இடைவெளி 2(2)

“மாம்ஸ்! செல்வாவுக்குத் தெரியாம செலவு செய்ய முடியுமா? அரீயர் வைச்சன்னு சொன்னா அவன் போடுற அறுவை தாங்காது மாமா. ப்ளீஸ் நான் உங்க மேல சத்தியமா க்ளீயர் பண்ணிடுறேன்”

“டேய், உங்க அக்காளோட தாலி முக்கியம்டா. என் உயிரோட விளையாடாதடா பாவி” பரசுராம் அலறினான்.

“ச்ச, ச்ச! கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன். வேற யார்கிட்ட கேட்டாலும் பேசுவாங்க மாமா. நான் பாவம்தானே உங்க சின்ன மச்சான், செல்ல மச்சான்ல” என்று கொஞ்சலாகக் கேட்க,

“சரிடா சரி, அவன் நம்பர் அனுப்பிவிடு. பட் ஒழுங்கா பாஸ் ஆகிடனும் உதய். அப்புறம் வேற எதுக்கும் நான் சப்போர்ட் செய்ய மாட்டேன். அரீயர் வைக்கிறது தப்பில்ல, ஆனா சும்மா அதே வேலை வைக்காத, ஒழுங்கா படி. ஓகே?” பொறுப்பாக பரசுராம் பேச, உதய் சமத்தாகக் கேட்டுக்கொண்டான்.

“கண்டிப்பா பாஸ் ஆகிடுறேன் மாமா. நீங்க என்னை நம்பலாம்” என்றான் உதய்யும்.

“அப்பறம் அக்கா பேசலன்னா சரியா சாப்பிடாம இருக்காதீங்க, அக்காவோடவே இருங்க. அக்காவுக்குப் பிடிக்கலன்னா மொத்தமா ஒதுங்கிடுவா, பிடிச்சா கோவமிருந்தாலும் மன்னிச்சிருவா மாம்ஸ். ஆல் தி பெஸ்ட், வீரமே வாகை சூடும்!!” என்று பெரிய மனிதனாக உதய் அட்வைஸ் செய்ய, புன்னகையுடன் கேட்டுக்கொண்டான் பரசுராம்.

அதுவரை அகத்தில் இருந்த அலைப்புறுதல் எல்லாம் நீங்கி, ஒரு இதமான மன நிலை அவனிடம். அவன் அறையின் பால்கனியைத் திறந்துவிட, இதமான வானிலை வெளியே. பச்சையாய் எங்கும் ஆப்பிள் தோட்டம். உற்றுப்பார்த்தால் அடர்சிவப்பு ஆப்பிள்கள் கண்ணுக்குத் தெரிந்தன.

மெத்தையில் விழுந்தவன் வேடிக்கைப் பார்த்தபடி படுத்திருந்தான். ‘எட்டாயிரத்துக்கு நல்ல மெத்தைதான், ஜம்முனு இருக்கே’ என்று தட்டிப் பார்த்தவனுக்கு உதய்யை முதன்முதலில

பார்த்த ஞாபகம். பத்து வயது சிறுவனாக அவனை கல்லூரியில் கண்டான்.

பரசுராம் பிரபலமான கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சி.எஸ் படித்துக் கொண்டு இருந்தான். எப்போதும் கல்லூரிக்குச் சீக்கிரம் வந்துவிடும் பழக்கம் அவனுக்கு. முதலிலே வந்தவன் கல்லூரி கேண்டீனில் உட்கார்ந்திருந்தான், புத்தகத்தைப் புரட்டியபடி ஒரு டீ குடித்துக் கொண்டிருந்தான். அவன் நண்பர்கள் வந்தால் அவர்களுடன் ஒரே லூட்டியாக இருப்பான்.

படித்துக் கொண்டிருந்தவன் சிந்தனையைக் கலைக்கும்வகையில் ஒரு கூட்டம் அருகே இருந்த நாற்காலிகளை ஆக்கிரமித்தனர்.

பத்து வயது உதய்குமார், பதினான்கு வயது செல்வகுமார், பதினேழு வயது சாதனா, மாதவ்குமார் இவர்களுடன் அவர்கள் தாத்தா சேதுராமன். அப்படி எல்லாரையும் கூட்டமாகப் பார்க்கவும் ஒரு சுவாரஸ்யம் அவனுக்கு.

“தாத்தா, இனிமே அக்காவும் அண்ணாவும் ஸ்கூல் வரமாட்டாங்க தானே?” என்று உதய் கேட்க, சேதுராமன்

“டேய்,  நீ இனிமே ஸ்கூல்ல சேட்டை செஞ்சா இவங்க சொல்ல மாட்டாங்கனு தானே இப்படி கேட்டுட்டே இருக்க, அதெல்லாம் செல்வாண்ணா உங்கூட ஸ்கூல் வருவான். சமத்தா இருக்கனும்” என்றார் சின்னப்பேரனிடம்.

“சதும்மா!  இந்த மாதவனைப் பார்த்துக்கோ, சேர்க்கை ஒழுங்கா இல்லைனா தாத்தாகிட்ட சொல்லணும்”

“என்னையே சொல்லாதீங்க தாத்தா,  நான் ஒழுங்கா இருப்பேன்” என்றான் மாதவன்.

“அக்கா, ரேகிங்க்லாம் பண்ணினா தாத்தாக்கிட்ட சொல்லிடு. அதெல்லாம் law படி தப்பு, நம்ம பாட்டிக்கிட்ட சொல்லிடலாம். நீ பயப்படாத, மாதவண்ணா நீயும்தான்” என்று பெரிய மனிதனாக சொன்னான் செல்வகுமார்.

“பார்த்தியாடி பட்டுக்குட்டி, வக்கீல் பாட்டி கூட இருந்து லா எல்லாம் பேசுறான் இந்த செல்வா” என்று செல்வாவைக் கொஞ்சினார் சேது.  அப்படி அவர்களின் நெருக்கத்தைப் பார்க்க பார்க்க பரசுவுக்கு மிகவும் பிடித்தது. ரசித்த படி அவர்கள் பேச்சைக் கேட்டு உட்கார்ந்திருந்தான். அட்மிஷன் போட வந்திருப்பார்கள் என்று நினைத்தான். எல்லோரும் டிஃபன் முடித்துவிட்டு கிளம்ப, ஒரு ஃபைலை விட்டுவிட்டனர்.

“தாத்தா, உங்க ஃபைல்” என்று பரசுராம் சென்று நீட்ட, “என்ன பட்டு, பத்திரமா வைச்சிக்கிறதில்லையா?” என்று பேத்தியைப் பார்க்க,

“இது மாதவனோடது தாத்தா” என்றாள் சாதனா. ஒரு குட்டி டாப்ஸ், ஜீன்ஸ் என இருந்தாள். அந்த முகம் பார்க்க, மனத்தில் ஒரு குளிர்ச்சி பரவ, முதல்முறையாக சாதனாவை சைட் அடித்தான் பரசுராமன்.

“தேங்க்ஸ் தம்பி, எந்த இயர்?” என்று அவன் கழுத்தில் தொங்கிய ஐடி பார்த்தபடி அவர் கேட்க,

“செகண்ட் இயர் தாத்தா” என்றான். பொதுவாக அவனிடம் கல்லூரி பற்றி கேட்டவர் பேரன் பேத்தியை எல்லாம் அறிமுகம் செய்துவைத்தார்.

அதன்பின்  மாதவனையும் சாதனாவையும் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. மாதவன் கல்லூரி வாலிபால் டீமில் சேர, இவனும் அதில் இருக்க அவர்களுக்குள்  நட்பு உருவானது. ராம் அவனை விட பத்து மாதம் பெரியவனாக இருந்தாலும் மாதவனுக்கும் அவனுக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டானது. 

சாதனா அவன் துறையிலே சேர்ந்திருக்க, மாதவன் வேறு பிரிவானாலும் சில பாடங்கள் முதல் வருடத்தில் கஷ்டமாக இருக்க, வாலிபால் தோழர்களாக இருக்கவும் பரசுராம் சொல்லிக்கொடுப்பான். அவன் எப்போதுமே அவனை சுற்றி உள்ளவர்களிடம் பயங்கர நெருக்கமாக இருப்பான். யாராக இருந்தாலும் ‘நோ’ என்பதே அவனிடம் கிடையாது!

பரசுண்ணா என்று ஜீனியர் எல்லாம் அவனுக்கு நெருக்கம். முதலாம் வருடம் வேறு பில்டிங் என்பதால் சாதனாவை ஒரு வருடம் பார்க்க வாய்ப்புகள் குறைவு. ஆனாலும்,  மாதவனுடன் வாலிபால் விளையாடும்போது வந்து தம்பிக்காக நிற்பாள் சாதனா.

பரசுராமும் அச்சமயங்களில் பாவையின் மீதான பார்வையில் திளைத்து இருப்பான். விருப்பம், பிடித்தம் எல்லாம் யோசிக்காது அவளைப் பார்த்தால் வயதிற்குரிய ஒரு பரவசம்! பட்டாம்பூச்சி தருணம்!

சாதனா இரண்டாம் வருடம் படிக்கும்போது சில சமயம் கல்லூரி விஷயமாகப் பார்க்க, பேச நேரிடும். அப்படி பேசிய பொழுதுகள் குறைவென்றாலும் இப்போதும் பொக்கிஷம் அவனுக்கு. அவளின் நிமிர்வு, தைரியம் எல்லாம் பிடிக்கும்!

அவள் குடும்பத்தை இன்னும் பிடிக்கும்.  மாதவனும் உதய்குமாரும் சாதனா, செல்வாவின் சித்தப்பா பிள்ளைகள். உதய்யின் அம்மா அவன் பிறக்கும்போது இறந்துவிட, உதய் என்றால் அத்தனை செல்லம் அவர்களுக்கு. உதய் மீது அக்கா, அண்ணன் காட்டும் பாசம்பார்த்தே தன் தம்பி ஜீவாவிடம் அனுசரணையாக நடக்க ஆரம்பித்தான் பரசுராம்.

மாதவனுக்கும் சாதனாவிற்கும் சில மாதங்களே வித்தியாசம், செல்வா சாதனாவின் உடன்பிறந்த சகோதரன். ஆனால்,  அவர்களுக்குள் அத்தகையை வேறுபாடு இருக்காது. இதில் சாதனா, செல்வாவின் பெற்றோர் மூன்று வருடம் முன் ஒரு விபத்தில் இறந்துவிட்டது தெரிய, இன்னும் அவர்கள் மீது ஒரு கரிசனம்.

மாதவனைப் பார்க்கும்போதெல்லாம் சாதனாவின் தரிசனம் கிட்டிவிடும் ராமிற்கு. ரசிக்கும் பார்வையாகத் தொடங்கி, ரகசிய மையலாக மாறி ஒரு கணத்தில் மையல் காதலாக மையம் கொண்டது! ஆனால்,  அவன் மட்டுமே அவள் மீது காதல் கொண்டான், இன்றுவரை அவனாக சென்று அந்த காதலை சொன்னதுமில்லை, காட்டியதுமில்லை!

இவர்கள் திருமணம் கூட மூம்மூர்த்திகளாக அவனின் மச்சான்கள் முயற்சியால் அரங்கேறியதுதான். அப்படியே பழைய நினைவில் மூழ்கியவனுக்குக் களைப்பில் உறக்கம் சுழட்டியது. மாலை மூன்று மணிக்கு மேல் எழுந்தவன் சாதனாவைப் பார்க்க பரபரப்பாகக் கிளம்பினான்.

பசியும் பெரிதாக இல்லையென்பதால் ஒரு ஜூஸ் வாங்கிப் பருகியவன் வெளியே இருந்த வராண்டாவிற்கு வந்து பார்த்தான். நாற்காலிகள், டேபிள்கள் எல்லாம் இணைய வசதியுடன் போடப்பட்டிருக்க, அங்காங்கே எல்லோரும் லேப்டாப்புடன் வேலைப் பார்த்தனர். சாதனாவும் அங்கே இருக்க, அவள் முன்னே போய் உட்கார்ந்தான்.

“சது, சாப்பிட்டியா?” என்று ராம் கேட்க,

“வொர்க் டைம்ல என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க ராம்” என்றாள் கொஞ்சம் கட்டளையான குரலில்.

“சரி பண்ணல” என்றவன் அவளைப் பார்த்தபடி உட்கார்ந்துவிட, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே இருந்தான். சாதனாவிற்கு அவன் பார்வை புரிந்தாலும் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். உதய் சொல்வது போல், திருமணத்திற்கு முன் திருட்டுத்தனமாக அவளைப் பார்ப்பவன், திருமதியானபின் நேரே பார்க்கிறான், அவ்வளவுதான் வித்தியாசம்!

சாதனா வேலையை முடித்து மீண்டும் அறைக்குள் சென்றவள், கீழே வந்து அவளுக்கும் அவனுக்கும் காஃபி வாங்கி அவனிடம் கொடுக்க, ராமிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.

இருவரும் பேசாமல் காஃபியைப் பருக, சாதனா கொஞ்ச தூரம் நடக்கலாம் என்று  நினைத்து இவனிடம் ஒன்றும் சொல்லாமல் முன்னே எழ,  இவனும் அவளோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடன் நடந்தான். மனைவி முன்னால் நடக்கவும்தான் அவள் உடையைப் பார்த்தான். சின்னதாக ஒரு க்ராப் டாப், ஜீன்ஸ் அணிந்திருக்க, நடக்கவும் இடை வெளி நன்றாகத் தெரிய, சட்டென சினம் அவனிடம். சிலர் பார்வை அவள் மீது படிவது கண்டு இன்னும் கோபம் வந்தது.

எப்போதும் சாதனாவிடம் அவன் அவனாகவே இருக்க மாட்டான், சாதனாவிற்குப் பிடித்த மாதிரி இருக்கவேண்டும் என்று நினைப்பவன் இன்று எல்லாவற்றையும் மீறி அவளருகே சென்று,

“ஏன் சது, மேல ஒரு ஜாக்கெட், இல்லை hoodie போடலாமில்லை. அட்லீஸ்ட் கழுத்துல இருக்க ஸ்டோலை வைச்சுப் போர்த்திக்க” என்று ராம் சொல்லவும்

“ஏன்? எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கென்ன?”

“எனக்கென்னவா? மத்தவங்க உன்னை பார்க்கிறது எனக்குப் பிடிக்கல, நீ என்னை என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோ, ஐ டோண்ட் கேர்” என்று கடுப்பானவன் அவள் கழுத்தில் இருந்த ஸ்டோலை சட்டென இழுத்து ஷால்வையாகப் பின்னால் போர்த்தினான்.

“ராம்” முறைப்பாக சாதனா கணவனைப் பார்க்க, அவனோ பதில் பேசாது அவள் இடையைப் பிடித்து நடந்து இன்னும் மனைவியைப் பேச்சற்றவளாக்கினான். 

error: Content is protected !!
Scroll to Top