் லோட்டஸ்” என்றான் புன்னகையோடு. தேன்யாழி எதுவும் பேசுவாளா என இவன் பார்க்க, அதற்குள்,
“நல்லா இருக்கீங்களா தம்பி?” என்று அமிர்தவள்ளி கேட்க
“நல்லாயிருக்கேன் ஆன்டி” என அவன் சொல்ல, மீண்டும் உறவுகள் ஒரு தொடர்கதை தியரியை விளக்கினார் அவர்.
“உங்க சித்தி வலங்கைமான்ல இருக்காங்களே தம்பி, அவங்க என்னோட பங்காளிக்கு….” என்று ஆரம்பித்து அவர் விளக்க அதைக் கடுப்போடு கேட்டுக் கொண்டிருந்தான் தென்னவன்.
ஆனால், கடைசியில் அவர், “அதனால உங்களுக்கு நான் அத்தை முறை வேணும்” என்றதும் அவன் அகத்தில் ஆனந்த தாண்டவம். விழிகள் தாமாய் தேன்யாழியை தழுவிட,
“சரிங்கத்தை” என்றான்.
“ரொம்ப தேங்க்ஸ் அத்தை! குந்தவையை நல்லா பார்த்துக்கிட்டீங்கன்னு சொன்னா” என்றான் உளமாற.
“சாப்பிட்டியாண்ணா?” என குந்தவை கேட்க
“இல்லடா இனி தான்! இன்னிக்கே இரண்டு ஊர் திருவிழா, அதான் ரவுண்ட்ஸ் வந்தேன்” என்றான்.
“என்ன தம்பி சொல்றீய? மணி நாலுக்கு மேல ஆவுது, நீங்க இன்னமும் சாப்பிடலையா? முதல்ல வாங்க நம்ம வீட்டுக்கு.” என்று அவனை வற்புறுத்தி அழைக்கவும் அவனும் தேன்யாழியின் வீட்டிற்கு சாப்பிட வந்தான். தாமரை கோவிலில் இருந்து அப்படியே வீட்டிற்கு சென்று விட அவர்கள் மூவரும் நடந்து வந்தனர்
இவர்களோடு வீட்டுக்கு வந்தவன் சிதம்பரத்தைப் பார்த்து,
“நல்லா இருக்கீங்களா மாமா?” என விசாரிக்க
“தம்பி யாரு?” என்றார் அவர்.
அதைக் கேட்டதும் தேன்யாழியோ மனத்தில், ‘அச்சோ அப்பா இவன் வேற தென்னவன் தேன் தமிழன் ஆகிய நான்னு, ஆரம்பிப்பானே’ என்று நினைத்தாள். அதே போல் அவனும்,
“நான் தென்னவன் தேன்தமிழன்! குந்தவையோட அண்ணன்! இன்ஸ்பெக்டரா இருக்கேன் மாமா” என்று சொல்ல,
“சந்தோசம்ங்க தம்பி” என்றார் சிதம்பரமும்.
குந்தவை அண்ணனிடம் , ”இங்க பார்த்தியா மருதாணி” என கையில் சிவந்திருந்த தன் மருதாணியைக் காட்ட,
“சூப்பர்டா” என்று தங்கையிடம் சொன்னவனின் பார்வை, தேன்யாழியின் சிவந்திருக்கும் கைகளைக் காணத் தவம் கொண்டது.
“தம்பிக்கு சாப்பாடு எடுத்துட்டு வா” என அமிர்தவள்ளி குரல் கொடுக்க, அவர் அவனுக்குப் பறிமாறினார்.
“சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு அத்தை” என்று மனம் நிறைந்த உணர்வோடு சொன்னான் தென்னவன்.
“சரிங்க தம்பி இந்தாங்க பாயாசம்” என டம்ப்ளரில் கொண்டு வந்து கொடுக்க,
“அண்ணா சாப்பாடு சூப்பர்ல?! பாதி தேன் தான் செஞ்சா பாயாசம் கூட” என்றாள் குந்தவை.
“பாயாசம் நல்லா இருக்கா தம்பி?” என அமிர்தவள்ளி கேட்க
அவனோ விழிகள் முழுவதும் தேன்யாழியின் மேல் நிலைத்திருக்க, முதன் முறையில் அவளை புடவையில் பார்த்ததில், ரசனையும் அவளை ஆராதிக்க முடியாத ஏக்கமும் குரலில் இழையோட,
“தேன் மாதிரி இருக்கு அத்தை” என்றான்.
இனிப்பை அப்படி சொல்கிறான் என இவர்கள் இயல்பாய் எடுத்துக் கொள்ள, தேன்யாழி சட்டென திரும்பி இவனை முறைத்தாள். அவனோ இவர்கள் கவனிக்காத வண்ணம் கண்ணடிக்க, காரிகையோ கண்டிப்பாய்ப் பார்த்து வைத்தாள்.
அவனோ அதைக் கண்டுகொள்ளாத தென்னவன் , “குந்தவை நீ கிளம்பி வரியா? நான் உன்னை அப்படியே வீட்ல விடுறேன்” என்று சொல்ல, அவளும் சரி என்று சொல்லி தன் துணிகளை எடுக்கப் போக,
“ஏன் தம்பி புள்ளை நாளைக்கு வரட்டுமே, அது பாட்டுக்கு செவனேன்னுல இருக்கு” என்றார் அமிர்தம்.
“இல்லத்த திரும்ப பஸ்ல அவ தனியா வரணும், இன்னொரு நாள் அழைச்சிட்டு வரேன்” என்று தென்னவன் சொல்ல
அமிர்தம், “சரி தம்பி” என்றவர் தேன்யாழியிடம் திரும்பி,
“பலகாரமெல்லாம் எடுத்துக் கொடு தேனு, நான் போய் இருட்டுறதுக்குள்ள புல்லு அறுத்துட்டு வரேன். பத்திரமா போய்ட்டு வாங்க தம்பி” என்றவர் கருக்கறுவாளையும் சாக்கையும் எடுத்துக் கொண்டு பின்பக்கம் வழியாய்க் கொல்லைக்குப் போனார்.
சிதம்பரமும் மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றிருக்க, தேன்யாழி பலகாரம் எடுத்து வைத்தாள்.
பின் தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பினான் தென்னவன். வண்டியில் வருகையில் தென்னவன் தங்கையிடம்,
“எஞ்சாய் பண்ணியா வாலு?” என்று கேட்க
குந்தவை, “சூப்பரா எஞ்சாய் பண்ணேன் டா” என்றாள் குதூகலமாய்.
தங்கையின் பதிலைக் கேட்டவனுக்குப் புன்னகை மலர, அவனது வண்டி வீடு நோக்கிப் போனது.
ஆனால், மன்னவன் மனம். மங்கையின் மருதாணி விரல்களைப் பார்க்க முடியவில்லையென ஏங்கியது.
*********
அன்று சனிக்கிழமை. ராஜகோபலசுவாமி திருக்கோவில். செங்கமலத்தாயார் சன்னதியில் நின்று கடவுளை வணங்கினாள் தேன்யாழி.
“சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கனும்னு வேண்டிக்கோ தேனு” என்ற குரல் கேட்க, அவள் அதிர்ச்சியோடு திரும்பினாள். அங்கே முகமெல்லாம் புன்னகையை நிறைத்தபடி நின்றிருந்தான் தென்னவன்.
‘உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு?’