அத்தியாயம் 11
‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது’
-பகவத் கீதை.
“நில்லுங்க! நில்லுங்க!!” என்று தன் முன் மூச்சு வாங்க நின்ற குந்தவையைப் பார்த்த செந்தூரன்,
“எதுக்கு இப்படி ஓடி வர நில்லு முதல்ல” என்றான்.
“உங்க கிட்ட பேசணும் அதான்”
“அதை சொல்ல வேண்டியதுதானே”
மெல்லிதாய்ப் புன்னகைத்தவள்,
“தேங்க்ஸ் டிக்கெட்டுக்கு, இன்னிக்கு எனக்குப் பர்த்டே” என்றாள்.
செந்தூரனும் “அட ஹாப்பி பர்த்டே” என்று வாழ்த்த
“தேங்க்ஸ் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்”
“என்ன சொல்லணும்?” இவன் புருவம் உயர்த்திக் கேட்டான்.
“நீங்க நல்லவர்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு” என்று குந்தவை குதூகலத்தோடு சொன்னாள்.
கேட்ட செந்தூரனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டு சிரித்தவன்,
“அம்மாடி! பெரிய கண்டுபிடிப்பு” என்றான் கிண்டலாக.
தோளைக் குலுக்கிய குந்தவை,
“ப்ச் கிண்டல் பண்ணாதீங்க நீங்க நல்லவர்தானே? அப்புறம் ஏன் தேனுக்கிட்ட ஹார்ஷா நடந்துகிறீங்க ?” என்று கேட்டு வைக்க செந்தூரனின் முகம் அமைதியாகியது. அவளுக்குப் பிறந்த நாள் என்பதை நினைத்தவன், கோபமாகப் பேசக் கூடாது என தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“நான் ஹார்ஷா நடக்கிறேன்னு தேனு உங்கிட்ட சொன்னாளா?”
“இல்லை இல்லை!! ஆனா நீங்க அப்படி தானே? நானே பார்த்துருக்கேன், தாமரை கூட சொல்லியிருக்கா”
“அவ ஒரு ஆல் இந்தியா ரேடியோ, அவ ஆயிரம் சொல்லுவா. இங்க பாரு குந்தவை நீ வளர்ந்த விதம் வேற, பொதுவாவே இங்க அண்ணனையெல்லாம் வாடா போடா சொல்லியெல்லாம் பேச மாட்டாங்க. நீ உங்கண்ணனை அப்படிதானே கூப்பிடுவ அது தப்பு இல்லை! உரிமையா நீ செய்ற, எங்களுக்கு அது மரியாதை குறைவான்னு விசயம்.”
“சாதாரண அண்ணன் தங்கச்சியே அப்படி இருக்கும்போது நானும் தேனும் வேற வேற வயித்துல பொறந்தவங்க! என்னால அவ கூட அப்படியெல்லாம் அன்பா பழக முடியாது, எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது” என்றான் பொறுமையாய்.
“நீங்க சொல்றதெல்லாம் சரி ஆனா அன்னிக்கு அவ சாப்பிடலன்னதும் ஏன் போன் பண்ணீங்க?” என்று சரியாய்க் குந்தவை கேட்க
“அவ நான் திட்டி சாப்பிடாம இருந்ததில்லை, அது மட்டுமில்லாம எங்கம்மா அன்னிக்கு வீட்ல இல்ல இருந்திருந்தா அவங்க சமாதானம் செஞ்சிருப்பாங்க. இவ அவங்க வரவரைக்கும் பட்டினியா கிடப்பா, அவ்வளவு திமிர்! அதனால தான் நம்மளால ஏன் பட்டினி கிடக்கனும்னு உங்கிட்ட சொன்னேன். தாமரை டமாரம் அடிப்பான்னு தான் அவ கிட்ட சொல்லாம உங்கிட்ட சொன்னேன் போதுமா?” என்றான் செந்தூரன்.
“தேனு எந்த தப்பு செய்யலையே” என இவள் பாவமாய் சொல்ல
“அவ தப்பு செஞ்சான்னு நான் எங்க சொன்னேன்? எனக்குப் பிடிக்காது!! அவ்வளவுதான்! அதுக்காக நான் அவளுக்கு எதுவும் செய்யாம இருந்திடலையே, எங்க அம்மா என்ன வேலைக்கா போறாங்க? நானும் தானே விவசாயம் பார்க்கிறேன். வர பணத்தையெல்லாம் அவங்க கிட்ட தானே கொடுக்கிறேன், அதுல அவளுக்கு அவங்க செய்றதை நான் தடுக்கிறதில்லை தானே?” என்றபடி அவளை பார்த்தான்.
‘உன்னையெல்லாம் நூறு குந்தவை வந்தாலும் திருத்த முடியாதுய்யா’ என நினைத்தவள், இதற்கு மேல் என்ன சொல்வது என தெரியாமலும், பேசினாலும் இத்தனை வருடத்தில் திருந்தாதவனா இனி திருந்திடுவான் என நினைத்து,
“சரி இதை சொல்லத்தான் வந்தேன் கடைக்குப் போகணும் வரேன்” என்று சொல்லி கிளம்ப
“குந்தவை! இது தான் நீ இதைப் பத்தி பேசறது கடைசியா இருக்கனும், இனிமே இந்த விசயத்துல தலையீட்டா எனக்குக் கெட்ட கோவம் வரும், சொல்லிட்டேன். உன் பிறந்த நாள்னு தான் பொறுமையா பேசுறேன்” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னான்.
“சரி சாரி இனிமே பேச மாட்டேன்” என்றாள் பவ்யமாக.
“ஒரே ஒரு உண்மை சொல்லவா?” என கேட்க
“என்ன?”
“எனக்கு இன்னிக்குப் பொறந்த நாளே இல்லை, நீங்க திட்டிடுவீங்கன்னு பயந்து தான் பொய் சொன்னேன்.” என்றவள் அவன் முகத்தை தீவிரமாய்ப் பார்த்தாள்.
கேட்டவனுக்கு சிரிப்பு.
“பொய் சொன்னியா உன்னை போடி” என்றான் முகமெல்லாம் பரவியிருந்த புன்னகையோடு. குந்தவையும் தப்பித்தோம் என்று நினைத்தபடி ஓடிப்போனாள்.
தாமரையின் நோட்டு ஒன்று குந்தவையிடம் இருக்க, தாமரை கல்லூரி வராத காரணத்தால் தேன்யாழியை வாங்கி வர சொன்னாள். அதில் தான் அசைன்மெண்ட் எழுத வேண்டும். அடுத்து இரண்டு நாட்களும் விடுமுறை வேறு.
குந்தவையிடம் காலையிலேயே சொல்லி வைத்திருந்தாலும் அவளும் மறந்து விட்டு கொடுக்காமல் சென்றிட, வாங்காமல் போனால் தாமரையிடம் பேச்சு வாங்க வேண்டும் என்பதால், இவள் வேறு வழியின்றி போகும் வழியில் குந்தவையின் ஊரில் இறங்கிக் கொண்டாள்.
குந்தவையின் வீட்டிற்குச் சென்றால் முன் பக்கம் பூட்டியிருக்க, பின்னால் ஏதோ சத்தம் கேட்க போனால், அங்கு தென்னவன் ட்ராக் பேண்டும் ஒரு பனியனும் அணிந்து ஒரு துண்டை அப்படியே தலைப்பாகைப் போல் கட்டிக் கொண்டு, அங்கிருந்த தென்னை மரங்களுக்கு நீர் விடும் வகையில், மண்வெட்டியால் வாய்க்காலை சீர்படுத்திக் கொண்டிருந்தான்.
அவன் நின்ற கோலமும் தலைப்பாகையும் , ‘ராச ராச சோழரு…வாய்க்கால் வெட்டுறாரு’ என்று மனத்தில் ஓடவும், சிரிப்பு வந்துவிட்டது தேன்யாழிக்கு.
சிரிப்பு சத்தம் கேட்க இவன் திரும்பி பார்க்க ,
“அட வாங்க மேடம்” என இவளை புன்னகையோடு வரவேற்றான்.
“குந்தவை எங்க போனா?”
“அவ காலேஜ்ல இருந்து இன்னமும் வரலையே”
“வரலையா ஓ மேம் கிட்ட சைன் வாங்கிட்டு வர லேட் ஆகிடுச்சோ” என்று யோசித்தாள் தேனு.
“என்ன சிரிப்பு உனக்கு?”
“இல்ல தெனைக்கும் விவசாயம் செய்ற எங்கப்பா அண்ணன் கூட இந்த அட்டூழியம் செய்றதில்லை, நீங்க இருக்கீங்களே, தலைப்பாகையெல்லாம் கட்டிட்டு” என்று விடாது சிரித்தாள் தேன்யாழி.
அவள் சிரிக்க சிரிக்க இவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
“குந்தவைக்குப் போன் செய்றேன்” என இவள் சொல்லி குந்தவை அழைக்க, அவள் பேருந்தில் வந்து கொண்டிருந்ததால் அதனை கவனிக்கவில்லை.
“அவ எடுக்க மாட்டேங்குறா” என்று சொல்லி இவனை பார்க்க
“பஸ்ல வருவாளோ இருக்கும் என்ன விசயம்?” என்று கேட்க இவளும் சொன்னாள்.
“நானெல்லாம் அசைன்மெண்ட் எழுதவே ஆள் அப்பாயிண்ட் பண்ணினவன், ஏதோ ஒரு நோட்ல எழுதி தர வேண்டியது தானே?” என்றான் கிண்டலாக.
தேன்யாழி அவனை முறைத்தபடி, அந்த குண்டு மல்லி செடியின் அருகில் நிற்க, தீடீரென சுவாசத்தை உள்ளிழுத்தாள்.
மண்வாசம்!
“மண்வாசம் வருது! அச்சோ மழை வரும் போல பேசாம நாளைக்கு தாமரையோட வந்து நோட்டை வாங்கிக்கிறோம். நான் கிளம்புறேன்” என்றாள்.
தென்னவனுக்கு எங்கு தெரிந்ததாம் மண்வாசம்? மன்னவன் மனமெங்கும் மங்கை வாசம் தானே??
“ஹேய் மழைன்னா சந்தோசப்பட்டு, அப்படியே துப்பட்டாவ கையில புடிச்சு டான்ஸ் ஆடுவியா? இல்ல இப்படி மழை வருது வீட்டுக்குப் போகணும்னு சொல்லுவியா? சினிமாவுல என்னிக்காச்சும் பொண்ணுங்க மழை வருதுன்னு ஃபீல் பண்ணி பார்த்திருக்க நீ” என இவன் குறும்பாய்க் கேட்க
“ம்ம்ம்! அது சினிமா நிஜத்துல மழையில அப்படி ஆட்டம் போட்டா, ஜீரம் தான் வரும் நான் வரேன்” என்றபடி இவள் முன்வாசல் நோக்கி நடக்கப்போக வானம் வெட்கம் கொண்டு இருட்டிட, தளியெல்லாம்(மேகம்) தணிந்திட(குளிர்ந்திட), மழை பொழியத் தொடங்கியது.
அதுவும் மிகவும் பலமாய். காற்று வேகமாய் வீசிட, மரங்கள் ஆடிட, எங்கும் மண்வாசம் நிறைத்தபடி, படபடவென மழை கொட்டத் தொடங்கியது.
“ஹே நில்லுடா! ராஜாத்தி! இவ்வளவு மழையில போவியா மழை விட்டதும் போகலாம்” என்று சொல்லி வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே அழைக்க, தனியாய் அவனோடு செல்ல தயங்கினாள் தேன்.
“வேண்டா நான் இங்க இருக்கேன்” என்றபடி திண்ணையில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொள்ள, அவள் நிலை புரிந்தவனாய் அவனும் அங்கிருந்த மர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
பத்து நிமிடங்கள் சென்றிருக்கும் விடாது பேய் மழையாய் பெய்ய, உயிர் வரை ஊடுருவியது குளிமை! சிறிது நேரத்தில் சின்னதாய் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும் அளவிற்கு மழை கொட்டியது. கூடவே மின்னலும் இடியும்.
இடி இடிக்கும் சத்தம் கேட்டும் தேன்யாழி அமைதியாய் உட்கார்ந்திருக்க, தென்னவன் காதலும் கள்ளத்தனமும் கலந்த வண்ணம் காரிகையிடம்,
“ஏன் டா ராஜாத்தி? இடி இப்படி இடிக்குது பயந்து வந்து என்னைக் கட்டிக்குவேன்னு பார்த்தா, அப்படியே இருக்க ஒரு சூப்பர் சீன் எதிர்ப்பார்த்தேன் நான்” என சொல்ல
அவளோ அவனை சன்னமாய் முறைத்து,
“அதெல்லாம் எங்கிட்ட நடக்காது, இருபத்தொரு வருசத்துல எத்தன இடி பார்த்திருப்பேன்? அப்பவே கிளம்பியிருந்தாலும் இன்னேரம் எங்க ஊருக்குப் போயிருக்கலாம். இப்ப பாருங்க எப்படி மழை கொட்டுதுன்னு” என அவனிடம் கோபமாய்க் கத்தினாள்.
“விடு தேனு! அந்த மழையில குளிச்சிட்டு இருக்க மாமரத்தைப் பாரு, அந்த ரோஜா மொட்டு மேல விழுந்திருக்க சின்ன மழைத்துளியைப் பாரு, அழகான பொண்ணு போட்டிருக்க வைர மூக்குத்தி மாதிரி இல்ல, இயற்கையை ரசிக்கனும் ராசாத்தி” என்று அவன் ரசிகனாய்ப் பேச
“உங்களை !பக்கத்துல வந்தா மண்டையை உடைச்சிடுவேன், நான் இதையெல்லாம் நான் சின்ன வயசுலேர்ந்து பார்க்கிறேன், சும்மா வெறுப்பேத்தாதீங்க” என்றாள்.
“என்ன தான் சொல்லு போ, இன்னிக்கு எனக்கு நல்ல நாள் போல, நீ வர நேரம் நான் வீட்ல இருக்க, தென்னவனும் தேன்யாழியும் தேன் சிந்தும் வானமும்! லவ்லி!! காட் இஸ் கிரேட்!!” என்று தென்னவன் சிலாகித்துப் பேச
“தேன் வானத்துல இருந்து சிந்துச்சுனா பிசுபிசுன்னு ஆகிடும், எறும்பு தான் நம்ம மேல மொய்க்கும், கடிச்சு வைக்கும்! கவிதையாய்ப் பேசுறேன்னு என்னைக் கடுப்படிக்காத, அம்மா என்னை மழையில காணும்னு பயப்படுவாங்கன்னு நானே கவலையில இருக்கேன்” என்று கவலையாக சொன்னாள்.
“வேணும்னா சொல்லு, உன்னை அப்படியே பைக்கில கொண்டு போய் வீட்ல விடுறேன், எதுக்கு டென்ஷன் ஆகுற? அப்படியே அவளும் நானும் தமிழும் தேனும்னு நான் ஜோரா பாடுவேன்ல” என்று சொல்ல, தேன்யாழிக்கு இவனின் சேட்டையில் தானாய் மனம் மகிழ்ந்திட, இதழ் வழி சிந்தினாள் இதமாய்ப் புன்னகையொன்றை.
அவள் புன்னகைக்கவும் அவளைப் பார்த்து கண்ணடித்தவன் ஒன்றும் பேசாமல் தங்கையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான். அவளையும் இன்னும் காணுமே?
இந்த மழையில் எங்கு மாட்டிக் கொண்டாளோ?
அதற்குள் பார்த்தால் தொப்பலாய் நனைந்தபடி குந்தவை செந்தூரனின் பைக்கில் வந்து இறங்கினாள். தங்கை பத்திரமாய் வந்துவிட்டாள் என தென்னவன் நிம்மதி கொண்டான்.தேன்யாழிக்கோ தன்னையே இதுவரையில் தன் வண்டியில் ஏற்றாதவன் இன்று குந்தவையை அழைத்து வந்திருக்கிறான் என்ற குறுகுறுப்பும் தன்னை தனியாய் தென்னவனோடு கண்டால் என்ன நினைப்பானோ என்ற குற்றவுணர்வுமாய் தமையனைப் பார்த்தாள்.
செந்தூரனோ ,
“தேனை அழைக்க தான் வந்தேன். குந்தவை பஸ் ஸ்டாண்டில நிக்கவும் அப்படியே அழைச்சிட்டு வந்துட்டேன்” என்று சொல்ல,
“அதுக்கென்ன செந்தூரன்? தேங்க்ஸ்! முதல்ல நீங்க டிரஸை மாத்துங்க” என்று உள்ளே அழைத்தான் தென்னவன்.
“இல்ல, இவளை அழைச்சிட்டு வரேன்னு வந்தேன். பத்து நிமிசம் நனைஞ்சாலும் ஊருக்குப் போய்டலாம்” என்று செந்தூரன் தேன்யாழியைப் பார்த்தவாறே சொல்ல
“என்ன நீங்க உங்க தங்கச்சிக்கு ஏதோ புக் வேணும்னு இவளைப் பார்க்க வந்தா, மழை இப்படி கொட்டுது. போகணும்னு ஒரே அடம்! நீங்களும் அப்படியே பண்ணுறீங்க! முதல்ல என் கூட வாங்க டிரஸ் மாத்திட்டு, மழை விட்டதும் போகலாம்” என்று செந்தூரனை சமாளித்து அழைத்தான்.