இடைவெளி 6(2)

ராமிடம் தனியாக பேசவே மாதவன் நினைத்தான். ராம் எதாவது பேசப்போய் தம்பியின் முன் நண்பனிடம் எப்படி பேசுவதென்று அவனுக்குத் தயக்கம். அதைவிட பரசுராம் சாதனாவை காதலிக்கிறானா நம்ப முடியவில்லை, ஆனால்,  அப்படியிருந்தால் அவனை விட யாரும் அதிகம் சந்தோஷப்பட மாட்டார்கள். இப்படி மாதவன் யோசிக்க, செல்வா நினைத்தால் உடனே செய்துவிடுவான். அவன் பரசுராமை அழைத்துவர, மது பாட்டில்களும் கோப்பைகளும் இருப்பதைப் பார்த்த ராம் முகம் சுளித்தான்.

“உன் தம்பிங்களுக்கு நீ இப்படி உதாரணமா இருப்பியா?” என்றான் கண்டிப்பாக. மாதவனோ சத்தமாக சிரித்தான்.

“இவன் லண்டன் போய் பழகிட்டான். இவனை  நான் கெடுக்கிறேனா?” என்று இன்னும் சிரிக்க, ராம் பெருமூச்சுடன் நகரப்பார்த்தான்.

“நீங்க உட்காருங்க!  நாங்க ஜஸ்ட் இன்னிக்கு ஒரு நாள். அண்ணா உங்ககிட்ட ஏதோ கேட்கனுமாம்” என்றான் செல்வா.

“என்னடா கேட்கனும்?” முறைத்தவண்ணம் ராம் எதிரே உட்கார

“இது  non alchoholic beer எடுத்துக்கோங்க” செல்வா மது இல்லாததைக் காட்ட, ராமும் எடுத்துக் கொண்டான்.

“எத்தனை நாளா நீ சாதனாவைப் பார்க்கிற?” என்று மாதவன் பட்டென்று கேட்டுவிட, புரையேறியது ராமிற்கு. மாதவன் நண்பன் பக்கம் வந்து முதுகைத் தட்டிவிட, என்னவோ இவர்கள் அவனை கட்டம் கட்டும் உணர்வு ராமிற்கு.

“சொல்லுங்க அண்ணா கேட்கிறான்ல” செல்வாவின் குரல் அதட்டலாக வர,

“அப்படியெல்லாம் இல்லை” என்றான் உடனே. மூச்சு வாங்க மீண்டும் கொஞ்சம் அந்த பானம் பருகினான். டென்ஷனில் இன்னொரு க்ளாஸீல் இருந்ததும் உள்ளே போனது. இவர்களைப் பார்க்கத் தயங்கி என்னவோ ஒரு நினைவில் அங்கிருந்த க்ளாஸில் இருந்த மதுபானத்தை குடித்துவிட்டான் ராம்.

“உன்னைத்தான் கேட்கிறேன், ப்ரண்ட்னு சொல்லுவ, பேசு” மாதவன் கேட்க பரசுராமால் மாதவனிடம் பொய் சொல்ல முடியவில்லை. அமைதியாகவே இருந்தான். இதில் பழக்கமில்லாது மது உள்ளே சென்றுவிட, தலை கிறுகிறுத்தது.

“என்னமோ சொன்னியேண்ணா என் ப்ரண்ட் அப்படி இல்லைன்னு, அப்போ ஏன் பதில் சொல்லாம இருக்கார்? இவர் சதுவை பார்க்கிறார், நான் பார்த்தேன்!” என்றான் அழுத்தமாக.

தவித்த மனம், குடித்த மதுவுமாக இருந்த ராம் “ஆமாடா பார்த்தேன்” என்று முணுமுணுத்தான்.

“ஏன் எங்கிட்ட சொல்லல?” மாதவன் அவன் முகம் பார்க்க வைத்து கேட்க, ராமால் நிமிர முடியவில்லை. மது அவனை என்னவோ செய்தது, மனத்தில் மாதுவின் நினைவு வேறு மறுக வைக்க, மது மயங்கச் செய்தது.

“எப்படி சொல்லுவேன், உன் அக்காவை எனக்குப் பிடிக்கும்னு?” என்று கோபமாகக் கேட்டான்.

“நிஜமா உனக்கு சதுவைப் பிடிக்குமா? லவ் பண்றியா?” என்று துருவி துருவி மாதவன் கேட்க, ராமுக்குக் கோபம் வந்தது. இதுவரை அவன் யாரிடமும் சொல்லாத விஷயம். ரகசியமானது அவன் காதல்! 

இப்போது ஒரு பெருங்கோபம் இவர்கள் இப்படி கேட்க,  யாரிடமாவது சொல்வோம் என்ற மனதின் உந்துதல் இன்று வெளிவந்தது. இதுதான் சந்தர்ப்பம், என்னவானாலும் பரவாயில்லை என்று நினைத்தவன்

“ஆமாடா லவ் பண்றேன் என்ன இப்போ?” என்றவன் தன் முன் இருந்த கோப்பையை என்னவென்று ஆராயாமல் குடித்தான். இந்த உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்தவன் தன்னை தொலைக்க நினைத்தான்.

செல்வா அண்ணனை ‘பார்த்தியா?’ என்று கேட்க, மாதவன் பேசும் முன் மதுவின் போதையில் இருந்த ராம்,

“பிடிக்கும், ரொம்ப பிடிக்கும்! ஆனா அவளுக்கு என்ன பிடிக்கலையே?” என்றான் சோகமாக.

“ஏன் நீங்க உங்க லவ்வை சொல்லாம இருக்கீங்க?” செல்வா விசாரிக்க

“எப்படிடா சொல்ல முடியும் இடியட்! அவ ரேஞ்ச் என்ன? போனுக்கே ரேஞ்ச் கிடைக்காத நான் எங்க? அதைவிட பாடிகார்ட் மாதிரி நீங்க இருக்கும்போது நான் எப்படி சொல்ல முடியும்?” என்றான் உளறலாக.

“என்னடா இவன் வாய்ஸே வேற டோன்ல வருது?” மாதவன் செல்வாவைப் பார்க்க, செல்வா ராம் கையில் இருந்த கோப்பையைப் பார்த்தான்.

“அய்யோ! அது ஆல்கஹால் உள்ளது” என்று கத்தினான் செல்வா. இவ்வளவு  நேரம் பேச்சில் கவனமிருக்க, இதனை அண்ணன் தம்பி கவனிக்கவில்லை.

“தெரியாம குடிச்சிட்டேனே, பாவிகளா என்னை குடிகாரனா ஆக்கிட்டீங்களே” ராம் புலம்பினான்.

“ஏண்டா உன்னை குடும்பஸ்தன் ஆக்க ப்ளான் பண்ணினா நீ ஏண்டா இதை குடிச்ச?” என்று மாதவன் அவன் கையில் இருந்த கோப்பையைப் பிடுங்க,

“ஐ அம் யுவர் ப்ரண்ட் பெஸ்ட் ப்ரண்ட்! கொடுத்திரு சூர்யா, தேவா கேட்டா கொடுக்க மாட்டியா?” என்று போதையில் வசனம் பேசினான்.

“கெட்டதுக்கு இப்ப தளபதி ரெஃப்ரன்ஸ் தேவையாடா உனக்கு?” என்று மாதவன் ராமை அதட்ட,

“சாதனாவைப் பிடிச்ச கதையை சொல்லுங்க” செல்வா அண்ணனைத் தடுத்துக் கேட்டான்.

“சாதனாவை ப்ர்ஸ்ட் டைம் பார்த்தப்பவே பிடிச்சது. அப்பறம் பார்க்க பார்க்க பிடிச்சது, அப்பறம் பார்க்காம இருந்தாலும் ரொம்ப பிடிச்சது. அவளை பிடிச்சாலும் சொல்ல பயம், நான் ஒரு காலேஜ் பையன் எப்படி லவ் சொல்றது?” என்று செல்வாவிடம் கேட்டான். அவன் பதில் சொல்லாது பார்க்க

“அதுக்குள்ள அந்த ப்ரதீப் சொல்லிட்டான்.” என்றான் சோகமாக.

“அவங்களுக்குப் ப்ரேக் அப் ஆன பின்னாடி சொல்ல வேண்டியது தானேடா?” மாதவன் நண்பன் இப்படி இருக்கிறானே என்ற ஆதங்கத்தில் பேச

“உன் உடன்பொறப்புக்கிட்ட எப்படிடா நான் லவ் பண்றேன்னு சொல்லுவேன். நட்புதான் எனக்குக் கற்பு!” என்றான் அந்த போதையிலும்.

“அறிவுக்கெட்டவனே! பிடிச்சா சொல்றது என்ன தப்பு?” என்று மாதவன் திட்ட

செல்வாவோ சிரித்தான். “உன் ப்ரண்ட் நல்லவர்னு தெரியும், இவ்வளவு நல்லவர்னு தெரியாதுண்ணா” என்றான் இன்னும் சிரித்தபடி.

“தலை சுத்துதுடா” என்றான் ராம். அண்ணனுக்கும் தம்பிக்கும் சிரிப்பு வந்தாலும் அவனை பத்திரமாக அறையில் கொண்டு போய் விட்டனர். அடுத்த நாள் காலையில் எழுந்த ராமிற்கு ஒன்றுமே நினைவில் இல்லை.  என்ன பேசினோம் என்று யோசிக்க யோசிக்க, வெற்றிடம் அவன் நினைவில். மாதவனிடமே அடுத்த நாள் காலையில் கேட்க, அவனை அறைக்கு அழைத்தவர்கள் போனை அங்கிருந்த டீவியில் கனெக்ட் செய்து,

“ஒரு சூப்பர் படம் வந்திருக்குனு சொன்னான் செல்வா, பார்ப்போம்” என்று ராமை உட்கார வைக்க, இரவு அவன் பேசியது, உளறியது எல்லாம் திரையில் காட்சியாக ஓடியது. அவன் பேசியதை செல்வாதான் வீடியோவாக எடுத்திருந்தான்.

“ஒரு குடிகாரன் உதயமாகிறான்” என்று மாதவன் சிரிக்க, ராம் தர்மசங்கடமாக உணர்ந்தான்.

இப்போது சாதனாவிடம் சொல்லி அவள் முகம் பார்க்க அவள் வாய்விட்டு சிரித்தாள். இதுவரை சாதனா இப்படி சிரித்தது அவன் பார்த்ததே இல்லை, அவன் தான் அவளை நெருங்கவே இல்லை. எப்போதும் ஒரு எல்லை, இடைவெளி, இன்று அதில்லை அருகே இருந்தாள் அவன் மனைவியாக.

வானம் பொன்வெயில் நீங்கி செந்தூரமாய் மாறியிருந்தது, அவர்கள் இருந்த இடம் மலையின் உச்சி. கீழே பார்க்க பசுமை, வானிலையும் குளுமையேறியிருந்தது. தங்க நிறத்தில் மேகங்கள்! காற்றும்  வீசியது, அந்த காற்றில் அந்த கிருஷ்ணன் கோவில் மணிகள் அசைந்தாட, லாளிதம்!

“ஹே ராம்! காத்துலயே மணி அசையுது பாருங்களேன். நைஸ்ல” என்று கணவனைப் பார்க்க, அவன் கவனம் சிதறியது.

“என்ன  சது?” என்று விழித்தான்.

“சைட் அடிக்கிறீங்களா?” என்றாள் கிண்டலாக.

“ஆமா” என்று ஒத்துக்கொண்டான்.

“இப்பவாச்சும்  ஒத்துக்க மனசு வருதே” என்று சிரித்தவள் “ம்ம், மீதி சொல்லுங்க உங்க காதல் கதையை” என்று கேட்க

“அவனுங்க கிட்ட என்ன பேசுறது தெரியல, ரொம்ப ஷேமா இருந்தது. ஆனா அவனுங்க எப்போ கல்யாணம் வைச்சுக்கலாம் கேட்டானுங்க. எனக்கு உன்னை நினைச்சு தயக்கம்., ஆனா அட்லாஸ்ட் இட் ஹேபண்ட்” என்றவனிடம் நிறைவான புன்னகை.

“எங்கிட்ட வேற மாதிரி சொன்னாங்க, உங்க லவ்வை சொல்லல. அட்லாஸ்ட் சொல்ல வேண்டிய ஆள்கிட்ட காதலை இவ்வளவு வருஷம் கழிச்சு சொல்லிட்டீங்க” என்றவள

“அவனுங்க சொன்னாலும் எனக்கும் ஒரு கட் ஃபீல், ராம்  ஒகேன்னு அதான் ஒத்துக்கிட்டேன். கூடவே தாத்தா சொன்னா சரியாயிருக்கும்” என்றாள்.

“இருட்டிரும், நம்ம ரூம் போக லேட் ஆகிடும். சாமி கும்பிட்டு போகலாம்” என்று சாதனா சொல்ல இருவரும் கிருஷ்ணரை வணங்கிவிட்டு மீண்டும் அந்த மலையை விட்டு இறங்கி, படிகள் இறங்கி, காடு கடந்து அவர்கள் தங்கியிருக்கும் இடம் வந்தனர்.

காலையில் கோவில் சென்றபோது இல்லாத நெருக்கம் மனதால் இப்போது உருவாகியிருந்தது, தயக்கங்கள் தடைகள் விலகியிருக்க இடைவெளிகள் அர்த்தமின்றி போக, இருவர் கையும் இணைந்தே இருந்தது.

இரவு அறைக்கு வருகையில் ராம் சாதனாவை மனதிற்குப் பிடித்தவளாக மட்டுமின்றி நெருக்கமானவளாகவும் உணர்ந்தான். ஆனால்,  அவன் புறத்தேடலை அங்கே தொடங்க விரும்பவில்லை. அதை விட சாதனா அவனுடன் சண்டை போட்ட நிகழ்வுக்கு அவன் விளக்கம் கொடுக்கவில்லை.

அவனின் அந்தாதியாக இருப்பவளிடம் இருக்கப்போகிறவளிடம் எதையும் மறைக்கும் எண்ணமில்லை. இருந்தாலும் இத்தனை மாதம் கழித்து இடைவெளி குறைந்து இசைக்கத் தொடங்கியிருக்க, சாரீரத்தில் சஞ்சலம் வர அவன் விரும்பவில்லை.

இருவரும் அமைதியாக படுத்துவிட, இரவு பன்னிரெண்டுக்கு எழுந்த சாதனா ராமை பின்பக்கம் அணைத்து,

“ஹாப்பி பர்த்டே ஹஸ்பண்ட்” என்றாள். ராம் உறக்கம் களைந்து அவளை அணைத்துக்கொண்டான்.

“உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள் முறைத்தாள்.

“வருஷம் வருஷம் நான் விஷ் பண்ணியிருக்கேன், மாதவன் சொல்லியிருக்கானே. ரொம்ப பண்ணாதீங்க” என்றாள்.

“தேங்க்ஸ் ஸோ மச்” என்று அவளை ஆவலாய் அணைக்க, கதவு தட்டப்படும் ஓசை.

“இப்போ யாரு?” என்று ராம் யோசிக்க, சாதனாவுக்கு ஒரு சந்தேகம். அவள் நினைத்தது போல் ராம் கதவைத் திறக்க, வாசலில் நின்று

“ஹாப்பி பர்த்டே மாமா” என்று மாதவனும் செல்வாவும் கேக்கோடு கத்தினர். ராம் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனான்.

error: Content is protected !!
Scroll to Top