தென்னவனும் தேன்யாழியும் – 2

அத்தியாயம் 2

‘வாழ்க்கை ஒரு சாகசப் பயணம், அதனை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு சோகம், அதனை கடந்து வாருங்கள்’

-பகவத் கீதை

“ஏன் தேனு இவ்வளவு நாழி கழிச்சு வர…?” என வீட்டினுள் நுழைந்தவளை, ஆடுகளைக் கட்டிக் கொண்டிருந்த அமிர்தவள்ளி கேட்க பேசாமல் அவர் ஆடு கட்ட உதவி செய்தாள். திண்ணை விளக்கைப் போட்டு விட்டு, கோழிகளை அடைத்தவள் முகம் கூட கழுவாமல் வேக வேகமாக சாப்பிட்டாள். 

அவள் கோபத்தைக் கட்டுக்குள் வைக்கும் முறை இது. 

அவள் சாப்பிடுவதைப் பார்த்து , ’ஏதோ கோவமா இருக்கா போல. . ’ என புரிந்தவர் பேசாமல், பின் கட்டில் இருந்த சாமானை எடுத்து வீட்டிற்குள் வைத்தவர் டீவியில் சீரியல் பார்க்கத் தொடங்கினார். சாப்பிட்டு முடித்த தேன்யாழி அமர்தவள்ளியின் அருகில் வந்து கீழே உட்கார, 

“என்னாச்சுடி தேனு?” என கேட்க

“அம்மா!  இனிமே நான் நாழியாகி வந்தாலோ இல்ல, காணாம போனா கூட என்னைக் கேட்காத சொல்லிட்டேன்” என கோபமாய் சொல்ல

“அடி கழுத…காணாம போகவா உன்னை பொத்தி பொத்தி வளர்க்கிறேன்…?” என அவர் திட்டினார். 

“நான் இன்னிக்கு வைஆர்சி மீட்டிங் போய்ட்டு, அதனால லேட்டாகி பஸ்ஸை விட்டு நின்னா, உன் புள்ள ஜாலியாய் புல்லட்டுல ஊர் சுத்துறான். என்னைப் பார்த்தும் என்னை விட்டுட்டுப் போறான். அதுக்கு அப்புறம் ஐஞ்சர பஸ்ஸ பிடிச்சு நான் வரேன். நாட்டுல தினமும் என்னல்லாம் நடக்குது, கொஞ்சமாச்சும் தங்கச்சின்னு அக்கறை இருந்தா என்னை அப்படி விட்டுட்டு வருவானா?” என அவள் பேசிக்கொண்டு இருக்கும்போதே புல்லட்டின் சத்தம் கேட்க

“ஆத்தாடி! அண்ணன் வந்துடுச்சு” என்றபடி வேகமாய் அவளறைக்குச் சென்றாள்.

“கழுத! இம்புட்டு நேரம் என்னமா வாயடிச்சா? இப்ப பாரேன்.” என தனக்குள் சொல்லிக் கொண்டவர், அவர் மகன் செந்தூரன் வந்ததும், 

“ஏன்யா? தேனு பஸ் ஸ்டாண்டுல நின்னாளாமே, நீ அவளை அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல. பொம்பளை புள்ள ஆறு மணிக்கு வீடு வருது. பயமா இருக்குல்ல?” என பேச

அவனோ தோளில்  துண்டைப் போட்டுக் கொண்டு, 

“அம்மா! அவளை காலேஜுக்கு அனுப்பி படிக்க வைக்கிறது நீ, அப்போ உனக்குத்தான் அந்த அக்கறை இருக்கனும். எனக்கு என்ன வந்துச்சு? அதுவும் அவளைப் போய் என் புல்லட்ல ஏத்துவேனா?” என அவன் விட்ட சத்தம் தனது அறையில் உட்கார்ந்திருந்த தேன்யாழிக்குத் தெளிவாய்க்  கேட்டது. 

அமிர்தவள்ளியும் பொன்முகலியும் அவளிடம் எந்த வேறுபாடும், காட்டாமல் இருந்தாலும் செந்தூரன் மட்டும் தேன்யாழியை விட்டு எப்போதும் தூரம் தான். அவன் காட்டும் வேற்றுமை, தங்கையின் மனத்தில் ஒரு வெறுமையை விளைவிக்கிறதென அறியவில்லை.

சிறு வயதில் தனது அம்மா வழி பாட்டியின் போதனையினால், அவனுக்குப் பூங்கொடியின் மேல் தீரா வெறுப்பு.  ’என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்தவ’ என்ற அவரது தீராத வசவுகளைக் கேட்டே வளர்ந்ததாலும் அவனுக்குப் பூங்கொடியைப் பிடிக்காது. அதனால் அவரது மகளையும் பிடிக்காது. பொன்முகலியிடம் பாசமாய்ப் பேச மாட்டான். அவனது இயல்பு அது, ஆனால்,  செயல்கள் யாவிலும் தங்கையின் மீதுள்ள அளப்பரிய அன்பு வெளிப்படும். 

அவன் இப்படி பேசுவது வழக்கம்தான் என்பதால் அமிர்தவள்ளி எதுவும் பேசாமல் இருந்துவிட, அவன் குளிக்க சென்றான். 

“உன் புள்ள என்னை பேசறான்.  நீ கேட்க மாட்ட இல்ல” என்றபடி தேன்யாழி வந்து நிற்க, 

“அப்போ நீ யாருடி?  அவன் கிட்ட இன்னும் பேசினா,  இதை விட கோவமாத்தானே பேசுவான். அதான் பேசல. . ” என அவர் செயலுக்கு விளக்கம் சொல்ல, அது புரிந்தாலும் 

“அவனுக்குக் கோபம் இருந்துச்சுன்னா உன் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்ச கனகத்தை பேசணும். இல்ல கிடைச்சது லாட்டரின்னு இன்னொருத்தியைக் கட்டின உன் புருசன கட்டி வச்சு அடிக்கனும்.  அப்படி போன புருசனை வெளுக்காம இருக்க உன்னை வெளுக்கனும். இல்ல பூங்கொடியைப் பேசணும், நான் என்ன தப்பு செஞ்சேன். என்னை ஏன் பேசறான் இவன்? பொன்னுக்கா கிட்ட மட்டும் நல்லா நடந்துக்கிறான். அப்போ நாளைக்கு நீயும்  அப்பாவும் செத்துப் போயிட்டா நான் அனாதை தான் இல்ல, இவன் நான் செத்தா கூட கோடி துணி எடுத்துட்டு வர மாட்டான்.” என்று சொன்னவளின் கண்ணில் இருந்து கடகடவென நீரும் வர, பதறிப்போனார் அமிர்தவள்ளி. 

அப்போது தான் வெளி வேலைகள் முடித்து வந்த சிதம்பரம், 

“என்ன என்னை அடிக்கனும்னு சொல்றா என் பொண்ணு…” என்று அவர் இலகுவாய்ப் பேச, தேன்யாழியின் கண்ணீரில் அவர் அப்படியே நின்று விட்டார்.

அமிர்தவள்ளி தான், கணவரின் அதிர்ந்த தோற்றம் கண்டு, 

“நீங்க போங்க. நான் இவளைப் பார்த்துக்கிறேன்.” என்றவர், 

“தேனு வாடா உள்ள வா.” என அவளது அறைக்குள் இழுத்து போக, போனவள் அப்படியே அவர் மடியில் படுத்து அழ, 

“நல்ல வார்த்தை தான் பேசணும்னு சொல்லி வளர்த்தேனா இல்லையா? அவன் ஆம்பள புள்ள அப்படிதான் முரண்டு பிடிப்பான், நீ என் செல்லப்பொண்ணு இல்ல, நான் சொன்னா கேட்டுப்ப தானே? இங்க பாரு யார் மேலையும் தப்பு இல்ல”

“பூங்கொடி ரொம்ப நல்லப்பொண்ணு, என்னோட பங்காளி வீட்டு சித்தப்பா பொண்ணு. அவ அப்பாவோட ஆபரேசன்காக தான் உன் அப்பாவைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டா. அதுவும் நான் தான் அவ கிட்ட பேசினேன், உங்க அப்பத்தா எவளையாவது கட்டி வச்சு என்னை ஒதுக்கிட்டான்ற பயம் தான் காரணம், உங்கப்பாவை பூங்கொடியை கல்யாணம் செய்ய வச்சது நான்தான். . அப்புறமும் அவ உங்க அப்பா கூட வாழலை, அவ அப்பாவும் செத்துப் போயிட்டார்.  தனியா  நின்னா, இவரை கட்டினதால அவளுக்கு வேற வழியும் செய்ய முடியல”

“உங்க அண்ணங்காரனும் அவ கிட்ட ஒத்துப்போகல, அப்புறம் பொன்னு அவ கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டா. அவ பாட்டுக்கு தனியா வேற வீட்ல தான் இருந்தா, அப்புறம் தான் எங்க சுய நலத்துக்காக ஒரு பொண்ணு வாழ்க்கையை வீணடிச்சிட்டோம்னு உங்க அப்பா பூங்கொடியோட வாழ்ந்தார். பாவம், ரொம்ப நல்லவ பெரியவளைக் காப்பாத்த போய் அவ போய் சேர்ந்துட்டா. சின்ன வயசுலேர்ந்து இந்த ஊர்ப்பயலுங்க உங்க அப்பனுக்கு இரண்டு சம்சாரம்னு சொல்லி கிண்டல் பண்ணி இவன் இப்படி ஆகிட்டான்.”

“இவன் இன்னிக்கு நேத்தா இப்படி பண்றான்? நானும் சொல்லிப் பார்த்தேன், அடிச்சும் பார்த்தேன். அவன் கேட்கல, அதுக்காக நீ இப்படியெல்லாம் பேசுவியா? அப்புறம் உன்னை நான் இத்தனை வருசம் வளர்த்து என்ன ப்ரோயோசனம்…. ?” என்று அவரும் கண்கலங்க, 

“அய்யோ! ம்மா” என்றவளின் வாய் மேல் போட்டவர், 

“அய்யோ சொல்லாத “ என திட்டினார்.

“சரி சரி, அதுக்காக நீ அழுவாத. எங்கிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது? அண்ணன் கிட்ட  சொல்லும்மா” என்றவள் மீண்டிருந்தாள். 

“அவன் கிட்ட நான்  நான் சொல்லி ஓய்ஞ்சிட்டேன்.  இனிமே இப்படிப்பட்ட வார்த்தை உன் வாயில இருந்து வரக்கூடாது” என்றார் மிகுந்த கண்டிப்போடு. 

“சொல்ல மாட்டேன்மா…” என அவள் அத்தனை முறை சொன்ன பின்னே விட்டார். 

அதன் பிறகு,  இரவில் திண்ணைக்கு வெளியே உள்ள கயிற்றுக் கட்டிலில் செந்தூரனுக்கு முன்பே போய் தேன்யாழி படுத்துவிட, 

தான் படுக்கும் இடத்தில் இவள் என்ன திமிராய்ப் படுத்திருக்கிறாள் என அவன் பார்க்க, அவளிடம் பேசவும் மாட்டான். என்ன செய்யவென பார்த்தவன், 

“அம்ம்மாஆஆஅ” என கத்த

“என்னப்பா?” 

“என் இடம் இது” என சொல்லிக் கட்டிலைக் காட்டினான்.

“அவளுக்கு இங்க படுக்கனும்னு ரொம்ப நாளா ஆசை,  இன்னிக்கு ஒரு நாள் படுத்துக்கிட்டுமே” என சொல்ல அவரை முறைத்தான். 

என்றாவது தேன்யாழியை செந்தூரன் அதிகமாய் காயப்படுத்தினால், இப்படித்தான் எதாவது ஏட்டிக்குப் போட்டியாய் செய்து அவனது ஆத்திரத்துக்கு ஆஃபர் கொடுப்பாள். 

அவளது நிமிர்வு அவனைப் பொருத்தவரையில் திமிர். இவளும் நாங்களும் ஒன்றா என்ற எண்ணம்  அவனது அகத்தினில் அதன் ஆழத்தினில் நின்று அவனை எப்போதும் ஆட்டுவிக்கும். . 

எப்படி இவளைத் தனியாக விட்டு செல்லவென எப்போதும் கட்டிலை விட்டுத்தராவதன், அங்கிருந்த வராண்டாவில்  பாய் விரித்துப் கீழே படுத்தான். அவளுக்கு அண்ணனாய் அல்ல, அரணாய்!

இப்படியாக சில தினங்கள் செல்ல, அந்த சுற்று வட்டார சில கிராமங்களுக்குப் பொதுவான காவல் நிலையத்தில் செந்தூரனும் இன்னும் சிலரும் கூடியிருந்தனர். 

ஒரே ஜாதியில் இருவேறு உட்பிரிவுகளைச் சேர்ந்த, ஆணும் பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு ஓடி வந்த பிரச்சனை. அந்த பெண் செந்தூரனின் பங்காளி வீடு. அதனால் அவனும் வந்திருந்தான். 

“என்ன சார்? அவனுங்க கிட்ட காசு வாங்கிட்டீங்களா?” என அந்த பையன் சுரேஷனின்  நண்பன் சத்தம் போட, அந்த இன்ஸ்பெக்டர் அசையவில்லை. அவன் பாட்டிற்கு கால் மேல் கால் தூக்கிப் போட்டு , 

“ஆமாடா வாங்கினேன், அதை விட அதிகம் தரப் போறியா என்ன?” என நிதானமாய் ஒரு புன்னகையோடு சொன்னவன் தீடீரென புயல் போல் உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்தான். அவனிடம் பேசியவன் அருகில் சென்று, 

“அடி செருப்பால! யாரைப் பார்த்து என்ன பேசற? கொன்னுடுவேன். இந்த தென்னவனை யாரும் விலைக்கு வாங்க முடியாதுடா” என்று மிரட்டியவன், பின் அந்த சுரேஷைப் பார்த்து, 

“என்ன பண்ற நீ? என்ன படிச்சிருக்க? எவ்வளவு சம்பளம்? எங்க தங்கியிருக்க? உன் அப்பா அம்மா என்ன செய்றாங்க?” என கேள்விகளாய் அடுக்கினான். 

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்?  நாங்க இரண்டு பேருமே மேஜர், எங்களுக்குப் பாதுகாப்பு தாங்க. எங்களுக்குக் கல்யாணம் செய்யணும் ” என சொல்ல

மீண்டும் தன் இருக்கையில் உட்கார்ந்தவன், “அதெல்லாம் நான் கேட்க கூடாதுன்னா எதுக்குடா இங்க வந்த? பாதுகாப்பு தர நீ என்ன கிழிச்ச? ஒரு பொண்ணு பின்னாடி வேலை வெட்டி எதுவும் செய்யாம சுத்தி, லவ் பண்றேன்னு சொன்னா அது காதலாடா ?” என்றான் நிதானமாய். 

அவனின் மாறுபடும் அவதாரத்தைத் தான் கவனமாய்ப் பார்த்திருந்தான் செந்தூரப் பாண்டியன். கோபத்தை கூட நிதானமாய் காட்டுகிறானே என்று. எனக்கெல்லாம் இப்படி வராது என்று நினைத்துக் கொண்டான். 

“என்ன சார் நீங்க அவங்க ஜாதியா? நாங்க எஸ். பி கிட்டயே போறோம்” என அந்த சுரேஷ் துள்ள, 

“எஸ்பி கிட்ட என்ன, அவங்க அப்பன் கிட்ட கூட போய் சொல்லு” என்றான் திமிராய். பின்னே எஸ்பி அவனின்  நண்பன் ஆயிற்றே!

பின்னர் அந்த சுரேஷைக் கண்டுகொள்ளாமல், பெண்ணின் பக்கம் திரும்பியவன், 

“ஏன் மா? இவன் கிட்ட நான் என்ன தப்பா கேட்டேன்? படிப்பு வேலை குடும்பம்னு கேட்டா தப்பா? என் தங்கச்சிக்கும் இப்படி தான்மா நான் கேட்பேன். ஆனா இவன் அதை சொல்லாம எப்படி பேசறான், நீயும் பார்த்த தானே?” என அந்த சுடர்க்கொடி என்ற பெண்ணிடம் பொறுமையாகப் பேச, அவன் சொல்வதை அவளும் தலையசைத்து ஆமோதித்தாள். 

பெண் பக்கம் உள்ளோர் பேசவே இல்லை. பின்னே வந்ததுமே ஒரு வெள்ளை வேட்டி ‘என் ஜாதி பெண்ணைத் தூக்கிட்டான், அவனை வெட்டுங்கடா’ என கிளம்ப அப்படியே அலேக்காய்த் தூக்கி செல்லில் போட்டவன், 

“இங்க நான் மட்டும் தான் பேசணும், நான் கேள்வி கேட்டாதான் நீங்க பேசணும்.” என்றான் அழுத்தமாய்.  

உடனே பெரியவர்கள் எகிற, செந்தூரன் தான் அமைதியாய் இருங்கள் என்று கட்டுப்படுத்தி வைத்திருந்தான். 

அந்த பெண் இவன் பேச்சில் கவனமும் கருத்தும் வைப்பதை உணர்ந்தவன், 

“அவனை ரொம்ப லவ் பண்றியா நீ?” என கேட்க, தலையசைத்தாள்.

“அப்போ ஒரு இரண்டு வருசம் மேல படி,  இவனைப் பார்க்காத, பேசாத. இவன் உன்னை விட்டாலும் யார் விட்டாலும் உன் படிப்பு உன்னை விடாது. உன் காதல் உண்மைனா காத்திரு. அவனையும் வெயிட் பண்ண சொல்லு. இல்ல காதல் தாண்டின விசயம் தான் உங்களுக்குப் பெருசுன்னா, உன் காதல் மேல, உன் காதலன் மேல  நம்பிக்கையில்லன்னா இப்பவே இவன் கூட போயிடு” என சொல்ல, அவள் பயத்தோடு தன் வீட்டினரைப் பார்த்தாள்.

“இங்க பாரு, அவங்க உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க, நான் பொறுப்பு,  உனக்கு இரண்டு வருசத்துக்குக் கல்யாணமும் செய்ய மாட்டாங்க. ஒரு அண்ணனா நான் சொல்றேன்மா, அப்படி இரண்டு வருசம் முடிஞ்சு எதுவும் மாறலன்னா நானே உனக்குக் கல்யாணம் செய்து வைப்பேன்”

“எங்க வீட்டுப் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் செய்யணும்னு சொல்ல நீ யாரு?” என்று பெண்ணின் பெரியப்பா சத்தம் போட

தென்னவன் அவரை அழுத்தமாய்ப் பார்க்க, செந்தூரன் தான் அவன் பெரியப்பாவை தனியே தள்ளிச் சென்றவன், 

“பெரியப்பா, இப்ப நம்ம இவன் சொல்றதுக்கு ஒத்துக்கலன்னா இவ அவன் கூட போயிடுவா.  இங்க இல்லனாலும் டிஎஸ்பி எஸ்பின்னு போனா என்னவாகும் யோசிங்க” என்றான்.

“இரண்டு பேரும் மேஜர், இல்ல இவங்களை வெட்டிப் போட்டு ஜெயிலுக்குப் போக நினைக்கிறீங்களா? நம்ம எல்லார் வீட்டுலேயும் பொண்ணுங்க இருக்காங்க, நாளைக்கு அவங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகிட கூடாது. இந்த இன்ஸ்பெக்டரும் நம்ம பொண்ணு நல்லதுக்காகத் தானே சொல்றான். நம்ம யார் சொல்லியும் கேட்காதவ, இப்ப இவன் சொன்னதும் யோசிக்கிறாங்க பாருங்க.” என பொறுமையாய் விளக்க, அவருக்கும் அவன் சொல்வது சரியென பட்டது.

“சரி தம்பி, ஆனா இனி இந்த பய எங்க வீட்டுப்பொண்ணைத் தொந்தரவு செய்யக் கூடாது. நாங்களும் இவளை மேல படிக்க வைக்கிறோம்” என சமாதானம் ஆக

அந்த பையனின் பக்கம் அனைவரும் அமைதியாய் நிற்க, 

“என்னடா உங்க ப்ரண்டு லவ் மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? இரண்டு வருசம் கூட தாங்கலன்னா எப்படி டா முப்பது நாற்பது வருசம் வச்சு வாழ்வான் இவன்? முதல்ல நீ பொண்ணு தேடாத, பொண்ணுங்க உன்னைத் தேடணும். . அப்படி ஒரு நிலைமைக்கு வா” என சுரேஷின் தோளில் தட்டிக் கொடுத்தான். 

அந்த சுரேஷும் சுடர்க்கொடியைக் கண்ணில் நிறைத்தபடி, 

“நான் காத்திருப்பேன் சார்” என சொல்ல, 

பின்னர் அனைவரிடமும் பேப்பரில் எழுதி வாங்கிய பின் தான் விட்டான். 

அந்த பையனின் பக்கம் உள்ளவர்கள் கலைந்து சென்று விட, பெண் வீட்டினரைப் பார்த்து, 

“இங்க பாருங்க, என் வீட்டிலேயும் பொண்ணுங்க இருக்காங்க. ஒரு பொண்ணை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டம்னு தெரியும், ஆனா காதலிச்சாங்கற காரணத்துக்காக இந்த கொல்றது, விசம் வைக்கிறது எதுவும் செய்யாதீங்க. மனுஷங்கள விட கௌரவம் பெருசில்லங்க, இந்த பொண்ணுக்கு  நோய் வந்து எதாவது ஆச்சுன்னா கூட, உங்க யாரையும் சும்மா விட மாட்டேன்” என்று அமைதியும் அழுத்தமுமாய் அவன் சொல்ல, பெரியவர்கள் எதாவது ஏடாகூடாமாய்ப் பேசிவிடுவார்கள் என்று செந்தூரனே முன் வந்து, 

“சுடர் எனக்குத் தங்கச்சி வேணும் சார். நீங்க சொல்றபடி வளர்த்த பொண்ணை எல்லாம் அப்படி நாங்க செஞ்சிட மாட்டோம் சார். இவளுக்கு நான் பொறுப்பு.” என்று சொல்ல

“சரி அப்போ சொன்னதை எழுதி கொடுத்துட்டுப் போயிடுங்க, நாளை பின்ன எதாவதுன்னா நான் உங்களைத் தான் கேட்பேன். மிஸ்டர்?” என அவன் நிறுத்த

“செந்தூரப் பாண்டியன்”

“ஓகே செந்தூரன்,  உங்க ஆளுங்க கிட்டையும் சொல்லி வைங்க,  அந்த பையனை எதுவும் செய்ய கூடாதுன்னு” என்றான் கட்டளையாய். 

“சரிங்க சார்…எங்க பெரியப்பாவை விட்டுருங்க. . ” என அவன் லாக் அப்பில் வைத்தவரை சொல்ல, தென்னவனும் அவர்களை அனுப்பி வைத்தான். 

அன்று காலையில், அப்படியே ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம் என கிளம்பி வந்திருந்தான் தென்னவன். அப்படியே வந்தவன் பக்கத்து ஊர் வரை வந்துவிட  அங்கிருந்த தேனீர் கடையில் பேப்பர் வாங்கி படிக்க, தட தடவென குதிரை போல் சத்தம் கேட்க, திரும்பினால் அது தேன்யாழி. 

தேனீர் கடைக்கு எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வேகமாய் ஓடி வந்து பேருந்திற்காகக் காத்திருந்தவள், கையில் இருந்த கடிகாரம் பார்த்து, 

“இன்னிக்கு நான் சீக்கிரமா. . இல்ல பஸ்ஸூ லேட்டா. . ?” என்ற யோசனையில் இருந்தவள், எதிர்ப்புறம் பார்த்து டீ குடித்துக் கொண்டிருந்தவரிடம், 

“மாமா! கிருபா போயிடுச்சா?” என பஸ்ஸீன் பெயரை சொல்லிக் கேட்க

“சிஆர்சியே இப்பத்தான் போனான்மா, இன்னிக்கு என்னவோ தெரியல. எல்லாமே நாழியாவுது.” என்றார் அவர். 

அப்போதுதான் அவள் கண்ணில் பட்டது ‘போலிஸ்’ என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த அந்த ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டர். உடனே சாலையைக் கடந்து

“இந்த பைக் யாரோடது மாமா?” என கேட்க

“என்னோடது” என்றான் தென்னவன். பதில் சொன்னாலும் என்ன வேணும் இந்த பொண்ணுக்கு என்ற எண்ணம் ஓடியது.

“அப்போ நீங்க போலிஸா சார்?” 

“ஆமா” என்று அவன் சொல்ல

“உங்க ஐடி கார்ட் காட்டுங்க ” என்றவளிடம் கைகள் தானாய் எடுத்து நீட்ட, மென்னகையும் மெச்சுதலும் அவன் மொழியாகிட, தேன்யாழியை அவன் விழிகள் ஏறிட, சூழல் சுவாரசியமாகியது. 

அவன் ஐடியை வாங்கியவள் ஆராய்ச்சியாய்ப் பார்க்க, அதில் அவன் பெயர்

‘தென்னவன் தேன்தமிழன்’ என்றிருந்தது.  

Scroll to Top