அத்தியாயம் 18
புலர்ந்து விட்ட அந்த புதுப்பொழுதில் தேன்யாழியும் தென்னவனும் செந்தூரனின் வீட்டிற்குப் புறப்பட்டனர். இவனின் காரின் சத்தம் கேட்டதுமே குந்தவை வேகமாக ஓடி வர செந்தூரனோ
“வீட்டுக்குள்ள வரத்தானே போறான் உங்கண்ணன். அதுக்குள்ள எதுக்குடி இப்படி ஒடியாற” என அதட்டினான். குந்தவையோ முறைத்தாலும் மெதுவாகவே அடியெடுத்து வைத்தாள்.
மொத்தக் குடும்பமும் வாசலில் வந்து நிற்க, காரில் இருந்தபடியே அதைக் கண்ட தென்னவன் சின்ன சிரிப்போடு,
“எத்தனை வருசம் ஆனாலும், இன்னும் முதல் நாள் வரவேற்கிற மாதிரியே பண்றாங்க பாரு, ஐ லைக் இட்” என்று சொல்ல
“எல்லாம் நீங்க தேன்யாழியோட தென்னவன்ற காரணத்தால தான்“ என்றாள் தேன்யாழி மிடுக்காய்.
அதற்குள் குழந்தைகள் இருவரும் காரின் அருகே வந்துவிட, காரை மெதுவாகத் திறந்தவன், ஒரு கையில் பூந்தென்றலையும் மறுகையில் அருள்மொழியையும் தூக்கிக் கொண்டான்.
“பூக்குட்டி அம்மாகிட்ட வாங்க” என்றதும் பூந்தென்றல் தென்றலாய் தேன்யாழியைத் தழுவினாள்.
அவளுக்குள் சுக மழை! தாய்மை பொழியும் தேன்மழை!
அதற்குள் குந்தவை “அண்ணா”என்று தென்னவன் அருகில் செல்ல, தங்கையை ஒரு கையால் ஆதரவாய் அணைத்துக்கொள்ள குந்தவைக்குள் தானாய் கண்ணீர் அருவி.
இது வழக்கமாய் நடக்கும் ஒன்று தான் என்பதால், செந்தூரனும் தேன்யாழியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
“என்னமோ இவங்க இரண்டு பேரையும் நம்ம கொடுமை பண்ற மாதிரி என்ன சீன் பார்த்தியாண்ணே” என தேன்யாழி கிண்டலாய் சொல்ல, செந்தூரானோ எதாவது சொன்னால் குந்தவை கோபம் கொள்வாள் என்பதால் சிரித்து மழுப்பினான்.
சிதம்பரம் தான்,
“உள்ளாற வாங்க மாப்பிள்ளை” என்று சொல்ல குந்தவை புன்னகையோடு அண்ணனை விட்டு விலகிட, அவளை அருகில் அழைத்தவன்,
“நல்லாருக்கியா பேபி” என்று விசாரிக்க
“ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கேன்” என்றாள் முகம் முழுவதும் முறுவல் சுமந்தபடி.
செந்தூரன் நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்று தெரிந்த போதிலும், அண்ணனாய் தங்கையிடம் கேட்பது அவன் கடமையாயிற்றே !
பின் வீட்டுக்குள் சென்று அமர, உடனே காபியோடு வந்தாள் குந்தவை.
செந்தூரன் மருமகளை மடியில் அமர்த்திக் கொண்டு,
“என்ன மாப்ள ? காபி தேன் மாதிரி இருக்கா?” என்று கிண்டலாய்க் கேட்க,
“ஆமா ஆமா” என்றான் தென்னவனும் சிரிப்போடு.
“பச்சத் தண்ணி கொடுத்தா கூட உனக்கு தேன் மாதிரி தான் இருக்கும்” என்று குந்தவையும் கிண்டல் செய்தாள்.
அதற்குள் அமிர்தவள்ளி சாப்பிட அழைக்க. காலை உணவுப் படலம் நடந்து முடிக்க,
“மாமா நாங்க போர் செட் போகணும்” என்று பூந்தென்றல் செந்தூரனிடம் கேட்க,
“எல்லோரையும் அழைச்சிட்டுப் போடா” என்றார் சிதம்பரம்.
குந்தவை, செந்தூரன், தென்னவன், தேன்யாழி, பூந்தென்றல், அருள்மொழி அனைவரும் அவர்கள் வீட்டிலிருந்து சிறிது தூரமுள்ள போர் செட்டிற்கு செல்ல,
அருள்மொழியும் பூந்தென்றலும் வரப்புகளில் சிட்டாய் ஓடி விட, குந்தவை கொஞ்சம் மெதுவாகவே நடந்தாள். அவள் பின்னால் செந்தூரன், அவனுக்குப் பின்னால் தேனும் தென்னவனும்.
குந்தவை முன்னால் செல்கையில் ஒரு அட்டைப் பூச்சி வந்துவிட தடுமாறினாள். உடனே அவள் இடையில் கை கொடுத்து செந்தூரன் பிடித்துக் கொண்டான். என்னதான் இயல்பான கிராமத்து வாழ்க்கைக்குத் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாலும், இன்னும் இந்த பூச்சி, பாம்பு, வண்டுகள் மீதான பயம் மட்டும் குந்தவைக்குப் போகவில்லை.
ஆரம்பத்தில் குந்தவை மிகவும் சிரமப்பட்டாள். வீட்டு வேலை, வயல் வேலை என ஒன்றும் தெரியாது. ஆனால், அமிர்தவள்ளி சொல்வதை செய்யப் பழகிக் கொண்டாள். இன்று நன்றாய் அத்தனையும் நிர்வாகம் செய்வாள்.
ஆனால், தேன்யாழிக்கு இந்தப் பிரச்சனைகள் இல்லை. அவர்கள் வீட்டில் இருவர் தானே ? அதிலும் தேன்யாழிக்கு வீட்டு வேலைகள் அத்துப்படி என்பதால் அவளுக்குப் பெரிதாய் எந்தக் கஷ்டமும் இல்லை.
குந்தவையை செந்தூரன் தாங்கிப் பிடிப்பது கண்ட தென்னவன்,
“பார்த்தியா டி உங்கண்ணன் டக்குன்னு ஒரு ரொமாண்டிக் சீன் க்ரியேட் பண்ணினான். நீ என்னடான்னா அப்படியே மார்ச் பாஸ்ட் செய்யற மாதிரி ஆடாம அசையாம போற” என கடிந்து கொள்ள,
“தோடா ! குவாக்கு பூச்சி பார்த்து பயம். நானெல்லாம் நடக்கப் பழகினதே இந்த வரப்புல தான். சோ உங்களுக்கு இங்க சீன் கிடையாது” என்று தேன்யாழி பதில் பேச, அதற்குள் குழந்தைகள் குளியல் தொட்டி அருகே சென்றனர்.
“ஹே வாலுங்களா ! பார்த்து பார்த்து” என்றபடி செந்தூரன் அவர்களைப் பத்திரமாய்த் தொட்டியினில் விட, அவர்களுக்கு ஒரே உற்சாகம். குந்தவை வாய்க்கால் அருகே உட்கார, தேன்யாழியும் அவளுடன் இருக்க செந்தூரனும் தென்னவனும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டனர்.
“சந்தோசமா இருக்கியா குவா?” என்றாள் தேன்யாழி.
“என்ன பார்த்தா எப்படி தெரியுது?”
“பார்த்தா பெரிய பலாப்பழம் மாதிரி தெரியுது”
“ உன்னை! போடி கிண்டல் பண்ற நீ?”
“பின்ன கேள்வி கேட்டா பதில் சொல்லாம பார்த்தா எப்படி தெரியுதுன்னா?”
“நான் நல்லாயிருக்கேன்டி” என்று குந்தவை சொல்லவும் தான் தேன்யாழி முகம் தெளிவானது.
“இல்ல முகம் ரொம்ப வாடி இருந்துச்சு! அதான் கேட்டேன்”
“அடியே! உள்ள இருக்குற எங்க ஜூனியர் என்னைத் தூங்க விடுறது இல்ல அதான் டயர்ட்”
திருமணமான புதிதில் தேன்யாழி சொல்லிவிட்டாள் “இங்க பாரு குவா என்னை நீ அண்ணியாவோ நாத்தனாராவோ என்னைக்கும் பார்க்காத. எப்பவுமே நாம ப்ரெண்ட்ஸ் தான்” என, அதனால் தோழியாய் எப்போதும் அவள் நலனில் இவளுக்கு அக்கறை உண்டு.
“சரி ! சரி ! கொஞ்சம் வெயிட் போட்டுட்ட போல நீ . டாக்டர் கிட்ட பாரு ” என்றாள் தேன்யாழி.
“ஆமா என்னை விடுங்க மேடம் ! நீங்க என்ன என் அண்ணனை மிதிக்கறீங்களாமே” என்று குந்தவை குறும்போடு கேட்க,
“ச்சீ பே உங்கண்ணன் ஸ்டேஷன்ல நல்லா லாடம் கட்டிட்டு, வீட்ல வந்து அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு மிதிக்க சொல்வார். . . சும்மா சும்மா இதையே கேட்டு கிட்டு” என்று தேன்யாழி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே குந்தவைக்கு வாட்ஸ்அப் கால் வர, யாரென பார்த்தால் தாமரை செல்வி.
தாமரை செல்வி அவளது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்கவாசி ஆகிவிட்டாள்.
“என்னடி தாமரையா?”
“ஆமாடி நேத்தே நம்ம இரண்டு பேர்கிட்டயும் பேசணும்னு சொன்னா ” என்ற குந்தவை அலைபேசியை ஆன் செய்ய மூவருமாய் வீடியோ கால் பேசினர்.
“ஏன்டி நீங்க இரண்டு பேர் மட்டும் ஜாலியா ஊர்ல இருக்கீங்களா?”
“ஏன் லோட்டஸ் நீதானே அமேரிக்கா மை கண்ட்ரின்னு போன?” தேன்யாழி குறும்பாய்க் கேட்டு வைக்க,
“போ புள்ள. . அமெரிக்காவெல்லாம் பிடிக்கல. சும்மா இருந்து இருந்து போர் அடிக்குது. அக்கம் பக்கம் ஆளுவோ இருந்தாலும் உங்ககிட்ட பேசுற மாதிரி இல்ல” என்று ‘சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா’ என்ற ரேஞ்சில் தாமரை பேசிக் கொண்டே சென்றாள்.
“கவலைபடாத லோட்டஸ், இன்னும் கொஞ்ச நாள்ல லீவ் கிடைக்கும்ல அப்ப வாடி” என குந்தவையும்
“அமெரிக்கா பிடிக்கலன்னா என்ன புள்ள அத்தானைப் பிடிச்சிருக்கு தானே !” என தேன்யாழியும் சமாதானம் செய்தனர்.
குந்தவை “ஆமா ஆமா நம்ம தேனுவ பாரு, எங்கண்ணன் கூட இவளை பாலைவனத்துல போய் விட்டாலும் கூட, நீயும் நானும் இருப்பதால் பாலைவனம் கூட நந்தவனம்னு டயலாக் அடிப்பாங்க” என்று தேன்யாழியைக் கிண்டல் செய்ய,
“ஹே செந்தூரப் பாண்டிக்கு ஒரு ஜோடிக் கிளி, செந்தூரா இந்த பாட்டைத் தவிர இத்தனை வருஷமா அதே ரிங்க்டோன் தவிர எதையுமே வைக்காத இவ என்னை ஓட்டுறா பாருடி தாமரை ” என்று தேன்யாழி சொல்ல தாமரையும் சேர்ந்து
“குந்தவைன்னு பெயர் வெச்ச ஆட்டை மட்டும் விட்டுட்டு, சூரியகாந்தியையும் தாமரை செல்வியையும் பிரியாணி போட்டவங்க தானே தேனு இவங்க” என்று சொல்ல, ஒருவழியாய் தாமரையை இயல்புக்குக் கொண்டு வந்த பின் தான் போனை வைத்தனர்.
“வாழ்க்கையில் எல்லாமே எதிர்பார்க்காமல் தானே தேனு நடக்குது. சென்னையில் இருந்த நான் இங்க இருக்கேன், இங்க இருந்த நீ திருச்சில இருக்க. நம்ம லோட்டஸ் us வாசி ஆகிட்ட”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே, குழந்தைகள் நன்றாய் ஆட்டம் போட்டு முடித்திருந்தனர். அவர்களை புது உடை மாற்ற வைத்து மீண்டும் வீடு திரும்பினர். மதிய உணவினை அமிர்தவள்ளியும் குந்தவையும் தயாரிக்க, தேன்யாழி உதவி செய்தாள்.
“ஏ புள்ள குந்தவை! அந்த தீவனத்த ஊரப் போடு மாட்டுக்கு” என அமிர்தவள்ளி குரல் கொடுக்க,
“சரிங்கத்தை” என குந்தவை தீவனத்தை எடுக்கப் போக,
“பார்டா இந்த குவாவை! நானும் தாமரையும் தான் இவளுக்கு தீவனம், தவிடு எல்லாம் சொல்லிக் கொடுத்தோம். இன்னிக்கு மேடமே மாட்டுக்கு தீவனம் போட போறாங்க” என குந்தவையை தேன்யாழி வம்பிழுக்க,
“உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க. என் மருமவளப் பாரு. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி பார்த்துகிறான்னு” என்று அமிர்தவள்ளி பாராட்டினார்.
மாமியார் பேசுவதை குந்தவை புன்னகையோடு கேட்க,
தேன்யாழி “முடியல” என்றாள்.
மாமியார் மருமகள் உறவு என்பது ஒரு கை ஓசை அல்லவே. அமிர்தவள்ளி சொல்வதை குந்தவை கேட்டுக் கொள்வாள். அதே போல் குந்தவை ஏதேனும் சொன்னாலும் அமிர்தவள்ளியும் கேட்டுக் கொள்வார்.
சிரித்துக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்து அமிர்தம், “என்னடி பல்லைக் காட்டிட்டு நிக்கறவ? போய் இலை அறுத்துட்டு வா.” என்று விரட்ட
“அம்மோவ் விருந்து சாப்பிட வந்தவளை வேலை வாங்குற நீ” என்று பேசிக்கொண்டே வாழை இலை அறுக்கச் சென்றாள்.
சாப்பிட்டு முடித்தபின் தென்னவனிடம் செந்தூரன்,
“மாப்ள பெரிய கோவில் திருவிழாவுக்கு அந்திக்கு போயிட்டு வருவோமா?” என கேட்க.
தென்னவன் தேன்யாழியின் விழிகளில் விநாடி நேர சங்கமம். .
அவன் காதல் சொன்ன இடம்.
அவள் காதல் உணர்ந்த களம் அல்லவா?
ஞாபகங்கள் தாலாட்டிட உடனே சம்மதமாக தலையாட்டினான் தென்னவன்.
செந்தூரன் குந்தவையைப் பார்த்து தலையசைக்க. அவளும் புரிந்து கொண்டு அவர்கள் அறையினுள் சென்றவள் வருகையில் ஒரு நகைப்பெட்டியோடு வந்தாள்.
அதனைக் கையில் வாங்கிய செந்தூரன் “புலிக்குட்டி இங்க வாங்க” என்று பூந்தென்றலை அழைத்து அவள் கழுத்தில் மெல்லியதாய் இருந்த தங்க சங்கிலியை அணிவிக்க போக,
“அண்ணே ! என்ன இது? அதான் காது குத்தையில இவளுக்கு நெறைய செஞ்சீங்களே வேண்டாம்” என தேன்யாழி மறுக்க.
“இதெல்லாம் வேண்டாம் மச்சான்” என்றான் தென்னவனும்
அமிர்தவள்ளியிடம் “பாரும்மா நீயி” என தேன்யாழி குறைபட, அவர் தான் பூரிப்பில் இருந்தாரே,
“என்னத்த பார்க்க சங்கிலி தானே? அதெல்லாம் என் மருமவ, அப்பவே காட்டிட்டா” என்று பேச
“ஆத்தா உன்னை” என்றபடி தேன்யாழி முறைக்க
“என்னடி முறைக்கிறவ? அவன் தங்கச்சி மகளுக்குத் தாய் மாமனா அவன் செய்றான் இதுல என்ன தப்பு?” என்றார்.
தென்னவன் தன் மறுப்பினை மனைவியிடம் விழிகளினால் காட்டிட, அவளோ விழித்துக்கொண்டு நின்றாள். அவனுக்கென வரதட்சனை எல்லாம் வாங்காதவன். ஆனால், குந்தவைக்கும் செந்தூரனுக்கும் அனைத்தும் முறையாய் செய்தான்.
அவன் கொள்கைகள் அவனோடு !
பூந்தென்றலுக்குக் கொடுப்பதையும் அவன் மறுத்திருக்க மாட்டான். ஆனால், சமீபத்தில் தான் காது குத்து விழா நடத்தி அதில் தாய் மாமனாய் சீர் செய்தான் செந்தூரன். அதனாலேயே தென்னவன் மறுக்க, அதைக் கண்டு குந்தவை
“அதை இங்க கொடுங்க” என்று கணவனிடம் கேட்டு வாங்கியவள் தென்னவனைப் பார்த்து
“இது அத்தையா நான் என் அண்ணன் பொண்ணுக்கு ஆசையா போடுறது ” என்று சொல்லி பூந்தென்றலின் கழுத்தில் நகையை மாட்டிவிட்டாள்.
அவள் அப்படி சொல்லிவிட அண்ணன் வாய்திறப்பானா என்ன?
தேன்யாழி தான், “எதுக்கு செலவுடி?” என்று கேட்க,
“என்ன செலவு? நெல்லு வித்தாரு லாபம் தான் தோணிச்சு வாங்கினோம். இதைப் பத்தி இனி பேசாத” என முடித்துக் கொண்டாள் குந்தவை.
கோவிலுக்குக் கிளம்ப வேண்டி அனைவரும் தயாராக, தென்னவன் தன் காரிலே எல்லோரும் போகலாம் என்று சொல்ல,
“நோப்பா நான் மாமா கூட டுர்ல தான் போவேன்” என்று செந்தூரனின் புல்லட்டில் போக வேண்டும் என பூந்தென்றல் அடம் பிடித்தாள்.
அருள்மொழியும் “நானும் அப்பா கூட” என்று சொல்ல
செந்தூரன், “சரி நான் பிள்ளைங்க கூட பைக்ல வரேன் மாப்ள” என்று சொல்லவும் குந்தவை தன்னை அழைத்துச் செல்லவில்லை என அவனை நன்றாய் முறைத்தாள்.
“ஏய் குந்தவை டக்குனு வா நேரமாகுது” என்று சொல்லவும் தான் குந்தவை முகம் மலர்ந்து போனது.
குந்தவை, குழந்தைகளோடு செந்தூரன் தன் புல்லட்டில் செல்ல தேன்யாழியும் தென்னவனும் தனிப்பயணம் தங்கள் காரில்.
இராஜகோபாலனை வணங்கிவிட்டு செங்கமலத்தாயாரை வணங்குகையில், தென்னவன் பார்வை நிறைவை சுமந்தபடி தன்னவளைப் பார்க்க தலைவி விழியும் தலைவன் வழியில் தான்.
குழந்தைகள் முன்னே ஓட செந்தூரன் அவர்களையும் குந்தவையையும் பார்த்துக் கொண்டு இருக்க,
“ஹே ராஜாத்தி! குங்குமம் வெச்சு விடுடி” என்ற தென்னவன் பேச்சில் தேன்யாழி சுற்றும் முற்றும் பார்க்க,
“என்ன பார்வை? ஊரே பார்த்தாலும் இப்ப வச்சு விடுற நீ” என்று தென்னவன் மிரட்டினான்.
“என்ன இன்ஸூ ஒரு காலத்துல இங்க எனக்காக தேவுடா இருந்துட்டு, இப்ப பேச்சைப் பாரேன்” என்று இடுப்பில் கைவைத்து முறைக்க
அவள் முறைப்பில் உடனே தணிந்தவன்,
“என் செல்ல ராஜாத்தில வச்சு விடுடி” என்று கொஞ்சலாய் சொல்கையில் மனைவிக்கு மறுப்பேது?
குழந்தைகளை யானையிடம் தூக்கிச் சென்ற தென்னவன் தேன்யாழியையும் குந்தவையையும் அழைக்க,
“போடா எனக்கு பயம்” என குந்தவை உட்கார்ந்து கொள்ள, செந்தூரனும் துணைவிக்குத் துணையாய் அவள் அருகில்.
தேன்யாழி அருள்மொழியைப் பிடித்திருக்க, தென்னவன் மகளைத் தூக்கிக் கொள்ள மனைவியிடம் ஒரு மயக்கும் பார்வை வீசியவன் மகளிடம்,
“பேபி! இந்த செங்கமலம் பேபி கிட்ட அப்பா வேண்டிகிட்டு தான் நீங்களும் அம்மாவும் கிடைச்சீங்க, உங்களுக்கும் எதாச்சும் வேணும்னா வேண்டிக்கோங்க” என்று சொன்னான்.
“மாமா அப்போ எனக்கு பூக்குட்டி மாதிரி தங்கச்சி பாப்பா வேணும்னு வேண்டிக்கவா?” என்று அருள் கேட்டான்.
“வேண்டிக்கோ அருள்” என தேன்யாழி சொல்ல,
“அப்போ எனக்கும் அருள் மாதிரி அண்ணா வேணும்” என்றாள் பூந்தென்றல்.
“உனக்கு தம்பி இல்ல தங்கச்சி பாப்பா தான் வருவாங்கடா பேபி, நீங்க பெரிய பொண்ணு ஆச்சே” என்று மகளுக்குத் தென்னவன் எடுத்து சொல்ல, சில வருடம் முன் அவன் சொன்னது போலவே செங்கமலத்திடம் அவன் பேபியோடு நின்று ஆசீர்வாதம் வாங்கினான்.
பின் திருவிழாவுக்கென்றே பிரத்யேகமாய்ப் போடப்பட்டிருக்கும் இராயல் தோட்டத்தில் உள்ள இராட்டினம், பாம்பே அப்பளம், மிளகாய் பஜ்ஜி என்று திருவிழாவின் அத்தனை அம்சங்களையும் குடும்பத்துடன் அனுபவித்தனர்.
வரும்போது பனி பொழியும் என்பதாலும், குழந்தைகள் வேறு தூங்கி வழிந்ததால் குந்தவையையும் காரிலேயே வரச் சொன்னான் செந்தூரன்.
இரவு உணவினை முடித்துக் கொண்டு தென்னவனும் தேன்யாழியும் பூந்தேன்றலோடு அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
தென்னவன் தேன்யாழிக்காக வாங்கிய கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து திண்ணையில் போட உடனே தந்தை மேல் தாவி ஏறியது பூந்தென்றல்.
“என்னடா பேபி மாமா வீட்ல ஜாலியா இருந்துச்சா?” என்று விசாரித்தான்.
“ஜாலி ஜாலியா இந்துச்சுப்பா மாமா என்னை சீ சா பண்ணினாங்களே” என்ற தென்றலின் மொழியில் தென்னவன் விழிக்க, தேன்யாழி மகளை தன் மேல் வைத்து அம்மாச்சி அரிஹோரம் என்று சொல்லிக் காட்ட,
தென்னவனோ, “என் ரேஞ்சுக்கு வாலிபால் பாஸ்கட் பால் தான் டி தெரியும்” என்று சொல்ல
“சரிங்க சார்” என்றாள் இவளும் விழியும் இதழும் மலர்ந்தபடி.
“நான் அப்பாகிட்ட” என்று தென்றல் மீண்டும் தென்னவனிடத்தில் தாவிட, மகளை மடி சேர்த்தான் தென்னவன்.
தென்னவனும் தேன்யாழியும் பூந்தென்றலும் இருக்கும், அந்த ஏகாந்தம் தென்னவனுக்கு மிகவும் பிடித்தம்.
மகள் அப்படியே உறங்கிட, அவளை உள்ளே தூக்கி சென்று மெத்தையில் மெதுவாய் விட்டவன், அப்படியே தரையில் பாய்விரித்துப் படுத்துக் கொண்டான்.
“மை டியர் ராஜாத்தி ! மாமனுக்கு முதுகு வலி, கொஞ்சம் மிதியேன்” என்று குறும்பாகக் கேட்க
“அதுக்கென்ன நல்லா மிதிச்சிட்டாப் போச்சு. உங்க தொங்கச்சி என்னைக் கிண்டல் பண்ணி தள்ளிட்டா, இனி மிதிக்கிற மிதியில மிதின்னு சொல்லி கேட்பீங்க நீங்க?” என்று அவன் முதுகில் ஏறிக் கொண்டாள்.
“ஹா ஹா” என்று சிரித்தவன் அவளை அப்படியே இழுத்து கீழே தள்ளி அவன் தலைக்குக் கீழ் பாதுகாப்பாய் தன் கைகளை வைத்து அணைத்துக்கொண்டான்.
பிறகென்ன ?
தென்னவனும் தேன்யாழியும் தென்றல் காற்றும் கூடிட. பொழிந்தது காதல் தேன்மழை !
ஆகாச வீடு கட்டும்
உன் கண்ணிலே
சின்னூண்டு கூடுகட்ட
வந்தேன்.
சங்கீத பாதங்களின்
பேரோசையில் சொக்கி
உன்னோடு வாசல் வரை
வந்தேன்.
மென் ஆம்பல் புன்னைகையின்
பேரன்பிலே
விண்மீனில் வீடெடுப்பேன்
இன்றே
உன்னை காணவே
ஆசை ஒவ்வொன்றும்
ஒற்றை காலில் நின்றெங்கும்
அதற்காகவே . .
வாசல் படியோரம்
எந்தன் வாழ்க்கை குடியேறும்.