அப்போது பார்த்து காலிங் பெல் சத்தம். வெள்ளிக்கிழமை என்பதால் தம்பிகள் மூவரும் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்க சாதனா ராமைப் பார்த்தாள். அவன் இன்னும் முறைக்க, சாதனா கதவைத் திறந்தாள்.
செல்வாவும் மாதவனும் உட்கார, உதய் உற்சாகமாக, “மாம்ஸ் எங்க?” என்று அறைக்குள் சாதனா தடுப்பதற்குள் சென்றுவிட்டான்.
“என்ன மாமா? எப்படி இருக்கீங்க? சீக்கிரம் கிளம்புங்க, படத்துக்குப் போகலாம்” என்று உட்கார்ந்திருந்த ராமை எழுப்பி விட கைகொடுக்க, ராம் இருந்த கோபத்தில் உதய்யை
“விடுடா” என்று உதறினான்.
சாதனா செல்வாவிடம், “அவர் கோவமா இருக்காரு” என்று சொல்ல, மாதவனோ “அவன் கோவப்படுற மாதிரி நீ என்ன செஞ்ச?” என்று அவளிடம் கேட்க
“நீங்க செஞ்சதுக்குத்தான் அவர் கோவப்படுறார்” என்று சாதனா அவர்களிடம் கத்தினாள்.
“இவனுங்கதான் செஞ்சாங்க, எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல” மாதவன் விலகப்பார்க்க
“அவனுங்க செஞ்சது தெரிஞ்சும் மறைச்சதானே, உன் மாமா வருவார். வாங்கிக்கட்டிக்க” என்று சாதனா திட்டினாள்.
“போடா! நான் எங்கேயும் வரல” என்று ராம் மறுக்க, உதய் அவனை விடாப்படியாக இழுக்க ராம் இருந்த கோபத்தில் பளாரென்று அடித்துவிட்டான்.
“சின்ன .பையன் மாதிரி நடந்துக்கோ, அதிகப்பிரசங்கி” என்று அதட்டியவன் உதய்யின் அதிர்ந்த முகம் பார்த்து தன் மீதே கோபம் எழ, அறையை விட்டு வெளியே வந்தான்.
சத்தம் கேட்டு சாதனா, “ராம் அவனை ஏன் அடிச்சீங்க?” என்று கணவனைக் கத்த
“யோவ் மாமா என்ன இதெல்லாம்?” என்று மாதவன் அதிருப்தியாகப் பார்க்க
செல்வாவுக்குத் தம்பியை அடித்ததும் சுர்ரென்று ஏறியது. “எதுக்கு அவனை அடிச்சீங்க?” என்று எகிறினான்.
ராம் எல்லாரையும் முறைத்தவன் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.
உதய் உம்மென்று உட்கார்ந்திருந்தான். அண்ணன்கள் இருவரும் அரணாய் இருபக்கமும் உட்கார, சாதனா முன்னால் இருந்த சோஃபாவில் சோகமாக உட்கார்ந்திருந்தாள்.
உதய்யின் கண்கள் கலங்கியிருக்க, பார்த்த சதுவுக்கு கணவன் மேல் கன்னா பின்னாவென்ற கோபம்.
“வரட்டும் தயிர்சாதம், தாளிச்சிடுறேன்” என்று மனத்தில் உறுதியெடுத்தாள்.
“என்னடா என்னைப் பார்க்குறீங்க?” என்று சாதனா தம்பிகளைக் கேட்க
“வீட்டு மாப்பிள்ளன்னா கொம்பா உன் வீட்டுக்காரருக்கு? எப்படி அவர் உதய்யை அடிக்கலாம்?” எண்ட் செல்வா கத்த,
“உன்னை யார் அதிகப்பிரசங்கித்தனம் செய்ய சொன்னா?” சாதனாவும் பதிலுக்குக் கத்தினாள்.
“ராம் ரொம்ப எமோஷனல், எல்லாத்தையும் லைட்டா எடுக்க மாட்டார். அதுவும் என் விஷயத்துல அவர் ரொம்ப ரொம்ப சென்சிடிவ்” என்று தலையைத் தாங்கிக் கொண்டு அவர்களிடம் சொல்ல, மாதவன் சாதனாவின் அருகே சென்று உட்கார்ந்தான்.
“டென்ஷன் ஆகாத சது, ராமை நான் பார்த்துக்கிறேன்” என்று மாதவன் சொல்ல
“அவரை நான் பார்த்துப்பேன்” என்று முறைப்பாக சொன்னாள். செல்வாவோ,
“அவர் அப்படினு தெரிஞ்சா ஒன்னு முன்னாடியே எங்க கிட்ட சொல்லியிருக்கணும், இல்லையா அவர்கிட்ட இதை சொல்லாம இருக்கணும். உன்னை யார் அவரோட சண்டைப்போட்டு போக சொன்னா? அவரும் உன்னைத் தேடாம இருந்தார், ஷாக் டீரிட்மெண்ட் கொடுத்ததாலதானே அவர் வந்தார். இப்ப எங்களைப் பேசாத சாதனா ” என்று அக்காவை அதட்டினான் அவன்.
இங்கே இவர்கள் சண்டையிட்டுக்கொள்ள ராம் சமன்பட இரண்டு மணி நேரங்கள் ஆனது.
அமைதியாக ஒரு பூங்காவில் வந்து உட்கார்ந்துவிட்டான். கோபம், ஆத்திரம், ஆதங்கம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய, மெல்ல மெல்ல நிதர்சனம் உரைத்தது. அதுவும் இத்தனை நாள் அவன் மறுகிய காரணம் மாயை என்ற தெரிந்ததும் அதை மனம் உணர்ந்த பின் ஒரு ஆசுவாசம் அவனிடம்.
‘சாதனாவுக்கு என்னை விட்டுப் போகணும்னு எண்ணமில்லை’ இத்தனை நாள் நெஞ்சடைத்த உணர்வு முழுமையாக நீங்கியது. கண்கள் கசிந்தன! பெருமூச்சுடன் பைக்கில் சுற்றினான்.
இப்போது வீட்டினரை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற சஞ்சலம் அவனுக்கு. உதய்யிடம் கை நீட்டியது தவறாகப்பட்டது. அதற்கும் சாதனாவிடம் வாங்கிக் கட்டிகொள்ளப்போகிறோம் என்று நினைத்தான்.
‘நியாயமா சந்தோஷப்பட்டிருக்கனும், டென்ஷன்ல என்ன என்னமோ பண்ணிட்டேன்’ என்று நொந்தான்.
பத்து மணி வரை வெளியே சுற்றி அதன்பின் வீடு சென்றான். இன்னும் வெளியே ஷூக்கள் கிடக்க, அவர்கள் கிளம்பவில்லை என்று புரிந்தவனுக்கு சின்ன குறுநகை.
பெல் அடித்துவிட்டு நிற்க, மாதவன் வந்து கதவைத் திறந்தான்.
“மாதவா!” என்றழைக்க
“மாமா, நீ இவ்வளவு ஃபீல் பண்ணுவன்னு தெரியாது, இல்லைன்னா சொல்லியிருப்பேன். என் மேல தப்பில்லை” என்று அவன் சட்டென்று ராமைக் கட்டிக்கொண்டான். ராம் சத்தமாக சிரித்தான்.
“என்ன சிரிக்கிற?” என்று மாதவன் ராமைப் பார்க்க,
“உங்களை எப்படி சமாதானம் செய்றதுனு நான் வந்தா நீ என்னை சமாதானம் பண்ற?” என்றவன் மற்ற மூவரைப் பார்த்தான்.
கையில் இருந்த பையை மேஜையில் வைத்துவிட்டு உதயின் அருகே உட்கார்ந்தவன் அவனை தோளோடு அணைத்து, “சாரிடா” என்றான்.
“இட்ஸ் ஒகே மாம்ஸ்! நாந்தான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேன். சாரி” என்று உதய் மன்னிப்புக் கேட்க,
“ரொம்ப வலிக்குதா?” என்று உதய்யின் கன்னம் வருடினான்.
“இல்லை மாமா!” என்று உதய் புன்னகைத்தாலும் ராமின் கைத்தடம் தெரிந்தது. கோபம் வந்தால் அளவில்லாமல் தனக்கு வருகிறது என்று புரிந்தது, தன் கோபம் குறைக்க வேண்டும் என்று நினைத்தான்.
“இந்தா உனக்குப் பசிக்கும்ல, உனக்குப் பிடிச்ச சீஸ் பர்ஸ்ட் பீட்சா” என்று நீட்ட,
“எனக்கு?” என்று மாதவன் கேட்க
“உன்னையா அடிச்சேன், இவனைத்தானே அடிச்சேன்?” என்று கிண்டலாகக் கேட்டான் பரசுராம்.
“அடப்பாவி! இவ்வளவு நேரம் பசியில வெயிட் பண்ணினா உன்னை” என்று மாதவன் ராமை முறைக்க,
“இதுல ஃபேமிலி பேக் பிரியாணி இருக்குடா, தட்டு எடுத்துட்டு வா சது” என்று சாதனாவை அழைக்க, அவள் அசையவில்லை. ராமே எடுத்து வந்து பரிமாறினான்.
செல்வாவும் சாதனாவும் ராமிடம் பேசவில்லை.
“டேய் செல்வா, நீ ஏண்டா கோவப்படுற? நாந்தான் கோவப்படனும்” ராம் பேச, அவன் முறைத்தான்.
“அதுக்காக சின்ன பையனை அடிப்பீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் சொரண இல்லையா?” என்று அண்ணனையும் தம்பியையும் திட்டினான்.
ராமின் முகம் வாடியது.
“எனக்கு அவன் மேல உரிமை இருக்கு, அவன் செஞ்சது அதிகப்படியான விஷயம். உனக்குப் புரியாது செல்வா. உலகமா நினைக்கிற ஒருத்தி வாழ்க்கையில இல்லைன்ற மாதிரி இந்த பேப்பர்ஸ் வந்தது..” என்று பெருமூச்சுவிட்டவன்
“உனக்கு லவ் வந்தாதான் டா தெரியும்” என்றான் சாபம் போல்.
செல்வா முறைக்க,
“என்ன சாபம் கொடுக்கிறீங்களா?” என்று ராமிடம் கோபமாகக் கேட்டான்.
செல்வாவுக்கு சட்டென்று கோபம் வரும் என்று புரிந்த சாதனா, “வாயை மூடு செல்வா” என்று தம்பியை அதட்டினாள்.
“என்னடா சாபம்னு எல்லாம் பேசுற?” ராம் வருத்தமாகக் கேட்க, மாதவனுக்குக் கோபம் வந்தது.
“உதய்யை கண்டிக்க எல்லா உரிமையும் அவனுக்கு இருக்கு செல்வா. உனக்கு இருக்கிறதை விட அதிகமா இருக்கு! அமைதியா வந்து சாப்பிடு” என்று தம்பியை அதட்ட,
“மாமா பாவம்ணா, ஏன் சண்டைப் போடுற?” என்று எல்லோரும் செல்வாவை முறைத்தனர். செல்வா ராமை முறைக்க, ராம் சிரிப்புடன் செல்வாவை நெருங்கி,
“உனக்குக் கோவம் நிறைய வருதுடா, சாப்பிடு” என்று இழுத்து வந்து உட்கார வைத்து பரிமாறினான். செல்வாவும்
“சாரி மாம்ஸ், வேற டென்ஷன்” என்று சொல்லி உண்டான்.
“எங்க எல்லாரையும் சமாதானம் பண்ணிட்ட, உன் சம்சாரத்தை எப்படி சமாளிப்ப? கிண்டலாக மாதவன் கேட்க
“அதெல்லாம் சதுவை பாவமா பார்த்தா என்னை விட்ருவா” என்றான் ராம்.
உதய் பீட்சாவை போட்டோ எடுக்க, “போனை எடுத்த தொலைச்சிருவேன் ராஸ்கல், ஜீவா என்னைப் பேசுறான் டா. அண்ணன் தம்பியை பிரிச்சிறாதீங்கடா, நீ அடி வாங்கிட்டு சாப்பிடுறேன்னு தெரியாம அவன் உன்னை மட்டும் நான் கவனிக்கிறேன் சண்டைக்கு வருவான் டா. ப்ளிஸ்” என்று கெஞ்சவும் போனை வைத்துவிட்டு அமைதியாக உண்டான் உதய்.
சாதனாவை ராம் சாப்பிட சொல்ல, தம்பிகள் முன் பேசாமல் அவளும் அவர்களுடன் உண்டாள்.
இரவு உணவு ஒருவழியாக முடிய, எல்லோரும் உட்கார்ந்து கதைப் பேசினார்கள். மணி பதினொன்றரை ஆகிவிட
“டேய் சீக்கிரம் கிளம்புங்கடா, சதுவை சமாதானம் பண்ணனும்” என்று மனத்தில் நினைத்தவன் எப்படி சொல்வது என்று தெரியாது மாதவனைப் பாவமாகப் பார்த்தான்.
“லேட்டாச்சு, தாத்தா தனியா இருப்பார். உதய் நாளைக்குக் காலேஜ் போகணும், எழுந்திரு. டேய் செல்வா வா” என்று இருவரையும் மாதவன் கிளப்ப, ராம் நன்றியுடன் அவனைப் பார்த்தான்.
மூவரும் சென்றதும் “சாரி சது” என்று அவள் முன் நின்றான் ராம்.
“என்ன பரசுராமர் அவதாரம் காட்டுறீங்களா?” சாதனா முறைப்பாகக் கேட்க
“இத்தனை நாளா அது மனசுல ஓடிட்டே இருந்ததால நீ அப்படி செய்யலனதும் ஒரு பெரிய ரீலிஃப்!” என்று சொல்லி
“ஹக் பண்ணிக்கவா?” என்றான் பாவமாக.
“அதுக்கு அப்புறம் திட்டு” என்றதும் புன்னகையுடன் கணவனைக் கட்டிக்கொண்டாள் சாதனா.
“உதய் எங்க எல்லோருக்கும் செல்லம்” என்றவளை “நம்ம எல்லோருக்கும்” என்று திருத்தினான் ராம்.
“ஆமா, அவனை அடிக்கலாமா? ஏற்கனவே அம்மா இல்லாத பையன், சித்தப்பா அவரை சேர்க்க முடியாது! நீங்கன்னா ரொம்ப இஷ்டம், இப்படி செய்யலாமா? எங்கிட்ட கோவம் காட்டியிருக்கலாமே”
“உனக்கே தெரியும் உதய்னா எனக்கும் பிடிக்கும், பத்து வயசு பையனா இருக்கும்போதிலிருந்து அவனை தெரியும். சொல்லப்போனா இரண்டு பேரும் ஒரே மாதிரி அப்பாவால நிராகரிக்கப்பட்டவங்க. அதனாலயே அவன் மேல் எனக்குப் பாசம் அதிகம்! அவன் அப்படி செய்வான்னு நான் எதிர்ப்பார்க்கல… என்னதான் நார்மலா இருந்தாலும் அந்த டிவோர்ஸ் மேட்டர் மனசுல இருந்துட்டே இருந்தது. அக்சுவலா நான் சந்தோஷப்பட்டிருக்கணும். ஆனா அந்த ஸ்ட்ரெஸ் ரீலீஸ் ஆனதுல…” என்றவனை பேசவிடவில்லை சாதனா.
“எனக்கு ராமை தெரியும்” என்றாள்.
“நிஜமா கோவமில்லையே?” ராம் தவிப்புடன் கேட்டான்.
“ராம், எப்பவும் பெர்பெஃக்டா இருக்கனும் நினைக்காதீங்க! கோவம் எல்லாம் நார்மல்தான், ரிலாக்ஸ்” என்று முதுகை வருடினாள். ராமிற்கு அந்த அணைப்பு தேவையாக இருந்தது.
அணைப்பை இறுக்க பார்த்தால், உதய்யிடமிருந்து சாதனாவுக்கு அழைப்பு.
“அக்கா! மாமா கூட சண்டை போடாத, அவருக்கு உன்னை விட என் மேல ரைட்ஸ் இருக்கு. பாவம் அவர், சண்டை போடாதக்கா ப்ளீஸ்” என்றான் எடுத்துவுடனே.
“என்னை விட ரைட்ஸா?”
“ஆமா, சின்ன வயசுல இருந்தே எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார், ஸ்விம் பண்ண சொல்லிக்கொடுத்தார். அவர் எனக்கு அப்பாக்கா, அவரை ஹர்ட் பண்ணிட்டேன்னுதான் எனக்குக் கஷ்டமா இருந்தது. செல்வாண்ணா வேற கோவமா பேசிட்டான், நீயும் அப்படி பண்ணாத” என்றவன் சாதனா ‘இல்லை’ என்றபின்னே விட்டான்.
ராமை உதய்யின் வார்த்தைகளை நெகிழ்த்தியது.
“தயிர்சாதம்!” என்று செல்லமாக அவனை நெற்றியில் முட்டியவள்
“ராம் கூட சண்டைப்போடக் கூடாதாம், ஆர்டர் போடுறான் அந்த பெரிய மனுஷன்” என்று சிரிப்புடன் சொன்னவள் அவன் முகம் பார்க்க
“உதய்யை அடிச்சிருக்கக் கூடாது சதும்மா” என்றான் மீண்டும்.
“அட ராமா! அவன் உங்களை சமாதனாம் செய்ய சொல்றான், நீங்க இப்படி பண்றீங்க. அன்புத்தொல்ல தாங்கல, நெக்ஸ்ட் டைம் ஹிமாச்சல் இல்லை, ஹிமாலயஸ் போயிடுவேன், அப்புறம் காவிதான்!” என்று அவனை மிரட்ட, ராம் சத்தமாக சிரித்தான்.
“செகண்ட் ஹனிமூன்னு ஸ்டைலா சொல்லு சது!!” என்றதும் சாதனாவையும் சிரிப்புத் தொற்றியது. மனைவியை இறுக்கமாக அணைத்தான்.
“யூ ஆர் மை ஹோம்!” என்றான் எப்போதும் போல் மனைவியிடம்.
இடைவெளிகள் இனியில்லை!!!!