இடைவெளி 5(1)

இரண்டு நாட்கள் கடந்தன, பரசுராமின் உடல்நிலைத் தேறியிருந்தது. சாதனாவுக்கும் அவனுக்கும் அதிகம் பேச்சில்லை என்றாலும் சாதனா அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். பரசுவும் பேசும் நிலையில் இல்லை, சோர்வில் உறங்கிக்கொண்டிருந்தான்.  அவள் அறைக்கே அவனையும் மாற சொல்லிவிட்டாள்.

பரசுவின் காதல் குறித்த கேள்வி மனதோரம் இருக்க, அதைப் பற்றி இன்னும் விரிவாகப் பேசவில்லை. அப்போதுதான் கண்விழித்தான் ராம். சாதனா முன்பே எழுந்தவள், அந்த இளவேனிற் காலையை கையில் காங்க்ரா டீயுடன் ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் அறையின் பால்கனி வழியே ஹிமாலய மலைத்தொடரின் ஒருபகுதியான ஹிமாச்சல் தெரிந்தது. பால்கனியில் இருந்த மர நாற்காலியில் உட்கார்ந்து அந்த மேகங்களைப் பார்க்க பார்க்க மனத்தில் ஒரு குளுமை! அமைதியாக உணர்ந்தாள்.

அத்தனை உயரமான மலைகள்! அதனைத் தொட்டு செல்லும் எழில் மிகு மேகங்கள், அதிக குளுமையும் இல்லாது அனலும் இல்லாது இடையே ஒரு இதமான வானிலை! அவள் வாழ்க்கை போல! திகட்டும் காதல் இல்லை, அதே நேரம் தீரா கோபமும் இல்லை!

 இடைவெளியோடு ஒரு நிலை! இருவருமே நெருங்கவும் இல்லை, விலகவும் இல்லை. அது குறித்த வருத்தங்கள்,  யோசனைகளும் இல்லாமல் ஒரு அமைதி!!!

எழுந்து பாத்ரூம் சென்று வந்த பரசுராம், மெத்தையில் உட்கார்ந்தான். அவன் உட்காரவும் சாதனா சூடாய் டீயை கெட்டிலில் இருந்து கப்பில் ஊற்றி அவனிடம் நீட்டினாள். மீண்டும் இயற்கையை ரசிக்க சாதனா பால்கனி செல்ல, பரசுராமும் எழுந்து அவள் பின் சென்றான். அவளருகே நின்று டீயைப் பருகினான்.

அவனுக்குமே அந்த அமைதி பிடித்திருந்தது, லேசான பனி இருக்க அந்த காலை வேளையில் மக்கள் எல்லாம் சாலைகளில் நடைபயிற்சி மேற்கொண்டனர். சாதனாவைப் பார்த்தபடி திரும்பிய பரசுராம்,

“சது!  நம்ம மேரேஜ் ஆகி ஹனிமூன் எங்கேயும் போகல, இங்க வந்துட்டோம். இப்ப ஃபீவர் இல்லை, இன்னிக்கு வெளியே போலாமா?” என்று கேட்க, ஒரு புன்னகையுடன் கணவனைப் பார்த்தவள்,

“போலாம் ராம்” என்றாள். சது உடனே ஒத்துக்கொள்ள, ராமிற்கு ஆச்சரியம்!

“நிஜமாவா?”

“இதுல என்ன இருக்கு? வெளியே போலாமா கேட்டீங்க, எனக்கு ஓகே சொன்னேன்” என்றாள் இயல்பாக. அவன் பார்வையைப் படித்தவள்,

“ஹனிமூன் போகலாமான்னு கூட நீங்க முன்னாடி கேட்டிருந்தா நான் அப்பவும் ஓகே சொல்லியிருப்பேன்” என்று சொல்லி அவனை அதிர வைத்தாள்.

இவனுக்கு ஏனோ  முன்பு அவளிடம் கேட்கவே தோன்றவில்லை.

“அந்த டைம் நம்ம ஆபிஸ்ல புது ப்ராஜக்ட் எடுத்திருந்தோமே, அப்ப கூப்பிட்டா வந்திருப்பியா நீ?” ராம் அதுதான் காரணம் என்பது போல் கேட்க,

“ஆபிஸ்னா வொர்க் இருக்கத்தானே செய்யும். நீங்க ஹனிமூன் ப்ளான் பண்ணிட்டு சொல்லியிருந்தா வந்திருக்க போறேன், இதோ இப்போ மாதிரி! ஆபிஸ் வொர்க் முக்கியம்னா மாதவனோ செல்வாவோ பார்த்துப்பாங்கதானே? இப்பவும் நான் இங்க இருந்து ரொம்ப பார்க்கிறதில்லையே, உங்களுக்குகே தெரியும்! மாதவனுக்குத்தான் ஆபிஸ்ல என்னை விட பவர் அதிகம்னு!” என்று சாதனா விளக்க விளக்க, இவனுக்குத்தான் விளக்கெண்ணெய்யும் வேப்பெண்ணையும் காம்போவில் வாங்கிக் குடித்த மனநிலை!

அதை உறுதி செய்யும் வகையில் சாதனா, “எப்பவும் மேனேஜராவே யோசிச்சா எப்படி? கொஞ்சம் ஹஸ்பண்டா யோசிக்கலாம் ராம்” என்று கிண்டலாய் சொன்னாள். ராமோ மானசீகமாக செருப்பால் அடித்தவன், நிஜத்தில் தலையில் தட்டிக்கொண்டான். சாதனாவுக்கு அவன் முகபாவனையில் சிரிப்பு வர, வாய்விட்டே சிரித்தாள்.

அவளின் சிரிப்பில் இன்னும் வெட்கமாகிப்போனது ராமிற்கு!

“சது! ப்ளீஸ்” என்னமோ அவள் முகம் கூட பார்க்க முடியவில்லை. கலைந்து சென்ற மேகம் பார்த்தவன்

“அப்படியே ஹிமாலயாஸ்தான்! காவி வேட்டிதான்!” என்று முனங்கினான்.

“மாதவன் எப்பவும் சொல்லுவான், சீனியர் எல்லாத்திலேயும் சின்சீயர்னு! எனக்கு நமக்கு மேரேஜ் ஆன பின்னாடிதான் அதோட தீவிரம் புரிஞ்சது, சீனியர் ஆபிஸ் விஷயத்துல சின்சியர்னு முன்னாடி தெரியும், பட் எவ்வளவு சின்சியர்னு இப்ப புரியுது!” என்று அவனை கலாய்த்தாள்.

ராமோ, “சது! உனக்கு ஒரு உண்மை சொல்லவா, நமக்குக் கல்யாணமாகிடுச்சுனு நான் உணரவே நிறைய நாள் ஆகிடுச்சு, ஏன் இப்போ கூட இது  கனவோ கலைஞ்சிடுமோன்னு அடிக்கடி தோணும்! அப்படியிருக்கப்ப எனக்கு ஹனிமூன் யோசனை எல்லாம் நிச்சயமா இல்லை! நீ என்னோட இருக்கன்றதே எனக்கு அவ்வளவு சந்தோஷம், நிம்மதி!” என்றான் உணர்ந்து.

“நீங்க ஃபீல் செய்யலனா போது ராம், அட்லீஸ்ட் எனக்கு அந்த ஃபீல் கொடுங்களேன்” என்றவள் ” நான் ரெடியாகுறேன்” என்று பாத்ரூம் சென்றுவிட்டாள்.

ராம் அங்கேயே நின்றான். சாதனாவிடம் சொன்னது போல், அவளுடனான திருமணம் அவனைப் பொருத்தவரை எட்டாவது அதிசயம்! எட்டாத அதிசயம்!!! கிட்டாது என்று அவன் எட்ட நின்று ஏங்கிய அதிசயம்!

ஏதோ ஒரு ஆவல், எப்போதும் அதன் நினைவில் உழன்று, அதனையே உருகி உருகி உள்ளத்தில் உன்மத்தமாய் சுமந்து, கிடைக்கவே கிடைக்காது என்று தேற்றி, விலகி விடும்போது இந்த பிரபஞ்சம் அந்த ஆவலை உனக்குத்தான் என்று கொடுக்கும்போது வருமே ஒரு உணர்வு!!

அப்படித்தான் சாதனா ராமிற்கு! அவளுடனான  திருமணம் அப்படித்தான்! நிஜமா?  நிழலா?? நீண்ட கனவா? கரையும் கானலா?? என்று அவனைத் தொடரும் கேள்விக்கு இடையில் அந்த உறன் உண்மையை உணரவே அவனுக்கு வெகு நாட்கள் ஆகிவிட்டன.

ஒரு கனவுதான்! எனக்கு நடந்துவிட்டதா? என்றே கேள்வியே அவனை வெகு நாட்கள் துரத்தியது. இப்போதும் கூட சாதனா முதன்முதலில் அவனிடம் திருமணம் குறித்துப் பேசியது மனத்தில் ஓடியது.

சில மாதங்களுக்கு முன், சாதனாவின் தம்பிகளுக்கு பரசுவின் காதல் தெரிந்துவிட அவர்கள் தாத்தாவிடம் பேசி, பின் சாதனாவிடமும் பேசிவிட, அவள் பரசுராமிடம் பேச  நினைத்தாள். பரசுராமை அவள் அறையில் சந்தித்தாள் சாதனா.

சாதனா ஒரு ரெடிமேட் புடவை அணிந்திருந்தாள். இடையில் ஒரு ‘பெல்ட்’. ஜப்பான் satin saree. ராமை அவள் அலுவல் ரீதியாக சந்திப்பது வழக்கம்தான் என்பதால் இன்றும் அப்படி நினைத்தான்.

“உட்காருங்க ராம்” என்று சொல்ல, பரசுராம் உட்கார்ந்தவன் “எஸ் மேம்” என்றான்.

“இது பெர்சனல் மீட்! சோ பெயர் சொல்லியே கூப்பிடுங்க சீனியர்” என்றாள் சாதனா. ஆனால்,  அவள் பெர்சனல் மீட் என்றதிலேயே இவனுக்குப் பகீரென்றது. மாதவன் சாதனாவிடம் பேசிவிட்டான் என்று விளங்கியது.

பரசுராம் ஒன்றும் பேசாமல் சாதனா என்ன சொல்லவருகிறாள் என்று கவனித்தான். ஏதோ ஒரு வருத்தத்தில், முதல்முறை குடித்தத்தில் உளறிவிட்டான். பின் அதனை நினைக்கவில்லை, சாதனாவிற்கு அவள் வீட்டினர் வெகு விமரிசையான வரனாகவே பார்ப்பார்கள் என்று நினைத்தான்.

எதிர்ப்பார்த்து ஏமாறும் முட்டாள் இல்லை அவன்! கிடைக்காது என்று முடிவெடுத்து மனதினை தேற்றும் பக்குவம் அவனிடம் நிறைய உண்டு! அதுதான் அவனை வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விடாது பயணம் செய்ய வைப்பதும் கூட!

“உங்களுக்குத் தெரியுமா தெரியல, எனக்கு அலையன்ஸ் பார்க்குறாங்க வீட்ல. மாதவன் லாஸ்ட் வீக் எங்கிட்ட உங்களைப் பத்தி சொன்னான், உங்க வீட்ல உங்களுக்குப் பார்க்கிறாங்கன்னு. அவனுக்கு எப்பவும் நீங்கன்னா ஸ்பெஷல்! என்னை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு அவன் நம்புறான்! அது எனக்குமே தெரியும்! சீனியரை நானும் இத்தனை வருஷமா பார்க்கிறேனே” என்று சின்ன புன்னகையுடன் சொன்னவள்,

“தாத்தாவுக்கும் மாதவனுக்கும் சரி ஸ்டேட்டஸ் எல்லாம் விட என்னோட சந்தோஷம்,  நான் நல்லாயிருக்கனும் இதான் முக்கியம்! கேரெக்டர்! அது ரொம்ப ரொம்ப முக்கியம்! என்னைப் பொருத்தவரை என்னை கல்யாணம் செஞ்சுக்கப்போறவர் என்னை எனக்காக அஸ் எ பெர்சனா ஏத்துக்கனும்! சாதனா ஒரு பணக்கார வீட்டுப்பொண்ணுன்னு நினைச்சு பார்க்க கூடாது! எங்க ஸ்டேட்டஸ்ல இருக்கவங்க ஈகுவள் அந்தஸ்துன்னு பார்க்கிறாங்க, இல்லை கம்மியா பார்த்தா எங்க பணம் அதான் காரணம்!”

அவள் விளக்கி பேச, விலகி நிற்பவனுக்கு கடுப்பாகியது.

“சாதனா! எதுனாலும் நேரடியா பேசு. எனக்கு அப்படி எந்த எண்ணமுமில்லை, மாதவங்கிட்ட நான் பேசுறேன்” என்றான் பரசுராம் பட்டென்று. அவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கிரகிக்க முடியவில்லை.

“எனக்குத் தெரியும்! நீங்க என்னை அப்படி பார்த்ததில்லைன்னு, ஆனா மாதவன் சொல்லவும் எனக்குக் கன்சீடர் பண்ணலாம்னு ஒரு தாட். கன்சீடர் பண்ணலாம்தானே?” என்று கேட்டு அவன் பிபியை எகிற வைத்தாள்.

“நீங்க என்னை உங்க பாஸா பார்த்தாலும் கூட என்னை மரியாதையா நடத்துவீங்க, எப்படி சொல்ல இவ ஒரு பொண்ணு, அப்படியான பார்வையைக் கீழா கொடுக்காம என்னோட திறமையை பாராட்டிப் பார்ப்பீங்க! காலேஜ் டேஸ்ல கூட அப்படித்தான்!” என்று சொல்ல சொல்ல

‘உன்னை சைட் அடிச்சது உன் உடன்பிறப்புக்கெல்லாம் தெரிஞ்சிருக்கு, உனக்குத் தெரியல. நல்ல bossமா நீ!’ என்று மனத்தில் நினைத்தான்.

“எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருக்கு ராம், இப்போ யாராச்சும் எங்கிட்ட வந்து உங்களை மாப்பிள்ளையா சூஸ் பண்ணலாமா கேட்டா உடனே ஓகே சொல்லிடுவேன், இப்போ எனக்கே மாதவ் கேட்கிறான்! எனக்கு ஓகேதான்” என்றாள் உடனே. பரசுராமால்தான்  பாவை பேச்சினை நம்ப முடியவில்லை.

அவன் பார்வையில் கேள்வி இருக்க, “ராம்! இது சுயநலமான முடிவுதான்! எனக்கு என்னோட தம்பிங்க எப்பவும் முக்கியம்,  நான் வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சாலும் அவர் என் தம்பிங்க கிட்ட அன்பா இருப்பார். அது வேற, என்னால அந்த அன்பு. உங்க விஷயத்துல உங்களுக்கு அவங்க மேல தனிப்பட்ட வகையில அன்பிருக்கு. அதுவும் உதய், சின்னதுலயே அம்மாவை இழந்துட்டான். எங்க எல்லோருக்கும் முதல்ல யார் முக்கியம்னா அவனைத்தான் சொல்வோம். உதய்க்கும் உங்களுக்கும் இருக்க அந்த உறவு இன்னும் தொடரனும்னு எனக்கு ஆசை!”

“இதெல்லாம் விட என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும். எனக்கு உங்ககிட்ட மறைக்க பெரிய ரகசியமெல்லாம் இல்லை” என்று தோளை குலுக்கியவள் அவனைப் பார்த்தாள்.

ராம் உடனே எல்லாம் மகிழவில்லை. அவனுக்கு அதனை நிஜமென நம்பவே நாட்கள் ஆகுமே!

“சாதனா! நான் உன் ஆபிஸ் மேனேஜர்தான் இப்ப, அண்ட் உன் வீட்டோட என் உறவு எப்பவும் நல்லா இருக்கும். ஆனா வீட்டோட எல்லாம் என்னால வர முடியாது.   நான் ஒரு சிங்கிள் பெட் ரூம் ப்ளாட்ல ரெண்ட்க்கு இருக்கேன். அதான் என் இடம், நீ எப்படி வளர்ந்த, வாழ்ற உன்னோட ஸ்டேட்டஸ் வசதி எல்லாம் எனக்குத் தெரியும். உன்னால என் கூட இருக்க முடியுமா யோசி!” என்றான் நிதானமாக.

“நீங்க வீட்டோட வரணும்னு நான் எங்கேயும் சொல்லவே இல்லை ராம், அதுக்கு நான் ஒத்துக்கிட்டாலும் கூட மாதவன் ஒத்துக்க மாட்டான். எனக்குமே என் ஹஸ்பண்ட் செல்ஃப் ரெஸ்பெக்ட் ரொம்ப முக்கியம்! நீங்க என்னை மதிக்கனும் நினைக்கிற நான், அதேதான் உங்களுக்கும் கொடுப்பேன். நீங்க யோசிச்சு சொல்லுங்க ராம்! நீங்க வேண்டாம் சொன்னாலும் பிரச்சனையில்ல” என்றாள் தெளிவாகவே.

பரசுராமிற்கு அப்படி இல்லையே! அவள் வேண்டும் என்றதுதான் ஒரு காலத்தில் அவனின் காதலின் ஆவலாக இருந்தது! இன்று அதே ஆவல் அவன் முன்பு கேள்வியாக நிற்கிறது. கேட்கவே இனிக்கத்தான் செய்தது. அப்புறமென்ன? அடுத்த சில மாதத்தில் திருமணம்.

error: Content is protected !!
Scroll to Top