அத்தியாயம் 6
பிடித்தவரிடம் அன்பை வெளிப்படுத்த தேவையில்லை. உணரச் செய்தால் போதும்.
-பகவத் கீதை.
தென்னவன் அப்படி தீடீரென கேட்க, தேன்யாழி அதிர்வோடு அவனை பார்த்தாள்.
அவள் மேல் கொண்ட விழைதலின் விளைவாய் விளைந்துவிட்ட வார்த்தைகளென உணர்ந்தவன் உடனே,
“அது வந்து நீ இருக்கப்ப குந்தவை ஹாப்பியா இருக்கா, நான் இல்லன தனியாதான் இருப்பா, ஸோ ஃப்ரீயா இருக்கப்ப இங்க வா அதான் சொன்னேன்” என்றான் சமாளிப்பாய்.
“அவ இன்னும் உன் கூட சரியா பேசவே இல்ல அதுக்குள்ள வாய் டா உனக்கு” என்று தன்னையே மனத்தில் திட்டினான் தென்னவன்.
அதற்குள் குந்தவை போன் பேசி வந்திருக்க,
“லோட்டஸ் லொட லொடன்னு திட்டுறாடி நீ அவளைப் பண்ணின டென்ஷனுக்கு என்னைக் காய்ச்சி எடுத்துட்டா” என்று சொல்லி குந்தவை சிரிக்க,
தேனு, “சரிடி டைம் நாலு ஆச்சு வீட்டுக்குக் கிளம்புறேன் நீ சாப்பிடு, ரசம் நைட்டுக்கு சூடு பண்ணிக்கோ, துவையல் கெட்டுப் போகாது. நைட் வரைக்கும் நல்லா சாப்பிட்டுத் தூங்கி வா” என்றவள் தென்னவன் பக்கம் பார்த்தாள்.
‘ஐயோ போய்ட்டு வரேன் அண்ணான்னு சொல்லிடுவாளோ?’ என கலவரமாய் நினைக்க, அவளோ
“வரேன் சார்” என்றபடி போக, வாசல் வரைப் போய் குந்தவை அவளை வழியனுப்பினாள்.
“நான் கொண்டு வந்து விடறேனே” என தென்னவன் சொல்ல
“இல்லங்க சார், நீங்க குந்தவையைப் பாருங்க, மினி பஸ் வர நேரம். நான் போய்க்குவேன்” என்றபடி அவள் கிளம்பினாள்.
“ஏன் பேபி உன் ப்ரண்டு என்னை சார்னு சொல்றா அண்ணான்னு சொல்லாம” என குந்தவையிடம் கேட்டாலும் மனம் என்னமோ,
‘நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்’ என ஆர்ப்பாட்டமாய்க் கூவியது.
“அதுடா அவங்க அண்ணனை அண்ணான்னு சொல்ல முடியாததால, அவளுக்கு யாரையும் அண்ணான்னு சொல்ல பிடிக்காது. வேற வழி இல்லனா மட்டும் தான் சொந்தக்காரங்கள அண்ணா சொல்லுவா” என்ற குந்தவை சாப்பாடை எடுத்து வைத்தாள்.
“டேய் நீயும் சாப்பிடு” என்றதும் வந்து அமர்ந்தவன்,
“ஏன் லூசே! அண்ணனை அண்ணன்னு சொல்லாம என்னான்னு சொல்லுவா அப்போ?”
“அது ஒரு பெரிய கதை” என்றபடி குந்தவை தேன்யாழி பற்றி பகிர்ந்தாள்.
“இதுல அவ தப்பு என்ன?”
“என் அண்ணன் அறிவாளி! அவ அண்ணனுக்கு அந்த அறிவு இல்லையே, உனக்குப் புரியுது அந்த ஆளுக்குப் புரியலயே”
“அந்த செந்தூரனைப் பார்த்த ரொம்ப நல்லவர் மாதிரி தான் தெரியுது, ஆனா ஏன் இவ கிட்ட இப்படி?” என்றான் புரியாத பாவனையில்.
‘நல்ல காலம் இல்ல, தேனு என்னை அண்ணா சொல்லியிருப்பா செந்தூரனுக்கு நன்றி!’ என்ற எண்ணம் வேறு தோன்றியது.
“உன் ப்ரண்ட் சமையல் சூப்பர் ரசம் தான்! ஆனால், நல்ல வச்சிருக்கா, நீயும் கத்துக்கோ வாண்டு” என சொல்லவும்,
“நீயும் கத்துக்கோ, உன் பொண்டாட்டிக்கு சமைச்சுப் போட யூஸ் ஆகும், நாங்க மட்டும் கத்துக்கனுமாக்கும்” என்று முறைத்தாள் குந்தவை.
‘என் பொண்டாட்டி இவ்வளவு ருசியா சமைக்கும்போது, நான் ஏன் சமைக்கப் போறேன்’ என நினைத்தாலும்,
“வாலு! இவ்வளவு நேரம் வாயே தொறக்கல முடியலன்னு சொல்லிட்டு இருந்த, இப்ப ப்ரண்டைப் பார்த்ததும் வாய் வாகா பார்டர் வரைப்போவுது” என்று தென்னவன் கிண்டல் செய்தான்.
“என் ப்ரண்டோட அருமை அப்படிடா! ஆனா பாவம் டா அவ… நாம எப்படி இருக்கோம், அவங்க அண்ணன் பேச மாட்டாருன்னு ரொம்ப ஃபீல் செய்வா, அதையும் வெளிக்காட்ட மாட்டா, அவரைக் குறையே சொல்ல மாட்டா. எல்லாம் தாமரையும் சூர்யாவும் தான் எனக்கு சொன்னாங்க, ரொம்ப நல்ல பொண்ணு”
ஆமோதிப்பாய் தலையசைத்தவன்,
“எஸ் நல்லப் பொண்ணு! பஸ் ஸ்டாண்ட்ல அத்தனை பேர் போறாங்க வராங்க, எனக்கென்னனு இல்லாம அன்னிக்கு வந்து எங்கிட்ட கம்ப்ளையண்ட் பண்ணினா” என மென் புன்னகையோடு சொல்ல
“ஆமா அதைக் க்ளீயர் பண்ணியாச்சா?”
“ஹ்ம்ம்! பண்ணலன்னா இன்னிக்கும் உன் ப்ரண்டு என்னைக் கிழிச்சிருக்க மாட்டா, அன்னிக்கே வந்து நீங்க போலீஸ் இதெல்லாம் பார்க்க மாட்டீங்களான்னு மேடம் டோஸ். அது மட்டுமில்லாம என் ஐடி வாங்கி நான் ஓரிஜினல் போலீஸான்னு செக் பண்றா, ஷி இஸ் இண்டலஜிண்ட் டூ” என்றான்.
“டேய் அண்ணா நான் இவங்க ஊர் திருவிழாவுக்குப் போய்ட்டு வரட்டுமா? ஒரு டூ டேஸ்‘டா, அவ என்னைக் கூப்பிட்டா நம்ம இந்த ஊரா இருந்தாலும் எப்பவும் திருவிழா அப்பல்லாம் லீவ் கிடைக்காது தானே? ப்ளீஸ்டா அண்ணா” என்று கெஞ்ச
தேன்யாழியுடன் இருக்கையில் குந்தவை மிகவும் மகிழ்வாய் இருக்கிறாள் என்று தென்னவனுக்குப் புரிந்தது.
“அதுக்கென்ன பேபி போய்ட்டு பத்திரமா இருந்துட்டு வா” என சம்மதம் சொன்னான்.
******************************************
அன்று வெள்ளிக்கிழமை! தாமரை செல்வி, தேன்யாழி, குந்தவை எல்லோரும் தேன்யாழியின் வீட்டிற்கு வரவும்,
அமிர்தவள்ளி “ வாம்மா குந்தவை நல்லா இருக்கியா?” என்றபடி வரவேற்றார்.
“தவறு செய்துவிட்டீர்கள் பெரியம்மா! நானும் வந்திருக்கேன். என்னை வா சொல்ல மாட்டேங்கிற” என தாமரை முறைக்க
“நீ என்ன முத முறையா வீட்டுக்கு வர? வான்னு சொல்ல, இந்த புள்ளதானே புதுசா வருது, அவ கிடக்குறா வாயாடி நீ வாம்மா” என்றழைத்தார்.
“நான் நல்லா இருக்கேன் ஆன்டி, நீங்க எப்படி இருக்கீங்க?” என விசாரிக்க
“நல்லா இருக்கேன்மா, இந்தா குழிப்பணியாரம் சாப்பிடு, ஏட்டி தாமரை நீயும் எடுத்துக்கோ எல்லோரும் எடுத்துக்கங்க தேனு” என்றார் அமிர்தவள்ளி.
குந்தவை ஒரே ஒரு பணியாரம் மட்டும் சாப்பிட,
“என்ன ம்மா நீ ஒன்னுதான் சாப்பிட்ட, அதான் இப்படி லேவிடியமா(ஒல்லியா) இருக்க!” என்றார் அமிர்தம்.
“லேகியமா?” என்று குந்தவை பார்க்க
தாமரை உடனே, “ஹா ஹா லேவிடியம்னா ஒல்லியா இருக்க, வீக் அப்படின்னு அர்த்தம்டி” என்றாள்.
“ஓ எனக்குப் புரியல”
“அது ஒன்னுமில்ல‘ம்மா, நீ மெட்ராஸ்லேர்ந்து வந்திருக்கல. அதான்” என அமிர்தவள்ளி சொல்ல
“இல்ல ஆன்டி, எங்க சொந்த ஊர் இங்கதான்! படிச்சது எல்லாம் சென்னை, அப்பா அம்மா தவறின அப்புறம் அண்ணா சென்னைல இருந்தான். நான் கும்பகோணம்ல இருக்க அத்தை வீட்ல இருந்து காலேஜ் வந்தேன், அண்ணனுக்கும் கும்பகோணம்ல கிடைக்கவும் நாங்க இங்க வந்துட்டோம். சித்தப்பா சித்தியெல்லாம் வலங்கைமான்ல தான் இருக்காங்க”
“ஓ! அப்படியா ஆயீ? என்னோட சித்தப்பா மகனுக்குக் கூட வலங்கைமான்ல தான் பொண்ணு எடுத்தோம்” என்றவர் அவளோடு பேசி, அவளையும் பேச வைத்து அவள் இவருக்கு மருமகள் முறை என கண்டுபிடித்தார்.
உடனே தேன்யாழியிடம், ச்“பார்த்தியா டி? அவ கூட தெனைக்கும் உட்கார நமக்கு கூட இந்த வரலாறு தெரியாது. பெரியம்மா பாரு டக்குன்னு கறந்துடுச்சு, உங்கம்மா கூட உட்கார்ந்து பேசினா ஓபாமா கூட உனக்கு மாமா முறைன்னு சொல்லிடும்டி” என்று சிரித்தாள் தாமரை.
“நான் போய் ஆட்டை ஓட்டுறேன், நீங்க பார்த்து இருங்க, அப்பா வந்தா காபி சூடு பண்ணி கொடு தேனு” என்றபடி அமிர்தம் போக,
“இன்னும் பணியாரம் சாப்பிடு டி” என்றபடி தாமரை அவளைக் கவனிக்க, மூவரும் சேர்ந்து வீட்டை சுற்றினர். குந்தவைக்கு வீட்டை சுற்றியக் காட்டி, வீட்டின் முன் உள்ள திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடித்தனர்.
“அடியேய் மருதாணி பறிக்க வர, எனக்கு நேரமே இல்லாம போச்சு இன்னிக்காச்சும் பறிச்சிக்கிறேன்” என்ற தாமரை மருதாணியைப் பறிக்க,
“நானும் பறிக்கிறேன், இன்னிக்கு குந்தவையும் நானும் வச்சிக்கனும்” என்றபடி தேன்யாழியும் எழுந்திருக்க, மூவரும் சேர்ந்து கதைப் பேசிய வண்ணம் மருதாணி பறித்தனர்.
“ஹேய்ய்!! என்னமோ சத்தம் கேட்குது, ஆடு சத்தம் மாதிரி! பெரியம்மா தான் ஆட்டை ஓட்டிட்டுப் போச்சே” என்று தாமரை சொல்ல
“அச்சோ நயன்தாரா மாசமா இருக்கா டி நான் பார்க்கிறேன்” என தேன்யாழி ஆட்டுகொட்டகை நோக்கிப் போனாள்.
“என்னது நயன்தாராவா? ப்ரக்னெண்டா எப்போடி கல்யாணம் ஆச்சு அவங்களுக்கு?” என குந்தவை விழிக்க,
“ஹா ஹா, வா உனக்கு நயன் தாராவைக் காட்டுறேன்” என அங்கிருந்த ஆட்டினைக் காட்டி,
“இதான் செம அழகா இருக்கா ஸோ நயன்தாரா” என்றவளை கொலவெறியோடு குந்தவை முறைத்தாள்.
“ஹேய் தாமரை இது குட்டிபோட போவுது போல, அம்மாவை கூட்டியாடி” என்றதும் தாமரை சென்று அமிர்தவள்ளியை அழைத்து ஆடுகளையும் ஓட்டி வந்தாள்.
அமிர்தவள்ளி ஆட்டினைப் பார்க்க,
“ஏய், உங்க அம்மா வெட்டினரி டாக்டரா? பிரசவம்லாம் பார்ப்பாங்களா” என்று வியப்போடு கேட்டாள் குந்தவை.
“ஆமா டி! எங்க பெரியம்மா கைனகாலஜிஸ்ட்! கெஎம்சில தான் படிச்சாங்க யூ நோ?” என்று கிண்டல் செய்து சிரித்தாள் தாமரை.
தேன்யாழி தாமரைக்கு முதுகில் அடி போட்டு, குந்தவையிடம் “இல்ல குவா இங்க இருக்கவங்களுக்கு நிறையா இது மாதிரி பார்த்து அனுபவம் இருக்கும், எப்பவுமே மனுஷங்களோடவே கலந்து வாழ்றதாலேயோ என்னவோ, அதுங்களுக்கு ஒன்னுன்னா அதைக் கவனிச்சக்கறவங்களுக்கு டக்கன்னு தெரிஞ்சிடும், சில சமயம் டாக்டர் பக்கத்துல இருந்தா வந்திடுவாங்க இல்லனா பெரியவங்களே பார்த்துடுவாங்க.” என்றாள் விளக்கமாய்.
“இந்தா இதான் ஹன்சிகா” என்றவள் முழுதும் வெள்ளையாய் இருந்த ஆட்டுக்குட்டியை குந்தவையிடம் தூக்கித் தர,
“வாவ் க்யூட்!” என்றபடி அதனை கவனமாய்த் தொட்டுப் பார்த்து,
“எவ்வளவு ஸாஃப்டா இருக்கு” என்றபடி அதனை தடவி கொடுத்தவளின் முகத்தில் பசுமையாய் ஒரு பரசவம்.
இதயம் கனிந்த இதழ் சிரிப்போடு ஆட்டுக்குட்டியை ஆதரவாய் குந்தவை அணைத்திருக்க, அதைக் கண்டு தாமரையும் தேன்யாழியும் புன்னகையோடு தங்களுக்குள் கண்ணடித்துக் கொண்டனர்.
“ஏன் டி லூசுங்களா இதான் ஹன்சிகாவா?” என குந்தவை இப்போது அவர்களைப் பார்த்து முறைப்போடு கேட்க
“ஹாஹா! குவா எங்க வீட்லவாச்சும் ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா தான். நம்ம தாமரை வீட்ல தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா, ஆலியா பட் இருக்காங்க தெரியுமா?” என்று தேன்யாழி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“இந்த புள்ளைங்க ஆட்டுக்கு மாட்டெக்கெல்லாம் பெயர் வச்சு இப்படிதான் விளையாடும்ங்க, என் வீட்டு குட்டி இருக்காளே கோழிக்குஞ்சுக்கெல்லாம் பெயர் வைப்பாமா” என்று அமிர்தவள்ளி ஆட்டினைப் பார்த்தபடி சொல்ல, ச்குந்தவைக்கு ஒரே சிரிப்பு.
“ஹேய் போய் சாக்குப்பை எடுத்தா தேனு” என்று பரபரப்பாய் அமிர்தவள்ளி குரல் கொடுக்கவும் வேகவேகமாய் தேன்யாழி ஓட,
“என்னாச்சுடி?” என்று குந்தவையும் பின்னே ஓடினாள்.
“இப்போ நீங்க ஒரு லைவ் டெலிவரியைப் பார்க்கப் போறீங்க குந்தவை, ஆடுலேர்ந்து எப்படி குட்டி வரப்போகுதுன்னு காணத் தயாராகுங்கள்!” என்று தாமரை டிஸ்கவரி சேனல்காரன் போல் பேசினாள்.
அமிர்தவள்ளி, “தாமரை அந்தால போ இங்க நின்னு பேசாத, ஆடு பயந்துக்கும்” என்றதும் குந்தவை வாயை மூடிக் கொண்டு நகர்ந்து திண்ணைக்கு வந்தவள் வாய் விட்டு சிரித்தாள்.
“எதுக்குடி சிரிக்கிற” என தாமரை முறைக்க,
“இல்ல நீ பேசினா ஆடு கூட பயப்படும்னு சொன்னாங்கல்ல. அதான்” என இன்னும் சிரிக்க,
“அடியேய்!! ரொம்ப பண்ணாதடி வா, உனக்கு லைவ் டெலிவரி காட்டுறேன்” என்று குந்தவையை இழுத்துக் கொண்டு போய் அங்கு நின்றாள்.
அப்போதுதான் குட்டி வெளியே காலை நீட்ட,
“வாவ் குட்டி டி” என மெதுவாய் தாமரையிடம் கிசுகிசுத்தாள் குந்தவை.
அமிர்தவள்ளி ஆட்டின் பின்னால் உட்கார்ந்து, பக்குவமாய்க் குட்டியை வெளியே எடுக்க நஞ்சுக்கொடியைப் பார்த்து,
“என்னடி இது ஜெல்லி மாதிரி அய்யோ எவ்வளவு ரத்தம்” என்று குந்தவை கேட்க
“அது placenta டி இரு இன்னும் கூட குட்டி வரலாம்” என்று தாமரை சொன்னது போல் ஒன்றல்ல இரண்டு குட்டிகள் வெளிவந்தன.
ஆட்டிற்குத் தேவையானவற்றை அமிர்தவள்ளியும் தேன்யாழியும் செய்ய,
“தாமரை நீ போய் மாட்டுக்குத் தீவனம் ஊறப்போடு” என்றார் அமிர்தவள்ளி.
தாமரையும் வீட்டின் பின் பகுதியில் இருக்கும் அறையில் இருந்த மூட்டையில் ஒரு படி தவிடும் தீவனமும் எடுத்தாள்.
“இதெல்லாம் என்னடி” என அங்கிருந்தவற்றைக் காட்டி குந்தவைக் கேட்க
“இது இப்ப மாட்டுக்கு டின்னர், இது புண்ணாக்கு, திஸ் இஸ் பருத்திக்கொட்டை, திஸ் இஸ் தவிடு” என தாமரை சொல்ல
“அப்ப மாடு வைக்கோல மட்டும் சாப்பிடாதா டி?” என தெரியாமல் கேட்டாள் குந்தவை.
“இல்ல குவா! மாடு வைக்கோல், புல்லு, கல்லக்கொடி (நிலக்கடலையின் கொடி) எல்லாம் தின்னும் அது மீல்ஸ் மாதிரி இது ஹெல்த் டிரிங்க்ஸ் போல, இந்த புண்ணாக்கு பருத்திக்கொட்டையெல்லாம் நமக்கு பூரி, பொங்கல் இருக்குல்ல அப்படி” என விளக்கினாள்.
ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு டீவியின் முன் குந்தவை, தேன்யாழி, அமிர்தவள்ளி மூவரும் உட்கார்ந்தனர். தாமரை இருட்டியதுமே வீட்டிற்குச் சென்று விட்டாள்.
“ஆமா இந்த ஆட்டுக்குட்டிக்கெல்லாம் என்ன பெயர் வைக்கப் போற” என்று குந்தவை ஆர்வமாய் விசாரிக்க
“குந்தவைன்னு வைக்கப் போறேன், மீதி இரண்டுக்கும் தாமரை சூர்யகாந்தி எப்படி?” என்று சொல்லி புருவம் உயர்த்தி தேன்யாழி சிரிக்கவும் அவள் தந்தை சிதம்பரம் வரவும் சரியாக இருந்தது.
“என்ன வள்ளி ஆடு குட்டிப் போட்டாச்சாமே?” என அவர் விசாரிக்க
“ஆமாங்க மூணுமே கிடாரி !எல்லாம் இந்த புள்ள வந்த நேரம்.” என குந்தவையைக் காட்டி முகம் கொள்ளா புன்னகையோடு சொல்ல, குந்தவையின் முகத்திலும் மென்னகை வந்து குடியேறியது.
“நல்லாயிருக்கீங்களா அங்கிள்?” என விசாரித்தாள்.
அப்போதுதான் அவளைப் பார்த்தவர் , “நல்லா இருக்கேன்மா சாப்பிட்டியா.” என நின்று பேசிச் சென்றார்.
“அந்த ஆட்டுக்குப் புல்ல அறுத்துப் போட்டு, புலுக்கை அள்ளினது நான், நீ என்னம்மா இவ ராசிங்கற.” என கண்ணில் குறும்பு குடியிருக்க, குசும்பாய் தேன்யாழி கேட்டு வைக்க,
“எப்பவுமே இரண்டு கிடாரின்னா ஒரு கிடா வந்துடும் போன தடவ ஒன்னு தான், அதுவும் கிடா ஆனா இந்த தடவ எல்லாமே கிடாரி, அதான் சொன்னேன்” என்றார் அமிர்தம்.
“ஆத்தாடி ஆத்தா எம்புட்டு பெரிய விளக்கம் சும்மா சொன்னேன்மா” என தேன்யாழி சொல்லவும் தான் விட்டார்.
இவர்கள் இருவரும் பேசியதை ஆச்சரியமாய்க் கண்டாள் குந்தவை. அவளும் அவள் அம்மாவும் பேசுவது போலவே பேசினர். அமிர்தவள்ளி தேனுவை வளர்த்தவர் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள், அத்தனை பாந்தமாய் இருந்தனர் தாயும் மகளும்.
தாயின் இறப்புக்குப் பின், இப்படி தாயும் மகளையும் ஒரு சேர கண்டால் தானாய்த் தலைதூக்கும் ஏக்கம் நீங்கி, பரிசுத்த ரசனையோடு அவர்களை ரசித்தாள் குந்தவை.
அதன் பின் அமிர்தவள்ளி மருதாணியை அரைத்துத் தர, குந்தவைக்கு அதனை அப்போதே வைக்கப் போனாள் தேன்யாழி.
“இப்பவே ஏன் டி வைக்கிற ராவைக்கு(இரவு) வச்சா நல்லா சிவக்கும்ல” என அமிர்தவள்ளி கேட்க
“இல்லம்மா இவளுக்கு வீசிங் இருக்கு, அதான் இப்போ இவளுக்குப் போட்டுடுறேன், பத்து மணிக்குக் கழுவிட்டு சாப்பிடட்டும், அப்புறமா எனக்கு வச்சிக்கிறேன்” என சொல்லி
ஏழு மணிக்கே வைத்தாள் தேன்யாழி.
அதன் பின் தேன்யாழி தன் தாய்க்கு சமையலுக்கு உதவி செய்ய, சிறிது நேரம் அவர்களோடு இருந்தவள்,
“நான் போய் வெளியே உட்காரவா டி” எனக் கேட்டு வெளி வராண்டாவில் அமர்ந்தாள்.
அப்போதுதான் செந்தூரன் வயலில் இருந்து கொல்லைப்புறமாய் வீட்டிற்கு வந்தவன், பின் வாசலில் கால் கழுவி விட்டு, அங்கு மாட்டுக்கொட்டைகையினுள் கட்டி வைத்திருக்கும் நாயினை அவிழ்த்து விட்டான். அது வீட்டுக்குள் ஓட முயற்சித்து கொட்டகையிலிருந்து வெளி வந்து வராண்டாவினுள் இருந்த குந்தவையிடம் வர,
நாயினைக் கண்டாலே பயம் கொள்ளும் குந்தவை பதறி எழ, நாய் அவள் அருகில் வர துள்ளிக் குதித்தவள் அங்கு வந்த செந்தூரன் மேல் மோதி நின்றாள்.
“ஹேய் டைமண்ட் போ” என்று செந்தூரன் விரட்டவும் நாய் ஓடி விட, அவனிடமிருந்து விலகி அவனைப் பார்த்தாள் குந்தவை.
அவனோ அவளை முறைக்க, அவன் விழி வழி பாவையவளும் பார்வை பதிக்க, பார்த்தால் மன்னவன் மேல் மருதாணி.
செந்தூரனின் சட்டையில் அப்படியே குந்தவையின் இரு கைகளில் இருந்த மருதாணி அச்சாய் இறங்கியிருந்தது.
மன்னவன் நெஞ்சினில் மங்கை மருதாணி நிறம்!