இளையவர்களின் முடிவுக்குப் பெரியவர்கள் உடன்படவில்லை. தங்கள் வீட்டு மகள் மனம் காயப்பட்டிருக்கிறாள் என்பதற்காக மருமகளின் மனத்தையும் சேர்த்தே வருத்த வேண்டாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
“ரம்யா அங்க இருக்க முடியாதுன்னு அழுறான்னு சொல்றேன். அப்புறமும் ஊர் நியாயம் பேசிட்டு இருக்கீங்க. நீங்க ஒன்னும் நல்ல நாள் பாக்க வேணாம். நானே போய் என் பொண்டாட்டி பிள்ளைய கூட்டிட்டு வந்து என் தங்கச்சி கிட்ட காட்டுறேன்” என்று கத்தினான் சுதாகரன்.
மதுரையில் விஷயம் தெரிந்து லோகேஷ்வரனும் அதிர்ச்சியானான்.
அவன் வீட்டில் இருந்து கீதாராணிக்கு அழைப்புச் சென்றது.
கணவர், மகள் பேசியது போதாதென்று அண்ணனிடமும் பேச்சு வாங்கினார். அதனால் எல்லாம் மனம் திருந்தி விடுவாரா அவர்?
“நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி எல்லோரும் என்னைய பேசுறீங்கன்னு எனக்குப் புரியல..” என்று அப்போதும் தான் எதுவுமே செய்யாதது போலப் பேசிக் கொண்டிருந்தார்.
ரம்யா ஒன்பதாம் நாள் மாமியார் வீடு செல்கிறேன் என்று கிளம்பி நிற்கவும் அதிர்ந்து போய் மகளைப் பார்த்தார். வாசலில் நின்று அலைபேசிக் கொண்டிருந்த மருமகனையும் ஒன்றும் கேட்க முடியவில்லை அவரால்.
“பாப்பாவ பாக்க வர்றவங்களையெல்லாம் நீ இப்படிப் பண்ணா என்னால பார்த்திட்டு இருக்க முடியாது மா. உனக்கு வேணும்னா எங்க வீட்ல வந்து பாப்பாவ பார்த்துக்கோ” என்று விட்டாள் ரம்யா. கணபதியும் மருமகனுடன் மகளையும் பேத்தியையும் ஆசீர்வதித்து அனுப்பி விட்டார்.
மனைவி வீடு வந்ததும் தங்கையை அழைத்துச் சென்று அவள் கையில் மகளைக் கொடுத்து விட்டான் சுதாகரன்.
“என்னண்ணா இவ்வளோ சீக்கிரம் அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட?” தன்னால்தான் இத்தனை பிரச்சினையும் என்று தேன்மொழி மேலும் வருந்த, அவள் மடியில் இருந்த அண்ணன் மகள், மெல்லச் சிணுங்கி உதட்டை பிதுக்கி கை, காலை நெளித்து, நீட்டி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
தேன்மொழி உலகமே மறந்து போகக் குழந்தையின் ஒவ்வொரு செயலையும் அசைவையும் இமைக்காமல் ரசித்துப் பார்த்திருந்தாள்.
பதினைந்தாம் நாள் பிள்ளைக்கு வீட்டில் வைத்தே பெயர் சூட்ட முடிவு செய்திருந்தார்கள்.
“உனக்கு உன் மாமியா வீடு உசத்தின்னு தெரியும். அதுக்காகக் கல்யாணமானதும் அம்மாவையே மறந்துட்டியே..” அதற்காக மகளின் புகுந்த வீட்டுக்கு வந்திருந்த கீதாராணி மகளிடம் அங்கலாய்க்க, “எனக்குக் கல்யாணமாகிடுச்சுன்னு உனக்கு மறக்காம இருந்தா நல்லது மா. நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா நான் நம்ம வீட்லதான் வந்து நிரந்தரமா உக்காரணும்” என்று ரம்யா கோபமாகச் சொல்லவும், மகளுக்கு அப்படியெதுவும் நேர்ந்து விடக் கூடாது என்ற பயத்தில், “என்னடி பேசுற நீ அறிவில்லாம..” என்று அவளைக் கத்தத் தொடங்கினார்.
தனக்கு ஒன்றென்றால் மட்டுமே சிலருக்கு வலிக்கும் போலும்.
“நீ இப்படி இருக்கனாலதான் அண்ணே அண்ணியை நம்ம வீட்ல விடவே மாட்டேங்குது. உன் வாய்ல மாட்டிடக் கூடாதுன்னுதான் இன்னைக்குக் காலைல வந்துட்டு இப்ப நைட்டே ஊருக்கு கிளம்பறேன்னு நிக்குது” என்ற மகளைக் கோபத்துடன் பார்த்திருந்தார்.
“உன்னால என்கிட்டயும் ஒழுங்கா பேச மாட்டேங்கறாங்க அண்ணி. அவங்க உன்னய டீல் பண்ற மாதிரி இனிமே நானும் உன்னைய டீல் பண்றேன் இருமா” என்று சொன்ன மகளை அத்தனை பேச்சு பேசினார். ரம்யா அதை அசட்டையாகக் கேட்டபடி நின்றிருந்தாள்.
ஜெயபாலன் அண்ணன் மாமியாரை விழுந்து விழுந்து கவனித்தான். நல்ல விதமாகத்தான். அப்படியொரு கவனிப்பு. கீதாராணியே, “இவங்களுக்கு நம்ம மேல கோபம் இல்லையா? நான் பண்ணது தெரியாதா?” என்று அவனை அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகப் பார்க்கும் அளவிற்கு அவரைப் பலமாகக் கவனித்தான்.
“எங்க வீட்டு நல்லவங்களுக்காக நானும் நல்லவனா நடிக்க வேண்டியிருக்கு. இன்னா செய்தாரை ஒருத்தல்.. ம்ம், சத்திய சோதனை..” என்று பத்மாவிடம் புலம்பியவன் பார்வை தங்கை, அவள் கணவன், அம்மா, அம்மாச்சி எனத் தன் உறவுகளை முறைத்தது.
“ஆனாலும், நீங்க ரொம்ப உண்மைய பேசுறீங்க..” பத்மா சொல்ல, “அப்போ.. அதுனால மாமனை பிடிச்சுருக்குன்னு சொல்ற?” என்று தடுக்கில் பாய்ந்தான்.
“இதோடா, நான் எப்போ அப்படிச் சொன்னேன்? மொத நீங்க எனக்கு மாமாவே கிடையாது. எங்கப்பா தேனு, அன்புக்குதான் தாய் மாமா. உங்களுக்கு இல்ல” என்றாள் அழுத்தமாக.
“அப்புறம் எதுக்கு மாமாவ இதோடான்னு டா போட்டு பேசுற? என்னா உரிமையில? ம்ம்?”
“இன்னைக்குச் சுதா மாமா மகளுக்குப் பேர் வைக்கிறாங்க தானே? வீட்ல வேலை இல்லையா உங்களுக்கு?”
“உங்கிட்ட பேசுறத விட ரொம்ப முக்கியமான வேலைலாம் இல்ல பத்மா. நீ சொல்லு..” என்று இழுத்தான். பக்கென்று அவள் சிரிக்க, “எங்கண்ணே மட்டும் உனக்கு மாமாவா?” என்று பாய்ந்தான்.
“ஐயோ, உங்ககிட்ட பேச முடியாது. போனை வைங்க” என்று அழைப்பை துண்டித்து விட்டாள் பத்மா. இங்கே உல்லாசமாகச் சிரித்தபடியே வேலையைப் பார்த்தான்.
தேன்மொழியின் குடும்பமே பெயர் சூட்டும் விழாவிற்குத் தயாராகி நிற்க, அவள் அப்போதுதான் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
கடந்த ஒரு வாரமாக அன்பழகன் அக்காவுடன்தான் இருக்கிறான்.
“என்னடா திடீர்னு வந்து நிக்கிற? ஊருக்கு வர்றேன்னு சொல்லவே இல்ல?” அதிகாலையில் வந்து நின்ற தம்பியை அவள் ஆச்சரியமாகப் பார்த்து, மகிழ்ச்சியுடன் அவனருகில் ஓடி விசாரிக்க, “உன்னைய பாக்கணும் போல இருந்துச்சுகா.” என்றான் அவன்.
“உனக்குப் படிக்க இல்லையாடா?” என்று கேட்டவள், “வா, வா. காஃபி போடுறேன்” என்றாள்.
“நாலு வருஷமா படிக்காததையா இந்த ஒரு வாரத்துல படிச்சுட போறேன். போக்கா” என்று அவளைப் பின் தொடர்ந்தான். அந்த ஒரு வாரமும் தினமும் அவளோடுதான் இருந்தான். இருவரும் மதுரைக்கு மாமா வீட்டுக்கு சென்று வந்தார்கள்.
தர்மாவின் காரில் அவளை அன்பழகனே அழைத்துச் சென்றான்.
அவளின் அலுவல் நேரத்திலும் அவளோடு இருந்து தொழில் குறித்துக் கேள்வி கேட்டு, தெளிவடைந்து கொண்டிருந்தான்.
நாளை அவன் குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்றால் என்ன துறைகளை எடுப்பது என்று அவளிடம் ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளின் மனஅழுத்தம், மனச்சோர்வு என அனைத்துமே அந்த நாட்களில் நீங்கிப் போய் இருந்தது.
அவர்கள் வீட்டு அரசியலும், பிரச்சனையும் கூட அதனாலயே அவளைப் பெரிதும் பாதிக்கவில்லை. அதில் அவள் தலையிடவும் இல்லை.