“என்ன கேட்டீங்க?” கண்களில் கோபம் மின்ன படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கேட்டாள் சஹானா. அவள் காலையில் கட்டிய பட்டுக் கசங்கியிருக்க, அவள் முகம் அதை விட அதிகமாகக் கசங்கியிருந்தது. வாடியப் பூவை இன்னமும் தலையில் சூடியிருந்தவளின் உடலும், உள்ளமும் ஒட்டுமொத்தமாக வாடித்தான் போயிருந்தது. மெதுவாக மனைவியை நெருங்கினான் சத்யமூர்த்தி. அதீத கோபத்தில் கண்கள் கலங்க அமர்ந்திருந்தவளை பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந்தது.
அவன் தொழிலில் விடுமுறையே கிடையாது. வாரத்தின் ஏழு நாட்களும், ஷிஃப்ட் முறையில் தொழிலாளர்கள் வர, தொழிற்சாலை ஓய்வெடுக்காமல் ஓடிக் கொண்டே தானிருக்கும். எந்த நேரம் என்ன பிரச்சனை வரும் என்று சொல்லவே முடியாது. இதோ இன்றைய தினத்தைப் போல. சனி, ஞாயிறுகளில் உழைப்பவர்களுக்குக் கூடுதல் தொகை கொடுத்தால் கூட, குறைவானவர்களே வேலைக்கு வருவார்கள். அதனால் பெரிதாகப் பிரச்சனைகள் வராது. அப்படியிருக்க, இன்றைக்கு இப்படியொரு பிரச்சனையை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
இது தான் முதல் முறை என்பதால் முதலில் அதிர்ந்துதான் போனான். கோபமும், ஆத்திரமும் கண்ணை மறைக்க, முடிவெடுக்க முடியாமல் திணறி நின்று, பின்னர் ஒரு வழியாகப் பிரச்சனையைச் சமாளித்து, தீர்வு கண்டு, சோர்ந்து போய் அவன் அறைக்கு வந்து மனைவியை அழைக்கப் போக, அவளிடம் இருந்து ஏற்கனவே அழைப்பும், செய்தியும் வந்திருந்தது. அவனுக்கு ஏற்கனவே இருந்த பதற்றத்தில் இதயத் துடிப்பு இரட்டிப்பாகியது. மனைவியின் தவற விட்ட அழைப்புகளின் எண்ணிக்கை ஐந்து என்றது அவனது அலைபேசி. அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துக்களில், “ஐ ஹேட் யூ” என்று அனுப்பியிருந்தாள் சஹானா.
அதைப் பார்த்ததும் நா உலர்ந்து போனது அவனுக்கு. மிக அவசரமாய் அவளை அழைக்கப் போனவனின் கண்களில், மனைவியின் அடுத்தச் செய்தி வந்து விழுந்தது.
“வீட்டுக்கு வந்துட்டேன்” என்று அதையும் ஆங்கிலத்தில் கத்தியே சொல்லியிருந்தாள் சஹானா. பதற்றத்துடன் தலைக் கோதி கொண்டான் சத்யமூர்த்தி. ஒருவித படபடப்புடன், மனைவியின் கோபத்தை எதிர்பார்த்தே வீடு வந்தான் அவன்.
அவன் அறைக்குள் சத்தமின்றி நுழையும் போது அவள் கண் மூடி படுத்திருக்க, “அப்பாடா தூங்குறா” என்று நினைத்து, ஆசுவாசமடைந்து குளிக்கச் சென்றான். ஆனால், இப்போது அவன் முன் கண் கலங்க அமர்ந்திருந்தவளைப் பார்க்க பார்க்க அவனுக்குத் தன் மேலேயே கோபமாக வந்தது. அவசரமாய்க் கையில் இருந்த, இரவு உடையை அணிந்தான்.
“சஹானா” என்று சமாதானத்தைக் குரலில் கொணர்ந்து, மனைவிக்கு அருகில் செல்ல, பாய்ந்து அவன் மார்பில் அடித்தாள் சஹானா.
“பேசாதீங்க. ஒரு இடம் கூட்டிட்டு போனா, திரும்பி கூட்டிட்டு வரணும்னு பேசிக் சென்ஸ் கூட இல்லையா உங்களுக்கு?”
“ஃபேக்டரில..”
“ஆமா. எப்பவும் ஃபேக்டரிதான் முக்கியம். நான் இல்ல. தெரியும் எனக்கு”
“சஹானா..”
“என்ன சஹானா? என் பேரை தவிர வேற ஒன்னும் தெரியாதா உங்களுக்கு? பதில் சொல்லுங்க. சண்டேல என்ன தலைப் போற வேலை உங்களுக்கு? அந்த வீடே எனக்குப் பிடிக்கல. உங்க அத்தையும், அவங்க பேச்சும்.. அவங்க பசங்க.. அய்யோ.. எனிக்குத் தேஷியம் தேஷியமாயிட்டு வருனு” பல்லைக் கடித்து, தலையை உலுக்கினாள். கடுங்கோபத்தில் வந்த அவளின் மலையாளத்தை ஒரு நொடி அவன் ரசித்திட, பத்ரகாளியானாள் அவனின் மலையாள பகவதி.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீங்க பண்ண பண்றீங்க?” கண்களில் வைரமாய்க் கண்ணீர் துளி மின்ன, ஆத்திரத்துடன் கத்தினாள் சஹானா.
“இல்ல, சஹானா..”
“என்ன இல்ல? உங்க அத்தை, திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வியையே கேட்டு, என்னை அவ்ளோ அன்கம்பர்ட்டபிளா ஃபீல் பண்ண வச்சாங்க, தெரியுமா?. விருந்துக்குக் கூப்பிட்டு இப்படிதான் மரியாதை பண்ணுவாங்களா? உங்க முறைப் பொண்ணு, உங்களை முழுங்குறது போல முறைச்சு முறைச்சு பார்க்கறா. உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. வைஃப் நான், உங்க பக்கத்துலயே உட்கார்ந்துருக்கேன். அப்பவும் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம வெரிச்சு பார்க்குறா, லூசு” அவனுக்குப் பேசவே வாய்ப்பளிக்காமல் பேசியவளுக்கு மூச்சு வாங்கியது.
சாதாரணமாகவே சத்யமூர்த்திக்கு பேச்சு வராது. முதல் முறையாகப் புன்னகை தொலைத்து புயலாக நின்ற மனைவியை இமைக்காமல் பார்த்தானே தவிர, பேச்சே வரவில்லை அவனுக்கு. என்ன சொல்லி அவளைச் சமாதானப்படுத்துவது என்றும் புரியவில்லை அவனுக்கு. அதனால், மௌனமாய் அவன் அமர்ந்திருக்க, இன்னுமே கொந்தளித்தாள் சஹானா.
“அவ.. அது.. நான் பார்க்கலை சஹானா”
“எதைத்தான் பார்த்தீங்க நீங்க? உங்க மாமா பையன் என்னையே முறைச்சுப் பார்த்தான். அதையும் பார்க்கலை நீங்க. கருமம், அவனுக்கு நான் தங்கச்சி முறை. அவனும், அவன் பார்வையும், பிராந்தன்”
“சஹானா, என்ன சொன்ன? அவன் உன்னைத் தப்பா பார்த்தானா? அங்க வச்சே என்கிட்ட சொல்றதுக்கு என்ன? வாயில கொழுக்கட்டையா வச்சிருந்த? இப்ப வந்து என்னை இப்படிக் காய்ச்ச தெரியுது இல்ல? அங்கேயே சொல்லி இருந்தா.. அவனை…”
“நீங்களும் அங்கதானே இருந்தீங்க. பொண்டாட்டியை எவன் எப்படிப் பார்க்கறான்னு கவனிக்கக் கூட மாட்டீங்களா?” சஹானா கோபத்தில் எகிற,
“நான் மாமாகிட்ட முக்கியமான விஷயம் பேசிட்டு இருந்தேன். எக்ஸ்போர்ட் லைசென்ஸ் பத்தி கேட்டுட்டு இருந்தார். அதான், அதுல கவனமாக இருந்துட்டேன். அதுவும் இல்லாம, நம்ம வீட்டு ஆளுங்க தானேனு.. அவனை.. கொல்றேன் இரு. இவனை மாதிரி பொறுக்கிங்களால…” பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பியபடி அலைபேசியைக் கையில் எடுத்து மாமன் மகனை அழைக்கப் போனான் சத்யமூர்த்தி.
“நான் அவங்க வீட்ல இருந்து கிளம்பும் போது கூட, நான் ட்ராப் பண்றேன்னு, முன்னாடி வந்து இளிக்குறான். அப்படியே அவன் கழுத்தை நெரிக்கணும் போல இருந்தது எனக்கு..”
“டேய், விவேக்..” என்று சத்யமூர்த்திச் சொன்ன பிறகுதான் அவனைக் கவனித்தாள் சஹானா.
“என்ன பண்றீங்க? வேணாம்” சஹானா சட்டெனச் சிறு குரலில் மறுக்க, “ஏன்?” என்றான் கனலை வீசிய கண்களால். கையை மறுப்பாக அசைத்து, அழைப்பை துண்டிக்கச் சொன்னாள் அவள்.
“சஹானா பத்திரமா வீட்டுக்கு வந்துட்டான்னு உங்கம்மாகிட்ட சொல்லிடு” கோபமாய்ச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து, மனைவியை எரித்து விடுவது போலப் பார்த்தான் சத்யமூர்த்தி.
“ஏன் தடுத்த?” சத்யமூர்த்தி, ருத்ரமூர்த்தியாகி இருந்தான்.
“அது ஒரு ஆர்வக்கோளாறில் அவன் பண்ணது. இன்னொரு டைம் பண்ணா, முகத்துக்கு நேரா நானே சொல்லிடுவேன். நீங்க அங்க என்கூட இருந்தும், அவன் அப்படிப் பார்த்ததுதான் என் கோபம். நீங்க திரும்பி அவனைப் பார்த்திருந்தா, அவன் பார்வை மாறி இருக்கும்”
“இந்த விவேக்கா இப்படி? ச்சே, ஒருத்தன் நல்லவன் கிடையாதா? அவன் என் கையில் மாட்டாமயா போவான். இருக்கு அவனுக்கு. பொறுக்கி நாய். என் பொண்டாட்டியை.. அவனுக்குப் பார்க்க கண்ணே இல்லாம பண்றேன் இரு” கோபத்தில் தாடை இறுக, தலைக் கோதினான்.
“அங்க வச்சே என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல சஹானா. அவனை…” ஆத்திரம் அடங்கவில்லை அவனுக்கு.
“இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் அப்படியே வெட்டணும்” மணமான இத்தனை நாட்களில் இவ்வளவு கோபத்துடன் கணவனைப் பார்த்ததில்லை சஹானா.
“நீங்க அங்கதான் இருந்தீங்க. பிளஸ், அது உங்க மாமா வீடு. நம்ம சொந்தங்கள்..”
“இப்படித்தான், இப்படித்தான். ஆர்வக்கோளாறு பார்வை. ஆபத்தில்லா பார்வைன்னு.. இவனுங்களை எல்லாம் ஈசியா தப்பிக்க விடுறீங்க. நான் அவனை மிரட்ட கால் பண்ணா, வேணாம் சொல்லி தட்டி விடுற. தண்டிக்கணும். இதையெல்லாம் ஆரம்பத்திலேயே வெட்டி எறியனும். அப்போதான் அவனுங்களுக்குப் பயம் வரும்” கணவனின் கோபம், அவனின் மாமன் மகனின் மீது மட்டுமல்ல, என்று அப்போதுதான் உணர்ந்தாள் சஹானா. அவன் கண்களில் கோபம், வெறுப்பு, ஆத்திரம் சூழ ரௌத்திரமூர்த்தியாக அமர்ந்திருந்தவனைக் குழப்பத்துடன் கூர்ந்துப் பார்த்தாள் சஹானா.
“ஃபேக்டரியில் என்ன பிரச்சனை?” அழுத்தமாய் வந்த அவளின் கேள்வியில் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் சத்யா.
“அது.. சஹானா…”
“என்ன பிரச்சனை?” அவளையே இமைக்காமல் பார்த்தவன், அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவளின் கைப் பிடித்துக் கொண்டான்.
“ஃபேக்டரி வொர்க்கர் ஒருத்தன், ஒரு பொண்ணை அடிச்சுட்டான். பெரிய காயமில்ல. ஆனா, விஷயம் பெருசா இருக்கும் போல உடனே வாங்கன்னு மாதவன் கால் பண்ணான்னுதான் அவசரமா போனேன் சஹானா. அந்தப் பொண்ணுகிட்ட அவன் தப்பா நடக்க டிரை பண்ணதா அந்தப் பொண்ணு சொல்லியிருக்கு. அவன், நாம் சும்மா பார்த்ததுக்குத் திட்டிக் கத்தினா, அந்தக் கோபத்துல அடிச்சேன்னு சொல்லியிருக்கான். என்னால மாமா வீட்ல வச்சு, அதை விலாவரியா, விவரம் கேட்டு விசாரிக்க முடியல. என்னமோ நேர்ல போயே ஆகனும்னு உள்ளுணர்வு சொல்லுச்சு.”
“அய்யோ, அப்புறம் அந்தப் பொண்ணுக்கு என்னாச்சு? உண்மையில என்ன நடந்தது சத்யா?”
“உன்னை நான் மாமா வீட்ல தனியா விட்டு வந்திருக்கக் கூடாது. நாம விருந்துக்குன்னு அவங்க வீட்டுக்குப் போய்ட்டு, ரெண்டு பேரும் சாப்பிடாம கிளம்பி வந்தா, மரியாதையா இருக்காதுன்னு நினைச்சேன். அதுவும் இல்லாம, அது என் தாய் மாமன் வீடு. எனக்கு அவர் அப்பா மாதிரி. ஆனா, அந்த வீட்ல.. ச்சே..”
“அந்தப் பொண்ணு, பையன் ரெண்டு பேரோட பார்வையும் ஹார்ம்லெஸ் சத்யா”
“இப்படித்தான், எதையுமே அசால்ட்டா எடுக்கக் கூடாது. அதுதான் நாளைக்குப் பெரிய தலைவலியா வந்து முடியும்”
“சரி. இப்போ அந்தப் பொண்ணுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க” மனைவி கேட்க, அவள் விரல்களை வருடியபடி சொல்லத் தொடங்கினான். சத்யமூர்த்தியால் தன் தொழிற்சாலையில், தன் மேற்பார்வையில் நடந்த இப்படியொரு நிகழ்வை இன்னமுமே ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சி ஒரு பக்கம், ஆத்திரம் ஒரு பக்கம் என்று அல்லாடினான் அவன்.