தென்னவனும் தேன்யாழியும் – 5

அத்தியாயம் 5

வாழ்க்கை ஒரு காதல், அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஒரு அழகு, அதனை ஆராதியுங்கள். 

-பகவத் கீதை

“ஹேய், தேனு மருதாணி பறிக்க நான் அந்திக்கு உங்க வீட்டுக்கு வரேன் டி, திருவிழாவுக்குப் போட்டுக்கனும்”

தாமரை சொல்லவும் “சரி வாடி” என்றாள் தேன்யாழியும். 

“ஏன் புள்ள முகலிக்கா வருதா திருநாள்க்கு?”

“இல்லடி செழியனுக்கு எக்சாம் இருக்காம் மாமாவுக்கும் லீவ் கிடைக்காதாம், அதனால் எக்ஸாம் முடிஞ்சு வரேன்னு சொன்னா”.

“ஓ சரி சரி”

“ஏன் டி இந்த குந்தவை இன்னிக்கு வரல, ஒரு போன் பண்ணி கூட சொல்லல, என்னாச்சுன்னே தெரியல” என தேன்யாழி குந்தவை வராததால் யோசனையோடு சொல்ல, 

“அவ போன் ஸ்விட்ச் ஆஃப், என்ன செய்யறதுடி…விடு அந்திக்குப் போன் பண்ணுவோம்” என அவளை சமாதானம் செய்தாள் தாமரை. 

“ப்ச், அவங்க அண்ணன் போன் நம்பர் கூட இல்லையேடி” என தேன்யாழி வருத்தமாய் சொல்ல

தாமரை உடனே, “ஏன் டி அவளும் வாய் திறந்து அவ குடும்பம் பத்தி எதுவும் சொல்ல மாட்டா, நீயும் கேட்க விடமாட்ட” என்றாள் கோபமாக. 

“இல்லடி அவள் அப்பா அம்மா இறந்துட்டாங்க, எப்பவுமே அவளா அதைப் பத்தி பேச விரும்பமாட்டா. நம்மள பொறுத்த வரைக்கும் அது ஜஸ்ட் செய்தி, ஆனா அது அவளுக்கு வலிடி, ஏன் நாம அதைக் கிளறனும்னு தான் கேட்க வேண்டாம் சொன்னேன், அவ பொதுவாவே அமைதிடி, அவ குடும்பத்தைப் பேச பிரியப்படாத போது நம்ம எதுக்குடி கேட்டுட்டு”.

தேன்யாழி இப்படி சொல்ல, தாமரையோ “ப்ரண்டுன்னா அவளைப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டாமா? அவ வரல அவங்க அண்ணன் பெயரு தமிழ் அவரு கும்பகோணம்ல ஸ்டேஷன்ல எஸ். ஐன்னு சொல்லி இருக்கா. வேற என்ன தெரியும் அவளைப் பத்தி? இப்போ அவங்க அண்ணன் நம்பர் தெரிஞ்சா கூப்பிட்டுப் பேசலாம்ல” என்றாள்.

“இதுக்கு மேல என்ன தெரியனும் உனக்கு லூசே ?அவங்க அண்ணன் ஜாதகத்தையா தெரிஞ்சக்கனும்? தெரிஞ்சிக்கறதை விட புரிஞ்சிக்கிறது தான் டி உறவுக்குள்ள முக்கியம்! மூணு மாசம் முத பெஞ்ச்ல உட்கார்ந்த புள்ள அவளுங்க கிட்ட கூட பேசாது, ஆனா பாரு அதுக்குப்புறம் ஏழெட்டு மாசமா நம்ம கிட்ட நல்லா தானே பழகுறா, ஜாலியா இருக்கா பழச கேட்டு எதுக்குக் கஷ்டப்படனும்” என்றாள் தேன்யாழி. 

“இப்படியே பேசினேன் வை மண்டையை உடைச்சு மாவிளக்குப் போட்ருவேன்டி, அவளைப் பத்தி தெரிஞ்சிக்க வேற வழி இல்லையேன்னு சொன்னா அவ ஏன் வரலன்னு திரும்ப கேளு. இருக்கு உனக்கு”என்று முறைத்தாள் தாமரை செல்வி. 

அதன் பிறகு வகுப்புகள் நடக்க, கல்லூரி நேரம் முடிந்த பின் தாமரையிடம் தேன்யாழி, 

“ஏய் புள்ள நான் ஒரு எட்டு போய் குந்தவையைப் பார்க்க போறேன் நீ வரியா?” என்று கேட்க

“இன்னிக்கு வீட்ல நிறையா வேலைன்னு எங்கம்மா சீக்கிரமே வர சொல்லிச்சு, நீ போய்ட்டு வா பெரியம்மா கிட்ட சொல்லிட்டியா? முதல்ல அவ வீடு எங்கன்னு தெரியுமா புள்ள? பேசாம வா! நாளைக்கு வரலன்னா பார்ப்போம்” என்றாள் தாமரை. 

“ஆத்தங்கரை பக்கமா போனா ஒரு முட்டுச்சந்து, அங்க கடைசி வீடுன்னு சொல்லி இருக்காதானே டி? அதெல்லாம் நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன், என்னன்னு தெரிஞ்சிக்கலன்னா என்னால நிம்மதியா இருக்க முடியாது. அங்க தான் நம்ம தென்றல் வீடு இருக்கே அங்க சாரிச்சுப்(விசாரித்து) போய்க்கிறேன்” என்ற தேன்யாழி தாமரையோடு டவுனுக்குச் சென்று,  அங்கிருந்து குந்தவை ஊருக்குப் போகும் மினி பஸ்ஸில் பயணப்பட்டாள். 

விசாரிக்க வழியின்றி குந்தவையின் வீட்டினை வெகு சுலபமாய் சென்றடைந்தாள் தேன்யாழி. வாசலில் நின்று குரல் கொடுக்க, கலைந்த தலையும் சோர்ந்த முகமுமாய் யாரென வந்து பார்த்த குந்தவைக்கு, தேன்யாழியைக் கண்டதும் அனைத்தும் மறந்த அக நிலை! அகத்தினில் வீசிய ஆனந்த அலையோடு, 

“ஏட்டி தேனு!!” என்றபடி தேன்யாழியை அணைத்துக் கொண்டாள். 

“வாட் எ சர்ப்பரைஸ்!! நீ வருவன்னு நான் கனவுல கூட நினைக்கல,  அச்சோ எனக்கு என்ன சொல்லேன்னே தெரியல,  அவ்வளவு சந்தோசமா இருக்கு” என துள்ளிக் குதித்தாள். 

“ஹேஹே!! விடுடி!! உன் மேல கோபத்துல இருக்கேன் நான்” என்றபடி தேன்யாழி விலக, 

“ஏன் டி” என இவள் முகம் சுருங்க கேட்டாள். 

“புள்ளையா நீ? வரலன்னா சொல்ல மாட்ட, அட்லீஸ்ட் போன் செஞ்சா எடுக்கிறியா எரும? ஸ்வீட்ச் ஆஃப்! உனக்கு என்னாச்சுன்னு தெரியாம  நான் இன்னிக்கு ஒரு க்ளாஸ் கூட சரியா கவனிக்கல” 

தனக்காக தன்னமில்லா தன்மையோடு வந்திருந்த தோழியைக் கண்டும், அவள் உள்ளத்தின் உன்னத அன்பைக் கண்டும் குந்தவையின் அகமகிழ, அதன் விளைவாய் அவள் கண்ணில் நீர் நிறைந்தது.

அதைக் கண்டு பதறிய தேன்யாழி, 

“ஏய் குவா என்னடி சும்மா திட்டினேன் அழாத உன்னைக் காணோம்னு கவலைல பேசிட்டேன்மா அழாத” என அணைத்து ஆறுதல் படுத்த, 

“ப்ச் இல்ல நான் உங்கூட ப்ரண்டாகி ஒரு வருசம் கூட இல்ல, ஆனா நான் ஜஸ்ட் ஒரு நாள் லீவ் போட்டதுக்கே, என்னைத் தேடி வீடு வரைக்கும் வந்துட்ட! ஐ அம் சோ ஹாப்பி!!” என்றாள் குந்தவை. 

“வீடு வரைக்கும் வந்த எனக்குக் காபி தண்ணீ கூட இல்லையாடி?” என பாவமாய் தேன்யாழி கேட்க, 

தலையில் தட்டிக் கொண்டு , “அச்சோ உட்காருடி” என்றவள் அங்கிருந்த மூங்கில் நாற்காலியினைக் காட்ட, தேனும் அதில் உட்கார்ந்தாள். அங்கிருந்த டீபாயில் கஞ்சி ஊற்றியத் தட்டு இருக்க, 

அவளையும் இழுத்து தன் அருகில் அமர வைத்த தேன்யாழி, 

“என்னடி கஞ்சிக் குடிக்காம இருக்க? முகமெல்லாம் டல்லா இருக்கு, ஏன் தலையை இப்படி வச்சிருக்க” என சொல்லி அவளின் தலையை சரி செய்து விட, 

“அதை ஏன் கேட்கிற?” என்றவள் நேற்று நடந்த கடத்தலை சொன்னாள்.

 

“என்னைக் காப்பாத்தினது யாரு சொல்லு?” 

“யாருடி அந்த ஹீரோ?”

குந்தவை கிண்டல் சிரிப்போடு, “ஹீரோ இல்ல வில்லன் உங்க அண்ணன் செந்தூரன்” என்று சொல்ல

“அண்ணனா? ஓய் என் அண்ணனை வில்லன் சொல்ற” என்று முறைத்தாள். 

“சரி சரி முறைக்காத” என்றவள்   நேற்று நடந்த எல்லாவற்றையும் சொல்லி, 

“அதனால கொஞ்சம் பயந்துட்டேன், அங்கயே அழ வேற செஞ்சிட்டேன், ஸோ வீசிங் வந்துடுச்சு. நைட்  புல்லா ஃபீவர் அண்ணனும் இன்னிக்கு டியுட்டி போகல. அதான் காலேஜ் வரல,  போனை நேத்து சார்ஜ் போடவே இல்லை” என்று காரணம் சொன்னாள்.

“அச்சோ இப்ப பரவாயில்ல தானே?” என கைவைத்துப் பார்க்க, ஜில்லென்று தான் இருந்தது. 

“இப்ப டயர்டா தான் இருக்கு எப்பவும் சமைக்கிற அத்த வரல. அதனால் அண்ணன் தான் கஞ்சி வச்சான், அதை குடிக்க முடியாம குடிச்சிட்டு இருக்கேன் நீ வந்துட்ட” என சொல்லி சிரிக்க

“சரி உங்க அண்ணன் எங்கே?”

“குளிக்கிறான்டி, இரு உனக்கு சாப்பிட எதாவது கொண்டு வரேன்” எனவும்

“முதல்ல கஞ்சைக் குடி நீ” என்று தேன்யாழி சொல்ல

“ப்ச் பிடிக்கவே இல்ல சப்புன்னு இருக்கு” என்றபடியே அவள் கஞ்சியை எடுத்தாள் குந்தவை.

“பிடிக்கலயாடி? சோறு இருக்கா? நான் கொஞ்சமா மிளகு ரசம் வச்சுத் தரவா?”

“அதெல்லாம் வேண்டாம், நீ இரு” என்று அவள் அவசரமாய் மறுக்க

“சப்புன்னு எப்படி குடிப்ப? ரசம் சாப்பிட்டா கோல்டும் போகும், நீ வா முதல்ல” என்ற தேன்யாழி குந்தவையை சமையல்கட்டிற்குள் இழுத்துச் சென்று, தேவையான பொருட்களை எடுத்துத் தர சொன்னாள். 

“நீ என்னைப் பார்க்க வந்ததே சந்தோசம், ஏன் இதெல்லாம் செய்ற?” என வருத்தமாய் குந்தவை கேட்க

தேன்யாழியோ விழிகளை உருட்டி, “கெஸ்டா நானு? பிச்சிடுவேன், என் ப்ரண்ட்காக நான் வந்திருக்கேன்.  என் ப்ரண்ட்காக நான் செய்றேன், இதுல எனக்கு என்ன கஷ்டம்? இருபதே நிமிசம் சுட சுட சூப்பரான மிளகு ரசம் வைக்கிறேன். நீ கம்முன்னு கட” என்று அவளை சமாதானம் செய்தாள். 

“வேண்டாம் தேனு” என்றவளை முறைத்தவள், 

“எரும சாப்பிடாம அந்த கஞ்சியை முறைச்சுப் பார்க்கிற. எனக்கு எந்த கஷ்டமும் இல்ல, உனக்கு செய்யாம போனா தான் மனசு கஷ்டமா இருக்கும்” என்றாள் உள்ளார்ந்த அன்போடு. ஆம் தேன்யாழிக்கு தாயில்லா பிள்ளையென, குந்தவையின் மீது ஒரு தன்னலமற்ற அன்பு எப்போதும் கனிந்து ஓடும். அவளும் அப்படி தானே?!

குந்தவை குடும்பத்தைப் பற்றி பகிர்ந்திருக்காவிட்டாலும்,  அவளது அக ஆழத்தில் எத்தனையாய் அழியா வலி சுமப்பாள் என தேன்யாழி அறிவாள். என்ன தான் அமிர்தவள்ளி அன்னையாய் அவளைத் தாங்கினாலும் அவளுக்குப் பூங்கொடியின் நினைவு நீங்கா தாலாட்டாய் இருக்கிறதே!

ரசத்திற்குப் புளி கரைத்தவள், ”ஏய் என் முகத்தை என்ன பார்த்திட்டு நிக்கிற. போய் முதல்ல குளிச்சிட்டு வா! அழுக்குப் பாண்டை! வாக்” என குந்தவையைப் பழிக்க

“ஜூரத்துல போய் குளிக்க சொல்ற?” என குந்தவை முறைத்தாள். 

“அதான் இப்போ இல்லையே ஹீட்டர் இருக்கா இல்ல வெண்ணீர் வைக்கவா?”

“ஹீட்டர் இல்ல” என்று இவள் சொல்லவும், தேன்யாழி தண்ணீரை அங்கிருந்த குண்டான் ஒன்றில் நிரப்பியவள், 

“இங்க உங்க வீட்டுல நொச்சி இலை இருக்கா?” என்று கேட்டாள். 

குந்தவை “இருக்கே” என்று சொல்லவும், 

“போய் பறிச்சுட்டு வா அப்படியே ஆடுதொடாவும்” என்றாள். 

தேன்யாழி ரசத்திற்குத் தேவையானது செய்து விட்டு அதனை தாளித்தபடி நின்றிருக்க, 

“ஏய் லூசு இங்க என்ன பண்ற” என்ற குரல் தேய்ந்து ஒலித்தது.

அங்கு டீஷர்ட்டும் ட்ராக் சூட்டுமாய் தென்னவன் தேன்தமிழன். 

தேன்யாழி திரும்பி பார்க்க, அவளைக் கண்டதும் ஆயிரம் தாமரை மொட்டுகளாய் அவன் அகம் மலர, மகிழ உள்ளத்தில் எழுந்த உற்சாக ஊர்வலத்தின் விளைவாய்,  துள்ளலும் துடிப்பும் அவனிடம். 

“என்ன ஆபிசர் ஐடி வேணுமா?” என புருவம் உயர்த்தி கிண்டலாய்க் தேன்யாழியைக் கேட்க

“நீங்க எங்க இங்க?” 

“அது நான் கேட்கணும் மேடம்”

அப்போதுதான் இவன் குந்தவையின் அண்ணனாய் இருப்பானோ என்ற எண்ணமே அவளுக்கு உதயமானது.  

“ஓ நான் குந்தவை ப்ரண்ட்! நீங்க குந்தவை அண்ணா வா? நீங்க தமிழ் உங்க பெயர் தேன் தமிழன்ல” என்றபடி இவள் யோசிக்க

“தேன் தமிழன் இல்ல, தென்னவன் தேன்தமிழன்!” என்றான் அழுத்தி ஒரு வகை நிமிர்வோடு. 

“பெரிய ராச ராச சோழரு!! நீட்டி முழக்கிறத பாரு, தென்னவன் தேன் தமிழனா..” என்றபடி முணுமுணுத்தாள்.

“குந்தவை எங்க?” 

அப்போது “தமிழ் தள்ளுடா” என்றபடி இலைகளோடு வந்தாள் குந்தவை. 

“கொடுடி” என்றபடி அதைப் பறித்து தண்ணீரில் போட்டாள் தேன்யாழி. 

“என்னடி நடக்குது?” என்பதாய் தென்னவன் தங்கையைப் பார்க்க, 

“அது எனக்காக ரசம் வைக்கிறாடா, குளிக்கிறது இலைப் பறிக்க சொன்னா, நான் லீவ்னு என்னைப் பார்க்க வந்திருக்கா” என்றவள் முகத்தில் தோன்றிய பெருமிதம் பேரன்பின் விளைவாய் இருந்திட, பல மாதம் கழித்து தங்கையின் முகத்தில், இத்தகையை பொலிவும் பொய்யற்ற சிரிப்பையும் பார்த்தவனின் அகத்தினில் ஆசுவாசம் மலர்ந்தது.

தென்னவனோ, “வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட வேலை வாங்குற நீ?” என திட்ட

“நான் கெஸ்ட்லாம் இல்ல, என் ப்ரண்டுக்காக தான் வந்தேன்” என்று தேன்யாழி சொல்ல, அவள் பேச்சில் இவனுக்கு சுவாரசியம் கூடியது. 

அவனுக்கு அவள் பெயர் தெரிய வேண்டும் என்ற அவா இருக்க

“ஹேய் வாலு, என்னை உன் ப்ரண்டுக்கு அறிமுகம் செய்ய மாட்டியா? அவங்க என்னை யாருன்னு கேட்டாங்க?” என்றான் தென்னவன்.  

“சாரி சாரி!! இது என் ப்ரண்ட் தேன்யாழி, இது என் அண்ணன் தேன் தமிழன் இன்ஸ்பெக்டரா இருக்கான்” என குந்தவை இருவருக்கும் அறிமுகம் செய்துவித்தாள்.

தென்னவன், “ஓ! நீதான் தேன்யாழியா? அழகான பெயர்! இவ உன்னைப் பத்தித்தான் என்ட்ட சொல்லிட்டே இருப்பா” என்றான் முறுவலோடு. 

“டேய், அண்ணா உனக்கு இன்னொன்னு தெரியுமா, நேத்து பார்த்தோமே, செந்தூரப் பாண்டியன் அவர் இவ அண்ணன் தான்” என சொல்ல

“ஓ அப்படியா? என்றவன், 

“சரி நீங்க பேசிட்டு இருங்க” என்றபடி அவர்களுக்குத் தனிமை தந்து வெளியேறினான்.

“ஏய் உங்க அண்ணா பெயரு தமிழ்னு சொல்லுவ, கும்பகோணம் ஸ்டேஷன்னு சொன்ன, அவர் இங்க தானே இருக்கார் இப்போ”

என்று தேன்யாழி விசாரிக்க, 

“அவன் கும்பகோணம்னு நான் போன வருசம் சொன்னேன்,  அவன் இப்ப இரண்டு மாசம் முன்னாடி,  இங்க வேலை மாறி வந்துட்டான், இன்ஸ்பெக்டர் ஆகிட்டான் அது சொல்ல மறந்துருப்பேன் டி” என்றாள் குந்தவை. 

“எனக்கு இவரை முன்னாடியே தெரியும்” என்றவள் அவனைப் பார்த்தது பற்றி சொன்னாள். 

“ஆமா, நேத்து எங்க அண்ணன்கிட்ட பேசினியா நீ?” என தேன்யாழி கேட்க 

“உன்ட்ட பேசாதவர்ட்ட எனக்கு என்னடி பேச்சு வேண்டி கிடக்கு?” என்று சொன்ன குந்தவையைப் பார்த்து சினேக சிரிப்பை உதிர்த்து, 

“சரி நீ போய் குளிச்சிட்டு வா தண்ணி சுட்டுருக்கும்” என்றாள்.

“டேய் அண்ணா, வா தண்ணியை இறக்கி தா” என்று சத்தம் போட்டாள் குந்தவை. அவள் செயல் கண்டு விழிகளில் ஏறிட்ட ஆச்சரியத்தோடு தேன்யாழி, 

“ஒரு புள்ள க்ளாஸ்ல பேசினா மைக் வைக்க வேண்டி இருக்கும்,  இங்கன என்னடான்னா ஸ்பீக்கர் செட் போல இருக்கு” என தலைசாய்த்து கிண்டல் அடித்தாள். 

“ஹி ஹி அது வீட்ல மட்டும் சத்தம் வரும், வெளியிடம் போனா அமைதியாயிடுவேன்” 

அதற்குள் தென்னவன் வந்து வெண்ணீரைக் கொண்டு போய் தங்கையின் பெட்ரூமில் வைத்தான். 

“நீ குளிச்சிட்டு ப்ரஷா வா, நான் அதுக்குள்ள உனக்கு எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்” என்ற தேன்யாழி பருப்பைத் தேடி எடுத்து, வறுத்து துவையல் அறைத்தாள். 

பின் என்ன செய்வதென பார்க்க, ஹாலில் தென்னவன் இருந்ததால், பின் கட்டு வழி போக அங்கு சந்தனமுல்லைப் பந்தல்  நிறைய பூக்கள் மொட்டாய். குந்தவை குளித்து வரும் வரை அதைப் பறித்துக் கட்டலாம் என அங்கிருந்த ஒரு கூடையை எடுத்துப் பறிக்கத் தொடங்கினாள். 

‘என்ன ஆபிசரைக் காணல சமைச்சுட்டு எங்க போனா?’ என தென்னவன் இவளைத் தேடி வர, 

 

தனது ஷாலைக் குறுக்காய்க் கட்டிக்கொண்டு, அவள் மலர் பறிக்க, 

அவளை அவ்விடத்தில் அப்படி பார்க்க, பாவையின் செயல் அத்தனை பாந்தமாய் இருக்க, இவள் இங்கேயே எப்போதும் இருக்க வேண்டுமென அகம் ஆவல் கொள்ள, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

முதன் முதலாய்ப் பார்த்த போது அவளை சுவாரசியமாய்ப் பார்க்க, இப்போது இவள் வீட்டினில் இப்படி உரிமையாய் அனைத்தையும் செய்ய, உள்ளமதில் உன்னதமாய் உள்ளார்ந்த உணர்வொன்று தோன்றியது. 

பின் திருட்டுத்தனமாய்ப் பார்க்காதே என மனம் திட்ட, உடனே உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் குந்தவையும் குளித்து வர, 

“எங்கடா தேனு”

“தோட்டத்துல நிக்கிறா” எனவும், குந்தவை அவளை அழைத்து வந்தாள்.

“நீ இப்போ சாப்பிடு துவையல் காரமா வச்சிருக்கேன், நல்லா சாப்பிட்டு நாளைக்கு வந்திடு” என்று சொல்ல அதற்குள் சார்ஜ் போட்டிருந்ததால் குந்தவையின் செல் சத்தம் போட பார்த்தால் தாமரை. 

“நீ இருடி அவகிட்ட பேசிடுறேன், இங்க லைன் கிடைக்காது” என்றபடி குந்தவை வெளியே போக, 

தேன்யாழி அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பூவினைக் கட்ட துவங்க, தென்னவன் அவளையே பார்த்தான்.  சுவாரசியமானவள் இப்போது அவன் சுகரகசியமானாள். 

அவளும் அவனும் அவ்வீட்டினில் இருக்க, அவள் இருக்கையில் அவன் அகம் உணர் உவகையும் உள்அமைதியும் அவனுக்கு நல்கிட, தன் பெற்றோர் இறந்த பின் இழந்திருந்த அமைதி திரும்ப பெற்ற உணர்வு. 

அவன் வீடு, மீண்டும் வீடானது போல் ஒரு உணர்வு. 

தென்னவனின் வாய் தானாய், 

“நீ இங்கேயே இருந்திடுறியா தேனு?” என கேட்டு வைத்தது. 

Scroll to Top