தேனிலவு தித்திப்பாய் முடிய, விமான நிலையத்தில் வந்திறங்கிய ராமையும் சாதனாவையும் அழைக்க மாதவன் வந்துவிட்டான்.
“என்னடா ஜொலிக்கிற?” என்று ராமின் இடுப்பில் கிள்ளியபடி உற்சாகம் பொங்க கேட்டான் மாதவன். இருவரையும் ஜோடியாகப் பார்க்க அவனுக்கு மிகுந்த நிம்மதியானது.
“சொன்னா புரியாது மச்சான்” என்று மாதவனை ராம் வெறுப்பேற்றினான்.
“ஓஹ், போன் செஞ்சா எடுக்கல?” என்று அடுத்துக் கேட்க
“நான் ரொம்ப பிஸீ” என்றான்.
ராமை சட்டென கட்டிக்கொண்ட மாதவன், “உன்னைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இரண்டு மாசமா அழுக்கு மூஞ்சியா கிடந்த மாமா இன்னிக்கு அழகு மூஞ்சியா இருக்கான்” என்று சிரித்தவன்
“வாயைக் காட்டு” என்று கேட்க, ராம் புன்னகத்தான்.
“ஒஹ், எல்லா பல்லும் இருக்கா? இரண்டு மாசமா இதெல்லாம் அடகு வைச்சிருந்தியோ? படவா! இப்ப பல்லைக் காட்டுறான் பாரு, தயிர்சாதம்!” என்று மாதவன் செல்லமாக ராம் வயிற்றில் குத்தினான்.
மாதவன் பேச்சில் ராம், சது இருவருக்கும் இனிய நினைவுகள்.
ஒரு வாரம் ஓடிப்போனது. ராமும் சாதனாவும் வீடு, அலுவலகம் என்று மிகவும் பிசி. சாதனாவும் ராமும் இடையில் அவன் வீட்டுக்கும் சென்று வந்தனர். எப்போதும் போல் இந்து நன்றாகவே கவனித்தார்.
சாதனாவைத் தனியே அழைத்து, “இங்க பாரு உனக்கு புத்தி சொல்ல வீட்ல லேடீஸ் இல்லை, அதனால நான் சொல்றேன். ஆபிஸ் வேலை இருந்தா இனிமே உன் தம்பிங்களைப் பார்க்க சொல்லு, இரண்டு மாசம் நீ இல்லாம அவன் கஷ்டப்பட்டான், ஏற்கனவே ஆபிஸ் தூரம்னு தனியா இருக்கான். நீயும் பார்க்கலைன்னா எப்படி மா?” என்று அவளிடம் இந்து கேட்க
சாதனா எதிர்த்தெல்லாம் பேசவில்லை.
“இனிமே எங்க போனாலும் உங்க பையனைக் கூடவே அழைச்சிட்டுப் போறேன் அத்த” என்று சொல்லி இந்துவைப் புன்னகைக்க வைத்தாள். ஜீவாதான் அண்ணனிடம் பேசவில்லை.
“ஏண்டா அமைதியா இருக்க?” என்று தம்பியிடம் கேட்க
“பேசாதண்ணா, உனக்கு என்ன இருந்தாலும் அண்ணியோட தம்பிங்கதான் முக்கியம். என்னை என்னைக்காச்சும் வெளியே அழைச்சிட்டுப் போயிருக்கியா? அவங்களோட மட்டும் ஹிமாச்சல் போயிருக்க?” என்று கோபத்துடன் கேட்டான் ஜீவா.
இப்போது சாதனாவிடம் பேசிய பின் ராமின் மனம் லேசாகியிருக்க, அவன் சுய வடுக்கள் எல்லாம் இப்போது வலி தரவில்லை. தம்பியிடம் இயல்பாகப் பேச முடிந்தது. நல்ல அண்ணனாக நடக்க நினைத்தான்.
“டேய்! அவனுங்க என் பர்த்டேக்கு சர்ப்பரைஸ் பண்ண வந்தாங்க டா. எனக்கே தெரியாது ஜீவா” என்று ராம் சமாதானம் சொல்ல,
“நீ ஊருக்குப் போகும்போது உன்னை ஏர்ப்போர்ட்ல விட்டாங்களே, அது கூட உனக்குத் தெரியாதா?” ஜீவாவுக்கு நிறைய கோபம் வரும். அதுவும் மாதவன், செல்வா, உதய்யுடன் அண்ணன் இருக்கும்போது தன்னுடன் இல்லையே என்ற ஏக்கமெல்லாம் வெளிப்பட்டது.
ராமுக்கு அவனை என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல் தவிக்க, சாதனா ராமைப் பார்த்து என்னவென்று கேட்க,
“இவன் கோவமா இருக்கான்” என்று மெல்ல சொல்ல,
“என்னாச்சு ஜீவா?” என்று சாதனா கேட்க, அண்ணனை முறைத்த தம்பி,
“ஒன்னுமில்ல அண்ணி” என்று நகரப்போனான்.
“சொல்லு ஜீவா, நான் கேட்குறேன்ல” என்று சாதனா பேச்சால் அவனை நிறுத்த,
‘உங்க தம்பிங்க கூட என் அண்ணா பழகுறது பிடிக்கல’ என்று எப்படி சொல்லுவான். அமைதியாக அண்ணனைப் பார்க்க,
“சாரி” என்றான் ராம்.
“இட்ஸ் ஒகேண்ணா” என்று ஜீவா அண்ணியின் முன் அண்ணனை விட்டுக்கொடுக்காது அமைதியாக நகர்ந்துவிட்டான். ராம் அவன் சென்றதும் சாதனாவிடம்
“இவனுக்கு நான் நல்ல அண்ணனா நடக்கவே இல்லை சது.” என்று குற்றவுணர்ச்சியுடன் சொன்னான்.
“ராம், அவன் புரிஞ்சிப்பான். இனிமே அவனோட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அவ்வளவுதான் சிம்பிள்!” என்று கணவனைத் தேற்றினாள். ராமின் அப்பா கூட நன்றாகவே பேசினார்.
சது கூட, “இவங்க கூடவே நம்ம இருக்கலாமே ராம்” என்று கேட்க
“வேண்டாம் சது, தனியா இருக்கலாம்” என்று மறுத்துவிட்டான். அவனின் விருப்பத்துக்கே விட்டுவிட்டாள்.
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ராமை அக்கறை எடுத்து கவனித்தாள் சாதனா. அன்பின் அருகாமையாய் அவள் வடிவில் அனுதினமும் அனுராகமாய் அவனை உணரவைத்தாள்.
அன்று ராம் அவனின் வார்ட் ரோபை சுத்தம் செய்துகொண்டிருந்தான். அப்போது தட்டுப்பட்டது விவாகரத்துப் பத்திரம். அதை காணும்போது அன்றுணர்ந்த அதே பரபரப்பு, பரிதவிப்பு அவனிடம். அப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் ராமால் அதனைக் கடந்திருக்கவே முடியாது.
அந்த நினைவுகளில் தாக்கத்தில் நிஜம் மறந்து அப்படியே மெத்தையில் சோர்வாய் உட்கார்ந்துவிட்டான்.
சாதனா கணவனைத் தேடி வந்தவள் அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அருகே வர, அந்த அரவத்தில் விழித்தவன் சட்டென்று சாதனாவை இறுக அணைத்தான்.
“எப்பவும் என்னை விட்டுட்டுப் போயிடாத சது! அப்படி போறதுன்னா என்னைக் கூட்டிட்டுப் போ இல்லை கொன்னுட்டு போ” என்றான் கலங்கிய குரலில். சாதனாவுக்கு அவன் பேச்சில் பதறியது.
“ராம்! என்னாச்சு தீடீர்னு?” என்று அவள் பதறிப்போய் கத்த, விவாகரத்துப் பத்திரத்தில் ராமின் பார்வை பதிந்தது. அப்போதுதான் அவளிடம் ஆசுவாசம்.
“இதானே?” என்று கேட்க
“இதை முதல்தடவ பார்த்தப்போ நான் எப்படி பயந்தேன் தெரியுமா? உள்ள அவ்வளவு பயம், நீ நிரந்தரமா என்னைப் பிரிஞ்சிடுவியோன்னு, யார்கிட்டயும் அதைக் காட்ட முடியல. தைரியமா இருக்க மாதிரி காட்டிக்கிட்டேன்” என்றவனை அணைத்துக்கொண்டவள் ஒரு கையால் அந்த பத்திரத்தை எடுத்தாள்.
ராமை விட்டு விலகி, அதனை கிழித்துப்போட்டாள்.
“நான் எப்பவும் அப்படி நினைக்கலனு ஆயிரம் தடவ சொல்லிட்டேன் ராம், இப்ப நல்லாயிருக்கும்போதும் அதையே ஏன் நினைக்கிறீங்க?” வருத்தமாகக் கேட்டாள் சாதனா.
“இல்லை, மறுபடி இதைப் பார்க்கவும் டென்ஷன்” என்றதும்
“இவ்வளவு ஃபீல் பண்ண வேண்டாம், அப்படியே டிவோர்ஸ்னாலும் என்னை பண்ணக்கூடாது, உங்க மச்சான்ஸை பண்ணனும்” சிறு புன்னகையுடன் சாதனா பேச, ராம் புரியாமல் பார்த்தான்.
“அதுல இருக்க சைன் என்னோடது இல்லை ராம், உதய் சைன். செல்வா அண்ட் உதய்யோட ஐடியா இது, நீங்க என்னைத் தேடக்கூடாது சொன்னதால நீங்க தேடல, இரண்டு மாசமா நம்ம பிரிஞ்சு இருக்கவும் அவனுங்க மனசு கேட்காம இப்படி பண்ணிட்டாங்க, சதுவுக்கு இந்த தயிர்சாதத்தை விட மனசே இல்லை. சோ சில் பண்ணுங்க!” என்றாள் கணவனிடம்.
ஆனால், அவனோ வெடித்தான்.
“அறிவிருக்கா உங்களுக்கெல்லாம்? என்னோட ஃபீலிங்க்ஸோட விளையாடுவியா சது நீ? அவனுங்களுக்கு அறிவு இல்லைன்னா உனக்குமா டி இல்லை?” என்று கத்தினான்.
“ராம், அவங்க நல்லதுக்க்..” என்றவளை ராம் முறைத்த பார்வையில் அவளிடம் பதில் இல்லை.
விழிகள் சிவந்து கலங்கியிருக்க, ராம் உள்ளம் கொதித்தது.
“என்ன நல்லது?? இத்தனை நாளா நான் மனசுல எவ்வளவு தவிச்சிருப்பேன் சாதனா? என்னோட மனைவி கூட என்னை விட்டுப் போற மாதிரி நடந்துக்கிட்டேன்னு எவ்வளவு குற்றவுணர்ச்சி எனக்கு. நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லியும் சின்ன பசங்க கூட சேர்ந்து எப்படி…?” என்று பல்லைக் கடித்தான்.
சாதனாவின் கையெழுத்தைப் பார்த்த அந்த காரிருள் காலம் கண்முன் வந்து போனது. அவனின் மன உளைச்சல் இன்று வெளிப்பட்டது.
“ராம், எனக்கே நீங்க அங்க வந்த பின்னாடிதான் தெரியும்”
சாதனாவின் சமாதானங்கள் அவனிடம் எடுபடவில்லை.
“தெரிஞ்ச அப்புறம் சொன்னியா நீ? என்னைப் பத்தி உனக்குத் தெரியாதது எதாவது இருக்கா? என் மனசு வருத்தப்படுற விஷயம்னு தெரிஞ்சும் இதை எங்கிட்ட இருந்து மறைச்சிட்ட, எனக்கு இதுல இருந்து விடுதலை கொடுக்கனும்னு உனக்குத் தோனல இல்லை?” என்றான் ஆத்திரத்துடன்.
அவனுங்களுக்கு இருக்கு. கொஞ்சம் இடம் கொடுத்தா என்னை என்ன நினைச்சாங்க அவங்க?” என்று கத்தினான்.