Skip to content
அழகிய சுமை!
“அடியே அஞ்சனம், உனக்கு அந்த நிமலன் மேல கண்ணா? இந்தக் கருப்பு ராணிக்கு அந்த மயில் மேல ஆசையோ? ஹ்ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்.” இப்போதுதான் நிரஞ்சனாவின் காதுகளை வந்து அடைந்தது போல நள்ளிரவு கடந்தும் இன்னும் எதிரொலிக்கிறது விளையாட்டாய் எள்ளி நகையாடிய அனுஷாவின் குரல். அது அவளின் தூக்கத்தைத் துக்கத்தின் திசைக்கு விரட்டியது.
குத்திக் காட்டும் எண்ணமோ, இல்லை என்னை உடைத்துப் போடும் திட்டமோ இல்லாத, அன்றாடம் பணியிலும் அறையிலும் என்றும் என்னுடன் இருக்கும் தோழியின் வார்த்தைகள்தான். அவளின் நோக்கம் என்னைத் தாழ்த்துவதில்லை.
ஆனாலும் சுற்றி இருக்கும் பலரும் அவர்கள் அறியாமலே எப்படி எப்படியோ வார்த்தை எனும் வாள் கொண்டு என் மனத்தின் பல அழகிய முகங்களை உடைத்துக் குத்திக் கிழித்து விடுகிறார்கள்.
கொரோனா வைரஸ் போல என் திறன் மொத்தமும் திரட்டி நாளும் பொழுதும் பன்முகங்களைக் கூராக்கி உலகையே வெல்லும் எண்ணத்தில் இந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு வந்த நான், இன்று ஏனோ கொஞ்சம் கொஞ்சமாகக் கூர் மழுங்கி மழுங்கி கிரிக்கெட் பந்து போல யாராலோ வீசப்பட்டு யாரோ ஒருவரின் மட்டைக்கு இலக்காகி எங்கோ தூக்கி எறியப்பட்டு என ஒவ்வொரு நாள் ஆட்டத்தின் முடிவிலும் கிழிந்து போகிறேன்.
கண்ணீர் கசியும் அளவிற்கு எல்லாம் வேதனை இல்லை. இது எனக்குப் புது அனுபவமும் இல்லை. வெறும் தலையணையில் முகம் புதைக்கும் போது வரும் யோசனை மட்டும்தான். ஏன் என்னைப் பார்க்கும் எவருக்கும் என் நிறம் தாண்டி, என் முகம் தாண்டி எதுவுமே தெரிவதில்லை. தோழமைகள் உண்டுதான். உயிர் நட்புதான். ஆனாலும் கூட்டத்தில் நான் என்றால் என்றுமே என் கரிய நிறம் மட்டுமே பேசு பொருள்.
தினமும் அழகியல் சாதனங்களோடு அவர்கள் எல்லாம் மின்னி மின்னி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் போது அமாவாசையாய் நானும் அவர்களின் கூட்டத்தில். அதற்காக என்றும் அவர்கள் என்னை ஒதுக்கியதில்லை. நானும் என்னைக் குறைவாய் நினைக்கவில்லை. நானும் என்னை அழகுபடுத்திக் கொள்வதுண்டு.
ஆனாலும் மனத்தில் ஒரு நெருடல். சிறு உறுத்தல். வழக்கம் போல அழகியலைப் பற்றிய ஆராய்ச்சியோடு கண்களை மூட இரவின் கருமை நிரஞ்சனாவைச் சூழ்ந்து கொண்டது. இமை மூடக் காத்திருந்த அவளின் கனவுகள் மீண்டும் மனம் முழுதும் காணொளியாய் விரிந்தது.
“மயிலுக்கு எப்பவும் மழை கொடுக்கும் கருமேகம்தான் பிடிக்கும். ஆனா எனக்குப் பௌர்ணமி இரவின் கருமைதான் ரொம்பப் பிடிக்கும்” சில நாட்களுக்கு முன்பு நிமலன் தோழர்கள் சூழ கூட்டமாக ‘டீம் அவுட்டிங்’ போன போது சொன்னது.
“டேய், உருட்டாத டா. கவிஞன்னாலே ஒரே உருட்டுதான் போல.” என உடன் இருந்த வெங்கட் சொல்லும் போது, கண்ணிமைக்கும் நேரம் அவள் பக்கம் வந்து சென்ற நிமலனின் பார்வை அவளுக்குப் புரிய வைத்தது ‘பௌர்ணமி இரவு’ என்பது அவள்தான் என்று. ஆம், நிரஞ்சனா எனும் பெயரின் பொருள் அதுதான். அவளின்றி அங்கு யாருக்கும் புரிய வேண்டிய அவசியமும் இல்லை.
“மச்சி, அதெல்லாம் உனக்குப் புரியாதுடா. தமிழ் புரிஞ்சவங்களுக்குப் புரியும்.” சொல்லும் போதே மீண்டும் ஒரு மின்னல் பார்வை இவள் பக்கம். “அமாவாசைல எல்லாமே கரு கும்முன்னு இருட்டா இருக்கும் டா. ஆனா பௌர்ணமி இரவுல இருக்க இருளுக்கும் ஒரு ஒளி இருக்கும். அந்தக் கருமையில ஒரு ஷைன் இருக்கு. அது ஒரு சில்க்கி பிளாக் மச்சி.”
“ஏது சில்க்கி ப்ளாக்கா? அடேய் இதுதான் மச்சி நீ உருட்டுனதுலே பெரிய உருட்டு.” என வெங்கட் கலாய்க்கவுமே, “டேய், அதைக் கண் மூடி உணர, உன்னால முடியாது. ஏன்னா அது எனக்கானது.” என்று அவன் சொல்லி முடிக்கும் போது நிரஞ்சனாவின் உள்ளம் மகிழ்வில் விம்மி வெடித்துவிடும் போல இருந்தது.
இது என்ன மாதிரியான உணர்வு. இதெல்லாம் ஏன் வருகிறது? ஒருவனை நமக்கு ஏன் பிடிக்கிறது? அதுவும் இது ஒரு தனி விதமான அன்பு. அப்பா அண்ணா தம்பி என ஆயிரம் ஆண் உறவுகள் மேல் இருக்கும் அன்புக்கும் இவன் மேல் உள்ள அன்புக்கும் ஒரு கோடி வித்தியாசம். ஏன் இப்படி? ஆராய்ந்தால் விடை இல்லை. ஆனால் புரிந்தது என்னவோ ‘காதல் அப்படித்தான்.’
‘காதல்’ இன்றுவரை மனிதன் இலக்கணம் வகுக்க முடியாமல், வகுக்கும் இலக்கணத்தின் வரையறைக்குள் கட்டுப்படாமல் என வலைக்குள் சிக்காத கொசு அது. அதன் கடியை அனுபவிக்காத மனிதன் வாழ்ந்தென்ன லாபம்? அப்படியான ஒரு காதல் கொசு நிமலனைக் கடித்து இருக்க வேண்டும். அதே வேகத்தில் வந்து நிரஞ்சனாவையும் அது கடித்து விட்டது போல.
‘இந்தப் பௌர்ணமி இருள் அவனுக்கானதாம்.’ ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாள் மனத்தோடு. என்று தொடங்கியது இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இருவருக்கும் நினைவில்லை. கண்டிப்பாகத் தொடங்கியவன் நிமலன்தான். சமீபமாக அவனின் ஆராதனைகளில் இவள் காதலை உணர்கிறாள். இவளுக்கும் அவன் மேலான பார்வை என்றோ மாறி விட்டது.
நிரஞ்சனா தன் போக்கில் தன் எண்ணத்தில் சுழல, அனுஷா அதற்குள் ஏதேதோ பேசி இருக்க, இவள் எங்கே அதெல்லாம் கேட்டாள். இவளின் காதுகளைத்தான் நிமலனின் குரல்வளையில் சொருகி இருந்தாளே.
“எருமை, என்ன கனவு கண்டுட்டு இருக்க. ரிஷி பாட்டு கேக்கலையா நீ? செமயா பாடறான். என்ன, பாஷை தான் புரியாது. இன்னைக்காவது தமிழ் பாட்டு பாட சொல்லணும்.” அவளுக்கு அவள் கவலை.
நிரஞ்சனாவோ எப்போதடா நிமலனின் முறை வரும், அவன் கவிதை சொல்லுவான் எனக் காத்திருந்தாள். அவன் கவிதையில் காதல் வருமா? அப்படி வந்தால் அது தனக்கானதாக இருக்குமா? எனக் கேள்வி சுழலுக்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தாள். அவளை நினைவுகளுக்குள் சுழல விட்டவன் அங்கே தனது கவிதையை வாசித்துக் கொண்டிருந்தான். தூக்கத்தில் இருந்து எழுந்தவள் போலத் தன் நினைவிலிருந்து கலைந்தவள் கேட்டதெல்லாம்,
நிர்மலமே என் நெஞ்சோடு,
முழுநிலவின் ஒளி இருளோ!
புத்தனுக்கு ஞானம் தந்த நதி,
இந்தப் புனிதனையும் நனைக்காதோ?
காரிருளின் காரிகை நீ,
என்று வந்தெனைச் சேர்வாயோ?
எனும் இறுதி வரிகளைத்தான். நிரஞ்சனாவிற்கு எதுவும் புரியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு நொடியேனும் தொட்டுச் சென்ற அவன் பார்வை இவள் பார்க்கும் போது இவள் புறம் திரும்பவும் இல்லை. இவள் கண்களை இணையவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, காதல் கவிதைதான் என்றாலும் நிரஞ்சனாவிற்கு இது தனக்கானது போலத் தோன்றவில்லை.
எல்லோரும் கைதட்ட இவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன்தான் அவனுக்குக் கை கொடுத்து வாழ்த்திப் பேசிக் கொண்டிருந்த பூர்ணிமாவின் புறம் திரும்பி விட்டானே. அது வேறு இவளுக்கு இன்னும் எரிச்சலைக் கிளப்பியது.
பூர்ணிமாவும் இவர்களது குழுதான். டெல்லியில் பிறந்து வளர்ந்த கும்பகோணத்துத் தமிழ் பெண். புதிதாக வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே என்றாலும் அவளின் வட இந்திய நடை உடை பாவனை எல்லோர் கண்களிலும் விழுந்தே எழுந்தது.
பூர்ணிமாவோடு பேசுபவனைப் பற்றி யோசிக்க யோசிக்க இவளுக்குக் கொஞ்சம் சந்தேகம் துளிர்த்தது. அவன் சொல்வது தன்னை இல்லையோ? இல்லையே, முழு நிலவின் ஒளி என்றானே? நிலவின் ஒளியோடு யோசிக்கப் ‘பூர்ணிமா’வும் நிலவின் ஒளிதானே சட்டென ஒரு சிந்தனை அவள் சிந்தையைத் தாக்க அவ்வளவுதான், அங்கிருந்து எப்படியோ வெளியேறி தனிமைக்குத் தன்னைத் தத்துக் கொடுத்தாள்.
எல்லாத் திசைகளிலும் தனக்கான காதலாகத், தனக்கான பாடலாகத் தெரிந்த எல்லாமுமே இன்று வேறு நிறம் பூசிக் கொண்டு பூர்ணிமாவின் காதலாகத் தெரிந்தது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே? நிரஞ்சனாவுக்கும் தன்னைச் சுற்றி இருப்பதெல்லாம் பேய்களாகவே தெரிந்தது. நத்தை போலத் தன்னை எல்லா இடங்களிலும் சுருக்கி விலகி இருந்து கொண்டாள்.
வாரம் ஒன்று கடந்திருக்க இன்று ஏனோ நிமலனை நேருக்கு நேர் காலையில் பார்த்ததிலிருந்து கண்கள் கலங்கி மனத்தை மறைக்கும் வழி தேடித் தேடி அவனையே பலமுறை அவள் கண்கள் வட்டமடித்தது. அதைப் பார்க்கவும்தான் அனுஷா “அஞ்சனத்துக்கு நிமலன் மேல கண்ணா?” என்று கேட்டிருந்தாள்.
அவன் கண்கள் என்ன மனமும் தன் மேல்தான் என நிரஞ்சனா கட்டிய கோட்டை மணல் கோட்டையாகி மெல்ல மெல்ல அவளின் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தது. அன்பில் வரும் சந்தேகமோ இல்லை சந்தேகமான அன்போ என்றுமே நம் நிம்மதியின் எதிரி. தூக்கத்தின் கொலைகாரி அது.
சந்தேகத்தை அழிக்கலாம்; ஆனால் எந்த நம்பிக்கையில்? அவன் சொல்லாத அன்பை இவளுக்கும் சொல்லும் தைரியம் இல்லை. அதற்கு இவர்கள் சொல்லும் இவளின் நிறமும் ஒரு காரணம். இல்லை இல்லை அதுதான் ஒரே காரணம். “உன்னையெல்லாம்” என்ற ஒரு வார்த்தை போதும் இவளை மொத்தமாக அழித்திட. நினைவுகள் நிந்திக்க இரவின் உறக்கம் இன்றும் இல்லாமலே போனது நிரஞ்சனாவிற்கு.
மறுநாள் காலை விடியல் இன்னுமே அவளைக் களைத்திருக்கக் காய்ச்சல் வேறு உடல் சூட்டை ஏற்றிவிட்டது. அவளின் பெயர் போலவே இரவின் இருள் பூசிக் கிடந்தது அவள் முகம். அனுஷா வேலைக்குக் கிளம்பி நிற்க இவளுக்கு வேலைக்குச் செல்லும் எண்ணம் கூட இல்லை.
‘மனதை மயிலிடம் இழந்தேனே, மயங்கி தினம் தினம் விழுந்தேனே’ கைபேசி ஒலி எழுப்பவும் எடுத்து பார்க்க அம்மா காலிங் என்றது திரை. ஆனாலும் அவளின் கண்கள் திரையின் பின்னிருந்த அந்த இறகுகள் விரித்து நடனமாடும் மயிலிடமே. நொடி நேரம் மயிலின் மேல் வந்த கவனச் சிதறலில் அம்மாவின் அழைப்பைத் தவறவிட்டாள். ஏனோ நினைவில் இப்போது அம்மா சொன்ன வரிகள் வந்து மின்னலாய் அவள் மூளையில் வெட்டி மறைந்தது.
“செம ஃபிகராக இருப்பவர்களின் மீதான சாபங்கள் எதுவும் மொக்கை ஃபிகர்கள் என்று வர்ணிக்கப்படும் பெண்களுக்கு இல்லை.” மனுஷ்ய புத்திரனின் இந்த வரிகளைப் பேச்சாளர் பர்வீன் சுல்தானாவின் பேச்சில் பல முறை கேட்டிருக்கிறாள். ஆனாலும் இதை முதலில் அவளிடம் சொன்னது அவளின் அம்மாதான்.
அம்மாவின் குரலில் அம்மாவின் தோரணையில், “நீ என்னத்துக்கு அழகா இல்லன்னு நினைக்கணும். அழகா இருந்தா இந்தக் காலத்துல என்ன பாதுகாப்பிருக்கு? நடு ரயில்வே ஸ்டேஷன்ல வச்சு வெட்டுனானுங்க. நீ சந்தோஷப்படு பாப்பு. உன்னோட முன்னேற்றத்துக்கு உன் முகம் என்னைக்கும் தடை இல்லைன்னு. அப்படியே உன் வாழ்க்கையில் எவனும் வந்தாலும் அவன் உன் மனச மட்டுமே பார்க்கிறவனா இருப்பான்.”
இவ்வளவுதான் அம்மாக்கள்.
நினைவுகள் நெஞ்சை நிறைக்க, கண்ணீர் மீண்டும் கன்னம் நனைத்தது. இவளையே பார்த்துக் கொண்டிருந்த அனுஷாவிற்கு எல்லாம் புரிந்தும் புரியாத நிலை. இந்தக் கண்ணீரும் கவலையும் நிமலன் மீதான காதலாகவும் இருக்கலாம் என நினைத்தவளுக்கு அதைக் கேட்கத் தோன்றவில்லை.
“நிரா, நீ வேண்ணா இன்னைக்கு ஒரு மெசேஜ் தட்டிட்டு ஒர்க் பிரேம் ஹோம் பண்ணு. TL கிட்ட நான் பேசிக்கிறேன்.” சொல்லிய அனுஷா அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகம் கிளம்பி இருந்தாள்.
வீட்டில் தனித்து இருந்தவளுக்கு இன்னும் காய்ச்சல் கண்டு கண்கள் எரியத் தொடங்கவுமே மற்றதை ஒதுக்கிப் பேசாமல் கட்டிலில் படுத்து விட்டாள். மீண்டும் நிமலனின் நினைவுகளே நிறைந்து நிற்க அதனோடு போராடி அலுத்து என எப்படியோ உறங்கியிருந்தாள் நிரஞ்சனா.
அறைக்கதவு திறக்கும் சத்தம் ஏதோ கனவு போலக் கேட்க என்ன முயன்றும் கண்கள் திறக்க முடியவில்லை நிரஞ்சனாவிற்கு. யாரோ நடமாடும் சத்தத்தில் உணர்வுகள் வந்தாலும் அனுஷாவைத் தவிர உள்ளே வர யாரிடமும் திறப்பு இல்லை என்ற நம்பிக்கையில் நிரஞ்சனாவிற்குப் பயம் எல்லாம் வரவில்லை.
அழையா விருந்தாளியாக விழித்ததும் மீண்டும் நிமலன் நினைவு வந்து மனத்திற்குள் மத்தளம் கொட்டியது. அவள் நினைப்பது போல ஒருவேளை நிமலன் நினைவில் இருப்பவள் பூர்ணிமாதானோ என யோசிக்கும் போதே வலித்தாலும் காதல் இருவர் சம்பந்தப்பட்டதாயிற்றே. இவள் இஷ்டம் போல இன்னொருவரை வளைக்க முடியாதே.
நினைக்க நினைக்க அழகு பற்றிய எண்ணங்கள் சுமையாய் அழுத்தி மனதில் பாரம் ஏற்றியது. ஏற்றிய பாரம் தாங்காமல் மூடிய இமைக்குள்ளும் கருவிழி உருண்டு கண்ணீரை வெளியேற்ற, இமையோரத்து ஈரம் கோடாய் காதுகளை அடையும் முன்னே இதமான கரம் ஒன்று தயக்கம் தவிர்த்து விழி நீரைத் துடைத்திட்டது.
அந்தக் கரம் தந்த இதம் இன்னும் வேண்டும் போலத் தோன்ற அவளின் வலக்கரம் நீண்டு அந்தக் கரத்தைப் பற்றவுமே பதறி எழுந்தாள் பாவை.
புன்னகை மின்ன அவள் முன்னே நின்றிருந்த நிமலன் கை இன்னும் இவள் கைகளுக்குள் இருக்க, “நிமலன்..” என அரற்றி விலகப் போனவளை தடுத்து அமர வைத்தான் நிமலன்.
“என்ன ஆச்சு டா? அனு உனக்கு ரொம்பக் காய்ச்சல்ன்னு சொன்னா” தெளிவாய் அவன் கேட்க, புரியாத பாஷை போல மிரண்டு விழித்தாள் நிரஞ்சனா.
“ஹ்ம்ம், இல்ல.” என்றவள் கைகள் மெல்ல அசைந்து அவளின் இரவு உடையின் கழுத்துப் பகுதியை பின்னிருந்து இழுத்து சரி செய்தது.
“நிரு, அதெல்லாம் சரியாதான் இருக்கு. நீ இங்க என்னைப் பாரு.”
“ம்..”
“உனக்கு என்ன குழப்பம், நான் பேசலன்னா? ஆனா நிருக்கு நிமலன் மனசு எப்பவோ தெரியுமே. இன்னும் என்னடா?”
அவன் குரல் மென்மையா இல்லை அதன் தன்மையா ஏதோ ஒன்று அவளுக்கு மறுபடி அழுகை வந்தது. சுய சிந்தனைச் சுழலில் சிக்கி சிதைந்து கொண்டிருந்தவளுக்கு நிமலனின் வருகையும் இந்தப் பேச்சும் கூடப் பயத்தையே கொடுத்தது.
“ஹே, என்ன டா எதுக்கு இப்போ அழற? ஒரு வாரமா நீயேதான் என்னை அவாய்ட் பண்ண. நானும் சரி ஏதோ யோசனைன்னு விட்டுட்டேன். இன்னைக்குத் திடீர்ன்னு அனு வந்து சொன்னா உனக்குப் பீவர்ன்னு. நாந்தா காரணமாம். அதான் அவசரமா அவளுக்குச் சொல்லிட்டு கீ வாங்கிட்டு உன்னைப் பார்க்க ஓடி வந்தேன். நீ சந்தோசப் படுவன்னு பார்த்தா அழற?”
நிமலன் இத்தனையும் தமிழில்தான் பேசினான், ஆனாலும் நிரஞ்சனாவிற்கு இதெல்லாம் புரிய வேண்டுமே. அவன் அவளைத் தேடி வந்ததிலேயே நிரஞ்சனா உறைந்து போயிருக்க, அவன் பேசுவதெல்லாம் அவளுக்கு எங்கே புரிந்தது.
மேலும் அவன் பேசிக் கொண்டே போக அவளுக்கு அதெல்லாம் கருத்தில் ஏறவே இல்லை. அவளது கேள்வி ஒன்றே ஒன்றுதான். முழு நிலவு அவளா, பூர்ணிமாவா? இவ்வளவுதான்.
ஏதேதோ பேசியவன் இதை மட்டும் பேசாமல் தவிர்க்க நிரஞ்சனாவிற்குள் எழும் குழப்பங்கள் பூமியின் எடையைத் தாண்டும் முன்னே அவனை நோக்கி அவளின் கேள்விக் கணையை வீசி விட்டாள்.
“அன்னைக்கு அவுட்டிங்ல நீ சொன்ன ‘முழுநிலவின் ஒளி இருள்’க்கு என்ன அர்த்தம்?”
“நிரஞ்சனாவுக்கு அர்த்தம் என்ன?” பதில் கேள்வி கேட்டான் நிமலன்.
“ஆனா பூர்ணிமான்னாலும், …?”
“ம்ம்ம், பூர்ணிமா. அதுவும் நிலவுதான். ஆனா அவ என் கவிதையிலே வரலையே. பூர்ணிமாவும் கும்பகோணம். எங்க ஊரு. அவ்வளவுதான். வேறென்ன?” கேட்டவனுக்கு அப்போதுதான் சந்தேகம் துளிர்க்க, “ஏ, பைத்தியமே! லூசு கிறுக்கி. காய்ச்சல் வர்ற அளவுக்கா குழப்பிக்குவ. மொத வரிய மட்டும் கேட்டியே அதுக்கு அடுத்துச் சொன்னதக் கேட்டியா?”
“அடுத்ததா?… அடுத்து என்ன?” என்ன யோசித்தும் அவன் அடுத்து சொன்ன வரிகள் அவளுக்கு நினைவில் இல்லை.
“புத்தனுக்கு ஞானம் தந்த நதி, இந்தப் புனிதனையும் நனைக்காதோன்னு கேட்டேனே. மர மண்டை. புத்தர் ஞானம் பெற்றது பால்கு நதிக்கரையில. அந்த நதிக்கு நிரஞ்சனான்னு இன்னோரு பேரும் இருக்கு. புனிதன் இந்த நிமலன். போதுமா?”
அவன் புளி போட்டு விளக்கி சொன்ன பின்பும் திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை போலவே, அவள் விழிகள் இரண்டும் திக்குத் திசை தெரியாமல் அரண்டு விழிக்க, அதைக் கண்டவனுக்குள் காதல் கலகம் செய்ய மெல்ல அவளின் நெற்றியோடு அவனின் நெற்றி முட்டி அவளின் கண்களுக்குள் கண்கள் கலந்து நோக்கினான்.
அவன் கண்களின் வீச்சு நிரஞ்சனாவிற்கு ஏதோ செய்ய, “நா ரொம்பக் கருப்பு. அழகில்லை.” குரல் உடைய சொன்னவளுக்கு இதயம் நொறுங்கும் சத்தம் காதுகளை அடைத்தது. அழகு என்னும் சொல்லை வெறுத்து தன்னையே நிந்தித்தவளுக்கு உலகமே இருளத் தொடங்கியது.
“நிரு, அழகு என்னைக்குமே ஒரு சுமைதான். அதைச் சுமக்குறவங்க கஷ்டம் இன்னும் எத்தனையோ கதைகளைக் காலம் பூராவும் நமக்குச் சொல்லிக்கிட்டேதான் இருக்கும்.” என்றவன் கட்டிலில் இருந்த அவளை மெல்லத் தூக்கினான்.
நிரஞ்சனாவிற்கு எதுவுமே சுயத்தில் பதியவில்லை. அவனின் இழுப்பிற்கு இழுபட்டவளை தன் இரு கைகளாலும் தூக்கி ஒரு சுற்று சுற்றியவன், “நிமலனுக்கு என்னைக்குமே இந்த நிரஞ்சனா ஒரு அழகிய சுமை. அதுவும் நான் கால முழுசும் சுமக்க ஆசைப்படற சுமை.” சொன்னவன் குரலில் வழிந்தது காதலன்றி வேறென்ன?
நிரஞ்சனாவிற்குக் காய்ச்சல் காணாமல் போய் இப்போது குளிர் எடுத்தது. “ப்ளீஸ் இறக்கி விடுங்க நிமலன்.” என்றவள் குரல் நிமலனுக்கு எட்டி இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவளை அவன் மீண்டும் மெத்தையில் இறக்கி விட்டான்.
“இனி நிரஞ்சனாவுக்குக் குழப்பமில்லையே?”
“சாரி” என்றாள் மெதுவாக.
“நோ இஸ்யூஸ் நிரு. மெல்ல ப்ரிப்பேர் பண்ணிட்டு உன்கிட்ட பேசுவோன்னு நெனச்சேன். பட் இப்படிப் பிரீ ஃப்லோல பேசினது கூட நல்லாதான் இருக்கு.”
நிரஞ்சனாவின் முகத்தில் நீண்டு விரிந்த புன்னகை அவளின் சோர்வையும் தாண்டி சோபை கூடியது.
“சரி நான் கிளம்புறேன். நீ டேப்லெட் போட்டுட்டு நல்லா தூங்கி எழுந்து நாளைக்கு வா. பொறுமையா பேசலாம். எனக்கு அனு பதினஞ்சு நிமிஷத்துக்கு மட்டுந்தா பர்மிசன் குடுத்தா.” அவனின் குறு நகையொலி அவளுக்கும் மயிர்கூச்செரிய இதழ்களின் கடையோராம் வெட்கத்தின் சாயல்.
“அனு என்ன சொன்னா? நீ எப்படி வீட்டுக்கு வந்த?” அப்போதுதான் நிரஞ்சனாவுக்கு அவன் தன்னுடன் இருப்பது எப்படி என்ற கேள்வியே உதித்தது. அவன் முன் சொன்னதெல்லாம் இவள் எங்கு கேட்டாள்.
“நீ பண்ண கலாட்டால அவ என்னை வந்து எகிறினா, அதான் வீட்டு சாவி குடு நானே சரி செய்யிறேன்னு சொல்லிட்டு வந்தேன். ஆனா உனக்குப் பதினஞ்சு நிமிஷம்தான் வீட்டுக்குள்ள இருக்க டைம்ன்னு சொன்னா.”
சொன்னவன் அத்தோடு நிறுத்தி விடவில்லை.
“நிரு, ஈவினிங் அனு வருவா. அவளுக்கு ஒன்னு சொல்லு.”
“என்ன சொல்லணும்.” ஏதோ சிறு பிள்ளையின் பாவம் அவளிடம்.
“காமத்தை விடப் போதை தரக்கூடிய நிறைய விஷயம் காதல்ல இருக்குன்னு உன்னோட மக்கு ரூம் மேட்டுக்கு சொல்லிடு.”
நிமலனின் சொற்கள் நிரஞ்சனாவை காதலால் நிறைக்க அங்கியிருந்து அவர்களின் நீண்டதொரு காதல் பயணம் தொடங்கியது.
அழகான காதல் சுமையைக் காலம் முழுதும் சுமக்கும் இந்தக் காதல் கிளிகள்.
error: Content is protected !!