ஆறு மாதம் ஓடிவிட்டது. இன்னும் அவனுக்கு எல்லாம் நேற்று நடந்த உணர்வு.
சாதனா குளித்து ஜீன்ஸ், ஷார்ட் டாப்பில் வர ராம் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
“ரெடியாகி வாங்க ராம்” என்றதும் எழுந்து போனான்.
இருவரும் முதலில் naggar இல் இருக்கும் த்ரிபுரசுந்தரி கோவில் சென்றனர். நகர் கோட்டையில் இருந்து சில நிமிடங்களில் இருந்தது அந்த கோவில். மர பகோடா பாணியில் அமைந்திருந்தது அந்த பழமையான கோவில். நடந்து செல்லும்போது இருவருக்குள்ளும் பெரிய பேச்சுகள் இல்லை. அந்த முன்மதிய வேளையில் மிதமான வெயில்.
நீல வானம் வெண்மேகத்தினை சுமந்து ஓவியமாக இருக்க, மரகத்த பச்சையில் பொன்மஞ்சள் கலந்தது போல் இருந்தது மண்ணில் வீற்றிருந்த அந்த நெடிய மரங்கள்! அந்த சிமெண்ட் சாலையில் அருகருகே நடந்து சென்றவர்கள் த்ரிபுரசுந்தரியை தரிசித்தினர். மரத்திலே கட்டப்பட்ட அந்த கோவில் பழமையின் சுவடுகளை சுமந்திருக்க, அது ஒரு தெய்வீக உணர்வினை கொடுத்தது.
ராமும் சாதனாவும் தேவி தரிசனம் முடிந்து அங்கேயே படிகளில் உட்கார்ந்தனர்.
“கோவில் ரொம்ப பழமையா இருக்கறதால ஒரு டிவைன் ஃபீல் வருதுல்ல சது! எனக்கு நம்ம சென்னை கோவில் சிலதுல இந்த ஃபீல் இருக்கறதுல்ல, சிமெண்ட் வைச்சு பூசி என்னமோ மாடர்னா கட்டி வைச்சிடுறானுங்க. பார்த்தசாரதி கோவில் எல்லாம் ரொம்ப பழசு, அங்க போனாலே ஒரு அமைதி வரும்! இங்கேயும் நல்லாயிருக்கு. இந்த கோவில் எல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது, உன்னைத் தேடி வந்தததால் இதெல்லாம் பார்க்கிறேன்” மெல்ல புன்னகைத்து ராம் சொல்ல,
“பின்ன மேனேஜருக்கு ஆபிஸ் வொர்க் இருக்குமே” சாதனா நக்கலாகப் பேசினாள். ராம் அவளை முறைக்க, அவன் கையைப் பற்றியவள்,
“அன்னிக்கு நடந்த சண்டை தவிர வேற குறையே இல்ல ராம் உங்ககிட்ட! என்னோட இத்தனை நாள் கோவத்துக்குக் காரணம் கூட ராம் இப்படி பேசுவாரா, இப்படி நடப்பாரான்னு எனக்கு ஒரு அதிர்ச்சி! அதை விட்டுப்பார்த்தா.. ” என்று இழுத்தவள் அவன் முகம் பார்க்க, அவன் முகத்தில் என்ன சொல்வாளோ என்ற பதற்றம்.
“நம்ம இரண்டு பேருக்குள்ள நிறைய இடைவெளி, ஏன்னு எனக்குத் தெரியல ராம்! நீங்க எனக்கு எந்த குறையும் வைக்கல, நல்லா பார்த்துட்டீங்க! ஆனா ஒரு ஹஸ்பண்டா ஒரு உரிமை, இவ்வளவு ஏன்? நம்ம நாலு மாசம் ஒன்னா ஒரே வீட்ல, ஒரே ரூம்ல இருந்த ராம் வேற, இங்க நான் பார்க்கிற ராம் வேற! என் மேல தப்போ தோணுது, எனக்கு உங்களைத் தெரியலையே?! இல்லை நீங்க உங்களை எங்கிட்ட வெளிக்காட்டுற கம்ஃபர்ட் zone நான் கொடுக்கலயா?” என்று கேட்க
“சது! அதெல்லாம் இல்லைமா” என்றான் அவசரமாக.
“நோ! ஒரு நாள் நான் எனக்குக் காஃபி கலக்கினேன். நீங்க டீவி பார்த்தீங்க, நானா வந்து கேட்ட பின்னாடிதான் காஃபி ஓகே சொன்னீங்க. ஏன் எங்கிட்ட உரிமையா கேட்கல, அதுன்னு இல்லை. நிறைய விஷயம் நீங்களே செஞ்சுப்பீங்க. நான் ஆபிஸ்ல கார்ல போனா ஒன்னு எங்கூட கார்ல வரணும் இல்லை என்னை உங்களோட பைக்ல வரியா கேட்கனும். இரண்டுமே ஒரு நாளும் கேட்டதில்ல! அப்புறம் எனக்கு எப்படி தெரியும் உங்க மனசு, உங்க பத்து வருஷ பொட்டி கட்டின காதல்!” என்றபோது அவள் குரலில் ஆற்றாமை.
“நானே கேட்டிருக்கலாம், ஆனா எனக்குமே நீங்க விலகியிருக்க நெருங்க முடியல. அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடி, இல்லையா அப்புறமாச்சும் உங்களுக்கு என்னை பிடிக்கும் சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லல, எனக்கு உங்ககிட்ட ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தாலும் ப்ரண்ட் zone தாண்ட முடியல, உங்களுக்கு என் மேல நிறைய காதல் இருக்குல, எனக்காக நிறைய விட்டுக்கொடுக்குறீங்க இல்லையா? அப்போ ஏன் அதை சொல்லல, சொல்லாட்டா போது, எனக்கு உணர்த்தனும் இல்லையா?” சாதனாவின் கேள்விகள் நியாயமாக இருக்க பரசுராமுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
“இங்க வந்து என் வைஃப்னு நிக்க முடியுது இல்ல, அதை ஏன் ஊர்ல செய்யல? நம்மளோடது அரெஞ்ச் மேரேஜ்தான், ஆனாலும், கல்யாணத்தப்ப உங்களுக்கு என்னை முன்னாடியே பிடிக்கும்னு சொல்லியிருந்தா எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்திருக்குமே, நீங்க சொல்லாம இருந்தததால நீங்களும் என்னை மாதிரி சட்டுனு இந்த கல்யாண வாழ்க்கை ஏத்துக்க முடியாம தவிக்கிறீங்க நினைச்சுதான் நமக்குள்ள இவ்வளவு பெரிய இடைவெளி ராம்! மாதவன் என் தம்பியா இருக்கலாம், ஆனா ஒரு வைஃபா நான் முக்கியமில்லையா? என்னைப் பிடிக்கும்னா என்கிட்ட சொல்ல உனக்கு என்ன?” என்றாள் கொஞ்சம் கோபமாகவே.
“சது, அது உனக்கு அடாப்ட் ஆக டைம் கொடுக்க நினைச்சேன்” ராம் மெல்ல சொல்ல,
“டைம் கொடுத்தா போதுமா? முயற்சி எடுக்க வேண்டாமா? நீயா ஹனிமூன் ப்ளான் செய்வ நினைச்சா ஆபிஸ் வேலை இருக்குன்ற.. உன்னை! சரி இவருக்கு இப்போ இன்ட்ரஸ்ட் இல்லைனு நினைச்சேன் நான். ஒத்த ரோஸ் இல்லை, ஒரு ப்ரோபோஸல் இல்லை, அட்லீஸ்ட் கல்யாணம் பண்ணினதும் ஆச்சும் இதெல்லாம் செஞ்சுருக்கியா? இதுல இவருக்குக் கல்யாணம் ஆனதே நம்ப முடியலையாம்! பேசாம என் கழுத்துல இருக்க தாலியை உனக்குப் போடவா?” என்றாள் எரிச்சலாக.
இவனின் உடல் நிலைத் தேறவே இரு நாட்கள் இந்த பேச்சை அவள் எடுக்கவில்லை என்று புரிந்தது.
பரசுராம் அமைதியாக இருக்க, “ஓகே ராம்! போனது போகட்டும். இப்பதான் கல்யாணம் ஆச்சு வைச்சுப்போம், இனிமே இந்த கேப் இல்லாம வாழலாம்” என்றதும் ராமின் கைகள் பாவையின் கைகளை அழுத்திக்க்கொடுத்தன.
“உங்களுக்கு என்ன பிரச்சனை ஸ்டேட்டஸ் டிஃபரன்ஸா? எனக்கு அப்படி தோணல” சாதனாவே கேட்க,
“நிச்சயம் அதெல்லாம் இல்லை! இது வேற உனக்கு சொன்னா புரியாது! நீ எனக்கு ஒரு டீரிம் சது! என் மேலதான் தப்பு விடு!” என்றான்.
“சரி, ஆனா எனக்கும் நீங்க கல்யாணம் ஆன ஃபீல் கொடுக்கல! நிறைய சண்ட போடனும், அப்புறம் கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்து சமாதானம் செய்யணும். இப்படி எனக்கும் ஆசை இருக்கு” என்றதும்
“சொல்லியிருக்கலாமே?” ராம் ரசனையாக சொல்ல,
“சொல்லிட்டாலும் சீனியர் கிழிச்சிருப்பார்!” என்றாள் நக்கலாக.
“சரி போதும் சண்டை போட்டாச்சு, ரூம் போய் உன் ஆசை நிறைவேத்திடலாம்” என்றதும் இதழோரம் குவிந்த குறுஞ்சிரிப்போடு சாதனா எழுந்தாள்.
இருவரும் மதிய உணவினை ஹோம்ஸ்டேயில் முடித்துவிட்டு அங்கேயே வேடிக்கைப் பார்த்திருந்தார்கள்.
“அப்படியே ஒரு வாக் போலாமா?” என்று ராம் கேட்க
“எங்க?” என்றாள் சாதனா.
“சும்மா அப்படியே! வா” என்று அவன் எழ, இருவரும் அப்படியே நடக்க தொடங்கி விட்டனர். ராம் ஒரு மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் போவதைப் பார்த்தவன் சாதனாவின் கைப்பிடித்து அவளோடு அந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் மண்ணிலிருந்த சருகுகள் சலசலக்க நடந்தான்.
“ராம்! எங்கன்னு தெரியாம தெரியாத ஊருக்குள்ள ஏன் போகணும்?” என்று சது தடுக்க
“உங்கூடத்தானே சது, அங்க பார் டூரிஸ்ட் போறாங்க. சும்மா அப்படியே பாதை தெரியாத இடத்துல நடக்குறது கூட நல்லாயிருக்கும். வா” என்று இழுத்துக்கொண்டு போனான். அப்படியே அரை மணி நேரம் நடந்த பின் பார்த்தாள் ஒரு இடத்தில் மலைக்குச் செல்லும் படிக்கட்டுகள்.
இளவேனிற் காலம், இதமான வானிலை. முன்பாலை பொழுது! வெயிலின் வெள்ளி ரேகைகள் மரத்தினை முத்தமிட்டன!
அதைவிட கோவிலில் வைத்து சாதனா அவள் மனதை பேசியிருக்க புதிதாய் ஒரு உற்சாகம் பரசுராமிடம் புலர, மனைவியோடு அந்த இயற்கை சூழலில் நடப்பது அலாதி அனுபவம் அவனுக்கு.
அந்த புல்படிந்த கல்படிக்கட்டுகளைப் பார்க்கவும் சாதனா “வாவ்! ராம். மார்வலஸ்! செமயா இருக்கு” என்றாள்.
“சது, ஓடாத! பார்த்து படி வழிக்கினாலும் வழுக்கும். பார்த்து நட” என்று கத்தியபடி பரசுராமும் மனைவியின் பின் ஓடினான். அந்த படிகட்டுகளில் ஏறிச்சென்றால் மேலே கிருஷ்ணர் கோவில்.
“அட இங்க கோவில் இருக்கு ராம்” என்று சாதனா சந்தோஷமாய் சொன்னவள், அந்த படிக்கட்டுகள் முடிந்த இடத்தில் மூச்சு வாங்க அமர்ந்துவிட, சிரிப்புடன் பரசுராமும் அவளருகே உட்கார்ந்தான்.
“ஏன் ஓடி வந்த?”
“என்ன இருக்குன்னு பார்க்கத்தான்! எவ்வளவு அழகா இருக்குல்ல, மலை பக்கத்துல, பார்க்கவே சந்தோஷமா இருக்கு” என்றவளிடம்
“கோவிலுக்குப் போலாம் வா” ராம் அழைக்க,
“கூட்டமா இருக்கு, கொஞ்ச நேரம் அப்புறம் போகலாம்” என்றவள்
“சூப்பரான இடமா இருக்கு! இங்க சொல்லுங்க உங்க காதல் கதையை, நானே என் காதால கேட்டிக்கிறேன். நீங்களா சொல்லவே மாட்டீங்க” என்றாள் சலிப்பாக.
“சொல்லக்கூடாது இல்லை, சொல்லவும் பெருசா ஒன்னும் இல்லை. ஒரு பொண்ணு அவ தாத்தா தம்பிங்க கூட காலேஜ் சேர வந்தா. என் கண்ணுக்கு பசுமையா தெரிஞ்சா! அவளை எனக்கு அப்ப கொஞ்சம் பிடிச்சது, அப்புறம் அவ தம்பியோட ப்ரண்ட் ஆகிட்டேன். அவனைப் பார்க்க வரப்ப அவளை சைட் அடிப்பேன்” என்றதும் சாதனாவின் விழிகள் விரிந்தன.
“சைட்டா? நீங்களா?”
“சைட் அடிக்கிறேனு சொல்லிட்டு அடிப்பாங்களா? அதெல்லாம் பார்ப்பேன். அப்புறம் நீ உன் தம்பிங்களைப் பார்த்துக்கிறது பிடிக்கும். உன்னோட எப்பாவாச்சும் பேச வாய்ப்பு வரும்! என்னவோ உன்னைப் பார்க்கிற நேரம் எனக்குள்ள ஒரு புது எனர்ஜி! ஆனா ப்ரண்டோட சிஸ்டர் உங்கிட்ட லவ் சொல்ல முடியல, அதைவிட சின்னப்பொண்ணு. படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் சொல்லாலம் நினைச்சேன், ஆனா அந்த சின்னப்பொண்ணு எனக்கு முன்னாடி லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா, அதுவும் என் ப்ரண்ட் ப்ரதீப்பை!” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் நிறுத்தி சாதனாவின் முகம் பார்க்க, அவள் முகம் சாதாரணமாக அவன் காதலை கேட்கும் ஆவல் மட்டுமே சுமந்து இருந்தது.