தென்னவனும் தேன்யாழியும் – 4

 அத்தியாயம் 4

 

வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள். வாழ்க்கை ஒரு விநோதம் அதனை கண்டறியுங்கள். 

-பகவத் கீதை. 

“எங்கடா இருக்கீங்க நீங்க?” என்ற செந்தூரனின் கோபக்குரலில் 

“இங்க தான் அண்ணா, பேட்டையில நிக்கிறோம்”, என்று  கபீர் சொல்ல

“பொய் பேசற படவா ராஸ்கல்!  நான் பட்டுக்கோட்டைக்குத் தான் டா வந்துட்டு இருக்கேன், ஒழுங்கு மரியாதையா எங்க நிக்கிறோங்களோ அங்கேயே நில்லுங்க இல்ல, தோள உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவேன்.” என்றான் கோபமாக. 

“என்ன அண்ணா நேத்து அந்த இன்ஸ்பெக்டர், அப்பாவை தூக்கி உள்ள வச்சான், அவனை சும்மா விடுறதா?” என கோபமாய்க் கேட்க

செந்தூரன், “அறிவுக்கெட்டவனே அவரு நமக்கு நல்லது தானே செஞ்சார். இல்ல உங்கப்பாவுக்கு வந்த கோபத்துக்கு அந்த சுரேஷை வெட்டிப்போட்டு கம்பி எண்ணிருப்பார். ஒழுங்கு மரியாதையா நான் சொல்றதைக் கேளு எங்க இருக்க சொல்லு. பெரிய பிரச்சனையை இழுத்து விட்டுக்காத”. என்றான் கொஞ்சம் தணிந்த குரலில்.

“அண்ணன்னு உங்க நல்லதுக்காண்டி தான் சொல்றேன்னு புரிஞ்சிக்கோ கபீர்”.

“ரொம்ப பெரிய தப்பு, கேஸான்னா எந்த கௌரவம் போச்சு சொல்றியோ, அது அப்போ தான் டா உண்மையா போகும். கிட்னாப்பிங் அதுவும் ஒரு பொண்ணை எத்தன வருசம் தெரியுமா?” என அவன் உண்மை நிலையை விளக்கி பேச பேச இதுவரையில் அவசர கதியிலும் ஆத்திர மிகுதியிலும் இச்செயலை செய்துவிக்க, இப்பொழுது கபீருக்குப் பயம் வந்தது.  

“நாங்க பைபாஸ்ல நிக்குறோம்ணா” என்று சொல்ல, அடுத்து இருபது நிமிடத்தில் அங்கிருந்தான் செந்தூரன். 

இவனைக் கண்டதும் கபீர் காரிலிருந்து இறங்கி வர, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லா பெரிய சாலையில் ஓரமாய்க் கார் நின்றது. 

“அண்ணே!” என்றபடி கபீர் வர, அப்படியே ஓங்கி ஒரு அறை விட்டவன், 

“எங்கடா அந்த புள்ள?” என்று கேட்டபடி காரின் அருகில் வந்தான்.

“காருக்குள்ள” என்று காட்ட டிரைவர் சீட்டில் இருந்த சசியைப் பார்த்தவன், 

“நீயும் இவனுக்குக் கூட்டு மவனே” என்று பல்லைக் கடித்தான். 

பின் சீட்டில் இருந்த குந்தவைப் பார்த்தான். அதுவரையில் அழுதபடி அமர்ந்திருந்தவள் புதிதாய்க் குரல் கேட்கவும் எட்டிப் பார்த்தாள். கார் கதவைத் திறந்த செந்தூரன், கதவின் அருகே நின்று கொண்டு, 

“அழாதம்மா இவனுங்க தெரியாம பண்ணிடானுங்க, நீ முதல்ல உன் அண்ணனுக்குப் போன் செஞ்சு பத்திரமா இருக்கேன்னு சொல்லு” என்றான்.

“போன்” என அவள் கேட்க, டாஷ்போர்டில் இருந்து போனை எடுத்துக் கொடுத்தான் சசி. 

அதில் தென்னவனிடம் இருந்து  நாலைந்து மிஸ்ட் கால்ஸ். . எப்போதும் வீட்டிற்குச் சென்று சேர்ந்து விட்டேன் என பேசுபவள், இன்று நாலரை மணி ஆகியும் பேசவில்லை என அழைத்திருக்கிறான். மிஸ்ட் கால் பார்த்தவுடன் கால் பண்ணு என்று குறுஞ்செய்தி ஒன்றும் வந்திருந்தது, அவன் எதாவது வேலையாக இருந்தாலோ இல்லை இவளுக்கு எக்ஸ்டரா க்ளாஸ் இருந்தாலோ தாமதமாவது இயல்பு என்பதால் அவனுக்கு இவள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமெல்லாம் இல்லை. 

“டேய், அந்த புள்ள அழுதிருக்கு என்ன செஞ்சீங்க? ஏன்மா, இவனுங்க உன்னை அடிச்சாங்களா?”

“அய்யோ அண்ணே, நாங்க ஒன்னும் செய்யல, அது கிட்ட விசயத்தை சொன்னோம், ஆனா அதுதான் பயந்து அழுதுட்டே இருந்துச்சு” என சசி சொல்ல,

அவனை முறைத்த செந்தூரன், “கடத்திட்டு வந்தா அழாம சிரிப்பாங்களாடா பரதேசி?” என்று அவனைக் கடிந்தான். அவள் போனை வைத்துக் கொண்டு அழவும், அவளிடமிருந்து போனை வாங்கி  தென்னவனிடம் விசயத்தை சுருங்க சொல்லி அவ்விடம் வர சொன்னான். 

குந்தவையைப் பார்த்த செந்தூரன், “ஏன் மா, இவனுங்களை அடிக்காம நீ அழுவியா? புள்ளைக்கு சாப்பாடு எதாவது வாங்கிட்டு வாங்கடா, உங்கண்ணா வர வரைக்கும் கார்லேயே இரும்மா”. என்றபடி அவன் சட்டையிலிருந்து காசை எடுத்தான்.

“எனக்கு எதுவும் வேண்டாம், எங்க அண்ணா வரட்டும்” என்று சொல்லி முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவனை முறைத்தவாறு உட்கார்ந்தாள் குந்தவை. 

“உங்க அம்மாக்கு வேணும்னா போன் செஞ்சு சொல்லும்மா, உன்னைக் காணும்னு பயப்படுவாங்க.”

குந்தவை உடனே, “தெரியுதுல்ல, அப்புறம் ஏங்க இவங்க கடத்துனாங்க?” என முகம் சிவக்க கேட்க

“கேட்டீங்களாடா?” என்றபடி இப்போது காரை விட்டு இறங்கி அவனருகில் நின்ற சசிக்கு ஒரு அடி கொடுத்தான் செந்தூரன். 

“மன்னிச்சிடும்மா, இவங்க கோவக்கார பசங்க, ஆத்திரத்துல பண்ணிட்டாங்க மத்தபடி நல்லவங்க, நீ வீட்டுக்குப் பேசு.” என பொறுமையாய் சொல்ல

“எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க”. என்றாள் துக்கத்தை அடைத்தக் குரலில். 

கேட்ட மூவருக்கும் ‘ஐயோ ‘ என்றானது. 

“ஏன் டா, அப்பா அம்மா இல்லாத புள்ளையைக் கடத்தி வச்சிருக்கீங்க ச்ச” என்றபடி அவன் காரிலிருந்து சற்று தள்ளிப் போய் இருவரையும் திட்ட

“அண்ணே, எங்களுக்கு நிஜமா தெரியாதுண்ணே, அப்பா அம்மா வெளியூர்ல இருக்காங்கன்னு நினைச்சிட்டோம்ணே.” என்ற கபீரின் கன்னத்தில் மீண்டுமொரு முறை அறை கொடுத்தான் செந்தூரன்.

“ஏன் டா, அப்போ பக்கத்தில் இருந்தா கடத்தி இருப்பீங்களோ? என்ன வயசு உங்களுக்கு ம்ம். எவன் உட்கார்ந்து நம்ம வீட்டு பிரச்சனைக்கு மூணு மணி நேரம் பஞ்சாயத்து பண்ணுவான்? அவருக்கு என்ன அவசியம். போன தடவ பக்கத்து ஊர்ல இப்படி நடந்தப்ப அவங்க திருவாரூர் போய் டிஎஸ்பியைப் பார்க்க, அவரு இரண்டு பேரும் மேஜர் ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொன்னார். சுடர்க்கொடி ஒரு வேளை சுரேஷோட போய் அவ வாழ்க்கை நாசமா போயிருந்தா?”

“அதுக்காக அவன் அப்பாவை?” என்று கபீர் கோபமாய்ப் பேச வர

“என்ன அப்பாவை, இல்ல என்னங்கிறேன் அவர் உனக்கு அப்பாங்கிறதுக்கு முன்னாடி எனக்குப் பெரியப்பா டா, எனக்கு இல்ல பாசம்? இப்படி ஒரு பொண்ணை நீ தூக்கிட்டு வந்திருக்க தெரிஞ்சா, உங்கப்பாவே உன்னைத் தொலைச்சிடுவார், அவர் என்ன அப்பா மேல கேஸா போட்டாரு கொஞ்சம் நேரம் பொறுமையா இருக்கனும்னு லாக் அப்ல உட்கார சொன்னாரு, திருப்பி நான் கேட்டதுமே அனுப்பினார் தானே?!” என பேசிக்கொண்டிருக்கையிலேயே தென்னவன் தனது வண்டியில் வந்து இறங்கினான். 

காக்கி சட்டையில் கடுங்கோபத்தோடு அவன் செந்தூரனிடம் வர, அதுவரை காரினில் இருந்தவள் அண்ணனைக் கண்டதும், 

“தமிழ்” என்றபடி அவனை சேர, தங்கையை ஆறுதலாய் அணைத்துக் கொண்டான். இதுவரையில் இருந்த அச்சவுணர்வு நீங்கி அண்ணனிடம் அவள் ஆறுதல் தேட, 

“ஒன்னுமில்ல பேபி இவனுங்களை” என்றபடி அவளைத் தள்ளி நிறுத்தினான். 

செந்தூரன், ” சார் சின்ன பசங்க மன்னிச்சு விட்ருங்க ப்ளீஸ்” என சொல்லிக் கொண்டிருக்கையில், அவனருகில் வேக வேங்கையாய் வந்து நின்றவன் செந்தூரனின் கண்களை நேர்கொண்டு பார்த்து, 

“ஏன் செந்தூரன் இதே மாதிரி உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்து, அவளை நான் கடத்தி மன்னிப்புக் கேட்டா, நீங்க என்ன செய்வீங்க சொல்லுங்க” என்று நிறுத்தி நிதானமாய்க் கேட்டான்.

‘டேய் அண்ணா, இவர் தங்கச்சியெல்லாம் கடத்தவெல்லாம் முடியாதுடா! என் ப்ரண்டை என்னனு நினைச்ச நீ?’ என  நினைத்தாள் குந்தவை. 

ஆம்! அவளுக்கு செந்தூரன் தேன்யாழியின் அண்ணன் எனத் தெரியும். ஒரு முறை பேருந்தில் போகும்போது, சூர்யகாந்தி ‘இதான் செந்தூரன் மாமா’ என காட்டியிருக்கிறாள். 

அதனால் தான் அதுவரை ஒரு வித பயம் சூழ் உணர்வில் தவித்தாலும், செந்தூரன் வந்த பின் கொஞ்சம் தெளிந்து இருந்தாள். தேனுவையே பிடிக்காது, அவள் தோழி என்று தன்னிடமா பேச போகிறான் என்பதாலேயே அவள் அவனை தெரிந்தாற் போல் காட்டவில்லை. 

“கண்டிப்பா அடிச்சுத் துவச்சிருப்பேன் சார்” என்றான் உண்மையாய். 

“அப்ப இப்போ நான் அதை செஞ்சா தப்பில்ல தானே?” என புருவம் உயர்த்திக் கேட்க

“இவன் என்னடா என்னையே இந்த பயலுவோள அடிக்க சொல்வான் போல” என எண்ணம் ஓட, தென்னவனை அதிர்வோடு பார்த்தான் செந்தூரன்.

“சொல்லுங்க செந்தூரப்பாண்டியன் ?” என  தென்னவன் அழுத்திக் கேட்ட விதமே, அவன் கோபத்தை அடக்கி சொல்கிறான் என்பது புரிய, 

“அவங்க அப்பாவை லாக் அப்ல வச்சீங்கன்னு ஒரு கோபத்துல பண்ணிட்டான் சார், சின்ன பையன் தான் உணர்ச்சி வேகத்துல செஞ்சிட்டான். இதுவே முதலும் கடைசியுமா இருக்கும், மன்னிச்சு விட்டுடுங்க சார்”  என அமைதியாய்ப் பேசினான். 

அதைக் கண்ட பாவைக்குப் பற்றிக் கொண்டது மனம்,

‘தப்பு செஞ்சவனுங்களுக்குக்காக என் அண்ணன் ட்ட கெஞ்சுறான், ஆனா தப்பே செய்யாத தேனுக்கிட்ட பேச மாட்டான். என்ன டிசைன் டா இவன்?’ என்றபடி  அவனை முறைத்தாள் குந்தவை நாச்சியார். 

பின்னே சூர்யகாந்தியும் தாமரையும் அவளிடம், செந்தூரன் தேன்யாழியிடம் பேச மாட்டான் என்று அவ்வளவு விளக்கமாய் சொல்லி இருந்தார்களே?!

ஆனால்,  அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலா செந்தூரன் இருந்தான். அவன் கவனமெல்லாம் தென்னவன் மீதே!

தென்னவனோ , சீறி வரும் சீற்றத்தை சிறைப்பிடித்தபடி, 

“தப்பு செஞ்சவங்களைப் பிடிக்கத் தெரிஞ்ச எனக்கு, தப்பை தப்பு இல்லாம செய்ய தெரியும் செந்தூரன்”, என்றவன் செந்தூரப் பாண்டியனை முறைத்தவாறே அந்த கபீரின் அருகில் சென்றான். 

கைகளை தலைக்கு மேல் உயரத் தூக்கிப் பின் நெட்டி முறித்தவன், 

“எப்படி? எப்படி? உங்கப்பாவை லாக் அப்ல வச்சா, சார் என் தங்கச்சியைத் தூக்குவீங்க? ஹ்ம்ம்ம்” என்றவன் அங்கிருந்த கல் ஒன்றின் மேல் அமர்ந்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு, 

“உன் பெயரென்ன?” என்று கேட்டான்.

அவன் அழுத்தமாய் நிற்க, 

“டேய் சொல்லுடா”, என்று செந்தூரன் சொல்ல, 

“மிஸ்டர். செந்தூரன்! கொஞ்சம் நேரம் வில் யூ ப்ளீஸ் ஷட் அப்?” என்றான் தென்னவன். 

“சொல்லு மேன்?”  என்றான்.

“இவன் என்னடா இந்த சீன் போடுறான்? இவன் ஸ்கூல்,  காலேஜ் படிச்ச காலத்துலேயே, பனிஷ்மெண்ட் வாங்கி எங்கப்பா முன்னாடி இப்படி தான் நிப்பான், இப்ப ஒருத்தனை நிக்க வச்சுக் கேள்வி கேட்கிறான்?” என குந்தவைக்கு விளையாட்டாய்த் தோன்றினாலும், இவன் வேலைக் காரணமாய் இன்னும் இன்னும் பிரச்சனைகளை இழுத்துக் கொள்வானோ என்ற ஐயம் இதயத்தினில் தீ மூட்ட, அவளுக்கு இருப்பவன் அவன் மட்டும் தானே? இந்த கம்பீரமெல்லாம் காணும் கண்ணுக்கு இதமாய் அமைந்தாலும், இதயத்துக்குள் அச்சமென்னவோ வரவே செய்தது. 

இந்த நொடி யாருக்கு வேண்டுமானாலும் பிரச்சனை வரலாம். அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே அடுத்த நொடியை தீர்மானிக்கும். ஆகவே குந்தவை அதுவரை இருந்த அமைதியை விட்டொழித்து, 

“டேய் அண்ணா!” என அவள் அழைத்தாள். அங்கிருந்த நான்கு ஆண்களும் அதிர்வோடு பார்க்க, தென்னவன்  தங்கையை முறைத்தான்.

“ஷட் அப் குந்தவை” என்று அதட்ட

“I can’t! எனக்குப் பசிக்குது, நீ என்ன இங்க பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க? முதல்ல என்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போடா” என அவனையே முறைத்துக் கொண்டு மிரட்ட, அனைவரின் முகத்திலும் அடக்கப்பட்ட மென்னகை ஒன்று. தென்னவனுக்குமே முறுவல் முளைத்தாலும் முறைப்பைக் கைவிடவில்லை. 

அதற்குள் சசி, “இரு தங்கச்சி. உனக்கு சாப்பிட வாங்கிட்டு வரேன்”, என்றவன் இவர்கள் பதில் எதிர்ப்பார்க்காது வேகமாய் நடந்து போனான். 

செந்தூரனுக்கோ,  “இவன் ஸ்டேஷன்ல என்னமா மிரட்டினான்? இவனையே இந்த புள்ள இப்படி மிரட்டுது ஆனாலும்,  வயசுக்கு மரியாதை இல்லாம என்ன இது டா போடுறது” என்ற எண்ணம் தோன்றியது. தங்கையிடம் முகம் கொடுத்துப் பேசாதவனுக்கு எங்கிருந்து புரியும் உறவும் உரிமையும்?

“தமிழ் தெரியாம பண்ணிட்டாங்க விடு, யாருக்கா இருந்தாலும் அவங்க அப்பாவை பேசினா கஷ்டமாத்தான் இருக்கும் அண்ணா! தெரியாம தானே செஞ்சிங்க இனி செய்ய மாட்டீங்க தானே?” என கபீரைப் பார்த்து கேட்டாள்.

தென்னவனிடமும் செந்தூரனிடமும் முறைத்துக் கொண்டிருந்தவன் இவளது பேச்சிலும், அன்னை தந்தை அற்றவள் என்பதில் இவள் மீது தோன்றிய கரிசனத் துளிகளிலும் அவள் கள்ளமற்ற மொழியினிலும் தன் தவறுணர்ந்து, 

“இல்ல தங்கச்சி! இனிமே எப்பவுமே இப்படி ஒரு தப்பை செய்யவே மாட்டேன்மா, என்னை மன்னிச்சிடு” என்று குந்தவையைப் பார்த்து சொன்னான்.

“ஓகேண்ணா! அவ்வளவுதான் முடிஞ்சது போகலாம் வா” என தென்னவனை அழைக்க, முழுவதுமாய்த் தங்கை மீது முறைப்பைக் கைவிடாதவன் கபீரிடம், 

“இங்க பாரு உங்கப்பா வயசுக்கு நான் எப்போவுமே மரியாதை தருவேன், ஆனா என்னோட அதிகாரத்தை நான் காட்ட வேண்டிய இடத்துல காட்டலன்னா, என்னை எப்படி ஒருத்தன் மதிப்பான் சொல்லு! வாங்க ஐயா வணக்கம்ங்க்யான்னு நான் பேசியிருந்தேனு வை நீங்களாம் என் பேச்சை உட்கார்ந்து கேட்டிருப்பீங்களா?”

“இவளுக்காக உன்னை விட்டுப்போறேன் நினைக்காத. ஒழுங்கா படிச்சு உருப்படற வழியைப் பாரு! அதுதான் உங்கப்பாவுக்கு உண்மையிலே நீ தேடித் தர கௌரவம்!” என்றான்.  

அந்த நேரம் சசி, “தங்கச்சி! இந்தம்மா பால் பன், சாரி சார் இந்தாங்க டீ ” என்றபடி அவன் தென்னவனுக்கும் நீட்ட, 

“இவனை” என்று பல்லைக் கடித்தபடி பார்த்தான் தென்னவன்.

“எடுத்துக்கோ பாவம், நமக்காக வாங்கி இருக்காங்க தேங்க்ஸ் அண்ணா” என்று குந்தவை பேசிய பேச்சில் 

“தேங்க்ஸ்” என்று சொல்லி தென்னவனும் எடுத்துக் கொண்டான். 

“எங்களை மன்னிச்சிடுங்க சார்” என்றபடி இருவரும் தலையைத் தொங்கப்போட்டு நிற்க, 

“ஓகே இனி இப்படி, செய்யணும்ன்ற நினைப்புக் கூட வரக்கூடாது” என்றவன் தனது வண்டியை நோக்கிப் போக

“தேங்க்ஸ் அண்ணா பன் சூப்பர்”, என குந்தவை சிரித்தபடி சொல்ல, ஆச்சரியம் மட்டுமே அவனின் பாவமாகிப் போக, பாவையவளைப் பார்த்தான் செந்தூரன். 

“ஆம்பிளைங்க அதட்டி உருட்டி சாதிக்க முடியாத விசயத்தை,  இந்த பொண்ணு அமைதியாய்ப் பேசி தீர்த்திடுச்சு” என்று நினைத்தான். 

செந்தூரனை மறந்து விட்ட தென்னவன், “தேங்க்ஸ் செந்தூரன்” என சொல்லி செல்ல, அண்ணனின் பின் வண்டியில் ஏறி உட்கார்ந்தவள் கபீரையும் சசியையும் பார்த்து சினேகமாய்ப் பார்த்தவள், செந்தூரனை ஒரு முறைப்போடு பார்த்துச் சென்றாள். 

வண்டியை எடுத்து சிறிது தூரம் சென்ற பின், தென்னவன்

“ஏய் அறிவுக்கெட்ட லூசே! எனக்குன்னு ஒரு ரெஸ்பெக்ட் இருக்கு, வீட்ல பேசற மாதிரி பேசற, உன்னை கிட்னாப் செஞ்சவனைப் போய் அண்ணானு சொல்ற, அப்படியே உன்னை பைக்கை விட்டு கீழ தள்ளனும் போல இருக்கு” என்று கோபமாய் சொல்ல

குந்தவையோ, “தமிழ் உன்னோட கோபம் நியாயமானது. ஆனா  எனக்கு இருக்கறது நீ மட்டும்தான்! பிரச்சனையெல்லாம் இழுத்து விட்டுக்காத! இதை இத்தோட விடுடா அண்ணா” என்று சொல்லவும், அதன் பிறகு அவன் பேசவே இல்லை. 

செந்தூரனுக்கோ , “கடத்தனவனைப் பார்த்து சிரிக்குறா காப்பாத்தினவனைப் பார்த்து முறைக்கிறா? என்ன இந்த புள்ள, இப்படி இருக்கு?’ என்று குந்தவைப் பற்றிய எண்ணங்கள் அவன் மேல்மாடியைக் காய விட்டன. 

குந்தவை செந்தூரனின் குழப்பமானாள்.

Scroll to Top