அத்தியாயம் 15
‘பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு!’
பகவத் கீதை
அப்போதுதான் கல்லூரி முடிந்த சமயம். விடுமுறை என்பதால் குந்தவையை தாமரையும் தேன்யாழியும் வற்புறுத்தி அழைக்க, தேன்யாழியின் வீட்டிற்கு வந்திருந்தாள்.
பத்து நாட்கள் பிறந்த வீட்டில் தங்குவதற்கு, தேன்யாழியின் அக்கா பொன்முகலியும் தனது மகன் செழியனோடு வந்திருக்க, அவர்கள் வீடே கொண்டாட்டமாய் இருந்தது. தேன்யாழியிடம் செந்தூரன் பேசுகிறான் என தெரிந்த பொன்முகலிக்கும் மனம் மகிழ்வாய் இருந்தது.
அன்று வராண்டாவில் உட்கார்ந்து பொன்முகலி வெங்காயம் உரிக்க, வராண்டாவின் அருகே இருக்கும் இடத்தில் கட்டம் போட்டு டைல்ஸை உடைத்து வைத்து தேன்யாழி, குந்தவை, தாமரை, பொன்முகலியின் மகன் செழியன், தாமரையின் அக்கா மகள் ஆதிரை என எல்லோரும் நொண்டி விளையாடினர்.
அப்போதுதான் மாட்டுக்குத் தண்ணீர் காட்டிய செந்தூரன் மாட்டினைக் கட்டி விட்டு நிமிர, காலில் அந்த குட்டி சில்லை பிடித்து ஒற்றைக் காலில் நொண்டி விளையாடிக் கொண்டிருந்த குந்தவை தவறி விழப்போக, அவளின் கைப்பிடித்து நிறுத்தினான் செந்தூரன்.
அதற்குள் சின்னபிள்ளைகளான ஆதிரையும் செழியனும் ‘அக்கா அவுட்’ என கத்த
“பாருங்க உங்களால நான் அவுட்” என குந்தவை முறைத்துக் கொண்டு சொல்ல,
“பாவமேன்னு பிடிச்சா உனக்கு வாய்க்கொழுப்புடி” என்று முணுமுணுத்தான்.
“முகலி கடைக்குப் போறேன் எதாச்சும் வாங்கனுமா?” என்று கேட்க
“ஒன்னும் வேண்டாம்ணா” என அவள் சொல்லவும்
“தேனு உனக்கு?”
“ம்ம் இலந்த பழமிட்டாய் வாங்கிட்டு வாண்ணா” என்றாள் தேன்யாழி.
“மாமா நுங்கு வேணும்” என்று ஆதிரையும் செழியனும் சொல்ல
“சரி சரி வாங்கிட்டு வரேன்” என்று அவன் கடைக்குக் கிளம்பி போக, வெயில் வேறு அதிகமாய் இருந்தது.
செழியன்
“ஒளிஞ்சுப் புடிச்சு விளையாடலாம் சித்தி” என்று சொல்ல, அனைவரும் போய் வீட்டினுள்ளும் வீட்டை சுற்றியும் ஒளிந்து கொள்ள, ஆதிரை கண்ணை மூடிக் கொண்டு எண்களை எண்ணினாள்.
குந்தவை ஒளிந்து கொண்டது செந்தூரன் அறையில் உள்ள பீரோவின் பின். அவளுக்கு அது அவன் அறையென தெரியாது. ஒளிந்து கொண்டவள், அங்கிருந்த சட்டையை எல்லாம் பார்த்து தான் அவன் அறை என தெரிந்து கொள்ள, அவன் தான் வெளியே போயிருக்கிறானே என அப்படியே பீரோவில் சாய்ந்து நன்றாய் ஒளிந்து கொண்டாள்.
கடைக்குப் போய்விட்டு அப்படியே வங்கிக்கும் போகலாம் என நினைத்த செந்தூரன், பாஸ்புக்கை எடுக்க அவனது அறைக்குள் வந்தான்.
வந்தவன் பீரோவில் இருந்த பாஸ்புக்கை எடுத்து மெத்தையில் வைத்தவன் , வேறு நல்ல சட்டை அணியலாம் என சட்டைகளை எடுத்துப் பார்க்கையில் அன்று குந்தவை மருதாணி பூசிய சட்டை கண்ணில் பட, அதை எடுத்துப் பார்த்தான்.
அப்படியே குந்தவையின் கைத்தடம் பதிந்திருக்க, இளஞ்சிவப்பாய் மருதாணி ரேகை போகாமல் இருக்க, அதைக் கண்டவனுக்குக் குந்தவையை நினைத்து புன்னகை மலர்ந்தது.
மலர்ந்த முகத்தோடு அதை உள்ளே வைத்தவன், வேறு சட்டை எடுக்கலாம் என அங்கிருந்த துணி ஷெல்பில் பார்த்து எடுத்து, போட்டிருந்த சட்டையைக் கழட்ட போனான்.
“நான் இருக்கேன்” என்று சட்டென கத்திவிட்டாள் குந்தவை.
அதிர்ந்து போய் செந்தூரன் திரும்பினால் பீரோவிற்கும் சுவருக்கும் இடையில் இவள் நிற்க,
“இங்க என்னடி பண்ற?” என்று அதட்டினான்.
“அது விளையாடுறோம் ஒளிஞ்சிருக்கேன்” என மெதுவாய் சொல்ல
செந்தூரன் அவளை முறைத்து நிற்க, வெகு நாட்களாய் அவனிடம் கேட்க வேண்டிய கேள்வி மனதை உறுத்த அதை கேட்டும் விட்டாள்.
“நான் சொன்னதால தான் தேனு கிட்ட பேசுனீங்களா?” என்று கேட்க
செந்தூரனுக்கு சிரிப்பு தான் வந்தது. யார் சொல்லியாவது கேட்பவனா அவன் அவன் பேசியது அவனுக்காக. அவனது தங்கைக்காக தான் வேண்டுமானால் தென்னவன் கூட ஒரு காரணமாகலாம். ஆனாலும், அதை குந்தவையிடம் சொல்ல நேரிட்டால், இவன் திட்டியதிலிருந்து தேன்யாழி வீட்டை விட்டு சென்றது வரை சொல்ல வேண்டும். அதை சொல்ல விரும்பாதவன்,
“ஆமா…நீ வேற பார்க்கற இடத்தில் எல்லாம் என் ப்ரண்டுகிட்ட பேசு பேசுன்னு சொன்னியா அதான் இப்ப சந்தோசமா?” என்று சொல்லி அவள் முகம் பார்த்தான்.
அதில் அவளது மகிழ்வு அப்பட்டமாய்த் தெரிந்தது.
“சரி நான் பாத்ரூம்ல போய் டிரஸ் மாத்துக்கிறேன்” என்றபடி செந்தூரன் சட்டையை எடுத்து செல்ல,
நான் சொல்லி கேட்டானா என்ற எண்ணமும், தன் தோழிக்கு தன்னால் ஒரு நல்லது நடந்தது என்ற நினைவும், அவளை ஆழ்ந்த மகிழ்ச்சியில் தள்ளியது.
********************
இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்த குந்தவைக்கு கண்ணில் நீர் சுரந்தது. ஏனென்றே தெரியாமல் செந்தூரன் மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டது.
செந்தூரன் இவள் மனத்தில் நிலை கொண்டிருக்க, அவளுக்குள் புயல் மழை அவனிடம் சொன்னால் ஏற்பானா என்ற தயக்கம். அதை விட தேன்யாழியிடம் முன்பு கடுமையாக நடந்தவன் தானே? ஏதேனும் கடுஞ்சொல் சொல்லிவிட்டால் தன்னால் தாங்க முடியுமா என்ற கவலை எல்லாம் அவளை அலைப்புற செய்தது. திருமண பேச்சை வேறு தென்னவன் எடுக்க, அவளது அலைக்கழிந்த மனம் தமையனிடம் ஆத்திரத்தைக் கொட்டி விட, அமைதியின்றி தவித்தாள் அவள்.
முன்பானால் தேன்யாழியை வைத்தே அவர்கள் பேச்சு இருக்கும். இப்போது எதை சாக்கிட்டு அவனிடம் பேசுவாளாம்? தத்தை மனம் தயக்கத்தில் தவித்திருக்க, தமையன் வந்தான் அதை தீர்த்து வைக்க.
“பேபி இங்க வா இதை பாரு” என தென்னவன் அவனின் செல்பேசியைக் காட்டிட,
நேற்றிரவு அவனிடம் கடுமையாகப் பேசியது ஒரு குற்றவுணர்வைக் கொடுத்திருக்க, தென்னவன் அவளிடம் எப்போதுமே நட்புணர்வோடு தான் பழகுவான். அண்ணனாய் அன்பு காட்டுவான். தென்னவன் போல் ஒரு அண்ணன் இருக்கும் கர்வம் எப்போதும் குந்தவைக்கு உண்டு. அப்படிப்பட்டவனை மனம் நோக செய்துவிட்டோம் என்பது உரைக்க,
அவன் அருகில் உட்கார்ந்து அவனின் கைப்பிடித்து தோள் சாய்ந்தவள்,
“சாரிடாண்ணா” என்றாள்.
“ஹே! வாலு எதுக்கு சாரியெல்லாம்? சில் பேபி! இந்தா சித்தப்பா அனுப்பின மாப்பிள்ளை ஃபோட்டோஸ்லாம் இருக்கு. உனக்கு யாரைப் பிடிக்குதோ பாரு”
“எனக்கு எதுவும் வேண்டாம்” என்றவளை நிமிர்த்தி,
“சும்மா பார்க்கணும் குந்தவை, நான் சொல்றேன்ல ஜஸ்ட் ஐஞ்சு நிமிஷம் போட்டோ பாரு. நாலு போட்டோ தான் இருக்கு பிடிக்கலன்னா, சித்தப்பாகிட்ட சொல்லிடலாம்” என்று கண்டிப்பாய் சொல்லி அவனின் அலைப்பேசியை நீட்டினான்.
அருகிலேயே இருக்க என்ன செய்வாளாம் இவள். . ?
வேறு வழியின்றி பார்த்தாள் இரண்டு புகைப்படம் பார்த்திருப்பாள் மூன்றாவதைக் கண்டவளுக்கு மூச்சு முட்டிப் போனது.
‘செந்தூரப் பாண்டியன்!’
அவனைக் கண்டதும் அணங்கின்(பெண்) அத்தனை செல்களும் செழிப்பாவது எதனாலோ? உயிர் வரை ஒரு பரவசம் பரவுவது ஏனோ?அலைப்பாய்ந்த அகம் அமைதி கொள்வது ஏனோ?
இது காதல் தானோ?
அவன் படம் கண்ட நொடி அவளையறியாமலே கண்ணீர் கன்னம் நனைத்திட, தங்கையை அப்படியே தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான் தென்னவன்.
“பிடிச்சிருக்குன்னு எங்கிட்ட சொல்லணும்ல பேபி? சொல்லாம அண்ணாவுக்கு எப்படி டா தெரியும்?” என அவள் தலை வருடி கேட்டான்.
“எனக்கே தெரியலண்ணா அவரைப் பிடிச்சிருக்கு. ஆனா ஏன் தெரியல! அவருக்கு என்னைப் பிடிக்குமான்னு தெரியல, பிடிக்காதுன்னு சொல்லிடுவாரோ பயமா இருந்துச்சு”
அழுது கொண்டே குந்தவை சொல்ல
“என் தங்கச்சியை யாருக்காவது பிடிக்காம போகுமா?” என்றான் தென்னவன் புன்னகையோடு.
“போடா அவருக்கு அவர் தங்கச்சியே பிடிக்காம இருந்துச்சு” என்றவள் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“அப்போ அவர் என்னைப் பிடிச்சிருக்கு சொல்லிட்டாரா? சித்தப்பா கிட்ட எப்படி அவர் போட்டோ வந்துச்சு?” என்று கேட்க
“இல்லடா நீ நேத்து பேசினதும், நான் தேனு கிட்ட இதைப் பத்தி பேசினேன். அவ தான் தீடீர்னு காலைல கால் பண்ணி அவ அண்ணன் போட்டோவை உனக்குக் காட்ட சொன்னா” என்றவனின் தோளில் அடித்தாள் குந்தவை.
“அறிவிருக்காடா உனக்கு லூசா நீ? ஏதோ கோவத்துல தெரியாம சொல்லிட்டா அதை தேனு கிட்ட சொல்லியிருக்க, அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா?” என்று கோபத்தில் திட்ட
“ஹே வாலு! வாயைத் திறந்து சொல்லணும், அதை விட்டுட்டு கோச்சுட்டு போனா என்னன்னு நினைக்கறது? அவ ஒன்னும் உன்னைத் தப்பாவே நினைக்கல. உன் ப்ரண்டு உனக்கு சப்போர்ட் தான் பண்ணினா, தேனைப் பத்தி உனக்குத் தெரியாதா?” என்று தங்கை தோளில் அடித்தான் தென்னவன்.
அவள் அமைதியாகவே இருக்க,
“சரி உனக்கு அப்போ மாப்பிள்ளை ஓகே தான? நான் அவர்கிட்ட பேசப்போறேன” என்றான்.
“பயமா இருக்குடா” என்று சொல்ல, அவள் தலையை வருடியவன்,
“குந்தவை நாச்சியார் பயப்படலாமா?” என்று சிரித்து, போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவனை அவள் ஆவலாய்ப் பார்க்க, அவனோ
“உங்கிட்ட பேசனுமாம்” என்று போனை நீட்டினான்.
திகைத்து விழித்தாலும் போனை வாங்கிக் கொண்டு, அவள் அறைக்குள் சென்றாள்.
“ஹலோ!!”
“என்னைப் பிடிச்சிருக்குனு உன் அண்ணன் கிட்ட சொன்னியா குந்தவை?” செந்தூரனின் குரல் செவி தீண்ட, குந்தவைக்கு உள்ளே பரவசம்.
“ஆமா”
“ஏன் அப்படி சொன்ன?” என்று செந்தூரன் கேட்டதுதான் போதும் குந்தவை பொங்கி விட்டாள். ஏனோ தெரியவில்லை அவன் தூரமாய் இருக்கும்போது இருக்கும் பயமெல்லாம், அவனைக் கண்டு பேசிடும் போது இருப்பதில்லை.
அவன் குரல் கேட்கும் வரையில் இருந்த கலக்கமெல்லாம் காணாமல் போய்விட,
“பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குனு தான் சொல்ல முடியும்.” என்றாள் கடுப்பாய்.
“இங்க பாரு குந்தவை, தேனுக்காகவெல்லாம் நீ என்னைப் பிடிச்சிருக்கு சொல்ல வேண்டாம். நானும் அவளும் ராசியாகிட்டோம், நீ சிட்டில வளர்ந்த பொண்ணு. வீட்டுக்கு விருந்தாளியா வரது வேற, மருமகளா வரது வேற. உன்னால இங்க சமாளிக்க முடியாது” என்று நிதர்சனத்தை எடுத்து சொல்ல
குந்தவையோ “லூசா நீங்க? உங்க கிட்ட பேசினதுக்கு வேணும்னா தேனு காரணமா இருக்கலாம். ஆனா உங்களைப் பிடிச்சதுக்கு நீங்க தான் காரணம்! சும்மா இப்படி பேசினீங்க அவ்வளவுதான்! என்னைப் பிடிக்குமா பிடிக்காதா?” என்று சீரியசாய்க் கேட்டாள்.
“பிடிக்கிறதெல்லாம் வேற குந்தவை, நமக்கு சரிபடாது” என்று அவனும் பதிலுக்குப் பேச
“வேண்டாம் நான் டென்ஷன் ஆகிடுவேன், இதையெல்லாம் நான் மருதாணி வச்ச சட்டையை எடுத்து பார்த்து ஈன்னு இளிச்சப்ப யோசிச்சிருக்கனும், அப்போன்னா என்னோட மருதாணி சிவப்பை, அந்த சட்டையில இருந்து எடுத்து எங்கிட்ட கொடுத்திடு”என்று கோபத்தில் கத்தினாள்.
செந்தூரனுக்கு சிரிப்புத் தாங்கவில்லை. அவள் பேச்சில் இவன் வாய் விட்டு சிரிக்க, அவன் சிரிக்க, இவளுக்கோ ஆற்றாமையில் அழுகை வந்தது.
“அம்மாடி! ஏன் அழற? குந்தவை அழாத! நான் சும்மா விளையாட்டுக்கு சிரிச்சேன் டி” என்று சமாதானம் செய்ய, அவள் பதில் பேசவே இல்லை.
“எனக்கு குந்தவைன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் அத்தனை முறை நான் திட்டியும் ப்ரண்டுக்காக வந்து பேசின குந்தவையோட நல்ல மனசு ரொம்பப் பிடிக்கும். எனக்குப் பர்த்டேன்னு எங்கிட்ட பொய் சொன்ன குந்தவையோட குறும்பு ரொம்ப பிடிக்கும்! ஆட்டுக்குட்டியை அழகா தூக்கி வச்சுக் கொஞ்சுற குந்தவையோட பாசம் ரொம்ப பிடிக்கும்”
“உனக்கு என்னைப் பிடிக்கும்னு தெரியாது குந்தவை! அதனால தான் அதை தெரிஞ்சிக்க சும்மா விளையாண்டேன்டி. அழுது வைக்காத” என்று சொல்ல
மன்னவன் பேச்சினில் மங்கை மனத்தில் மஞ்சம் விரிக்கின்றன மஞ்சள் பூக்கள்! அவளகத்தினில் ஆலங்கட்டி மழை, பாவை மனம் பாண்டியன் மேல் காதல் நிலை!!
“பேசு குந்தவை”
“பேசலன்னு வச்சிக்கோ, சட்டையில உள்ள மருதாணி சிவப்பை உங்கிட்ட, நீ கேட்ட மாதிரி திருப்பி தந்துடுவேன்” என செல்லமாய் மிரட்டினான்.
“என்ன விளையாடுறீங்களா?” குந்தவை கேட்க
“நிஜமா செந்தூரன் சொன்னா செஞ்சிடுவான்” என்றான்.
“செய்வீங்க செய்வீங்க”
“நீ வேணும்னா பாரு கல்யாணம் முடிஞ்சதும் செய்றேன்” என்ற அவனின் பதிலில், இவள் மனம் மொத்தமாய் சரிந்து மகிழ்ந்தது.
அவனோடு சில நிமிடம் பேசியவள் புன்னகை புலர்ந்த முகத்தோடு அண்ணனிடம் வர
“என்ன பாண்டியன் மீது படையெடுப்பு நடத்தியாச்சா?” என்று தென்னவன் விளையாட்டாய்க் கேட்டான்.
“டேய் தமிழ் தேங்க்ஸ் ஸோ மச்” என்று சொல்லி அவனை அணைத்துக் கொள்ள, தங்கையின் நெற்றியில் அன்பாய் முத்தமிட்டவன்,
“எப்போவுமே நீ சந்தோசமா இருக்கனும் வாலு” என்றான் நெகிழ்வாய்.
அதன் பின் அத்தனையும் வேகமாய் நடந்தது.
தென்னவனுக்கு தேன்யாழியை அவர்கள் சொந்தமான குமாரின் வீட்டின் மூலம் ஒரு பக்கம் பெண் கேட்க, அதற்கு அமிர்தவள்ளி போலீஸ் மாப்பிள்ளை என்று தயங்கினாலும், சிதம்பரம் பேசி சம்மதிக்க வைக்க, அடுத்து சில நாட்களில் பொன்முகலியை விட்டு குந்தவையை செந்தூரனுக்கு தேன்யாழி பேச சொல்ல, அமிர்தவள்ளி அதற்கும் யோசிக்க,
“ஏன் மா அண்ணனுக்கு குந்தவையைப் பிடிச்சிருக்குன்னு சொல்றோம். நீ என்ன ரொம்ப யோசிக்கிற?” என கடுப்பாய் தேன்யாழி கேட்டாள்.
“அவன் பிடிச்சிருக்குனு சொன்னானா டி?” என்று அமிர்தவள்ளி கேட்டார்.
“அதெல்லாம் பிடிச்சிருக்குன்னு எனக்கும் அக்காவுக்கும் தெரியும். வேணும்னா அண்ணனைக் கூப்பிட்டு கேளு, அந்த ஆதியும் பார்வதியும் மட்டும் சேரனும்னு வேண்டிப்ப எங்கண்ணனுக்குப் பிடிச்ச பொண்ணைக் கட்டி வைக்க யோசிக்கிற, நீயும் அந்த அகிலாண்டேஸ்வரி மாதிரி தான்மா” என்று தேன்யாழி சீரியல் பார்ப்பதை சொல்லி திட்டினாள்.
சிதம்பரம்,
“எந்த ஆதி பார்வதி டா?” என்று தெரியாமல் கேட்க
“ஏங்க இந்த குட்டி செம்பருத்தி நாடகம் சொல்றாங்க” என்று அமிர்தவள்ளி சொல்லவும் சிதம்பரத்துக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
அப்படியே தேன்யாழியும் சிரிக்க, அமிர்தவள்ளியும் சிரித்துவிட்டார்.
பின்னர் அவரே செந்தூரனை அழைத்து,
“உனக்கு குந்தவையைப் பிடிச்சிருக்காப்பா பேசட்டுமா?” என்று கேட்க
அவனோ , “உனக்குப் பிடிச்சா பேசும்மா” என்று சொல்லிவிட, அமிர்தவள்ளிக்கு ஒரே யோசனை.
சிதம்பரம் தான்,
“பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லிடுவான் அவன். நம்ம பேசுவோம்” என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தார்.
அடுத்து என்ன அழகாய் நிகழ்ந்தேறியது அண்ணன் தங்கை இருவரது திருமணமும்.