ராம் விழித்துக் கொண்டு நின்றான். ஏதோ ஒரு கோபத்தில் ஆதங்கத்தில் பேசிவிட்டான். அதுவும் வேறு யாரென்றாலும் பேச்சில் கவனமிருந்திருக்கும். மாதவன் அவனின் நெருங்கிய தோழன். உயிர்த்தோழன் என்றும் கூட சொல்லலாம், இருவருக்கும் பத்து மாதங்கள் மட்டுமே வித்தியாசம் என்பதால் ஒரு வருடம் அவன் முன்னே படித்தாலும் நட்பில் அதெல்லாம் கணக்கில் இல்லை.
“பேசு மாமா” என்று மாதவன் சொல்ல,
சாதனாவும் பார்த்துதான் நின்றாள்.
“பேசுங்க, உங்க ப்ரண்ட் கிட்ட என்னை இன்னும் நல்லா திட்டுங்க ராம், நேர்ல அதெல்லாம் சொல்றதில்லை” என்று கைகட்டிக்கொண்டு பார்க்க,
“சது, ஜஸ்ட் அது..” என்று ராம் தடுமாறினான், சாதனா உடனே
“போதும் உங்க விளக்கமெல்லாம். குட் நைட்!” என்று சொல்லி சென்று கதவை அடைத்தாள். இவன் மனம் கேளாமல் கதவைத் தட்ட, உள்ளிருந்தே,
“ராம், இப்படி செஞ்சா அடுத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸ், சோ ரூம் போங்க. நாளைக்குப் பேசிக்கலாம்” என்று சொல்லவும் வேறு வழியின்றி பரசுராம் அறைக்குள் வந்தான்.
“என்னய்யா போனை வைச்சுட்டு பேச மாட்டேங்கிற?” என்று மாதவன் கேட்க,
“பேசித்தான் டா இப்படி தனியா இருக்கேன்” என்று சலிப்பாக சொல்ல, மாதவன் வாய்விட்டு சிரித்தான்.
“சிரிக்காதடா மனசாட்சி இல்லாத மலைக்கொரங்கே! யாராவது இப்படி ஒரு ஹில் ஸ்டேஷன் வந்து தனியா ரூம் எடுத்து தங்குவாங்களா அதுவும் பொண்டாட்டியை பக்கத்து ரூம்ல வைச்சிட்டு” என்று கடுப்பில் கேட்க,
“இருக்காங்க மாப்ள” என்றான்.
“யார்டா அந்த மடையன்?” என்று பரசுராம் கேட்க
“நீதான்! அதுவும் எட்டாயிரம் கட்டி தனியா தனிமூன் கொண்டாடும் தானைத் தலைவன் எங்க பரசுராம்” என்று கிண்டலாய் மாதவன் சொல்ல,
“மாதவா!” என்று பல்லைக் கடித்தான். அதில் பரசுவின் கோபம் புரிந்தவன்
“விடு, என்ன சொன்னா அவ?” என்று கேட்க
“குட் நைட் சொன்னா” என்றதும்
“ஓகே நல்ல சகுனம்தான், பேட் நைட்னு சொல்லலதானே? ரிலாக்ஸ்! இப்ப தூங்கு. அதெல்லாம் சது உன்னை சும்மா டீஸ் பண்ணிருப்பா., இதெல்லாம் பெருசா எடுக்க மாட்டா” என்று நண்பனை சமாதானம் செய்தான் மாதவன். மனத்தில் சாதனாவோடு பேச வேண்டும் என்று நினைத்தான்.
ஆனாலும், பரசுராமின் மனம் ஆறவே இல்லை. சாதனாவைப் பார்த்தாலே தடுமாறிப் போகும் நெஞ்சையும் தடம் மாறும் பேச்சையும் என்ன செய்யவென புரியவில்லை.
அத்தனை காதல் இருந்தும், அவளிடம் தன்னைப் புரியவைக்க முடியாமல் மனமெல்லாம் அவனுக்கு அழுத்தம். எப்படியோ விடிய விடிய யோசித்து, குழம்பி, வருந்தி இறுதியில் உறங்கிப்போனான். காலையில் காய்ச்சலுடன் எழுந்தான்.
அடுத்த நாள் பரசுராமால் எழவே முடியவில்லை. உடல் சோர்வில் அசதியாக இருக்க, உறங்கிக் கொண்டே இருந்தான். அவனாகவும் எழவில்லை, யாரும் எழுப்பவுமில்லை.
சாதனா வழக்கம்போல் எழுந்து எல்லா வேலையும் செய்தவள் கீழே சென்று காலை உணவை முடித்தவள், அவளின் அலுவலக வேலையைப் பார்ப்பதற்காக அங்கிருக்கும் working area’வில் உட்கார்ந்துவிட்டாள். நேரம் பார்க்க பதினொன்றாக சில நிமிடங்கள். இன்னேரம் தன் பின்னே வந்திருப்பானே கணவன் என்று மனத்தில் எண்ணம் ஓடினாலும் உறங்கிக்கொண்டிருப்பான் என்று நினைத்து அவள் வேலையில் கவனமானாள்.
பரசுராமன் அலைப்பேசி சத்தத்தில் எழுந்தவனுக்குக் கண்களைத் திறக்க முடியவில்லை. அவ்வளவு எரிச்சலிருக்க, மீண்டும் மெத்தையில் படுத்தவாறே
“ம்ம்” என்றான் போனில்.
“மாமா! என்னாச்சு?” என்று மாதவன் கேட்க
“ஜூரம்டா” என்றான் முனகலாய்.
“டேப்லேட் போட்டியா?”
“ம்ஹூம்” என்ற ராமால் பேசக் கூட முடியவில்லை.
“ராம்!! பேசு, மாமா என்ன செய்யுது?” மாதவன் பதறித்தான் போனான் பரசுராமின் குரலில்.
மாதவனுக்குப் பரசுராம் உயிர்த்தோழன்! அவன் அக்கா கணவன் எல்லாம் பின்னர்தான், அதனால் உள்ளம் பரபரத்தது. கூடவே சகோதரி மீது கோபம் வந்தது.
“சது எங்க?” என்று கேட்க,
“தெரில மாதவா, எனக்கு முடியல. வைக்கிறேன்” என்று சோர்வாக சொன்னவன் போனை வைத்துவிட்டான்.
மாதவன் உடனே சாதனாவுக்கு அழைத்துவிட்டான்.
“சொல்லுடா” தம்பியிடம் சகஜமாகப் பேச, மாதவனோ கொதித்துவிட்டான்.
“ஏய்! உனக்குப் பிடிக்கலன்னா நீ கல்யாணம் வேண்டாம் சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு இப்படி நீ பரசுவை டார்ச்சர் பண்ற?” என்று கத்தினான்.
“மாதவ்! என்னாச்சு சொல்லு கத்தாம” சாதனா பொறுமையாக அவனை அதட்ட,
“என்ன சொல்லணும்? நீதான் சொல்லணும்! அவனுக்கு அவ்வளவு ஃபீவர்..” என்று மாதவன் சொல்லும்போதே இடையில் நிறுத்திய சாதனா
“ஃபீவர் ராமுக்கா?” என்று கேட்டாள்.
“அது கூட தெரிஞ்சிக்காம நீ அங்க என்ன கிழிக்கிற சாதனா? அவன் இப்ப உன் ஹஸ்பண்ட், நம்ம கம்பெனி மேனேஜர் இல்லை. இப்படி நீ அக்கறை இல்லாம இருக்க”
“அங்க இருக்க உனக்குப் போன் செஞ்சு உன் ப்ரண்டுக்கு சொல்லத்தெரியுது. இங்க இருக்க எனக்கு சொல்லாம எப்படி தெரியும்?” சாதனாவும் எரிச்சலாகக் கேட்டாள்.
“அவன் ஒன்னும் எனக்கு சொல்லல, நானே அக்கறையில் போன் செஞ்சேன்” பல்லைக் கடித்துக்கொண்டு மாதவன் பேசியதில் அவன் கோபம் நன்றாகத் தெரிந்தது சாதனாவுக்கு.
மாதவன் அவளை விட சில மாதங்கள் இளையவன் என்றாலும் கூட, பல சமயங்களில் அண்ணனாகத்தான் நடப்பான். பரசுராமுக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆழ்ந்த நட்பு அவளுக்குத் தெரியும். அதன் காரணமாகவே தன் தம்பியின் கோபம் என்று புரிந்தவள்,
“சரி நான் பார்க்கிறேன்” என்று சொல்ல,
“நீ பார்த்து கிழிச்ச!” என்றான் எரிச்சலுடன். மாதவனுக்கு பரசுராமால் பேசக்கூட முடியவில்லை என்பதை தாளமுடியவில்லை.
இவளை அத்தனை காதலிக்கிறான், இவள் என்னவென்றால் அவனுக்கு முடியவில்லை என்பது கூட தெரியாது இருக்கிறாளே என்ற ஆத்திரம், ஆதங்கம் அவனிடம்.
“மாதவா! என் ஹஸ்பண்டைப் பார்க்க எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பார்” சாதனாவும் கோபத்தில் பேச
“என்ன தெரியும் உனக்கு? ஒரு மண்ணும் தெரியாது! அவன் பத்து வருஷமா உன்னை நினைச்சு சுத்தினது கூட முன்னாடி தெரியல, இப்போ கூடவே இருக்கான் முடியலன்னு தெரிஞ்சிக்கல. பார்ப்பாங்களாம்” என்று மாதவன் சொல்ல
“வாட்? பத்து வருஷமா?” என்று சாதனா அதிர்ச்சியானாள்.
“ஓஹ், வண்டர்ஃபுல்! அப்போ அதுவும் இன்னும் உனக்குத் தெரியல, என்னதான் இரண்டு பேரும் வாழறீங்க எனக்குத் தெரியல, அவன் லைஃப் ஸ்பாயில் ஆகுதா இல்லை உன் லைஃப் ஸ்பாயில் ஆகுதா தெரியல சது” வருத்தமாக மாதவன் பேச
“இப்ப உன்னோட நான் சண்டை போடற மூட்ல இல்லை, நான் ராமைப் பார்க்கனும், பை” என்று போன்காலைக் கட் செய்தவள் அவளின் லேப்டாப்பை மூடிவிட்டு அந்த ஹோம்ஸ்டே ஓனரிடம் சென்று பேசினாள்.
பின் கணவனைக் காண அவன் அறைக்குச் சென்று அழைக்க, அவன் வரவே இல்லை. போன் செய்ய,
“மாதவா, முடியல சொல்றேனே” எரிச்சலும் சோர்வும் கலந்த அவன் குரல் சாதனாவுக்கு வருத்தம் தர,
“நான் சாதனா” என்றவள்,
“உங்க ரூம் கிட்ட நிக்கிறேன், டோர் ஓபன் பண்ணுங்க” என்று சொல்ல, பரசுராமன் முயன்று எழுந்து வந்து கதவைத் திறந்தான். கதவைத் திறந்தவன் சாதனாவைப் பார்க்கக் கூட இல்லை, மீண்டும் சோர்வாக மெத்தையில் படுத்துவிட்டான்.
சாதனா அவன் அருகே வந்து உட்கார்ந்தவள் நெற்றியைத் தொட்டுப்பார்க்க, நன்றாக சுட்டது. அவள் அறைக்குச் சென்று மாத்திரை எடுத்து வந்தவள், கீழே சொல்லியிருக்க கணவனுக்கென பூஸ்ட் வர, அதனைக் குடிக்க செய்து மாத்திரையும் கொடுத்தாள். அங்கேயே அவன் அறையில் இருந்த பால்கனியில் உட்கார்ந்து அலுவலக வேலையை செய்த சாதனா கணவன் மேல் கண் வைத்திருந்தாள்.
அவனுக்கு இருந்த களைப்பில், காலை உணவை வேண்டாம் என்று சொல்லியிருக்க, மதிய உணவிற்கு ரசம் கேட்டிருந்தவள் அது வரவும் கணவனை எழுப்பினாள்.
“முடியல சது” என்று அவன் சோர்ந்தபடி சொல்ல,
“சாப்பாட்டு ரெஸ்ட் எடுங்க ராம்” என்று அவனை எழுப்பிவிட்டாள். அவனும் மெல்ல எழுந்து பாத்ரூம் சென்று வந்தான். பரசுராமிடம் சாப்பாடு இருந்த கிண்ணத்தை நீட்டிவிட்டு சாதனா அவன் அருகே உட்கார்ந்துகொண்டாள். கொஞ்சம் சாப்பிட்டவன், மனைவியைப் பார்த்தான்.
“நீ சாப்பிடலயா சது?” என்று கேட்க,
“உங்களுக்கு என் மேல டன் டன்னா அக்கறை இருக்குனு தெரியும். நடக்கவே முடியல, முதல்ல சாப்பிடுங்க ராம்!” என்றாள் அதட்டலாக.
பரசுராம் இவளுக்கு என்னவாகிற்று என்று பார்த்தாலும், பசி மிகுதியாக இருக்க, அமைதியாக சாப்பிட்டான்.
சாதனாவுக்கோ மாதவன் சொன்னதே மனத்தில் ஓடியது.
‘இவன் என்னை பத்து வருடமாக காதலிக்கிறானா? அப்படியென்றால்.. கல்லூரி காலத்திலேவா?’ என்று நிறைய ஆச்சரியங்கள், அதை விட திருமணமாகிய பின்னும் அவன் அதை ஏன் சொல்லவில்லை? என்ற கேள்வி அவளைக் குடைந்தது.
மாதவன் பேச்சு சுருக்கென்றது, நான் என் கணவனை சரிவர பார்க்கவில்லையோ என்ற குற்றவுணர்ச்சி. இருவருக்குள்ளும் திருமணமான பின்னும் பெரிதான நெருக்கங்கள் இல்லை, இவள் அவன் நெருங்குவான் என காத்திருக்க, அவனோ இவளை நெருங்க அத்தனை யோசித்தான்.
நட்புணர்வுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்தனர், இருவருமே நெருக்கம் கூட்ட முயலவில்லை, ஒரு கட்டத்தில் அவன் நெருங்கிய போதும், பிணக்காகி இப்போது பிரிவு!
சாதனா பரசுராமைத்தான் பார்த்தாள். கிட்டத்தட்ட பத்து வருடமாக அவனைத் தெரியும். ஆனால், கணவனாகி விட்ட பின்னும் அவனை புரிந்துகொள்ளவே இல்லை. இவன் மனத்தில் நான் இருந்தால் சொல்வதற்கு என்ன, மாதவனிடம் சொல்லத் தெரிகிறது என்னிடம் சொல்லவில்லை என்று கோபம்.
ராம் உண்டதும், மாத்திரை கொடுத்தவள் அவனை உறங்கச் சொன்னாள். அன்று முழுவதும் அவனுடனே இருந்தாள். இரவும் உணவு முடியவும் மனைவி போய்விடுவாள் என்றே நினைத்தான்.
அவள் அறையை லாக் செய்துவிட்டு இவன் அறைக்கு வர, பரசுராமின் பார்வையில் ஆச்சர்யம்! சண்டை வந்த பின் முதன்முறையாக இவனுடன் தங்கப்போகிறாள். காய்ச்சல் இல்லாமல் இருந்திருந்தால் குத்தாட்டம் போட்டிருப்பான்.
அவன் அருகே வந்தவள், “தள்ளுங்க” என்று சொல்ல, அவனோ இன்னும் அசையாது சாதனாவை சைட் அடித்தான். பரசுராமை இடித்துக்கொண்டு உட்கார்ந்த சாதனா,
“போதும் இந்த ஷாக் ரியாக்ஷன்! நான் உன் வைஃப்தானே, உன் ரூமுக்கு வரது தப்பில்லைதானே?” என்றாள் எரிச்சலாக.
“நான் ஒன்னுமே சொல்லலயே சது” ராம் பாவமாக சொல்ல,
“அதானே சார் எப்படி சொல்லுவார், நீதான் ஹஸ்பண்டா நடக்க மாட்ட, அட்லீஸ்ட் நானாச்சும் வைஃபா நடக்கனும் பாரு” என்றவள் அவன் கழுத்தைத் தொட்டுப்பார்க்க, காய்ச்சல் இல்லை.
ஃபீவர் இல்லை, நைட் வந்தா எழுப்புங்க. மாத்திரை போடலாம்.” என்றவள் திரும்பி படுத்துவிட்டாள்.
பரசுராமின் போனில் அழைப்பு வர, எடுத்தால் மாதவன்.
“சொல்லுடா” பரசு சொல்ல, சாதனா திரும்பியவள் யாரென கேட்க,
“மாதவன் மா” என்று சொல்ல,
“இப்ப என்ன அவனோட பேச்சு, ரெஸ்ட் எடுங்க” என்று அதட்டினாள்.
“இரும்மா, அவன் எனக்கு முடியலன்னு டென்ஷன்ல இருக்கான்” என்ற பரசுராம் மாதவனிடம் பேசினான்.
“என்ன சொல்றா எங்கக்கா..?” இழுவையாக மாதவன் கேட்க,
“என்னை ரெஸ்ட் எடுக்க சொல்றா” சந்தோஷமாகவே சொன்னான் பரசுராம்.
“ஆமா பெரிய அக்கற, நான் சொல்லலன்னா உனக்குப் ஃபீவர்னு கூட தெரிஞ்சிருக்காது மாமா அவளுக்கு” மாதவன் சொல்ல,
“அவளுக்கு நான் சொல்லலடா, அதான் தெரியல” சாதனாவிற்கு ஏதுவாக பரசுராம் பேசவும்
“தெரிஞ்சிக்கனும்ன்றது அவன் கடமை, மீரா டெய்லி எனக்குப் போன் பண்றா, ஏன் ஒரு அக்கறை, ஒரு ஆசை. அவளுக்கு எனக்கும் எங்கேஜ்மெண்ட்தான் ஆகியிருக்கு. ஆனா சாதனா உன்னோட வைஃப்” என்று மாதவன் ஆதங்கமாகப் பேச பேச,
“டேய்! அவளை எதாச்சும் சொன்னியா?” சாதனாவின் முகத்தில் இருக்கும் இறுக்கம் மாதவனிடம் அப்படி கேட்க வைக்க,
“நீ அவளுக்குப் பயந்துட்டே இரு” கடுப்பாகக் கத்தினான் மாதவன்.
“ஷ்! அது பயமில்லைடா, அன்பு!” என்று பரசுராம் படுக்கையில் இருந்த பாவையைப் பார்த்தபடி மெல்ல பேச,
“ஓவரா வழியாத மச்சான், நீ அவளை லவ் பண்ணினதை கூட தெரிஞ்சிக்கல, நீயும் உன் அன்பை இன்னும் சொல்லாம இருக்க? கல்யாணமான பின்னாடி அவ என்ன உன்னை அடிக்கவா போறா, உன் இத்துப்போன காதல் கதையைக் கூட சொல்லித்தொலைக்காம என்னய்யா குடும்பம் நடத்துறீங்க?” என்று திட்ட,
“டேய் மாதவா! நீ சது கிட்ட நான் அவளை லவ் பண்ணினதை சொல்லிட்டியா?” என்று அதிர்ந்தான்.
மாதவனும் ஆம் என்றதும்,
“மங்குனி! மடசாம்பிராணி! இருடா உன்னை சென்னை வந்து கவனிக்கிறேன், வைடா போனை” என்று அதட்டி போனை வைத்தவனுக்கு சாதனா தன்னை தவறாக நினைப்பாளோ என்ற தவிப்பு.
“சது..” என்று அவளருகே நெருங்கிவர,
“உன் ப்ரண்ட் முக்கியம்னு என் பேச்சை மீறி பேசினதானே, எங்கிட்ட பேசாதீங்க” என்றாள் கோபத்துடன்.
“சது, ப்ளீஸ்! என்னைத் தப்பா நினைக்காத, அப்போ.. நான்” ராம் தடுமாற,
“இப்ப நான் எதுவும் பேச விரும்பல ராம். அமைதியா தூங்குங்க” என்றாள் சாதனா.
சாதனாவின் பேச்சில் அவளுக்குத் தன் மேல் கோபம் என்று நினைத்தவன் தவித்தபடி அவளைப் பார்க்க, சாதனாவோ இவனை கண்டுகொள்ளாமல் கண்மூடி இருந்தாள்.
ராம் மனமோ
‘இவனுங்க சகவாசத்தைக் கட் பண்ணலன்னா சாதனாவோட என் கல்யாண வாழ்க்கை கலகத்துல போய் முடியும் போலயே!’ என்று நொந்தபடி மனைவியைப் பார்க்க அவள் உறங்கிப்போயிருந்தாள். நேற்று போலவே இன்றும் பரசுராமின் உறக்கம் பறிபோய் வெகு நேரம் கழித்தே உறங்கினான்.