தென்னவனும் தேன்யாழியும் 16

திருமணம் முடிந்த தனி இரவு.

செந்தூரனும் அவனின் செங்காந்தளும் அருகருகே!!

குந்தவை அமைதியாய் இருக்க, செந்தூரன் தான் பேச்சை ஆரம்பித்தான். 

“ஏட்டி என்ன அமைதியா இருக்க?” என்று கேட்க

“இல்ல அம்மா அப்பா ஞாபகம் வந்துடுச்சு, அண்ணா தனியா இருப்பான்ல” என்று குந்தவை கண்கலங்க கவலையாய் சொன்னாள். 

காலையில் முதலில்  தென்னவன் தேன்யாழியின் திருமணம் நடக்க, பின் அவர்கள் தம்பதியாய் நின்று செந்தூரன் குந்தவை திருமணத்தை நடத்தி வைத்தனர். குந்தவை உடன்பிறந்தோனை பிரிந்து வருகையில் அப்படி அழ, தென்னவனும் தங்கையை அணைத்துக் கொண்டு கண்கலங்கினான். 

பொன்முகலி கூட  செந்தூரனை, 

“என்னைக் கட்டிக் கொடுத்தப்பவும் சரி, இப்ப தேனை கட்டிக்கொடுக்கறப்பவும் சரி கொஞ்சமாச்சும் இப்படி ஃபீல் பண்ணியாண்ணா? பாரு இவரை” என்று திட்டினாள். 

காலையிலேயே அப்படி அழுதவளை அமிர்தவள்ளி தான் சமாதானம் செய்தார். 

குந்தவையின் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டவன், 

“இங்க பாரு உன் அண்ணனை என் தங்கச்சி நல்லா பார்த்துப்பா, அவ அண்ணன் உன்னை நல்லா பார்த்துப்பான்” என்றான் அன்பாக.

“பார்த்துப்பீங்க பார்த்துப்பீங்க, தேனு மட்டும் என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு கண்டுபிடிக்கலன்னா எப்படி பார்ப்பீங்களாம்?” என்று கோபமாய்க் கேட்க

“குந்தவையோட இந்த கோபம் கூட எனக்குப் பிடிக்கும்.” என்றவன் செல்லமாய்  நங்கை நாசியினைப் பிடித்தான். 

“ரொம்ப பண்ணாதீங்க! சரி தேனு கிட்ட என்ன சொன்னீங்க அவ எப்படி கண்டுபிடிச்சா?”

“அதுவா தாமரை வந்து கேட்டப்ப ஆட்டுக்குட்டியைக் கொடுக்க மாட்டேன் சொல்லிட்டேன். அதை வச்சுக் கண்டுபிடிச்சாளாம்”

“வாட்?”

“அந்த ஆட்டுக்குட்டி பெயரு குந்தவை” 

“ஓ நான் வந்தப்ப போட்ட குட்டியா? ஆனாலும்,  நீங்க என்னைப் பிடிக்கும் சொல்லவே இல்லையே, எங்கண்ணன் மாப்பிள்ளை பார்த்தப்பவும்”

“என்ன பெருசா பார்த்தான்? ஏன் டி பிடிக்கும்னு சொன்னாதான் ஆச்சா? உன் பெயர்ல உள்ள ஆட்டுக்குட்டியைக் கூட கொடுக்க மனசு இல்லாதவன், நான் உன்னை விட்டுக் கொடுத்திடுவேனா? முதல்ல தேனுக்கும் உங்கண்ணனுக்கும் கல்யாணம் நடக்கனும்னு அமைதியா இருந்தேன். அப்படி ரொம்ப சீரியசாய் உனக்கு பார்க்க ஆரம்பிச்சிருந்தா, நானே உன் கிட்ட வந்து பேசியிருப்பேன். இப்ப ஏன் டி இப்படி முகத்தை வச்சிருக்க?”

“கோபமா இருக்கேன் அன்னிக்கு என்ன சொன்னீங்க? தேனுக்காக என்னைப் பிடிச்சிருக்கு சொல்லாத, எனக்கு உங்களை, இந்த குடும்பத்தை எல்லாம் பிடிக்கும் ஆனாலும்,  வாழ போறது உங்களோட தானே? அது எப்படி உங்களை பிடிக்காம இருக்கும். உங்களை உங்களுக்காக மட்டும் தான் பிடிக்கும் சொன்னேன் பெரிய இவர் மாதிரி அட்வைஸ்?” என்றாள் சிடுசிடுப்பாய். 

“இதுல வேற என் மருதாணி சிவப்பை எங்கிட்டையே கொடுப்பாராமே” என்று திட்ட

“இதுக்கு தான் காத்திட்டு இருந்தேன் குந்தவை” என்றவனை அவளை எழுப்பி கண்ணாடி முன் நிற்க வைத்தான்.

“உன் மருதாணி சிவப்பை உங்கிட்ட தரனும் அதானே?” என்று ரசிகனாய் சொன்ன செந்தூரன் அவள் கன்னத்தில் முத்தமிட, 

புது உணர்வு ஒன்று புலர்ந்திட, காதல் மனம் கனிந்திட, செந்தூரம்   நிறம் அவள் முகத்தில் செந்தூரனின் இதழ்வண்ணத்தால். 

சிவந்திருந்த அவள் முகத்தைக் காட்டியவன், 

“பார்த்தியா செந்தூரன் சொன்னதை செஞ்சிட்டான். எப்படி உன் மருதாணி சிவப்பை திருப்பி தந்துட்டேனா? அந்த சிவப்பை விட உன் முகத்தில அதிகமா இருக்கோ? அப்ப கொஞ்சம் எடுத்துக்கவா? குந்தவை கறை நல்லது தான் இல்ல…நம்ம விசயத்துல” என்று அவன் கண்சிமிட்டினான்.

“உங்களை” என்றபடி தோள் சாய்ந்தாள் செந்தூரனின் குந்தவை. 

அதன் பின் கறையைப் பற்றி என்ன பேச்சு? அவர்கள் கலந்தும் கரைந்தும் அல்லவா போனார்கள்.

தென்னவனின் வீட்டில்…

“எங்க தூக்கிட்டு போறீங்க” என்று தேன்யாழி கத்த

“வாடி தெரிஞ்சிக்கலாம் ” என்ற தென்னவன் தேன்தமிழன், தேன்யாழியை அவர்கள் வீட்டின் பின் இருக்கும் சந்தன முல்லை பந்தலுக்குத் தூக்கிச் சென்றான். 

அவளை இறக்கி விட்டவன், அவளை அந்த பந்தலின் கட்டையில் சாய்த்து அவள் முகத்தையே ரசிகனாய்ப் பார்க்க, 

“என்ன பண்றீங்க? யாராச்சும் பார்க்க போறாங்க, வாங்க வீட்டுக்குள்ள போகலாம்” என்று தேன்யாழி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“வீட்டுக்கு முன்னாடியே இன்னிக்கு யாரும் வர மாட்டாங்கடி. பின்னாடி யார் வரப்போறா? சுத்தி காம்பவுண்ட் இருக்கு. சும்மா அமைதியா இரு! நான் என் ராஜாத்தியை ரசிக்கறப்ப டிஸ்டர்ப் பண்ணாத” என்றவன் அங்கு அருகில் இருந்த குண்டு மல்லி செடியில் மலர்ந்திருந்த ஒரு பூவினை, தேன்யாழியின் தலையில் வைத்துவிட்டான். 

“நானும் என் தேன்யாழியும் எனக்குப் பிடிச்ச இடத்துல, எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா? இந்த இடத்தில உன்னை முதன் முதல்ல ரகசியமாய்ப் பார்த்தேன். நீ இங்கேயே இருந்திடனும்னு மனசு ரொம்ப ஏங்கிச்சு. அன்னிக்கு உன்னை அனுப்பவே மனசில்ல, என் வீட்டை வீடா மாத்தினதுக்கு தேங்க்ஸ் தேனு ” என்றான் ஆத்மார்த்தமாய். 

தேன்யாழி அவனை மலர்ந்த முகத்தோடு அமைதியாய் ரசித்திட, அந்த இருளும் இவளும் சந்தன முல்லை வாசமும், சந்திரயோதயமும் மன்னவன் மனமெல்லாம் மனோகரம்.

நெடுநல்வாடை வீசிட  நெடு நாள் ஆவலை அவளிடத்தில் நிறைவேற்றினான். காதல் நிலை ஏகியவன் கரத்தினில் காரிகையை ஏந்தி அவன் அறைக்குத் தூக்கி சென்றான். 

வாடைக் காற்று வீசிட, ஜன்னல் அத்தனையும் திறந்து வைத்தான். மண்வாசம் மெதுவாய் கிளம்பிட, வெளியே சிறு மழைத்தூறல்.

பின் உட்கார்ந்திருந்த தேன்யாழியின் மடி சாய்ந்த தேன் தமிழன், கண் மூடினான். கரகரத்த குரலில் தென்னவன், 

“ஏன் தேனு அம்மா அப்பா இருந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பாங்க தானே?” என ஏக்கமாய்க் கேட்டான்.

“இப்பவும் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க, ஒரு அண்ணனா நீங்க உங்க கடமையை செஞ்சிட்டீங்க, ரொம்ப நல்ல பையனா இருக்கீங்க. அவங்க கண்டிப்பா நிம்மதியாயிருப்பாங்க” என்று தலைவி தலைவன் தலை கோதினாள்.

“ஏன் யாழி உன் அண்ணன் குந்தவையை நல்லா பார்த்துப்பானா?” என்று தென்னவன் கவலையாய்க் கேட்க

“என்ன நீங்க? என் அண்ணன் எங்கிட்ட பேசாம இருப்பான். அதை தவிர அவன் ரொம்ப நல்லவன், நீங்களாவது சைட் அடிச்சேன் அப்படி இப்படி சொன்னீங்க. அவன் எந்த பொண்ணையும் பார்க்க கூட மாட்டான், தெரியுமா? என்னமோ குந்தவையை அவனுக்குப் பிடிச்சுப் போச்சு, அன்னிக்கு அவ பெயர்ல உள்ள ஆட்டுக்குட்டியைக் கூட கொடுக்க மனசு வராம எப்படி டென்ஷன் ஆனான் தெரியுமா?” என்று அண்ணனுக்காகப் பேசினாள்.

“உங்கண்ணனை நல்லவன்னு சொல்ல, என்னை ஏன் டி டேமேஜ் பண்ற? சைட் அடிக்கறவன் எவன் டி சைட் அடிச்சேன்னு ஒத்துப்பான்? நான் கொஞ்சம் நல்லவன்றதால சொன்னேன். ஒரு நாள் நீ பனி துளியை போல குணம் படைச்ச தென்னவன்னு பாடத்தான் போற என் வேல்யூ என்னனு தெரியல” என முகம் சுருக்க 

“ஏன் இப்பவே பாடுறேன்” தேன்யாழி சிரித்தபடி சொன்னாள்.

“முதல்ல என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுடி, பாட்டெல்லாம் அப்புறம் பாடலாம்” என்றான் கடுப்பாய். 

“உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு போதுமா” என்ற மங்கையின் மருதாணி விரல்களைப் பற்றி மென்மையாய் முத்தமிட்டான் தென்னவன். 

“அம்மா கூட மருதாணி வச்சுப்பாங்க அவங்க கையை அப்போ அப்போ இப்படி முகர்ந்து பார்த்துப்பேன் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்” 

“ஏன் தேனு? என்னடா இவன் இன்னிக்குப் போய் இதெல்லாம் பேசுறான்னு பார்க்கிறியா? எதுவும் சொல்ல மாட்டேங்கிற?”

என்று கேள்வியாய்ப் பார்த்தான். 

அவனின் நெற்றியை ஒற்றைக் கையால் வருடியவள் , “ நீங்க பேசுறதை அமைதியா கேட்கிறேன், நீங்க எங்கிட்ட மனசு விட்டுப் பேசுறது எனக்கு சந்தோசம் தான் நீங்க சொல்லுங்க” என்று தேன்யாழி சொல்ல

“என்னால குந்தவை கிட்ட இதை பத்தி பேசவே முடியாது. நைட் எங்கம்மா கிட்ட பேசினேன், காலையில நாலு மணிக்கு ஆக்ஸிடெண்ட், என்னால நம்பவே முடியல. சாவு ஒரு நாள் வரும்ன்ற அறிவெல்லாம் உண்டு. ஆனாலும்,  அந்த அதிர்ச்சி இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு அவங்க போயிருக்க வேண்டாம்” என்றவனின் கன்னங்களில் இப்போது இறங்கியது கண்ணீர் துளி. 

தேன்யாழிக்கும் கண்கலங்கி விட, அவன் பற்றியிருந்த கையினால் அவன் கையை அழுத்திக் கொடுத்தாள். இந்த வலி அவன் வாழ்க்கை முழுவதும் தொடரும் என தெரியும். அதை மறக்க வைக்க முடியாது ஆனால்,  அதை நினைக்காமல், அவனுக்கு ஒரு நிம்மதியான வாழ்வினை தந்துவிட வேண்டும் என்று நினைத்தாள் தேன்யாழி. 

“இங்க பாருங்க நீங்க நல்லா படிச்சு ஒரு நல்ல வேலையில இருக்கீங்க. குவாக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கீங்க, கண்டிப்பா அத்தையும் மாமாவும் இப்போ ரொம்ப நிம்மதியா இருப்பாங்க. அவங்க செல்லப்பையன் அழுதா தாங்குவாங்களா சொல்லுங்க?” என்று அவன் கண்ணீரைத் துடைத்தாள். 

அவன் அமைதியாய்ப் புன்னகைத்து அவள் முகம் பார்த்தான். 

“அன்னிக்கு போன்ல வெறும் ஹலோ தான் சொன்னேன், நீங்க சட்டுன்னு கோவிலுக்கே வந்துட்டீங்க?” என்று கேட்காமல் விட்டதை இன்று கேட்டாள்.

“ஹ்ம்ம் நீ தென்னவனோட தேன்யாழி டி! என் ராஜாத்தி என்னை எதுக்குக் கூப்பிட்டேன்னு தெரியாதா? பிடிச்சிருந்தாலும் பிடிக்கலன்னாலும் சொல்வேன் சொன்ன இல்லையா? அன்னிக்கு நான் கோவிலுக்குப் போகல. பிறந்த நாள் வேற நீ பேசலன்னா கஷ்டமா இருக்கும்னுதான் வரல. . நீயா கூப்பிட்டபோ வேற எதுவும் நினைக்கத் தோணல. உன்னை உடனே பார்த்துடனும்னு தான் மனசுல ஓடிச்சு. வந்தா நீ விபூதி வச்சு விட்ட, யாருக்கும் உரிமையா நீ இப்படி செய்ய மாட்டன்னு எனக்குத் தெரியாதா?” என்றவனின் புரிதலில் இவள் அகத்தினில் அல்லி அழகாய்ப் பூத்தது. 

“நம்ம காதல் ஐ லவ் யூ இல்ல, ஐ understand யூ! எனக்கு உன்னை புரியும், உனக்கு என்னைப் புரியும் தேனு” என்றான் அகத்தின் ஆழத்திலிருந்து, அவன் சொற்கள் அவள் அடி அகத்தினை வருடிட குனிந்து அவளாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். 

அவளை அப்படியே அணைத்துக் கொண்டவன், 

“உனக்காக மருதாணி செடி வச்சு இருக்கேன், அன்னிக்கு உன் கை சிவந்ததை  நான் பார்க்கல. இல்ல இனிமே எப்பவுமே உன் கை சிவந்து தான் இருக்கனும்” என்றான் காதலுடன். 

அப்படியே இருவரும் பேசிக் கொண்டே  ஒரு கட்டத்தில் உறங்கிட, தீடீரென பயங்கர இடி மழை திறந்திருந்த சாளரம் வழி சாரல் வீசிட, தூக்கம் கலைந்து தென்னவன் அதை சாற்றி வைத்து, தன்னவள் முகம் தலைவன் நோக்கினான்.

தலைவியும் எழுந்து இருந்தாள். அவள் அருகில் வந்து உட்கார்ந்து அவளை அணைத்துக் கொண்டவன்

“தேனு தூக்கம் வருதா ?” என மன்னவன் மயக்கம் கொண்ட விழிகளில் ஆவல் தேக்கிக் கேட்டான். 

அவன் தூக்கும் தொலைத்து புது துவக்கத்திற்கு துவம்(பாதை) அமைத்திட விழைகிறான் என இவளுக்கும் புரிந்தது. 

“இல்லை” என இவள் தலையசைக்க, ஆண் அவன் ஆணத்தின்(affection) காரணமாய் அணங்கினை அணைத்துக் கொள்ள, அழகாய் அரங்கேறியது மெய் தொட்டு பயிலல்.

தென்னவனுக்குள் தேன்யாழியும் தேன்யாழிக்குள் தென்னவனும் சங்கமம். 

‘காதல் வழி சாலையிலே

வேகத்தடை ஏதுமில்லை

நாணக்குடை  நீ பிடிக்க

வேர் வரைக்கும் சாரல் மழை’

error: Content is protected !!
Scroll to Top