அத்தியாயம் 14
தேன்யாழிக்கு இறுதி தேர்வுகள் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிற்று. அமிர்தவள்ளி வரன் பார்க்க நினைக்க, செந்தூரன் தான் கொஞ்ச நாள் போகட்டும் என நிறுத்தி வைத்திருந்தான்.
அமிர்தவள்ளிக்கு ஆச்சரியம் செந்தூரனும் தேன்யாழியும் பேசிக் கொள்வது கண்டு. ஆனால், ஆச்சரியம் தாண்டிய அலாதி ஆனந்தம்.
‘எப்படி டி உங்கண்ணன் உங்கிட்ட நல்லா பேசுறான்?’ என்று தேன்யாழியிடம் கேட்டால்
அவளோ , ’ போய் அண்ணன் கிட்ட கேளும்மா’ என்றாள்.
மகனிடம் கேட்டால் அவனோ,
‘ஏன் நான் பேசக்கூடாதா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
‘ஆத்தாடி நம்ம எதாச்சும் கேட்கப்போய், திரும்ப பேசாம இருந்திட போறான். வீரனாரே என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்டிட்ட’ என்று மகிழ்வதுடன் அதைப் பற்றிக் கேட்பதை நிறுத்திவிட்டார்.
சிதம்பரமும் தனக்குப் பிறகு, தன் இளைய மகளின் நிலை என்னவாகுமென்ற கவலை கலைந்து போய், செந்தூரன் தேன்யாழியிடம் பேசுவதில் நிம்மதி கொண்டார்.
தாமரை அதிசயமாய்ப் பார்த்து,
“என்ன புள்ள செந்தூரன் அண்ணனா உங்கிட்ட பேசுறது?” என வாயைப் பிளந்தால். வாயில் அடி போட்டு,
தேன்யாழி “போய் எங்கண்ணன் கிட்ட கேளு” என்று சொல்ல, அவளா போய் கேட்பாள்?
தேன்யாழியிடம் அவள் மயங்கி விழுந்த அன்று பேசிய தென்னவன், அன்றிரவு அவள் எண்ணிற்கு அழைத்தான்.
“யாழிம்மா எதுனாலும் அழாம தைரியமா இருக்கனும், நீ அழுதது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? என் ராஜாத்திக்கு நான் இருக்கேன், இனிமே சாப்பிடாம கொள்ளாம இருக்க கூடாது. எக்சாமுக்கு நல்லா படி” என்றான்.
இவளும், ”இனி இப்படி செய்ய மாட்டேன்” என்றாள்.
அதன் பின் இவளும் பேசவில்லை, அவனும் பேசவில்லை. அமிர்தவள்ளி வரன் பார்த்துக்கொண்டு இருக்க,
“நான் மேல படிக்கனும்மா” என்று தேன்யாழி மல்லுக்கட்ட
“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா” என்றான் செந்தூரனும்.
தென்னவனை தவிர வேறு வரன் பார்க்கும் எண்ணமே செந்தூரனுக்கு இல்லை. அதன் காரணம் தென்னவன் அல்ல! தேன்யாழியே! இதுவரையில் தங்கைக்குப் பிடித்த எதையும் செய்யாதவன், தங்கைக்குப் பிடித்தவனையே திருமணம் செய்து வைக்க நினைத்தான். அது மட்டுமல்லாமல் தென்னவனும் அத்தனை வகையிலும், தேன்யாழிக்குப் பொருத்தமானவனே என்ற எண்ணம் செந்தூரனுக்கு ஆழமாய் உண்டு.
அவன் தான் அவனை அண்ணனாய், காவலனாய், காதலனாய் என அத்தனை பரிமாணத்தில் பார்த்திருக்கிறானே. அன்று காவல் நிலையத்தில் காதல் ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கியது போலவே தானே அவனின் நடத்தையும் இருந்தது.
தேன்யாழி ஏதோ ஒரு கோபமும் வேகமும், அவளை உந்தித்தள்ள அன்று தென்னவனை திருமணம் செய்ய கேட்ட போதிலும், இது தான் வாய்ப்பு என்று திருமணம் செய்யாமல் இருந்த, அந்த நற்பண்பு செந்தூரனைக் கவர்ந்தது. செந்தூரனின் நிலையில் இருந்தும் யோசித்த அந்த நியாய மனம் பிடித்துப் போனது.
அமிர்தவள்ளி தேன்யாழிக்கு மாப்பிள்ளை பார்க்க, இதைப் பற்றி செந்தூரன் தென்னவனிடம் பேச, அவனோ,
“என்னைக்கா இருந்தாலும் அவ தான் என் மனைவி செந்தூரன். ஆனால், எனக்கு அண்ணனா சில கடமை இருக்கு, குந்தவைக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்த பின்னாடிதான், என்னைப் பத்தி நான் யோசிக்க முடியும். கொஞ்சம் டைம் கொடுங்க” என்று கேட்க, செந்தூரனும் என்ன சொல்வான் அவன் பேச்சில் நியாயம் இருக்க ஒத்துக்கொண்டான்.
……………………………………….
அன்றிரவு தேன்யாழியின் அலைப்பேசி சத்தமிட, பார்த்தால் தென்னவன் தான் அழைத்திருந்தான்.
வெகு நாட்கள் கழித்து அவன் அழைக்க, இவளுக்குள் மலர்கள் பூத்தன.
“ஹலோ” என்றாள் உற்சாகமாய்.
“என்ன பண்ற தேனு?” என்றவனின் குரல் சுரத்தே இல்லாமல் ஒலிக்க,
“நீங்க என்ன பண்றீங்க? ஆள் அட்ரஸே இல்ல” இவள் செல்லமாய்க் கோபம் கொண்டாள்.
“அவ்வளவு ஆசை இருந்தா, நீ பேச வேண்டியது தானே?” என்றான் கடுப்பாக.
“எங்கண்ணனுக்கு மட்டும் போன் பேச தெரியுது” என்று அவனை குற்றம் சாட்டினாள்.
செந்தூரனும் தென்னவனும் அடிக்கடி பேசிக்கொள்வது அவள் அறிவாளே.
“அவனை தான் நான் லவ் பண்றேன் அதான்”
அவனது பதிலில் இவளுக்கு பயங்கர சிரிப்பு வந்திட, சிரித்தான்.
“என்னடி திமிரா உனக்கு? அவர் தான் எங்கிட்ட உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னார். நீ எப்போ சொன்ன?” என்றான் சிடுசிடுப்பாய்.
“என்னாச்சு என் ராஜ ராஜ சோழனுக்கு? இப்படியெல்லாம் கோபமா பேசமாட்டாரே” என இவள் கனிவும் காதலும் கலந்த குரலில் கேட்டிட, அவன் பக்கம் அமைதி.
“என்னாச்சுங்க? என்ன பிரச்சனை? எங்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? என் ப்ரண்ட்ஸ் கிட்ட கூட என் மனசுல உள்ளதை நான் சொன்னதில்லை, ஆனா உங்க கிட்ட நான் அன்னிக்கு எல்லாத்தையும் மனசு விட்டுப் பேசினேன் தானே?” என இவள் மென்மையாய் சொல்ல
அவள் மென்மையிலும் கனிவிலும் கரைந்து போனான் தலைவன்.
“அதை விடு நான் எதுவுமே சொல்லாம எப்படி கண்டுபிடிச்ச நீ?”
“ம்ம் நாலு வார்த்தைப் பேசினா என் ராச ராசரு ,ஒரு வார்த்தை ராஜாத்தின்னு சொல்லாம இருக்க மாட்டாரு. உங்க குரலே தான் சொல்லுதே எதையோ மறைக்கிறீங்க. அதுவும் இத்தன நாள் இல்லாம நைட் வேற பேசுறீங்க” என இவள் சொல்லிட,
“ம்ம் சாரிடா ராஜாத்தி மனசுக்கு என்னவோ மாதிரி இருக்கு. அதான் உங்கிட்ட பேசினா நல்லா இருக்கும்னு பண்ணினேன்” என்றவனின் குரலில் மென்சோகம் இருந்தது.
“குந்தவைக்கு எதாவது பிரச்சனையா?” என்றாள் இவள் சரியாய்.
“ஹேய் எப்படி தேனு” என்றவன் குரலில் ஆச்சரியம் தலைதூக்கியது.
“உங்க விசயம்னா இவ்வளவு யோசிக்க மாட்டீங்க, நீங்களே முடிச்சிடுவீங்க இல்ல, எங்கிட்ட தயங்காம சொல்லுவீங்க. அப்போ வேற யாராவது பிரச்சனை அதான்”.
“ஆமா டா எங்க சித்தப்பா அதான் வலங்கைமான்ல இருக்காங்கல, அவர் குந்தவைக்கு மாப்பிள்ளை பார்க்கலாம், சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொன்னார். நான் கூட அவ சின்னப்பொண்ணுனு யோசிச்சேன். சித்தப்பா இப்ப பார்க்கணும் சொல்றாங்க, அம்மாவே காலேஜ் முடிச்சதுமே அவளுக்குக் கல்யாணம் செய்யணும்னு சொல்லிட்டு இருப்பாங்க. அவ கிட்ட இன்னிக்கு இதைப் பத்திப் பேசினா, நீ தேனுவைக் கல்யாணம் செய்ய, என்னை சீக்கிரம் வீட்ட விட்டு துரத்துறியான்னு கேட்டுட்டா” என்றான் வார்த்தைகள் முழுவதும் வலியுடன்.
“அச்சோ!! என்ன நீங்க சும்மா கிண்டலுக்கு சொல்லியிருப்பா.” என்றாள் தோழியை விட்டுக் கொடுக்காது.
“அவ கிண்டலுக்கு சொன்னா நான் ஏன் ஃபீல் பண்றேன்? அவ ரொம்ப கோபமா சொன்னாடா, இப்ப தூங்க போகிறதுக்கு முன்னாடி தான் பேசினா. அதான் மனசே சரியில்லை” என்று வருந்தி பேச,
“விடுங்க, உங்களை விட்டு பிரிஞ்சுப் போகணும்னு டென்ஷன்ல சொல்லியிருப்பா. பசங்களுக்கு கல்யாணம்னா முழுக்க சந்தோசம், உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒருத்தர் வருவாங்க. பொண்ணுங்க பொறந்த வீடுலேர்ந்து மனுஷங்க எல்லோரையும் பிரிஞ்சு வரணும். அப்படியே ஒரு வளர்ந்த செடியை வேரோட பிடுங்கி வேற இடம் வைக்கிற மாதிரி, அதனால் வந்த டென்ஷன் திட்டியிருப்பா. அதுக்காக போய் கவலைப்படுவாங்களா? போய் அமைதியாய் தூங்குங்க. காலையில அவ சரியாகிடுவா” என்று ஆறுதலாய்ப் பேசினாள் தேன்யாழி.
“அப்படி குந்தவை உங்கிட்ட எதாச்சும் பேசினா எங்கிட்ட சொல்லு தேனு”
“கண்டிப்பா சொல்றேன், நீங்க ஃபீல் பண்ணாதீங்க”
“சரி சரி அது எப்படி டி ராஜாத்தி நானும் நீயும் அவ்வளவா பேசினதில்லை நீ இன்னும் என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்ற ஆனா நீ என்னை இவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிருக்க?” அகம் அமைதியடைய தமையன் போய் தலைவன் தலை தூக்கிட, இப்படி உற்சாகமாய் அவன் கேட்க
தேன்யாழியோ,
“எனக்கு என்ன தெரியும்?” என்றாள்.
“உனக்கு ஒன்னும் தெரியாதுடி, எல்லாம் தெரிய வைக்கிறேன் இரு” என்று சிரித்தபடியே போனை வைத்தான்.
தென்னவனிடம் பேசி விட்டு தேன்யாழி உறங்கிட, தீடீரென ஆட்டுக்குட்டி கத்தும் சத்தம். இவள் கதவைத் திறந்து வெளியே போக, வெளியே கயிற்றுக் கட்டிலில் உறங்கும் செந்தூரனும் விழித்தான்.
“என்னாச்சு தேனு?” இவன் குரல் கொடுக்க
“ஆடு கத்துன்ன சத்தம் கேட்டுச்சுண்ணே” என்றபடி இவள் ஆட்டுக்கொட்டகை நோக்கி செல்ல, செந்தூரனும் பின் தொடர்ந்தான்.
பார்த்தால் ஆடு கட்டியிருக்கும் இடத்தில் எறும்பு சாரையாய் இருக்க, செந்தூரன் பூச்சி மருந்தை எடுத்துப் போட, தேன்யாழி ஆட்டினை வேறு இடத்தில் கட்டினாள். கத்திய குட்டியை எடுத்து வந்து திண்ணையில் கொட்டுக்கூடையின் கீழ் கவுத்து வைத்தவள் மனத்தில் தீடீரென ஒரு இன்ப மின்னல்.
‘இப்படி இருக்குமோ என?’
அவள் அமைதியாய் வந்து படுத்துக் கொள்ள, அகத்தினில் சில தினங்கள் முன் நிகழ்ந்த சம்பவம் நினைவில் நிழலாடியது.
கல்லூரி விடுமுறை விட்ட பின் ஒரு நாள் தாமரை செல்வி தேன்யாழி வீட்டிற்கு வந்து,
“பெரியம்மா! அம்மா உங்ககிட்ட புதுசா போட்டிருக்க கிடாரிக்குட்டில, ஒன்னு எவ்வளவுன்னு கேட்டு வாங்கியாற சொல்லிச்சு” என்றாள்.
“எதுக்குடி தாமரை?” என்று தேனு கேட்க
“சும்மா வளர்க்கிறதுக்கு தான் டி வீட்ல ஒத்த ஆடு தான்னே நிக்குது?”
“அதுக்கென்ன இப்ப அந்தியாச்சு, நாளைக்கு காலையில வந்து வாங்கிட்டுப் போ” என அமிர்தவள்ளி சொல்லி அனுப்ப, மறு நாள் காலையில் தாமரை வந்த போது, ஃபீடிங் பாட்டிலில் ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள் தேன்யாழி.
அமிர்தவள்ளியும் சிதம்பரமும் உறவினர் ஒருவரை பார்க்க சென்றிருக்க, செந்தூரன் திண்ணையில் உட்கார்ந்து ஏதோ கணக்கு எழுதிக் கொண்டிருந்தான்.
தாமரை ஒரு ஆட்டுக்குட்டியைத் தூக்கி வந்து,
“இது ரொம்ப அழகா இருக்கு இதையே நான் வாங்கிக்கிறேன்” என்றதும்
செந்தூரன் அப்போது தான் செய்த வேலையை விட்டு தலை நிமிர்த்தி பார்த்தான்.
“யாரு உனக்கு ஆட்டுக்குட்டி தரேன்னு சொன்னா” என்று கேட்க
“பெரியம்மாதா’ண்ணே நேத்தைக்கே வந்து கேட்டேனே”
“ஆமாண்ணா அவளுக்கு இன்னிக்கு ஒரு ஆட்டுக்குட்டி அம்மா தர சொன்னாங்க.”
“ஓ சரி அந்த ஆட்டுக்குட்டியை வச்சிட்டு, வேற தூக்கிட்டுப் போ” என்று செந்தூரன் சொல்ல, தாமரை முகம் சுருக்கினாள்.
“அண்ணே இதான் நல்லா அழகா இருக்குண்ணு ப்ளீஸ்” என்று கெஞ்ச
“தாமரை! சொன்னா கேளு, அதை விட்டுட்டு மத்த இரண்டுல ஒன்ன தூக்கிட்டுப் போ” என்று அதட்டினான்.
தேன்யாழியோ,
“ஏன் அண்ணா அவளுக்குப் பிடிச்சதா எடுத்துட்டு போட்டுமே” என்றாள்.
“அ.. அது என் கூட்டாளி ஒருத்தனுக்கு தரேன்னு சொல்லிட்டேன். அவன் இந்த குட்டி தான் வேணும்னு சொல்லிட்டுப் போய்ட்டான் அவன் வீட்டுல சின்ன குழந்தை வேற இருக்கு. ஆசையா கேட்டான்” என்று சொல்ல, வேறு வழியின்றி தாமரை இன்னொன்றை எடுத்துப் போனாள்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் யாருக்கும் செந்தூரன் அந்த ஆட்டுக்குட்டியினைத் தரவில்லை. தேன்யாழியும் அதனை மறந்து போனாள்.
இப்போதோ செந்தூரனின் மறுப்பிற்கும், குந்தவையின் கோபத்திற்கும் தென்னவனின் பேச்சிற்கும், இவள் சம்மந்தம் செய்தால் அவளுக்குக் கிடைத்த பதில் ஒன்று தான்.
அந்த ஆட்டுக்குட்டிக்கு அவள் இட்ட பெயர் ‘குந்தவை’ அல்லவா?
இது இவள் உள்ளத்தில் தோன்றிய ஊகம் மட்டுமே! சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். சரியா தவறா என பார்த்துவிடுவது என முடிவு செய்தவள், நேரம் பதினொன்று ஆன போதிலும் தென்னவனை அழைத்து தன் திட்டத்தை சொன்னாள்.