சுதாகரனின் கோபம் அவனது செயல்களில் வெளிப்படவில்லை. அவனுக்கிருந்த கோபத்தில் அந்தக் கணமே மகளைத் தூக்கிச் சென்று தங்கையின் மடியில் கிடத்தியிருப்பான். ஆனால், இன்றைய அவனது கோபத்தின் பின்விளைவு காலம் முழுக்க அனைவரின் மனத்திலும் வருத்தமாக நிலைத்திடுமே. ஆனாலும், நடந்ததை எளிதாக எடுத்து கடக்கவும் அவனால் முடியவில்லை. இரு வேறு மனநிலையுடன் அல்லாடிக் கொண்டிருந்தான்.
மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியிலேயே மனம் கேளாமல் தங்கையை அழைத்தான். அவளது எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. சரியென மனைவியை அழைத்து அவன் பேச,
“அந்தத் தேன்மொழி என்ன மருமகனுக்குச் சொந்த தங்கச்சியா? உன் மாமியா வீட்டு ஆளுங்கதான் அவள தலையில தூக்கி வச்சு ஆடுறாங்கன்னா. நீ அதுக்கு மேல இல்ல இருக்க?” அவன் அழைப்பில் இருப்பது தெரியாமல் கீதாராணி மகளைப் பேசியது அவனுக்கும் தெளிவாகக் கேட்டது.
“என்ன வேணுமாம் ரம்யா உங்கம்மாக்கு? தேனு என் சொந்த தங்கச்சிதான்” காரை ஓரமாக நிறுத்தி விட்டுக் கத்தினான்.
“எங்கம்மாக்கு நான் நிம்மதியா இருக்கக் கூடாது. அதான் வேணும். வேறென்ன..” என்று பதிலுக்குக் கத்தியவளின் குரலும் அழுகைக்குத் தயாராகியது.
“என்னால இங்க இருக்க முடியாது. நீங்க ஊருக்கு போய் இருக்க மாட்டீங்க தானே? அப்படியே திரும்பி வந்து என்னைய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்றாள் அழுகுரலில்.
“ஏய் யார் கிட்டடி பேசுற? மாப்ளகிட்டயா?” அந்தப் பக்கம் கீதாராணி கேட்க, “போனை இப்படிக் குடு பாப்பா” என்றார் கணபதி.
“நான் எங்க வீட்டுக்கு போறேன்ப்பா. என்னால அம்மா கூட இருக்க முடியாது. இவங்க பண்ற பாவம்லாம் எங்க தலையிலதான் விழும்” என்று சொன்னவள் கண்களில் கண்ணீர்.
கணபதி மனைவியை முறைத்து மகளிடம் வந்தார்.
“நீங்க இப்போ வந்து என்னைய வீட்டுக்கு கூட்டிட்டுப் போகப் போறீங்களா இல்லையா?” என்று அவள் கணவனிடம் கத்த, “போனை அப்பா கிட்ட குடு பாப்பா..” என்று அலைபேசியைப் பிடுங்கப் போனார் கணபதி.
“நீங்க வாங்க மாமா. நானும், பாப்பாவும் ரெடியா இருக்கோம்” என்று அவனிடம் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள்.
சுதாகரன் என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே கண் மூடி காரில் அமர்ந்து விட்டான்.
அந்நேரம் அவனை அழைத்தான் ஜெயபாலன்.
“அண்ணா, நாளைக்கு மெக்கானிக் லீவ்வாம். இந்த மாசத்துல இதோட ஐஞ்சு நாளைக்கு மேல லீவ்வாகுது அவருக்கு. எப்ப கேட்டாலும் ஏதாவது சாக்கு சொல்றார். இது சரி வராதுன்னா. நாம் வேற ஆளு எடுக்கிறது நல்லது” என்று பேசிக் கொண்டே போனான் ஜெயபாலன்.
சுதாகரன், “ம்ம்” எனவும்,
“கேட்க மறந்துட்டேன் பாரு, ராசாத்தி என்ன பண்றாண்ணா?” என்று கேட்டான்.
“அவ போன் நாட் ரிச்சபிள். மாப்ளக்கு கால் பண்ணி கேளு, சொல்வார்”
“ஹாஹாஹா. நான் தேனுவ கேட்கலண்ணா. உன் மகள கேட்கறேன்..”
“அவங்கம்மா வீட்ல தூங்கிட்டு இருப்பா”
“அப்போ நீ எங்க இருக்க?”
“ஊருக்கு வந்துட்டு இருக்கேன்”
“ஏன்?” என்றான் புரியாமல். ஏனென்றால் இன்னும் இரண்டு நாள்கள் கழித்தே திண்டுக்கல் திரும்புவதாக அல்லவா சுதாகரன் சொல்லியிருந்தான். அதனால் தம்பிக்குக் குழப்பம்.
“என்னண்ணா?” தம்பி திரும்பக் கேட்கவும், மனத்தை அழுத்தியதை அப்படியே அவனிடம் கொட்டி விட்டான் சுதாகரன்.
“அவங்க தேனுக்கிட்ட குழந்தையைக் குடுக்கலயா? ஏன்? எதுக்கு? அத்த எப்படிக் குடுக்காம இருக்கலாம்? என்ன நினைச்சுட்டு இருக்காங்க அவங்க?” படபடவெனப் பொரிந்தான்.
“நீ அவங்கள சும்மா விட்டுட்டு வந்தியா? இதுவே என் புள்ளையா இருந்தா, அப்படியே தூக்கிட்டு வந்து தேனு கையில குடுத்திருப்பேன். பெரிய மனுஷி பண்ற காரியமா இது? அவங்க நம்ம வீட்டுப் பக்கம் வரட்டும் இருக்கு. அன்னைக்கு நாங்க போனப்போ அப்படிப் பேசினாங்க. ரொம்ப நல்லவங்க மாதிரி. தேனுவ பார்த்தா மட்டும் இளக்காரமா இருக்கா? நாளைக்கு எந்த மூஞ்சியை வச்சுட்டு நம்ம வீட்டுக்கு வருவாங்க. நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோண்ணா. அவங்க நம்ம வீட்டுக்கு வந்தா நான் நல்லா கேட்டு விட்டுருவேன்.” என்று கொந்தளித்தான்.
அந்தக் கோபம் குறையாமல் கடையை மூடியதும் நேராகத் தங்கையின் வீடு சென்றான்.அங்கு கூடத்தில் போடப்பட்டிருந்த சிறிய கட்டிலில் படுத்திருந்தார் பவுணு அம்மாள்.
தர்மதுரை, சுந்தரராஜன் இருவரும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து தொழில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பிச்சிப்பூ, பன்னீர் ரோஜா, சாமந்தி, கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து, மருகு ஆகியவை இன்னமும் உள்ளூர் மார்கெட்டுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலவை வாசனை திரவியம் தயாரிக்கும் பெருநிறுவனத்துக்குக் கொடுக்கிறார்கள். அப்பாவை தள்ளி நிறுத்தாமல் அந்தப் பொறுப்பை அவரிடம்தான் கொடுத்திருந்தான் தர்மா. மேலும் பூச்செடிகளின் பராமரிப்பும், நாற்றுகள் வாங்கி வருவதும் அவர் வேலைதான்.
வீட்டின் வாயிற்கதவு மூடப்படாமல் இருக்க, ஜெயபாலனின் வண்டி வந்து நின்ற சத்தத்தில் படுக்கையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்த அப்பத்தா, “வாசல்ல யாருப்பா? யார்னு பாருங்க” என்றார்.
மெல்ல முன்னே எட்டிப் பார்த்து, “என் மச்சான்தான் அப்பத்தா” என்ற தர்மா, வேகமாக எழுந்து வெளியே சென்றான்.
“வாங்க, என்ன இந்நேரம். என்னாச்சு?”
“தேனுவ எங்க?” என்று தங்கையைத் தேடி தவ்வினான் அண்ணன்.
“தூங்கறா, நீங்க உள்ள வாங்க?”
“அந்தம்மா புள்ளைய தரலன்னா பேசாம வருவாளா இவ? கொண்டா என் அண்ணன் புள்ளையன்னு தூக்கிட்டு வர்றதை விட்டுட்டு.. அழுதாளா?”
“ப்ச், மெல்லமா பேசுங்க”
“என்னத்த பேச.. எனக்கு வர்ற கோபத்துக்கு..”
“இங்க பாருங்க ஜெயா, ஊருல இதெல்லாம் ரொம்பச் சாதாரணம். வீட்டுக்கு ரெண்டு பேர் இப்படித்தான் இருப்பாங்க. தேனு இத பெருசா எடுத்துக்கல. நீங்க பிரச்சினை பண்ணாதீங்க பிளீஸ். அப்புறம் எல்லாருக்கும் சங்கடமா போகும். முக்கியமா உங்க அண்ணனுக்கு. நான் சொல்றது புரியுது தானே?” ஜெயபாலனுக்கு எல்லாம் நன்றாகத்தான் புரிந்தது. அவனது இயல்பு தெரிந்துதான் தன்மையாக எடுத்துச் சொன்னான் தர்மா.
“நீங்க எல்லாம் மகான் மாமா. ஆனா, நான் மனுஷன்தான். என்னாலலாம் இதையெல்லாம் பொறுத்துக்க முடியாது”
“உங்க அண்ணனுக்கு இது தேவையில்லாத டென்ஷன். தேனுவும் நீங்க பிரச்சினை பண்றத விரும்ப மாட்டா” என்றான் அவன் தோளில் கைப் போட்டு அழுத்தி.
“ராசா, தம்பியை வீட்டுக்குள்ள கூப்பிடுப்பே..” என்று அப்பத்தா உரத்துச் சொல்ல, “வாங்க தம்பி” என்று வாசலில் நின்று அழைத்தார் திலகவதி.
“இல்லத்தே நேரமாச்சு. நாளைக்குக் காலைல வர்றேன்” என்றவன், தர்மதுரையைப் பார்த்து தலையசைத்து விட்டு வண்டியில் ஏறினான்.
“ஜெயா, பிரச்சினை பண்ணாதீங்க” என்று மீண்டும் சொன்னான் தர்மதுரை. அதற்கு மையமாகத் தலையசைத்து வைத்தான்.
அவனும் பிரச்சினை செய்யக் கூடாதென்றுதான் நினைத்தான்.
ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும், “ஏன்டா ஜெயா, உங்கண்ணே ரெண்டு நாளைக்குப் பொண்டாட்டி பிள்ளைய பார்க்க மதுரைக்குப் போனா உன்னால கடையை ஒழுங்கா பார்த்துக்க முடியாதா? கடையில என்னடா பண்ண? எதுக்குப் பெரியவன் இப்போ அவசரமா ஊருக்கு வர்றான்?” என்று முத்தம்மா கேட்கவும், கோபத்தில் பொங்கி விட்டான்.
“நான் என்ன பண்ணேனா? நல்லா கேட்க வந்துட்ட நியாயம் அம்மாச்சி. உன் பெரிய பேரன் மாமியா என்னா பண்ணுச்சுன்னு அவன்கிட்ட கேளு. அண்ணே அதுனாலதான் வருது” என்று கத்தியவன், அண்ணன் சொன்னதை அப்படியே ஒப்பித்து விட்டான்.
“நேத்து வீட்டுக்கு வரும் போது கூடத் தேனு ஒன்னுமே சொல்லலையே டா” என்று சுவரில் சாய்ந்தமர்ந்து அழ ஆரம்பித்து விட்டார் பொற்கொடி.
முத்தம்மா மனத்தின் ஆற்றாமையை எல்லாம் புலம்பி தள்ளி விட்டார்.
“அவ பச்ச புள்ளடா. படிப்பு முடிக்கவும் கட்டிக் குடுத்துட்டோம். குழந்தைக்குலாம் காலம் கிடக்கு” என்று அவர் சொல்ல, பொற்கொடியின் அழுகை இன்னுமே கூடியது. ஊர், உறவு என்ன சொன்னால் என்ன? அவருக்குத் தேன்மொழி சொந்த மகள்தான். அப்படித்தான் வளர்த்தார்.
அவருக்கு அன்றாடம் மகளின் ஆலோசனை தேவைப்படும். மிகவும் அருகில் இருப்பதாலேயோ என்னவோ சின்னச் சின்ன விஷயங்களையும் அவளிடம் கேட்டுதான் செய்வார். முதலில் அம்மா, அப்புறம் மகள் இதுதான் அவரின் உலகம்.
வெளியூரில் கட்டிக் கொடுத்திருந்தால் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசியிருப்பாராக இருக்கும். அருகில் இருப்பதினால் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். தேன்மொழி அவர் சொல்வதைக் கேட்டபடி அமர்ந்திருந்தால் திலகவதியும் அவரும்தான் பேசிக் கொள்வார்கள். அதுவே கீதாராணிக்கு பிடிக்கவில்லை என்பதை ரம்யாவின் வளைகாப்புச் சமயத்தில் உணர்ந்து கொண்டார் பொற்கொடி.
அந்த வீட்டில் அவர் மகளுக்கான முக்கியத்துவம் எப்படி இல்லாமல் போகும்? எங்கேனும் மூத்த மருமகளுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்கிறார்களா என்ன? என்று சிந்தனை சிதற அமர்ந்திருந்தவரின் அழுகை நிற்கவேயில்லை.
“நீ ஏன்மா இப்போ அழற?” ஜெயபாலன் அவரை அதட்ட, அந்நேரம் வீட்டுக்குள் நுழைந்தான் சுதாகரன்.
“நல்ல நாள் பாரு அம்மாச்சி. என் பொண்டாட்டி பிள்ளைய வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்” என்றான் அவன், தீர்க்கமாக.
“டேய், கோபத்துல எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் பண்ணாதீங்க டா. நாளைக்கு மருமக வருத்தப்படும். மொத பிரசவம் அம்மா வீட்லதான் பார்க்கணும்”
“அதான் பார்த்தாச்சுல்ல அம்மாச்சி.”
“ஏலே, ஆறு மாசத்துக்கு அங்கதான் இருக்கணும் டா. அம்மா வீட்ல இருந்தாதான்..”
“ஏன் நீ பார்த்துக்க மாட்டியா என் மகள..”
“பெரியவனே..” என்று அதுவரை அமைதியாக இருந்த கந்தனும் அதட்டினார்.
பெரியவர்களுக்கு நிறைய வருத்தமும், மனத்தாங்கலும் இருந்தது. ஆனால், அதற்காகக் கோபம் கொண்டு மருமகளை உடனடியாக வீட்டுக்கு அழைக்க விரும்பவில்லை அவர்கள்.
“ரம்யாதான்ப்பா நாள் பார்க்கச் சொன்னா. அவதான் நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொன்னா. அவளே வர்றேன்னு சொன்னதுக்கு அப்புறம் என்னால அவள அங்க விட்டு வைக்க முடியாது.” என்றவன், “ஆறு மாசம் வரைக்கும் என் மகள என் தங்கச்சி பார்க்காம இருக்கணுமா உங்களுக்கு?” என்று எல்லோரையும் பார்த்துக் கத்தினான்.
ஒருவரின் மூட நம்பிக்கையின் விளைவான மடச்செயல், அவர் சார்ந்த அனைவரையும் பாதித்தது. அனைவருக்கும் மனஅழுத்தத்தைத் தந்திருந்தது.