இடைவெளி 6(1)

ப்ரதீப், பரசுராம் உடன் படித்தவன். நண்பனும் கூட! சீனியர் என்பதில் ப்ரதீப்போடு பேச்சு உண்டாகி, ஒரு கட்டத்தில் சாதனாவுக்கு அவன் மீது ஈர்ப்பு, ப்ரதீப்புக்கும் அப்படியே! காதல் சொல்லி இரண்டு வருடங்கள் காதல் பயணம் தொடர்ந்தது.  ஆனால்,  இருவரும் ஆளுமை மிக்கவர்கள், சாதனா தனித்து முடிவெடுத்தே வளர்ந்தவள், அவளைக் கட்டுப்படுத்த ப்ரதீப் நினைக்க, அவனின் எண்ணப்போக்கு வேறு! பிடித்தம் இருந்தாலும் கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அப்போது இருவருக்குமே இல்லை.

இதில் மாதவனுக்கு வேறு ப்ரதீப்பை பிடிக்கவில்லை. அவன் சாதனா குறித்து பரசுராமிடம் புலம்ப, அவன் சொல்லாத சோகத்தை புலம்ப கூட ஆளில்லாது அகத்தினுள் அடைத்துவைத்தான். இப்போது இத்தனை வருடம் கழித்து அவன் காதலை சேர வேண்டியவளிடம் கரை சேர்த்தான்.

“நான் கூட உன் மேல இருக்க அன்பெல்லாம் ரொம்ப சாதாரணமா போயிடும் நினைச்சேன், ஆனா அது எனக்கு ரொம்ப வருத்தமான வலியோட நான் கடந்த நாட்கள்!  உனக்கும் ப்ரதிப்பைப் பிடிச்சது, இதுல என்னோட அன்பை சொன்னாலும் வேஸ்ட் தான் இல்லையா? அதை விட பிரதீப் காலேஜோட ஹேண்ட்ஸம் ஃபெலோ, ஸ்மார்ட் பெர்சன். அவனைத்தானே எல்லோருக்கும் பிடிக்கும்,  நல்லவனும் கூட!” என்று ராம் சொல்ல, அதுவரை பேசாது கதை கேட்ட சாதனா

“ப்ரதீப் ஹேண்ட்சம்னா நீங்க ஹேண்ட்சம் இல்லையா? உங்களை ஏன் குறைவா நினைக்கிறீங்க?” என்று கேட்டாள்.

ராமோ புன்னகைத்தவன் மனைவியின் கையை நன்றாகப் பற்றிக்கொண்டு, “இல்லைவே இல்லை! இந்த உலகத்துல அழகான ஆண் யார்னு என்னை கேட்டா நான் என்னைத்தான் சொல்வேன்! பொண்ணுன்னா அது நீதான்! அது மாதிரி உலகத்துல எனக்கு நான் தான் ரொம்ப நல்லவன்! ஸோ வாழ்க்கையில என்னை நான் என்னைக்குமே குறைவா நினைச்சதில்ல, என்னோட பார்வையில நான் பெஸ்ட்! ஆனா பொதுவான பார்வையில பிரதீப் எல்லார்கிட்டவும் ஈசியா பேசுவான், அதுக்கு சொன்னேன்.”

சாதனாவுக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்க் கணவனைக் குறித்த புரிதல் உருவானது.

“ஓகே! இது எனக்கானது இல்லை அப்படினு மைண்ட் செட் பண்ணி நான் எப்பவும் போல் படிப்புல, என்னோட வாலிபால்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். உன்னோட எனக்கு முன்னாடியே ரொம்ப பேச்சுவார்த்தை இல்லை, அதை இன்னும் குறைச்சேன். ஆனாலும்,  மாதவனோ, ப்ரதிப்போ உன்னைப் பத்தி எங்கிட்ட பேசுவாங்க, என்னால என் மனசை யாருகிட்டவும் சொல்ல முடியல. அதுதான் ரொம்ப கஷ்டம் எனக்கு! தென் எல்லாமே கடந்து போறதுதானே வாழ்க்கை, காலேஜ் லைஃப் முடிஞ்சது, நீ என்னோட நினைப்புல தூரமாகிட்ட. அப்புறம் மாதவ் உங்க ஆபிஸ்ல ஜாய்ன் பண்ண சொன்னான். சேர்ந்தேன்”

“நீ ஃபைனல் இயர் படிக்கும்போது ப்ரதீப்போட உனக்குப் ப்ரேக் அப்! உண்மையில அல்பமா ரொம்ப சந்தோஷமா இருந்தது, ஆனாலும்,  உங்கிட்ட என்னோட லவ் சொல்ல மறுபடி தைரியமே வரல”

“கல்யாணமாகியே வரல” சாதனா இடையில் சொல்ல,

“ரூம்க்கு வாடி, காதுல ரத்தம் வர அளவு கத்தி சொல்றேன்” என்றான் கடுப்பாக.

“ஹலோ! உங்களுக்கு ஏன் கோவம் வருது. அவனோட ப்ரேக் அப் ஆச்சுன்னா அவந்தான் உலகத்துல பெரிய இவனா? அவனை நினைச்சு நான் என்ன கண்ணீர் விட்டா சுத்தினேன்? அவன் எனக்கு செட் ஆக மாட்டான்னு நான் தான் அவனை வேண்டாம் சொன்னேன். அதுக்கு அப்புறம் சொல்லாதது கூட உங்க பெர்சனல். கல்யாணமாகி கட்டின பொண்டாட்டியைப் பிடிக்கும்னு சொல்லாம இருந்துட்டு கோவம் மட்டும் வருது..” என்றாள் சாதனாவும் பொறுமலாக.

“சது! சொல்ல விடேன்”

“ஆமா, ஆமா! நானே கெஞ்சி கேட்டு இவ்வளவு உயரமான மலையில உட்கார்ந்து கேட்கிறேன், சொல்லுங்க” என்றாள்.

“உன்னைப் பார்ப்பேன், பிடிக்கும்! ஆனா அதை அடுத்த ஸ்டேஜ் கொண்டு போக நிச்சயம் எனக்கு பயம்! ஒன்னு உன் மேல, இன்னொன்னு மாதவனை நினைச்சு, அவன் என் பெஸ்ட் ப்ரண்ட் என்னை நம்பி உன் வீட்டுக்கு விடுவான். அது ஒரு கில்ட் கொடுத்தது. உன்னை சாதனா மேடமா என் மனசுல பதிய வைச்சுட்டேன். காலேஜ் படிக்கிறப்பவே உனக்கு ப்ரதீப் மாதிரி ஒருத்தனைப் பிடிச்சது, இப்போ இவ்வளவு பெரிய கம்பெனி ரன் பண்ற உன்னோட எதிர்ப்பார்ப்பு, உன் குடும்பத்தோட எதிர்ப்பார்ப்பை நான் தாண்ட மாட்டேன் தெரியும். அதனால் அப்படியே பத்து வருஷம் ஓட்டிட்டேன்”

“அப்புறம் எப்படியோ நான் உன்னை சைட் அடிக்கிறத உன் உடன்பிறப்பு செல்வா கண்டுபிடிச்சிட்டான். அவன் லண்டனுக்குப் படிக்காம போகாம இருந்திருந்தா முன்னாடியே கண்டுபிடிச்சிருப்பானோ என்னவோ? அவனுக்கு எப்பவும் என்னோட ரொம்ப ஒட்டாது. யாரோடவும் ஒட்டமாட்டான் அது வேற! மாதவன் என் நண்பன், அதனால என் பார்வையை ஆராய மாட்டான். செல்வா கண்டுபிடிச்சு மாதவன் கிட்ட சொல்ல, ஒரு நாள் டீரிட் சொல்லி என்னைக் கூப்பிட்டு குடிக்க வைச்சு போதையில் எல்லாம் சொல்லிட்டேன்” என்று அவன் கதை சொல்ல,

“என்ன குடிச்சீங்களா?” என்று கோபமாக எழுந்தாள் சாதனா. அவளைப் பொருத்தவரை அது மிகவும் கெட்ட பழக்கம்! ஒரு நாள் என்றாலும் கூட பொறுக்கமாட்டாள். சாதனா படியில் இறங்கப்போக,

“சது! அதுதான் ப்ர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்! நம்பலன்னா மாதவனை கேளு” என்றான் ராம் அவசரமாக.

“அவன் உங்களுக்கு சாட்சியா?” என்றாள் இன்னும் கண்டனப்பார்வையுடன்.

“ஹே ஃப்லோ போயிடும், கேளும்மா ப்ளீஸ்!” என்று பாவமாக முகம் வைத்து பரசுராம் சொல்ல, அமைதியாய் உட்கார்ந்தாள் சாதனா. அன்றைய நாளை நினைவு கூர்ந்தான் பரசுராம் எட்டு மாதங்களுக்கு முன்..

“பரசு, இன்னிக்கு வேலை முடிஞ்சு உனக்கு எதாவது ப்ளான்ஸ் இருக்கா?” மாதவன் பரசுராமிடம் கேட்க

“ஒன்னுமில்லைடா” என்றான் ராம்.

“அப்போ என்னோட வா, ஈசிஆர்ல ஒரு ரிசார்ட் இருக்கு. நானும் செல்வாவும் போறோம். வீக்கெண்ட் எங்களோட ஸ்டே” என்றான்.

“ப்ச்,  நீங்க போங்க.  நான் எதுக்கு இடையில?” என்று மறுத்தான் பரசுராம். செல்வா ராமிடம் மரியாதையாக நடப்பான். மாதவன் போல் நட்பு இல்லை, உதய் போல் நெருக்கமில்லை. அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்பவன், அண்ணனின் நண்பன் என்றளவில் நிறுத்திவிடுவான்.

“உன்னை நான் வான்னு சொன்னேன். வரியானு கேட்கல. வர நீ” என்று மிரட்டி அன்றிரவு ஈசிஆர் ரிசார்ட்டுக்கு மாதவன் பரசுராமை அழைத்துச் சென்றுவிட, அவர்களுக்கு முன்பே செல்வா அங்கே காத்திருந்தான். மூவரும் பொதுவாக பேசியபடி இரவு உணவை முடிக்க, ராம் உறங்கப்போய்விட்டான். மாதவனோ அவன் அறையோடு ஒட்டியிருந்த ப்ரைவேட் பால்கனியில் மதுவோடு இருக்க, பார்த்த செல்வாவிற்கு கோபம்.

“உன்னை எதுக்கு அழைச்சிட்டு வந்தது இங்க? நீ குடிக்கிற, உன் ப்ரண்ட் தூங்கபோய்ட்டாரு. உன்னையெல்லாம்” என்று அண்ணனைத் திட்டினான்.

“டேய்! போடா! நாளைக்குப் பேசிக்கலாம்” மாதவன் சொல்ல, செல்வா முறைத்தான்.

“அக்காவுக்கு என்ன வயசு தெரியுமா? உனக்கு எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிப்போச்சு. அவளை நினைக்க மாட்டியா நீ? இல்ல என்னை நம்பலையா” அண்ணன் முன் உட்கார்ந்து அழுத்தமாய்ப் பார்க்க,

பெருமூச்சுவிட்ட மாதவன், “ராம் நல்லவண்டா” என்றான்.

“நான் அவரை தப்பா ஒன்னும் சொல்லல, அவர் நல்லவர்னாலதான் ரூம் போட்டு தூங்க வைச்சிருக்கேன் இல்லை ரூம் போட்டு அடிதான்!” என்றான் கிண்டலாக.

“சரி, டைம் ஆகல! அவரை எழுப்பி பேசு” என்று செல்வா சொல்ல மாதவன் முறைத்தான்.

“ராம் டிரிங் பண்ண மாட்டான். இந்த விஷயம் பேசும்போது எப்படிடா? நான் ஒரு பெக் அடிச்சிட்டேன்” என்றான் மாதவன். செல்வாவோ அவனை நக்கலாகப் பார்த்து,

“அண்ணா! இதெல்லாம் எங்கிட்ட வேண்டாம். என் முன்னாடி நீ அவர்கிட்ட பேசுற. ஒன்னு அவர் அக்காவை விரும்பினா அதை ஒத்துக்கனும் இல்லை எதுக்கு அப்படி வைச்சு கண்ணு வாங்காம பார்க்கிறார்னு கேளு. நீ குடிச்சாலும் தெளிவா இருக்க, உன் ப்ரண்ட்க்கு வேணும்னா நான் கூல் டிரிங்க்ஸ், இல்லை  non alcoholic beer, மாக்டேல்ய்ஸ் கொண்டு வர சொல்றேன்.  தன் மனதை சரியாக கணித்த தம்பியை என்ன செய்வதென மாதவனுக்குத் தெரியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top