அன்றைக்குப் பெயர் சூட்டும் விழா முடிந்ததும் இரவு ஊருக்குக் கிளம்புவதாக இருந்தான் அன்பழகன். அவன் ஜெயபாலனுடன் சென்று விட, அவள் வீடு வந்து தயாராகிக் கொண்டிருந்தாள்.
“நாங்கல்லாம் எப்பயோ உடுத்தி கிளம்பி நிக்கறோம். இந்த அத்தைக்காரிய பாரு அவசரமே இல்லாம ஆடி அசைஞ்சு வர்றா..” என்று அவளைப் பார்த்ததும் அப்பத்தா சொல்ல, “உனக்கென்ன அம்மாச்சி, அந்தக் கோடாலி கொண்டையை உதறி முடிஞ்சா போதும். எனக்கு அப்படியா?” என்று தன் நீண்ட பின்னலை சிலுப்பி முன்னால் போட்டார்.
“யாத்தே பார்த்துத்தா., ரொம்பத்தேன் பெரும மதுரக்காரிக்கு. உன் வயசுல எனக்கு எம்புட்டு நீள முடி இருந்துச்சுன்னு ஊர கேளு தெரியும்”
“ஊர எதுக்குக் கேட்கணும்? அந்தா இருக்கப் போட்டால இம்புட்டுக்கானு முடியோட இருக்கீங்களே. அத பார்த்தா தெரியாது?” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.
“இந்தாடி, அது நானு சாமிக்கு வேண்டிட்டு..” என்று அவர் ஆரம்பிக்க, “தேனு நேரமாகுது பாரு. இன்னும் சேலையே மாத்தாம இருக்க நீ. தொர எங்க?” என்று அவர்களின் பேச்சில் இடைப்புகுந்தார் திலகவதி.
“அவரு இப்ப வந்துவாருத்தே. அதுக்குள்ள நானும் ரெடியாகுறேன்” என்று உள்ளே சென்றாள்.
தந்த நிற பட்டில் அடர் சிவப்பு கரை வைத்த காஞ்சிப்பட்டை நிதானமாகப் பிரித்து நேர்த்தியாக உடுத்தினாள்.
அதற்குப் பொருத்தமான நகைகள் அணிந்து, தலை வாரிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் தர்மதுரை.
“சீக்கிரம் வாங்க, உங்களுக்காகத்தான் எல்லாரும் வெயிட்டிங். உள்ளூர்ல இருந்துட்டு நாம லேட்டா போனா நல்லாருக்காது” என்று கண்ணாடியில் கணவனைப் பார்த்து சொன்னவள், அவனுக்காக உடையைப் படுக்கையில் எடுத்து வைத்திருந்தாள். அதை உடுத்தும் படி அவனிடம் கண் காட்டினாள்.
“லேட்டாவா? உங்கண்ணே மகளுக்குப் பேர் வைக்க இன்னும் கொள்ள நேரம் இருக்குடி. இரு வர்றேன்” என்றவன் தன் கையில் இருந்த பையைப் படுக்கையறை மேசையில் வைத்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்தான்.
சில நிமிடங்களில் குளித்து வந்து பட்டு வேட்டி சட்டையை அணிந்து அவளின் பின்னே வந்து நின்றான்.
“நாளைக்கு மதுரை போகணும் தேன்னு”
“ஏதாவது முக்கியமான வேலையா?”
“இல்லல்ல. நமக்கு டாக்டர் அப்பாய்ன்மென்ட் வாங்கியிருக்கேன். காலைல சீக்கிரமா கிளம்புற மாதிரி இருக்கும்”
“கண்டிப்பா போகணுமா?” என்று கேட்டவளை தன்னை நோக்கி திருப்பி, “என்னடி?” என்றான்.
“அதான் ஏற்கனவே நமக்கு ஒரு குறையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க இல்ல தர்மா.”
நீயே சொல்லி முடி என்று அவள் முகத்தையே பாத்திருந்தான்.
“என்ன அவசரம் உங்களுக்கு? வெயிட் பண்ணுவோம்” என்றவளை, “எனக்குத்தான் அவசரமாடி..” என்று இழுத்து இடையோடு அணைத்து, அவள் கண்ணோடு கண் பதித்துக் கேட்டான்.
“இல்லையா பின்ன? அப்புறம் எதுக்கு என்னைய இப்படிப் பிடிச்சு இழுக்கறீங்க” இதழ்களில் குறும்பு புன்னகை மொட்டு விடக் கேட்டாள்.
“எனக்கு அவசரம்தான்டி..” என்றவன் அவளை இன்னும் நெருக்கமாக இழுக்க, “சேலை கசங்குது தர்மா” என்று சிணுங்கினாள்.
“என் மனசு கசங்குதுடி சிலுப்பி” என்றான் மையலாக. மனைவியின் பேச்சு அவனுக்கு ஆழ்ந்த அமைதியை அளித்தது. அதுவரை மனத்தை அழுத்திய பாரம் விலகி அமைதி சூழ்ந்தது.
திலகவதி, பொற்கொடி, முத்தம்மா என அவளைச் சுற்றியிருக்கும் அனைவரும் சொல்வது போல அவளுக்கு என்ன வயதாகி விட்டது? 24 வயதுதானே? எல்லாம் காலா காலத்தில் நடக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது. அதற்காக ஆசையில்லை என்று இல்லை.
குழந்தை ஏக்கத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டாள். சிறியதாகத் தெளிந்திருந்தாள். அதுவே மருத்துவமனை செல்ல வேண்டாம் என்ற முடிவை அவளை எடுக்கச் செய்திருந்தது.
“உங்க மனசா? உங்க சட்டைதான் கசங்குது..” என்று அவன் மார்பில் கை வைத்து சட்டையை நீவி விட்டாள்.
அவள் கரத்தை நெஞ்சோடு அழுத்திப் பிடித்தான். மெல்ல குனிந்து அவள் உச்சியில் இதழ் ஒற்றினான்.
தேன்மொழி ஆழ மூச்சிழுத்து, அவன் மார்பில் சாய, “திரும்பி நில்லு தேன்னு” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.
“ம்ம்..” என்று அவள் நிமிர, “திரும்பி நில்லுன்னு சொன்னேன்டி சிலுப்பி..” என்றவன், அவனே அவளைத் திருப்பி நிறுத்தினான்.
“என்ன பண்றீங்க?” என்று கேட்டவள் முன் நீள செண்டாய்த் தொடுத்திருந்த மலர்களை நீட்டினான்.
நொடியில் குப்பென்று அறை முழுக்க அந்த மலரின் மணம் நிறைத்தது.
அவளின் ஓவ்வொரு மூச்சிலும் பூ வாசம்.
“அப்ப்ப்பா என்னா ஸ்மெல்..” என்று அதிசயித்தவள், “இது இது..” என்று அந்த மலர்களைக் கையில் ஏந்தி அதன் பெயரை யோசிக்க, மெலிதாக விசிலடித்துச் சிரித்தான் தலைவன்.
“குண்டு மல்லி? அடுக்கு மல்லி? புதுசா வளர்த்துட்டு இருந்தீங்களே? அதென்ன மல்லி?” அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டாள்.
“டஸ்கனி ஜாஸ்மின் (Tuscany Jasmine). அதாவது அரேபிய மல்லிகை.” என்றான் புன்னகையுடன். புதிதாக ஒரு பூவை வளர்த்தெடுத்த பெருமை அவன் புன்னகையில் மிகுந்திருந்தது.
“இந்தச் செடி எப்போ வளர்த்தீங்க? என்கிட்ட சொல்லவே இல்ல?”
“உனக்காக வளர்த்தது டி. அப்புறம் எப்படி உன்கிட்ட சொல்ல?” என்றான் மந்தகாசப் புன்னகையுடன்.
அவர்களின் தோட்டத்தில் எப்போதும் புதிது புதிதாகப் பூச்செடிகளை வளர்ப்பது அவனது வாடிக்கை. புதிய பூக்களைத் தங்கள் தோட்டத்தில் வெற்றிகரமாக மலரச் செய்து விட்டால், அதிலொரு அலாதி மகிழ்ச்சி அவனுக்கு. அவன் படித்ததே விவசாயம் தானே? அதனால் புதிய முயற்சிகளை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருந்தான். அதற்கென்று தோட்டத்தில் தனிப் பகுதியை ஒதுக்கியும் இருந்தான்.
அப்படியொன்றுதான் இந்த அரேபிய மல்லிகை. அதற்காகப் பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்தான். அவை இன்றுதான் மலர்ந்தது. முதல் பூக்களை மனைவிக்குக் கொண்டு வந்து விட்டான்.
தன் கையில் இருந்த குட்டி குட்டி வெள்ளை ரோஜாக்கள் போலிருந்த மல்லிகையை விழிகள் வியப்பில் விரிய பார்த்திருந்தாள்.
“ரொம்ப அழகா இருக்குங்க. அதை விட இந்த மணம், அப்ப்ப்ப்பா..” என்று ஆழ்ந்த மூச்செடுத்தாள்.
“இது செண்ட் தயாரிக்க யூஸ் பண்ற பூ. இந்த ஸ்மெல்லுக்காகவே..” என்றவன், பூவை அவன் கையில் வாங்கி அவள் பின்னலில் சூடி விடப் போக, “ஒரு நிமிஷம் இருங்க” என்று அவன் கைப் பிடித்தவள், எட்டி மேஜையின் மேலிருந்த பையை எடுத்தாள்.
அதிலிருந்த உதிரிப் பூவை எடுத்து பூஜை அறையில் வைத்து வணங்கினாள். மேலும் இரண்டு பூக்களை அத்தைக்குக் கொடுத்து, அந்தப் பூவை பற்றிச் சொல்லி விட்டு அறைக்குத் திரும்பினாள்.
தலைவன் தன் கையால் தலைவிக்குப் பூ சூடினான்.
இருவரும் அவளின் அம்மா வீடு சென்றார்கள்.
ரம்யா, பொற்கொடி, முத்தம்மா, நிர்மலா, ரம்யாவின் அண்ணி என அனைவரின் தலையிலும் அழகாய் அரேபிய மல்லிகை இருந்தது அன்று.
அவர்கள் அழைத்திருந்த நெருங்கிய உறவுகள் அனைவரும் வந்து விட, நல்ல நேரத்தில் குழந்தைக்கு, “தர்ஷனா” எனப் பெயர் சூட்டினார்கள்.
அப்பத்தா, அப்புச்சி, தாத்தா பாட்டி, தாய் மாமா என்று வரிசையாகக் குழந்தைக்குப் பொன் சங்கிலி, வளையல், வெள்ளிக் கொலுசு, காப்பு என்று போட்டு விட, பொன்னில் அரைஞாண் கொடி போட்டு விட்டாள் அத்தை தேன்மொழி.
அன்றைய நிகழ்வு நிறைவாக நடந்தேறியது.
“என்ன மருமகளை இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க?” என்று பொற்கொடியிடம் கேட்டார் நிர்மலா. மணிவண்ணன், பத்மா இருவரும் வேலையிருக்கிறது என்று சொல்லிவிட அவர் மட்டுமே வந்திருந்தார்.
“அது..” என்று பொற்கொடி தயங்க, முத்தம்மா நடந்ததைச் சொல்லி விட்டார். நிர்மலா திரும்பி கீதாராணியைப் பார்க்க, “இதுக்குத்தான் சின்னவனுக்குப் பத்மாவ முடிக்கணும்னு ஆசப்படுறோம். எங்க பொண்ணை உங்க வீட்லதான் கொடுப்போம்னு பார்க்கற இடமெல்லாம் எங்ககிட்ட பேசி கரைச்சு அவங்க பொண்ணைக் குடுத்தாங்க. ஆனா, இன்னைக்கு என்ன பண்றாங்கன்னு பாருங்க. நாளைக்கே சின்னவனுக்கு வெளில இருந்து பொண்ணெடுத்தா வர்றவளும், அவங்க குடும்பமும் எப்டி இருப்பாங்கன்னு யாருக்குத் தெரியும். நாளைக்கு நம்ம பிள்ளைங்க ஒன்னு மண்ணா இருக்கா வேணாமா? எங்களுக்குப் பின்னாடி ராசாத்திய.. அவ அண்ணனுங்க பார்த்துக்க வேணாமா? இதுவே பத்மா எங்க வீட்டுக்கு வந்தா, எங்களுக்கு இந்தக் கவலையெல்லாம் இல்லாம நிம்மதியா இருப்போம் பாருங்க. நீங்களும் அதுக்குத்தானே ஆசைப்படுவீங்க” என்ற முத்தமாவின் பேச்சில் திகைத்து நின்று விட்டார் நிர்மலா.
அவருக்கு ஜெயபாலன் தங்கள் மகளை விரும்புவது தெரியும். மகளின் மனத்தையும் அறிந்தே இருந்தார். ஆனாலும், ஜெயபாலன் வீட்டு வசதி அவரைத் தயங்கச் செய்திருந்தது.
அவர்களின் வசதிக்கு தங்களால் செய்ய முடியுமா என்று தயங்கினார். என்னவோ ஆரம்பத்தில் இருந்தே சிறிய விலகல் இருந்து சமீபமாகப் பிள்ளைகள் வளர்ந்து ஒன்றாக வளர, படிக்க, வந்து போக என்று இருக்கவும்தான் சரியாகி இருந்தது.
இப்போதும் அவர் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் தயக்கத்துடன் நின்றிருந்தார்.
முத்தம்மா இதைப் பற்றி இன்று பேச நினைத்திருக்கவில்லை. முறையாக அவர்கள் வீடு சென்று பெண் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தார். ஆனால், இன்று சரியான வாய்ப்பு அமைந்து விட அதை விட விரும்பவில்லை அவர்.
“நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கறதுதானே நமக்கு முக்கியம். எங்க பேரன் பத்மாவ தங்கமா பார்த்துப்பான். நீ நல்லா யோசிச்சு, வீட்ல கலந்து பேசிட்டு முடிவ சொல்லு. நாங்களும் நல்ல நாள் பார்த்து வீட்டுக்கே வந்து பேசுறோம்” என்றார்.
சுதாகரன் விஷயத்தில் அனைவருக்கும் வருத்தமிருக்க, அவன் மகளுக்குப் பெயர் சூட்டும் விழாவில் வைத்து அந்த வீட்டின் அடுத்த நல்ல காரியம் முடிவானது.
அடுத்தடுத்த நாள்களில் இரு பக்க வீட்டினரும் பேசி ஓய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். அந்த முடிவு ஜெயபாலனுக்குச் சாதகமாக வந்திருந்தது.
மூன்றாம் மாதம் விமரிசையாக நடைபெற்றது பத்மப்ரியா ஜெயபாலன் திருமணம்.
தன் மனம் கவர்ந்த பத்மாவை தன் மனைவியாக்கிக் கொண்டான் அவன்.
“டேய், அன்பே. என் அன்பு வந்தாச்சு டா. பிளீஸ் ஓரம் போ..” என்று தம்பியை தோளால் இடித்து நகர்த்தினான்.
அன்பழகனின் தோளில் கைப் போட்டு அணைத்து நின்றான் தர்மதுரை.
உடனே, “மாப்ள அவன் என் ஆளு. தயவு செஞ்சு உங்க கைய எடுங்க” என்றான் ஜெயபாலன்.
அதற்குப் பத்மா முறைக்க, அவனது குடும்ப வாழ்க்கை அன்றே கோலாகலமாகத் தொடங்கியது.