தன்னருகே அமைதியாக கவலையை மறந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள் சாதனா.
எத்தனை சோகங்கள் இருந்தாலும் அவன் வாழ்வை அவன் எவ்வளவு செம்மையாக அமைத்துக் கொண்டான் என்று நினைத்தவளுக்கு அவன் மீது முன்பை விட அதிகமாகவே மரியாதைத் தோன்றியது.
சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சோர்ந்து போகும் மனிதர்கள் மத்தியில் நல்லவையை மட்டும் நினைத்து, அல்லதை யோசிக்காத அகம் சிலருக்கே வாய்க்கும். அப்படியானவன் தன் கணவன் என்ற பெருமிதம் அவளுக்கு.
பரசுராம் உறங்கிக் கொண்டு இருக்க கசோலில் இருந்தவளுக்கு காரிருள் சூழ்ந்த போதும் உறக்கம் வரவில்லை. எண்ணங்கள் எல்லாம் ராமை சுற்றியே வந்தது.
“பல்லாவரத்தில் இருந்தேன்” என்று அவன் சொன்ன போது சிரித்தபடி அவன் தோளில் சாய்ந்து கதை கேட்டாள் சாதனா.
“சது! இதெல்லாம் முன்னாடியே சொல்லியிருக்கனும். ஆனா நம்ம இரண்டு பேருக்கும் ஒரு நெருக்கம் வரட்டும் நினைச்சேன். எந்த உறவானாலும் அதோட ஆழம் நம்ம அதுல எத்தனை உண்மையா இருக்கோம்ன்றதுதான். எனக்கு அந்த intimacy of truth சொல்ல இத்தன நாள் ஆகிடுச்சு, அதை விட உனக்கு என்னை எனக்காக பிடிக்கனும் நினைச்சேன்” என்று அவன் சொல்லத் துவங்கியபோது கூட என்ன பெரிய விஷயம் என்ற நினைப்பில் இருந்தாள்.
“என் அம்மா ஐ மீன் என்னைப் பெத்தவங்க எனக்கு நாலு வயசு இருக்கும்போதே என்னை விட்டுப் போய்ட்டாங்க” என்று மரத்த குரலில் சொன்னான் பரசுராம். சாதனா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தவள் ஆதரவாக அவன் தோள்ப்பற்றினாள்.
“மிஸ் பண்றீங்களா?” என்று கேட்டதும்
“போய்ட்டாங்கன்னா அந்த போய்ட்டாங்க இல்ல” என்றான் கொஞ்சம் சிரிப்புடன்.
“என்னையும் என் அப்பாவையும் வேண்டாம்னு விட்டுப் போய்ட்டாங்க. நான் எல்கேஜி படிச்சப்போ அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட், அவரோட ஒரு கால் போயிடுச்சு அதுல. என்னோட அந்தம்மாவுக்குப் பணம் தான் முக்கியம். அஃப்கோர்ஸ் பணம் முக்கியம்ன்றதை விட அவசியம்! ஆனா அது மட்டும் வாழ்க்கை கிடையாதே! ஆனா பணத்தை வாழ்க்கையா நினைச்ச அவங்க அப்பாவை விட்டுப் போய்ட்டாங்க, என்னையும் சேர்த்து” என்றபோது சாதனாவிற்கு இப்படியும் ஒரு பெண், தாய் இருப்பாரா என்ற சந்தேகம்.
“கொஞ்ச நாள் வரைக்கும் அம்மா மேல கொஞ்சம் நியாயம் இருக்கும் நினைச்சேன் சது, எல்லோருக்கும் அம்மான்னா இஷ்டம்தானே, என்னோட மனசு அவங்களுக்கான நியாயமான காரணத்தைத் தேடிச்சு. ஆனால், கடைசிவரை அது கிடைக்கவே இல்லை, நியாயம்னு ஒன்னு இருக்கப்ப இன்னொன்னு அநியாயம் தான்! ஒருத்தருக்குத் துணையா இருக்க வேண்டிய நேரத்துல எப்படி கொஞ்சமும் ஈரம் இல்லாம அப்பாவை விட்டுப் போனாங்கனு எனக்கு யோசிச்சாலே அவ்வளவு கோவம் வரும். ஒரு ரிலேஷன்ஷிப்ல கஷ்டம் வந்தா விட்டுப்போறது எந்தவகையில் நியாயம்?” என்று கோபமாகப் பேசினான்.
இவ்வளவு கோபம் பார்த்ததே இல்லை ராமிடம்! அவர்கள் சண்டைப் போட்ட அன்றை விட அதிக கோபம், அன்று கோபம் என்பதை விட அவனிடம் ஏமாற்றம் அதிகம்.
இன்றையை தினமோ கோபத்தோடு சேர்ந்த தீரா ஆத்திரம், அழுத்தம் அவன் விழியில் நீராய்க் கோர்த்து இருந்தது. சாதனாவுக்கு சட்டென்று ஆறுதல் சொல்லக் கூட வரவில்லை. அப்படியே இருந்தாள். ஆனால், ராம் அதனை எதிர்ப்பார்க்கவில்லை. அவன் மனம் விட்டுப் பேச, அதில் இத்தனை வருடமாய்த் தேங்கியிருந்த வருத்தங்களைக் கொட்ட, அதனைக் கேட்க அவள் இருந்தாள் போதுமென்ற மன நிலையில் மனதைக் கொட்டினான்.
“அப்பாவை வேண்டாம்னு சொன்னவங்க உடனே வேற கல்யாணம் பண்ண ரெடியாகி டிவோர்ஸ் கேட்டாங்க, அப்பாவும் கொடுத்துட்டார். தாத்தா பாட்டி அப்பாவுக்கும் கல்யாணம் பண்ணி வைச்சாங்க, இந்தும்மா என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க, ஜீவா பொறந்தான். எனக்கும் விளையாட தம்பி பாப்பா கிடைச்சான். ஒரு இரண்டு மூணு வருஷம் நல்லா போச்சு. ஆனா அப்புறம்தான் எனக்கு விவரம் தெரிஞ்சது, அப்பா என்னை விலக்கி வைச்சிருக்கார் தெரிஞ்சது”
“விலக்கின்னா? நீங்க என்ன தப்பு பண்ணீங்க ராம்?” சாதனா பொறுக்காது அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டு ஆதரவாகப் பேச
“ஒவ்வொரு மனுஷங்களும் ஒவ்வொரு விஷயத்தை ஞாபகப்படுத்துறவங்களா இருப்பாங்க இல்லையா? அப்படி என் அப்பாவுக்கு என்னைப் பார்க்கும்போது அவரை விட்டுப்போன அவர் முன்னாள் மனைவிதான் ஞாபகத்துல வந்தாங்க.”
“அதுக்கு அப்போ உங்களுக்கு என்ன தெரியும் ராம்? உங்களைக் கஷ்டப்படுத்துவாரா?” என்று சாதனா கோபமாகக் கேட்டாள். அவளுக்குக் கணவன் கஷ்டம்தான் பெரிதாக தெரிந்தது. அதுவரை ஆக்கிரமித்த அதிர்ச்சி நீங்கி, இப்போது ஆத்திரம் நிறைந்திருந்து.
“ஹே! நீ நினைக்கிற மாதிரி இல்லை! எப்படி சொல்றது எனக்கும் ஜீவான்னா பிடிக்கும்தான்! ஆனா என்னோட அப்பாவோட சந்தோஷமா ஜீவா மாறிட்டான். என் தம்பியா இருக்கவரை எனக்குப் பிடிச்சது. என் அப்பாகிட்ட என்னை விட அவன் முக்கியமா இருக்கான் நினைக்கிறப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, ஒரே பேரண்ட்ஸ்க்குப் பொறந்த பசங்களுக்குள்ளயே இந்த மாதிரி பொறாமை இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படி இல்லாம இருக்கும்? என்னோட அம்மா இல்லை, வேற ஒருத்தங்களை அம்மானு சொல்ல சொன்னாங்க.”
“அம்மா அப்பா சண்டை, இனி வரமாட்டாங்க சொல்லிட்டாங்க. அம்மா இல்லைனு கவலை, அப்பாவுக்குக் கால் போச்சு, அப்பாவும் என்னோட ரொம்ப பேசுறது இல்லை. அப்படியே பேசினாலும் ஜீவா அவரோட செல்ல மகனாகிட்டான்.” என்றபோது இன்றும் அவன் பேச்சில் ஏக்கங்கள் மிச்சமிருந்தன.
“நான் சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பேன், எல்லா போட்டியிலயும் கலந்துப்பேன். எனக்கு என் அப்பாவோட அட்டென்ஷன் என் பக்கம் வரணும்னு ஒரு நினைப்பு இருந்துட்டே இருக்கும். ஆனாலும், அப்பா கிட்ட நான் எதிர்ப்பார்த்த அந்த உணர்வு கிடைக்கவே இல்லை. கொஞ்சம் பெருசானதும் அம்மா ஏன் போனாங்க தெரிஞ்சது எனக்கு. அம்மாவைப் பார்க்கனும்னு தோணும், ஆனா மனசு கேட்கும் உன் மேல பாசம் இருந்திருந்தா வந்திருப்பாங்க தானே?”
“எனக்கும் உனக்கும் சண்டை வந்ததே, அன்னிக்கு அவங்களைப் பார்த்தேன், ரொம்ப வருஷம் அப்புறம்” என்றான் கசந்த பாவனையில்.
ராமின் அன்றைய செயல், அதீத கோபம், அதீத பேச்சு எல்லாம் அவன் அம்மாவைப் பார்த்ததாலா? என்று சாதனாவின் மனம் நினைத்தது.
“சது, இந்த தளபதி படத்துல சின்னத்தாய் அவள் பாட்டோட அம்மாவும் பையனும் மீட் பண்ணுவாங்களே அது போல் இருக்கும்னு நினைச்சிடாத! ஒரு மொக்க சீன் அது!”
சாதனாவோ ராம் உணர்வுகளை அடக்கிப் பேசியதைப் பார்த்தவள், “ஏன் ராம் உங்க எமோஷனைஸை ஃபேக் பண்றீங்க, இப்படி ஒரு சிட்டேவேஷன்ல இந்த ரெஃபெரன்ஸ் எல்லாம் தேவையா?”
ஆதங்கமாக மனைவி பேச ராமோ ஆழமான குரலில், “என் லைஃப்ல சில ட்ராஜடி இருந்தாலும் அதை காமெடியாக்கி பரோடி பண்றதுதான் என்னை இங்க வரை கொண்டு வந்து இருக்கு சது. என் அம்மா என்னை உதறிட்டுப் போய்ட்டாங்க, அப்பாவால என்னோட நெருக்கம் காட்ட முடியல, அதை நினைச்சிட்டே அழுதுட்டு இருந்தா என்ன இருக்கும் என் லைஃப்ல? எத்தனை பேர் அப்பா அம்மா யார்னு தெரியாம இருக்காங்க, ரோட்ல வீடு இல்லாம கஷ்டப்படுறாங்க, ஆஃப்கோர்ஸ் பெயின் இஸ் பெர்சனல்! அவங்க அவங்க கஷ்டம் அவங்க அவங்களுக்குப் பெருசு!” என்றான்.
அவனது துயரங்களை எல்லாம் வெளிக்காட்டாது, தன்னை தானே சமாதானம் செய்துகொள்ளும் அவன் மனம், அது மிகவும் கஷ்டமாக இருந்தது சாதனாவுக்கு. இத்தனை நாள் கணவனின் கடந்த காலம் தெரியாமல் வாழ்ந்த மடத்தனத்தை நொந்தாள்.
“அவங்க என்ன சொன்னாங்க ராம்?” என்று அவன் விட்ட இடத்தைக் கேட்க
“உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கலாம்னு நகைக் கடைக்குப் போனேன், அங்க அவங்க பென்ஸ் கார்ல வந்திருந்தாங்க. வாசல்ல பார்த்துட்டேன், பேசாம இருக்க முடியல. அவங்களுக்கு என்னை தெரியவே இல்லை சது, பெயர் சொன்னதுக்கு அப்புறம் தெரிஞ்சிக்கிட்டாங்க. நல்லாயிருக்கியா? என்ன வேலைப் பார்க்கிறனு கேட்டாங்க? இவங்களுக்கும் எதாவது காரணம் இருக்கும், என்னை நினைச்சுக் கவலைப்பட்டிருப்பாங்க அப்படினு லூசு மாதிரி நினைச்சேன். ஆனா அவங்ககிட்ட அதையெல்லாம் எதிர்ப்பார்க்கவே கூடாதுனு புரியவைச்சாங்க. என்னோட பைக் பார்த்துட்டு, எதாவது பணக்கஷ்டம்னா சொல்லு உதவி செய்றேன்னு சொன்னாங்க!”
“கூட அவங்க பையன் வந்திருந்தான். அவன் என்னை யாருனு கேட்டதுக்குத் தெரிஞ்ச பையன்னு சொன்னாங்க. அவங்களுக்குத் தெரியாத, அவங்களைத் தெரிஞ்சிக்காத முட்டாள்னு அப்போதான் எனக்குப் புரிஞ்சது! கொஞ்சம் கூட கில்ட் இல்லை சது அவங்ககிட்ட. இந்த சினிமாவுல அம்மாவை டிவைனாவும் சித்தியை எல்லாம் ஈவிலாவும் காட்டுவாங்க இல்லையா? அதுல உண்மை இல்லை! எந்த உறவோட உன்னதமும் அதோட பெயர்ல இல்லை. என்னை வேண்டாம்னு பணம் பின்னாடி போனது என்னைப் பெத்த அம்மாதானே? இந்தும்மா அவங்க ஜீவா கிட்ட காட்டுற அளவு அன்பு காட்டினதில்லை, பட் என் மேல அவங்களுக்கு இருக்க அன்பு நிஜம்!”
“சாரி ராம்! இத்தனை நாள் இதெல்லாம் சொல்ற அளவு நானும் உங்ககிட்ட நெருக்கமா இல்லை” என்று சாதனா வருத்தப்பட
“ஹே! இது பெருமை சொல்லிக்க பொன்னியன் செல்வன் கதையா என்ன?” என்றான் கிண்டலாக.
“கஷ்டமா இல்லையா ராம்?” சாதனா மிகவும் கவலையுடன் கேட்டாள். அவளுக்கு விவரம் தெரிந்து அவள் பெற்றோர் இறந்துவிட்டாலும் அவர்களுடன் வாழ்ந்த நாட்கள் பொக்கிஷம் அவளுக்கு. அவளையும் அவள் தம்பிகளையும் அன்புடன் வளர்த்தனர்.
பணத்துக்காக சிரமப்படும் பெற்றோர் கூட பிள்ளைகளை அன்பு காட்டி வளர்ப்பார்கள், ஆனால், அன்புக்காக, ஆறுதலுக்காக, அரவணைப்புக்காக ஏங்குவது கொடிதல்லவா? அதுவும் கொடிதான இந்த உணர்வினை நெடுநாள் தன் கணவன் சுமந்திருக்கிறான் என்று நினைக்க நினைக்க நெஞ்சம் கலங்கியது.
ஆனால், இவன் அம்மா கணவனின் கஷ்ட காலத்தில் துணை நிற்கவில்லை. பெற்ற பிள்ளையையும் நினைக்கவில்லை. இப்படியும் சிலர்! என்று கசப்பாக எண்ணினாள்.
“கஷ்டமா இருந்தது சது! ஆனா இப்போ இல்லை. அன்னிக்கு அவங்களைப் பார்த்தது ஒருவகையில் நல்லது. கொஞ்சம் இருந்த அட்டாச்மெண்ட் கூட காணாம போச்சு. வாழ்க்கையில் ஒரு விஷயத்துல பற்று இல்லாம போறது சாதாரணமில்லை. But you know, I am feeling happy with this detachment. (ஆனா உனக்குத் தெரியுமா, நான் இப்போ பற்று இல்லாம இருக்கிறதால சந்தோஷமா இருக்கேன்).”
“ராம்?” சந்தேகமாகப் பார்த்தாள் சாதனா.
“மனசுல இருக்கிறதை சொல்லுங்க ராம், இப்போ உங்களுக்கு நான் இருக்கேன். உங்க கஷ்டத்தை சொல்லிடுங்க” என்று அவன் கையைப் பிடித்து தன் கைக்குள் பொத்தி வைத்து அழுத்தி சொன்னாள். தன்னைப் பிடித்திருந்தவள் கையைப் பார்த்தவன்
“உங்கிட்ட மறைக்கிறதுக்கு இப்போ எனக்கு ஒன்னுமே இல்லை சது! ரிலேஷின்ஷிப்ல நேர்மை இருக்கனும்னு நம்புறவன் நான். எல்லாமே சொல்லிட்டேன், நீ ஃபீல் பண்ணாத. ஏன்னா எனக்கே ஃபீலிங்க்ஸ் இல்லை இப்போ. ஒரு மாதிரி விடுதலையா இருக்கு, அன்னிக்கு அவங்க என்னை கன்சீடரே பண்ணாம பேசினப்போ கஷ்டமா இருந்தது. கோவம் வந்தது, இவங்களையா உன் அம்மாவா நினைச்ச? இவங்க முழுக்க முழுக்க சுய நலம் பிடிச்ச மனுஷி, இவங்களோட எனக்கு எந்த ஒட்டுமில்லைனு நினைக்கும்போதே மனசெல்லாம் லேசாகிடுச்சு.” என்றான் புன்னகையுடன்.
“அவங்களைப் பார்த்துட்டு வந்தப்பவே உங்கிட்ட எல்லாம் சொல்லணும்னு நினைச்சேன். மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது, I Badly needed your hug(எனக்கு ஆறுதலா உன்னோட அணைப்பு தேவைப்பட்டுச்சு). நீ விலகிப்போன அப்புறமும் உன்னைப் பிடிவாதமா கட்டிப்பிடிச்சேன், சாரி” என்றதும்
“எனக்குப் புரியுது ராம். அப்போ எனக்கு உடம்பு முடியல, நீங்க நெருங்கி வந்து நான் அனுமதிச்சு அப்புறம் முடியலனு சொல்லியிருந்தா உங்களுக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம். எப்பவும் நீங்க அப்படி நடந்தது இல்லையா? அதான் கோவமா பேசினேன்” என்று விளக்கம் சொன்னாள் சாதனா.