ராமின் மகிழ்வை வார்த்தையால் அடக்க முடியவில்லை. எல்லாவற்றிலும் மகிழும் மனமும் குணமும் உடையவன் என்றாலும் கூட இந்த இனிய அதிர்வில் அகம் குதூகலமாகிவிட்டது, குழந்தை போலாகிவிட்டது!
எங்கோ பெய்யும் மழையில் நனையும் மனம் போல் அவன் மனம் அந்த நேரம் இருந்தது! முகத்தில் பூத்திருந்த அந்த புன்னகையை மூடிவைக்க முடியவில்லை. சாதனா நினைவில் வைத்து அவன் பிறந்த நாளை சொன்னதிலே அவன் உலகின் உச்சியில் இருந்தான் என்றால் இப்போது பிரபஞ்சத்தின் பெரிய உச்சியில் இருந்தான் உள்ளத்தளவில்.
சாதனாவுக்கு அதிர்வெல்லாம் இல்லை, அவர்கள் வீட்டு மாப்பிள்ளை ஆன பின் வரும் முதல் பிறந்தநாள். கண்டிப்பாக அவள் சகோதரர்கள் எதாவது செய்வார்கள் என்று தெரியும். ஆனால், நேரில் வந்து நிற்பார்கள் என்று கொஞ்சம் எதிர்ப்பார்க்கவில்லை அவள்.
“டேய்! வாட் எ சர்ப்பரைஸ்! ரொம்ப தேங்க்ஸ்டா” என்று மாதவனை ராம் கட்டிக்கொள்ள,
“ஹாஹா, ஹாப்பி பொறந்த நாள் மாம்ஸ்” என்றான் மாதவன்.
“ஹலோ, மாமா! நானும் இருக்கேன்” என்றதும் செல்வாவைப் பார்த்து புன்னகைத்த ராம்
“தேங்க்ஸ்டா” என்றான் அவனிடமும். அவனை பார்க்க, அவன் முகத்தில் இருந்த சந்தோஷத்தைப் பார்க்கவே அவர்கள் இவ்வளவு தூரம் வந்தது. அது நிறைவேறியதில் அவர்களுக்கும் சந்தோஷம்.
“சரி கேக் வெட்டிடலாம்” என்று செல்வா சொல்ல, ராம் சாதனா இருந்த அறைக்குப் பக்கத்து அறையைத்தான் அவர்கள் புக் செய்திருந்தார்கள். அங்கு சென்று ராம் கேக் வெட்டினான். முதலில் சாதனாவுக்கு அவன் ஊட்ட, எல்லாவற்றையும் புகைப்படமாக எடுத்தான் செல்வா.
“உதய் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமில்ல, அவனை ஏண்டா விட்டு வந்தீங்க?” என்று ராம் கேட்க
“அவனுக்கு எக்ஸாம்டா, நெக்ஸ்ட் பர்த்டேக்கு அவன் இருக்கப் போறான். ஆனாலும், டா நீ எங்களையே இடைஞ்சல்னு நினைச்சுப்ப பார்த்தா, இன்னும் அவனைக் கேக்கிற, நீ ரொம்ப நல்லவன் மாப்ள” என்றான் மாதவன் கிண்டலாக.
அவர்கள் பேசிக்கொண்டிருக்க, சாதனா “சரி நீங்க பேசிட்டு வாங்க, நான் தூங்க போறேன்” என்றவள் அறைக்குப் போய்விட, இவர்கள் ஆர்ப்பாட்டமாகப் பேசி சிரித்தார்கள்.
சாதனா சென்றதும் “சரக்கு அடிப்போமா?” என்று மாதவன் கேட்க
“குடிக்கார பசங்க கூட எல்லாம் சேரக்கூடாதுனு என் பொண்டாட்டி சொல்லியிருக்கா” என்றான் ராம்.
“இன்னிக்கு உங்க பார்ட்டி! ஸோ குடிச்சிக்கிறோம்” செல்வா சொல்ல
“எவண்டா காரணத்தோட குடிக்கிறீங்க? குடிக்க காரணம், இதான் லாஸ்ட்! மவனே மாதவா கல்யாணம் முன்னாடி இதான் நீ கடைசியா குடிக்கிறது, இனி நோ. செல்வா விட்டிடுடா நீயும்!” என்று அவனையும் அதட்டினான்.
இங்கு இவர்கள் பேச சாதனா தங்களின் நெருக்கமற்ற இடைவெளியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். ராம் மீது இன்னும் அன்பும் அக்கறையும் தான் செலுத்தியிருக்க வேண்டும், செலுத்த வேண்டும் என்ற திசையில் அவள் எண்ணங்கள் பயணித்தன. இன்று தம்பிகளைப் பார்த்ததும் அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி தன்னால் வர வேண்டும் என்று வேண்டியது அவள் மனம்.
செல்வாவும் மாதவனும் குடிக்க, ராம் “இதான் லாஸ்ட்! இல்லை பாட்டிலை மண்டையில உடைப்பேன்” என்று சொல்லிவிட்டு சாதனாவைப் பார்க்க அவர்கள் அறைக்கு வந்தான். கீ கார்ட் இவனிடம் இருக்க, ராம் மெல்ல கதவைத் திறந்து சத்தமில்லாமல் மெத்தையில் வந்து படுத்துக்கொண்டான்.
“என்ன பார்ட்டி ஓவரா?” என்ற சாதனாவின் குரலில் சிரிப்போடு திரும்பியவன், “நீ இன்னும் தூங்கலையா சது?” என்றான் அவளிடம்.
“தூங்காம இருக்கிறதாலதானே பேசுறேன்” என்ற சாதனாவின் பதிலுக்கு
“ஹாஹா!” என்று ராமிடம் இருந்து சிரிப்பு மட்டுமே. அவள் வீட்டில் ஆண்கள் எல்லோரும் சிரிப்பார்கள்தான். செல்வா மட்டுமே கொஞ்சம் அடக்கி சிரிப்பான், உதய் சிறுவயது என்பதால் நன்றாகவே வாய்விட்டு சிரிப்பான், மாதவன் முன்பு அப்படி இருந்தவன் இப்போது அவன் நண்பர்களுடன் இருந்தால் மட்டும் நன்றாக சிரிப்பான். ஆனால், இந்த பரசுராம் எப்போது சிரித்தாலும் அந்த சிரிப்பில் தொலையவே தோன்றும்.
கல்லூரி காலத்தில் கூட ராமின் சிரிப்பை பார்த்திருக்கிறாள். ஆனால், அந்த வயதில் இளமையின் தொடக்கத்தில் நிறைய பேர் அப்படித்தானே? அதனால் பெரிதாக அது பற்றி அவனிடம் சொன்னதில்லை, ஆனால், அவன் யாரைப் பற்றியும் கவலையின்றி களித்திருக்கும் நிமிடங்கள் மிகவும் பிடிக்கும். இப்போது கணவனான பின் இன்னும் பிடிக்கிறது.
மனது ரசிக்கிறது! மையல் நீட்சி கொள்கிறது!! அவன் சொன்ன காதல் ஆட்சி செய்கிறது!!!
“எப்பவுமே நீங்க சிரிச்சிட்டே இருக்கனும் ராம்” என்று இன்று அவனிடம் சொல்லியே விட்டாள்.
“உங்க கூட எல்லாம் இருந்தா நான் இப்படித்தான் இருப்பேன்” என்றான் இன்னும் மாறாத அதே புன்னகையுடன். முகம் முழுதும் பரவி இருக்கும் அந்த புன்னகையில் பாவையின் அகம் அவன்பால் அளவின்றி சாய்ந்தது.
“ஐ அம் எ பிக் ஃபேன் ஆஃப் யுவர் ஸ்மைல்!” என்றாள் சாதனா புன்னகையுடன்
அவனருகே அவள் நெருங்கிப் படுத்து “சொல்லுங்க எப்படி போச்சு உங்க பாய்ஸ் பார்ட்டி?” என்று மீண்டும் கேட்டாள்.
‘இடைவெளிகள் தான் நெருக்கத்தை தீர்மானிக்கின்றன எனினும் நெருக்கமற்ற இடைவெளிகள் பயனற்றவை’ என்று யுகபாரதியின் கவிதை ஒன்று இருக்கிறது. சாதனாவின் மன நிலை இப்போது அப்படித்தான், இருவருமே ஒரு இடைவெளி விட்டே திருமணமான ஆறு மாதங்களில் இருந்திருக்க, அதனால் பயனில்லை என்ற நிலைதான்!
ஒரு நேரம், அதுவும் திருமணமான புதிதில் அவன் கடைப்பிடித்த இடைவெளியினால் இவள் மன வெளியில் அவன் மீதான மாண்பும் மரியாதையும் அதிகரித்தது. அதே இடைவெளி நீண்டு போக, அதனால் விளைந்த பிரச்சனை, அதைத் தொடர்ந்த இரு மாத பிரிவு எல்லாம் சாதனாவை அவள் குடும்ப வாழ்க்கைக் குறித்து யோசிக்க வைத்தது. தன்னை அவன் பார்த்த அளவு அவனை நான் பார்க்கவில்லை என்ற குற்றவுணர்வும் கூட அவளுக்கு இருந்தது. அதனால் அவன் தள்ளி இருந்தாலும் கூட தன்னுடன் இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்.
சாதனா அவனை அணைத்திருக்க, ராமும் அவள் தோள்சுற்றி கைப்போட்டவன் “சும்மா அவங்க பாசமலரை நல்லா பார்த்துக்கனும் உன் தம்பிங்க எனக்கு சொன்னாங்க, பார்ட்டி எல்லாம் இல்ல” என்றான் ராம்.
“சிரிப்பு சத்தமும் சியர்ஸ் சத்தமும் எனக்கு நல்லா கேட்டது, உங்க ப்ரண்டை விட்டுக்கொடுக்க மாட்டீங்களே?” என்று சாதனா முறைத்தாள்.
“என் பர்த்டேனு காரணம் சொல்றானுங்க, அடுத்ததடவை கூடாதுனு சொல்லிட்டேன் மா”
“மீராவுக்குத் தெரிஞ்சா கோவப்படுவா ராம். நீங்கதான் மாதவனுக்கு சொல்லணும்” என்ற சாதனா சட்டென்று அந்த பேச்சை விட்டாள்.
“சாரி ராம், நானும் நாளைக்குக் கேக் கட் பண்ண ப்ளான் வைச்சிருந்தேன், நம்ம இரண்டு பேரும் இன்னிக்கு ஒன்னாவே இருந்தோம், உங்களுக்குத் தெரியாம சர்ப்பரைஸ் பண்ண எனக்குத் தெரியல” என்றபோது ‘உனக்காக என்னால் செய்ய முடியவில்லை’ என்ற வருத்தம் வஞ்சியின் வார்த்தைகளில் வெளிப்பட, அதனை புரிந்துகொண்டான் ராம்.
“சதும்மா, நீ எனக்கு விஷ் பண்ணினதே எனக்கு அவ்வளவு சந்தோஷம். தி பெஸ்ட் பர்த்டேனு சொல்லலாம்” என்று அதே புன்னகையில் பூரித்த முகத்துடன் சொன்னவன் மென் குரலில் மையல் முழுவதும் நிறைந்த பாவனையில் சாதனாவின் செவியருகே
“அதை விட உன் ஹக், என் மனைவிகிட்ட எனக்குக் கிடைச்ச முதல் அணைப்பு… தட் வாஸ் ஸ்பெஷல் மொமண்ட்! எனக்கு அது ரொம்ப தேவையா இருந்தது! அப்புறம் மாதவனும் செல்வாவும் வந்தது இன்னும் சந்தோஷம். அவனுங்க ப்ரண்டுனு செஞ்சாங்களோ இல்லை வீட்டு மாப்பிள்ளைனு செஞ்சாங்களோ எனக்காக, நமக்காக இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்! ஸோ எம்டி மேடம் ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம். நாளைக்கு வேற கேக் வாங்கி கொடு, உண்மையை சொல்லணும்னா எனக்கு கேக்ஸ்னா ரொம்ப இஷ்டம்.” என்றான் அவளை முழுவதுமாக அணைத்தபடி.
அவன் நெஞ்சோடு நெருக்கமாக துஞ்சிய சாதனா, “எனக்குப் பயமா இருக்கு ராம், நம்ம ரிலேஷன்சிப் நினைச்சு. நம்ம ஏன் மத்த கல்யாணமான ஜோடிஸ் மாதிரி இல்லை. இத்தனைக்கும் பிடிச்சுதானே கல்யாணம் செஞ்சோம். நான் ரொம்ப ஹெட் வெயிட்டா இருந்திட்டேனோ, உங்களை நான் கண்டுக்கவே இல்லையோ? எனக்குத் தெரியல. ஆனா நம்ம நார்மல் கப்பிள்ஸ் போல இல்லை. எனக்குப் பொறுமை இல்லை போல, யாராவது நாலே மாசத்துல சண்டைப் போட்டு ஹஸ்பண்ட் விட்டு வருவாங்களா?” என்று சாதனா அவள் மனக்கிலேசத்தை எல்லாம் அவனிடம் இறக்கி வைத்தாள்.
இவ்வளவு நேர தனிமையில் சாதனாவின் மனதின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தன. அவளுக்குத் தன் மீதே கோபம் வந்தது. முன்பு சரியென்று நினைத்துதான் செய்தாள், இப்போதும் அதில் சந்தேகமில்லை. ஆனாலும், அவள் வயது உடையவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்க, தான் இல்லையோ என்ற ஏக்கம் வாட்டியது.