அத்தியாயம் 17
‘யார் ஒருவர் பகவத்கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும்.’
‘அம்மாச்சி அரிகோரம்
தாத்தா வீடு
தென்னை மரம்
சாயி சாயி சாஞ்சிக்கோ’ என்று நான்கு வயதான பூந்தென்றலை தன் முட்டியில் வைத்து விளையாட்டுக் காட்டிய செந்தூரன், அப்படியே நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
‘பூந்தென்றல்’ தென்னவன் தேன்யாழியின் நந்தவனம்.
“அம்மா! இந்த பூக்குட்டி நம்ம அப்பாவை போட்டு மிதிக்கிறம்மா” என்று புகார் வாசித்தான் ஐந்து வயதான அருள்மொழி.
“என்ன அப்பாவை மிதிக்கிறாளா?” என்றபடி குந்தவை மகனின் கைப்பிடித்து அவர்கள் அறைக்குள் வர, மாமன் குப்புற படுத்திருக்க, அந்த நந்தவனம் மாமனின் முதுகில் நடைபயின்றாள்.
“ஹேய் பூக்குட்டி!” என்று அவளைத் தூக்கிக் கொண்ட குந்தவை,
“என்னங்க இது?” என்றபடி செந்தூரனை முறைத்தான்.
“நான் முதுகு வலின்னு சொன்னேன்டி, இவ டக்குன்னு ஏறி நடக்க ஆரம்பிச்சிட்டா ஏன்னு நீயே கேளு” என்று அவன் குறும்பாய் சொன்னான்.
“ஏன் டா இப்படி மாமா மேல நடக்குறீங்க?” என்று குந்தவை பூந்தென்றலிடம் கேட்க
“அது அப்பாவுக்கு வதிச்சா நானும் ம்மாவும் இப்பதிதான் செய்வோம் அத்த” என்றாள்.
“அம்மாவும் பொண்ணும் எங்கண்ணனை மிதிக்கிறீங்களாடி” என்றபடி செல்லமாய் பூக்குட்டியைக் கடித்து முத்தம் வைக்க, பூக்குட்டி தன் அப்பாவிடம் இருந்து இறங்கியதால் உற்சாகமான அருள்,
“அப்பா” என்று அவன் நெஞ்சில் சாய்ந்தான்.
“வாடா! என் சிங்கக்குட்டி” என்று மகனை அவன் அணைத்துக் கொள்ள,
“மாமா நான்” என பூக்குட்டி அவன் மேல் ஏறினாள்.
“நீங்க என் புலிக்குட்டி டி” என்று அவளையும் அணைத்துக் கொள்ள
“அருள் அவ அவங்க மாமா கிட்ட இருக்கட்டும். நீ நம்ம மாமா வந்ததும் அவர் கிட்ட விளையாடலாம். இப்ப இறங்கி போய் ஆட்டுக்குட்டியெல்லாம் பார்த்துட்டு வா. தண்ணி குடிச்சிடுச்சான்னு” என்று குந்தவை அவனை அனுப்பி வைத்தான்.
ஆட்டுக்குட்டி என்றதும் செந்தூரனுக்குப் புன்னகை வந்தது. இன்று வரையிலும் அவன் குந்தவையை விற்கவே இல்லை. என்னவோ அதை தர மனமே இல்லை.
“என்ன சிரிப்பு? இவ அம்மா மாதிரி இவ பண்ற அட்டகாசம் தாங்கல, கிடாவுக்குப் போய் பார்பின்னு பேர் வைக்கிறா” என்று பூக்குட்டியை செல்லமாய்க் கடிந்தாள்.
பூக்குட்டியோ அப்படியே மாமன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி உறங்கி விட,
“பாருங்க உங்க தங்கச்சி மாதிரி படுத்தவுடனே தூங்கிட்டா” என்று குந்தவை சிரித்தாள்.
“படுத்ததும் தூங்கிட்டா உங்கண்ணன் பாடு கஷ்டம் தான்” என்று கண்ணடித்தவன்
“இப்படி தான் குந்தவை சின்ன வயசில தேனு இருப்பா. நான் அவ இருக்கிற பக்கம் கூட போக மாட்டேன், அவ பொண்ணைப் பார்க்கும்போது சின்னக்குழந்தைன்னு புரியுது, ஆனா அப்போ அவளும் அப்படி தானே கஷ்டப்பட்டிருப்பா” என்று கலங்கிய குரலில் செந்தூரன் சொன்னான்.
“விடுங்க இப்ப தான் நீங்க பாசமலர் பார்ட் 2 ஓட்டுறீங்களே, வருத்தப்படாதீங்க” என்று குந்தவை சமாதானம் செய்தாள்.
“இல்லடி சில விசயம் தப்புன்னு தெரியாம செய்வோம், அப்புறம் தப்புன்னு தெரியும் ஆனாலும், மாத்திக்க முடியாது. தேனு விசயத்துல நான் அப்படிதான்! என் தங்கச்சியை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல”
“அவ அதையெல்லாம் பெருசா நினைக்க மாட்டா, எப்பவுமே எங்கேயும் அவ உங்களை விட்டுக்கொடுத்ததில்லைங்க. அதையெல்லாம் விடுங்க அண்ணனும் தேனும் நைட் வந்துடுவாங்களாம்”
“நீங்க அவளை பெட்ல அப்படியே படுக்க வச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்று சொல்ல
“புள்ளைக்குத் தூக்கம் கலைஞ்சிடுமே”
“அதெல்லாம் கலையாது எங்கிட்ட குடுங்க” என்றபடி குழந்தையை வாகாய்ப் படுக்க வைத்து, நாலா பக்கமும் தலையணை வைத்து, அறையை நன்றாய் திறந்து வைத்தாள்.
“நீ போய் அருளை அழைச்சிட்டு வா வந்து சாப்பிடு” என்று மனைவியிடம் அக்கறையாக சொன்னான் செந்தூரன்.
குந்தவை இப்போது மீண்டும் கர்ப்பம் நாலாவது மாதம்.
தென்னவனும் தேன்யாழியும் திருச்சியில் இருக்கின்றனர்.
தென்னவனுக்கு அங்கு மாற்றலாகி இருக்க, முடிந்த போது வார இறுதியில் இங்கு வருவர், இப்போது எல்கேஜி படிக்கும் பூந்தென்றலுக்கு விடுமுறை என்பதால் ஒரு வாரமாய் மாமன் வீட்டில் தான் வாசம்.
இரவு மணி பத்து இருக்கும்போது தென்னவனும் தேன்யாழியும் தென்னவனின் வீட்டிற்குச் சென்றனர். தென்னவன் குளித்து வருவதற்குள், தேன்யாழி இரவிற்கு கோதுமை தோசை செய்து காரச்சட்னி அரைத்து வைக்க, குளித்து முடித்து வந்தவனின் கழுத்தைப் பின்னால் இருந்து கட்டிக் கொண்ட தேன்யாழி முன்னால் அவள் கைகளை விரித்துக் காட்டினாள்.
“ஹேய் ராஜாத்தி!! எப்ப டி போட்ட?” என்றவாறே அவளை அணைத்தவன், அவள் கைகளை முகர்ந்தவன்,
“காலையில நான் டியுட்டிக்குக் கிளம்பின பின்னாடி வச்சியா” என்றான் அவளது மருதாணி விரல்களைப் பார்த்து.
“அங்க கோவில் பக்கத்துல செடி பார்த்தேன், அதுல இருந்து பறிச்சு வச்சிக்கிட்டேன்” என்றபடி அவன் தோள் சாய்ந்தாள்.
“பூக்குட்டி இல்லாம எனக்குக் கஷ்டமா போச்சு, நாளைக்கு காலையிலேயே போய் அவளைப் பார்க்கணும். நீங்க தான் லேட் பண்ணிட்டீங்க” என்று குழந்தையைப் பிரிந்த ஏக்கத்தில் சொல்ல
“அவ நல்லா ஜாலியா இருப்பா, உங்கண்ணன் கொஞ்சுற கொஞ்சுல உன்னைத் தேடவே மாட்டா. நீ தான் உன்னைத் தேடுற ஆளைக் கண்டுக்க மாட்டேங்கிற” என்று சொல்லி அவள் நெற்றியில் முட்டினான்.
“யாரு என்னைத் தேடுறாங்களாம்?”
“தேன்யாழியை தென்னவனைத் தவிர யார் தேடுவாங்களாம்” என்று இவன் பேசுகையில் அவனின் செல்பேசி அழைத்தது.
“அட என்னோட சின்ன ராஜாத்தி” என்றவன்
“சொல்லுடா குட்டிம்மா” என்று குழந்தையிடம் பேசியவன் பின் குந்தவையிடம் பேசினான்.
“டேய் மணி பத்தரை ஆச்சு இன்னும் காணோம் மாமா, அவர் எல்லாம் உனக்காக வெயிட்டீங். அருள் மாமா எப்போ வருவாங்கன்னு கேட்டுட்டே தூங்கிட்டான்” என்று திட்டினாள்.
“அச்சோ சாரி பேபி! நான் டியுட்டி விட்டு வரவே லேட்டாச்சு. அதான் இங்க வீட்டுக்கே பத்து மணிக்குத்தான் வந்தோம், நாளைக்குக் காலையிலேயே வரோம்”
“உன்னை!! முன்னாடியே சொல்ல மாட்டியா? சரி சாப்டியா இல்லையா?”
“இனிமே தான் உன் அண்ணி சமைச்சிட்டா”
“எங்க அவ கிட்ட போனை கொடு”
“சொல்லுங்க அண்ணியாரே” என்று தேன்யாழி சொல்ல
“என்னடி நீயும் உன் பொண்ணும் என் அண்ணனை மிதிக்கிறீங்களாம்” என்றதும் இவள் கோபத்தில் கணவனை முறைத்தாள்.
“உனக்கு யாரு சொன்னா?”
“உங்கண்ணனை காலைல மிதிச்சா அப்போ சொன்னா தேனு”
“அச்சோ அண்ணனை மிதிச்சாளா?” என்று தேன்யாழி கவலையாய்க் கேட்க
“அடியே நல்லவளே என் அண்ணனை மிதிக்கிறதைக் கேட்டா, உங்கண்ணணை குழந்தை மிதிச்சு, அவருக்கா வலிக்கவா போகுது, நீ ஏன் டி மிதிக்கிற?” என்று சிரித்தபடி கேட்டாள்.
“அ அது அவர் வலிக்குதுன்னு மிதிக்க சொல்வார் டி. கூட சேர்ந்து பூக்குட்டியும் மிதிக்க ஆரம்பிச்சிட்டா டி”
“ஓ சரி சரி நாளைக்குக் காலையிலேயே வந்துடு” என்று அவள் போனை வைத்தாள்.
“முதல்ல சாப்பிடு வா” என்று தென்னவன் தேன்யாழியை அழைக்க, இருவரும் சாப்பிட்டு முடித்த பின், மோட்டாரை போட்டு விட்டவன் பின்னால் இருக்கும் செடிகளுக்கு எல்லாம் நீர் விட்டான்.
அவன் இங்கு வரும்போதெல்லாம் செய்வது, வாரத்தில் இரண்டு நாள் வந்து குந்தவையோ செந்தூரனோ தண்ணீர் விட்டு செல்வார்கள்.
அவன் நீர் விடும் வரை, அங்கிருந்த சந்தனமுல்லை பந்தலின் கீழ் இருந்த மூங்கில் நாற்காலியில் அவள் அமர்ந்து இருந்தாள்.
தண்ணீர் விட்டு வந்தவன், அவளைத் தூக்கி தன் மடியில் இருத்தி, அவள் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.
“ஏன் டி ராஜாத்தி நம்ம பூக்குட்டியை மிஸ் பண்ணினேன் சொன்ன தானே? பேசாம இந்த ராஜ ராஜனுக்கு ஒரு ராஜேந்திர சோழனை ஏற்பாடு பண்ணிட்டா என்ன?” என்று அவளைப் பார்த்து கேட்க
“உங்களை!! இப்ப ஒன்னும் வேண்டாம்” என்று மங்கை மறுத்தாள்.
“ஹே ! நந்தவனம்ல ஒன்லி ஒரு பூ தான் டி இருக்கு பூந்தோட்டம் உருவாக்க வேண்டாமா?” என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, அங்கு ஏற்கனவே இதழ் விரித்த சந்த முல்லைகளும், செவ்வந்தியும் அந்த இரவோடு இணைந்து நறுமணம் வீசின.
மங்கை மருதாணி வாசமும் அதனோடு இணைந்த மல்லி வாசமும் மன்னனை தன் வசமிழக்க செய்ய, அங்கே காதல் வாசம் செய்ய, நந்தவனம் அமைக்க வேண்டி தன் நங்கையை அள்ளிச் சென்றான் நாயகன்.