“வாட்? என்ன சொன்னீங்க, இங்க நானும் நீங்களும் மட்டும் தான் இருக்கோம். காதல் எங்க வந்துச்சு?” என்றாள் அருவி. அவன் சொன்னது புரிந்த பாவனையில். ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம் அருவிக்கும் இருந்தது. ஆனால், அவள் அதை வெளிக்காட்டவில்லை.
இருவருமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள்.
“காதல், அது எனக்கு வந்தாச்சு, உனக்கு எப்ப வரும்னு நீதான் சொல்லணும். இல்லனாலும் நீயும் நானும் சேரதே காதல் தான்”
அகத்தியன் மனத்தில் உள்ளதைப் பட்டென்று போட்டுடைத்தான்.
அருவி கத்தவில்லை, கோபம் கொள்ளவில்லை. மிகவும் பொறுமையாகச் சொன்னாள்.
“நீங்க சிங்கிளா இருக்கறதால, நானும் அப்படி இருக்கறதால, நம்ம இரண்டு பேரும் நட்புன்ற நிலையில நின்னு பேசுறோம். அதனால உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கலாம். அப்படி கல்யாண ஆசை வந்துடுச்சுன்னா வேற ஆளா பாருங்க. ஐ அம் நாட் இன்ட்ரெஸ்டட் அகத்தியன்” என்று சொன்னவள் கதவு வரை சென்று விட்டு, மீண்டும் அகத்தியனிடம் வந்து அவனிடம் காஃபி கோப்பையை நீட்டியவள், அவன் வாங்கிக் கொள்ள,
“தேங்க்ஸ் ஃபார் தி காஃபி” என்று சொல்லிப் போனாள். அகத்தியனோ இன்னமும் குறையாத மென்னகையோடு அவன் மேனகையைக் கண்டு ரசித்தான்.
உள்ளே போன அருவிக்கு இவன் காதல் என்றதும், அவளுக்கும் சக்திக்கும் ஊருக்குப் போகும் முன் நிகழ்ந்தவை நினைவில் எழுந்தன.
சக்தி அமெரிக்காவிலிருந்தவரை அருவியை ‘அரெகண்ட்’ அருவியாகத்தான் தெரியும். ஆனால் இங்கு வந்து, அவளுடன் இருந்த பின், அவள் ‘அன்பின் அருவி’ என்பது அவனுக்குப் புரிந்தது. அதிகம் பேசா விட்டாலும் அவனுக்காக அவள் பார்த்துப் பார்த்து செய்வதெல்லாம் அவனுக்கு அவள் மீதான பாசத்தைப் பெருக்கியது.
தாங்கள் மட்டும் குடும்பமாக இருக்க, அத்தை இப்படி தனியாளாக இருக்கிறாளே என்ற வருத்தம் அவனுக்கு. இதே யாழினி இப்படி இருந்தால் அவனோ, அவன் தந்தையோ விடுவார்களா? தன் தந்தை மிகவும் சுயநலம் என்று அவனுக்குள் ஒரு கோபம் உருவானது.
அதை அருவியிடம் காட்டவும் செய்தான்.
“ஏன் அத்தை? நீங்க இப்படி சிங்கிளா இருக்கீங்க எனக்குக் கஷ்டமா இருக்கு ” என்று சக்தி வருத்தத்துடன் பேச,
“இதுல என்ன கஷ்டம், ஐ அம் ஃபைன் டா, நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற?” என்று அருவி அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
“இல்ல அத்த, நான் ஏன் இவ்வளவு நாள் யோசிக்கலன்னு ஃபீல் பண்றேன். இதே யாழினி கல்யாணம் வேண்டாம் சொன்னா அப்பா விட்டுடுவாங்களா?” என்றான் கோபத்துடன்.
“சக்தி, அப்பா மேல தப்பு இல்ல, எனக்குப் பிடிக்கல. அதனால பண்ணிக்கல, அப்பா சொல்லாம இருக்காங்கனு நீ நினைக்கிறியா? எனக்கு அதுல சுத்தமா விருப்பமில்ல” என்று அருவி பொறுமையாகச் சொன்னாள்.
“அதான் ஏன்?” என்று சக்தி மீண்டும் மீண்டும் கேட்டான்.
அருவிக்குக் கோபம் வந்துவிட்டது. இயல்பிலேயே அதிகம் பேசாதவள். தன்னுடைய தனிப்பட்ட விசயத்தை எல்லாம் விவாதிக்க அவள் என்றும் விரும்பியதில்லை. சக்திக்காகப் பொறுமையாகச் சொல்ல, அவன் அவளது அகவுணர்வுகள் புரியாமல் பேச,
“பிடிக்கலன்னா விடு சக்தி. உன் வயசுக்குத் தகுந்த மாதிரி நட. இது என்னோட பெர்சனல்” என்றாள்.
“அப்போ எங்கிட்ட இனி பேசாதீங்க” என்று கோபத்துடனே அடுத்த நாள் அவன் சுற்றுலா சென்றான். அருவி பேசினாலும் அவன் பதிலே பேசவில்லை.
இப்போது அகத்தியன் அவன் அகத்தை இவளுக்கு வெளிக்காட்டி இருக்க, இந்த தருணத்தில் சக்தி இல்லாதது நல்லதென்றே நங்கை நினைத்தாள்.
முதல் முறையாக ஒருவன் காதலைச் சொல்கிறான். அதுவும் இந்த வயதில், அருவிக்குச் சிரிக்கத்தான் தோன்றியது. இயல்பினால் வந்து ஈர்ப்பு என்றே அவள் எண்ணம்.
அடுத்த நாள் அருவி மொட்டை மாடிக்குச் சென்று துணிகளை அள்ள, அகத்தியன் அங்கு தான் நின்று கொண்டிருந்தான். இவளையே பார்த்துக் கொண்டு, ஆனால் பேசவில்லை.
அருவி அவனிடம்,
“என்ன டியுட்டிக்குப் போகல அகத்தியன்?” என்று கேட்க,
அவன் விழிகளில் ஏறிக்கொள்கிறது அருவி மீதான ஆச்சரியம்.
“இல்ல, இன்னிக்கு எனக்கு ஆஃப்” என்றவன்,
“நான் நேத்து அப்படிப் பேசின பின்னாடி, இன்னிக்கு எதுவும் நடக்காத மாதிரி எங்கிட்ட பேசுற அருவி?” அகத்தியன் அருவியை அறிந்து கொள்ள கேட்க,
அருவியோ, துணிகளை மடித்துக் கொண்டே அவனிடம் பேசினாள்.
“அகத்தியன், நீங்க உங்க மனசுல இருக்கறதை சொன்னீங்க, நான் என்னோட நிலையை சொல்லிட்டேன். அதோட அந்த விசயம் முடிஞ்சுப் போச்சு. நீங்களும் சின்ன பையன் இல்ல. நானும் சின்ன பொண்ணு இல்ல. இரண்டு பேருமே தெரிஞ்சே சொன்ன விசயங்கள். அதைத் தாண்டி நமக்குள்ள நல்ல நட்பு இருக்குன்னு நினைக்கிறேன். என்ன இருக்கு தானே?” என்று அருவி அகத்தியனைப் பார்த்துக் கொண்டே புருவம் உயர்த்திக் கேட்க,
அவன் விழிகளில் அவளுக்கான காதல் நிறைந்திருக்க, “எஸ், அது இருக்கு தான். ஆனா அந்த நட்பைத் தாண்டனும்னு என்னோட விருப்பம்” என்று அகத்தியன் அவன் அகத்தில் அருவிக்கென பொழிந்த காதலைத் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டான்.
“உங்க விருப்பத்துல எனக்கு விருப்பமில்லன்னு நான் நேத்தே சொல்லிட்டேன், ஒன்னு நீங்க உங்க விருப்பத்தை கடந்திடணும் இல்ல நான் நம்ம நட்பை கடக்கணும். தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்று சொல்லி அருவி அவனை கடந்து சென்றுவிட, எதையும் கடக்க முடியாமல் காலத்தை கடத்தினான் அகத்தியன்.
அடுத்து இரண்டு நாட்களில் சக்தியும் வந்துவிட, அவர்கள் நாட்கள் இயல்பாய் சென்று கொண்டிருந்தது.
அன்று அருவி மிகவும் பரபரப்பாய் வேலைகளைச் செய்து கொண்டிருக்க,
“என்ன அத்தை யாராச்சும் கெஸ்ட் வராங்களா?” என்று சக்தி கேட்டான்.
“ஆமா சக்தி என்னோட பெஸ்ட் ப்ரண்ட் சரஸ்வதி வரா” என்று சொல்லி அருவி தோழிக்காக வாங்கி வந்த பலகாரங்களை எல்லாம் எடுத்து வைக்க, சிறிது நேரத்தில் சரஸ்வதியும் வந்து விட்டாள். சக்தியை அருவி அறிமுகம் செய்து வைக்க, அவனும் நலம் விசாரித்துவிட்டு நல்ல பிள்ளையாக அறைக்குள் புகுந்து கொண்டான்.
அருவியின் தோழி அருவி போல் அல்லாது அருவியாகப் பேசினாள்.
“உனக்கென்ன அருவி சிங்கிளா சந்தோசமா இருக்க, என்னை பாரு என் மாமியார் டெய்லி ஒரு சண்டை இழுப்பாங்க, எனக்கு அதைச் சரி கட்டவே நேரம் சரியில்ல” என்று புலம்பினாள். அவளும் ஆறு வருடமாக இதையே சொல்ல,
“ஹேய் அதெல்லாம் இல்ல சிங்கிளா இருந்தாலும் பார்க்கறவங்களாம் ஏன்மா கல்யாணம் பண்ணல கேட்பாங்க சரஸ், உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. மாமியார் எப்படி இருந்தா என்ன உன் ஹஸ்பண்ட் நல்லாதானே பார்த்துப்பாங்க. இந்த புலம்பலை விடுடி. ஆறெழு வருசமா நீயும் இதே சொல்லி எனக்கு போர் அடிக்குதுடி” என்று அருவி சொன்னாள்.
“உங்கிட்ட புலம்பாம வேற யார்கிட்ட நான் சொல்றது. வீட்ல சொல்ல முடியுமா? இல்ல அவர்கிட்ட அவங்க அம்மா பத்தியே சொல்ல முடியுமா? நீதானே பேச மாட்ட என்னைப் பேச விடு” என்றவள் மாமியார் செய்யும் கொடுமைகள் சொல்ல, கேட்டிருந்த அருவிக்கு எப்படியோ, அறைக்குள் இருந்த சக்தி உண்மையில் பதறிப்போனான்.
அப்போ கல்யாணம் ஆகிப்போனா மாமியார் நம்ம அத்தையைக் கொடுமை செய்வாங்களோ? என்றதாய் அவன் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. மிஷன் மிங்கிளை விட சிங்கிளே சால நன்று என்று சரஸ்வதியின் பேச்சு சக்தியை நினைக்க வைத்தது.
“இங்க பாரு சரஸ் எனக்கு உனக்கு அட்வைஸ் பண்ணவெல்லாம் தெரியாது, ஆனா போல்டா இரு. அவங்க ஏதோ பேசினா கண்டுக்காத, எல்லாத்துக்கும் சண்டை போடாத, அவ்வளவுதான் எனக்குத் தெரியும்”
“ஆமா உனக்கு என்ன தெரியும் ஜாலியா இருக்க, நீயே ராணி! நீயே மந்திரி! என் மாமியார் மாதிரி ஒரு மாமியார் இருந்தா தெரியும்” என்று சரஸ்வதி அவள் சந்தித்த வேதனைகளைக் கூற,
“ஹே இங்க பாரு சரஸ் கல்யாணமாகிட்டா ஒரே மாமியார் தான், கல்யாணம் ஆகலன்னு வச்சிக்கோ ஊரெல்லாம் மாமியார் டி! அதெல்லாம் உனக்குப் புரியாது” என்று அருவி அவள் நிலையை விளக்கிட, அருவி சொன்னதைக் கேட்டு சரஸ்வதி தோழிக்காக வருந்தினாள்.
“அப்போ நீ சந்தோசமா இல்லையா?” என்று கவலையோடு கேட்டிட
“ப்ச், நம்ம சந்தோஷம் நம்ம கிட்டத் தான் இருக்கு சரஸ். உனக்குப் பிடிச்ச ரஸகுல்லா வாங்கி வச்சிருக்கேன், அதைச் சாப்பிடு” என்று எடுத்துக் கொடுக்க, அதன் பின் தோழிகள் சிறிது நேரம் பேச, சரஸ்வதி கிளம்பிப் போன பின் சக்தி அருவியிடம் வந்து,
“அத்தை உங்க ப்ரண்ட் நம்ம வீட்டுக்கு வராங்க, நீங்க இத்தனை நாள்ல எங்கேயும் போய் நான் பார்க்கலயே?” என்று தன் நெடுநாளைய சந்தேகத்தைக் கேட்டான்.
“சக்தி சரஸ் ரொம்ப க்ளோஸ், அடிக்கடி மீட் பண்ணுவோம். மத்தவங்களாம் காலேஜ்ல கூட வொர்க் பண்றவங்க தான். ஸோ டெய்லி நேர்லேயே பார்த்துக்குவோம். என்னோட மத்த காலேஜ் ப்ரண்ட்ஸ்லாம் கல்யாணமானவங்க. அவங்க வீட்டு நான் போனேன் வை, ஏன்மா இன்னும் கல்யாணமாகலயா கேட்பாங்க, அவங்க ஒரு கல்யாண மாலை நடத்த ஆரம்பிப்பாங்க. அதனால நான் போறதில்லை” என்று அருவி சொல்லவும்
சக்தி தயங்கியவனாக,
“அத்தை கல்யாணமான மாமியார் கொடுமையெல்லாம் செய்வாங்களா? சரஸ்வதி ஆன்ட்டி சொல்ற மாதிரி?” என்று கேட்டான்.
சக்தி கேட்ட விதம் அருவிக்குச் சிரிப்பை வரவழைக்க, அடக்கிக் கொண்டு, “ஆமா செய்வாங்க ” என்றாள்.
“ஆனா கல்யாணம் ஆகலனாலும் வேற பிரச்சனை எல்லாம் இருக்குல” என்று அவன் தாடையில் விரல் வைத்து யோசிக்க,
“டேய் பெரிய மனுசா, என்ன டவுட் உனக்கு?” என்று அருவி அவன் தலையில் கொட்டி கேட்டாள்.
“ஹா அத்தை ” என்று தலையைத் தேய்த்தவன்,
“இல்ல உங்க கிட்ட நான் டூர் போறதுக்கு முன்னாடி சண்டை போட்டேன் தானே, உங்களுக்கு ஒரு குடும்பம் வேணும் தான் அப்படிப் பேசினேன். கல்யாணமான நீங்க ஹாப்பியா இருப்பீங்க நினைச்சேன். பட் நௌவ்?” என்று அவன் குழப்பத்தில் பேச,
“அப்போ நான் உங்க குடும்பத்தில இல்லை அப்படித்தானே ?” என்று அழுத்தத்துடன் கேட்டாள் அருவி.
“அத்தை நாட் லைக் தட் ” என்று பதறியவன்,
“ஐ மீன் அத்தை, அத்தை வீட்டு மாமா, அத்தை பசங்க அப்படி எனக்கும் ரிலேஷன்ஸ் வேணும் சொன்னேன், ஐ டிண்ட் மீன் நீங்க வேறன்னு” என்று அவன் பதற்றமும் பரிதவிப்புமாகச் சொல்ல,
அவனைக் கனிவோடு பார்த்த அருவி,
“ரிலாக்ஸ் சக்தி, எனக்குப் புரியுது, எனக்கு அண்ணா, அண்ணி, சக்தி, யாழினி போதும்” என்று சொன்னவள் அவன் தலையைக் கலைத்து விட்டுப் போக, சக்திக்கு யாரோ ஒருவரின் வீட்டிற்குச் சென்று மாமியாரிடம் கொடுமை அனுபவிப்பதை அத்தை இப்படியே இருந்து விட்டால் போதும் என்று நினைத்தான்.
*********************
ஒரு வாரம் ஓடியிருக்கும்.
சக்தி ஏதோ புத்தகம் வாங்கச் சென்றிருக்க, அருவி அவன் வருகிறானா என பால்கனி வழியே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு லிஃப்ட் திறக்கும் சத்தம் கேட்டது.
பார்த்தால் அகத்தியன்.
இவளை அவன் காண, அருவி சினேகமாகச் சிரிக்க, அவனோ அதைக் கண்டு கொள்ளாது வீட்டினுள் சென்றுவிட, அருவிக்கு ஒரு மாதிரி ஆனது. ஒரு வாரம் கழித்து, இன்றுதான் அவனைப் பார்க்கிறாள். அப்போதும் இப்படி முகம் திருப்பி செல்கிறானே என்ற கோபத்தில் அருவி இருக்க, அவளின் நாசியில் புகுந்தது நல்லதொரு நறுமணம்.
காஃபி!!!!!! அகத்தியனின் காஃபி!!!
அன்று ‘ஹேவ் இட்’ என்று சொன்னவன் ஹாயாக அவன் பாட்டிற்கு காஃபியை வெளியே வேடிக்கை பார்த்தபடி பருக, காஃபியிலிருந்து வந்த ஆவியும் அனலும் போல் அருவியும் கொதித்தாள்.
அருவியின் பார்வையைப் படித்துக் கொண்ட அகத்தியன்.
“இனிமே நோ காஃபி ஷேரிங், இரண்டு கப்ஸ் கிடையாது, சிங்கிள் கப் தான். வேணும்னா வாங்கிக்கோ” என்று அவன் பருகிய காஃபி கோப்பையை நீட்டினான்.
அருவிக்கு உள்ளுக்குள் என்னவோ உடைந்தது.
“அப்போ நட்புன்றதே நமக்குள்ள கிடையாதா?” என்றாள் ஆயாசத்துடன்.
அவ்வளவு மரியாதையும் நட்புடனும் பார்த்தவள் ஆயிற்றே, தாங்கவே இயலவில்லை. அவனின் பாராமுகம். காதல் பேச்சு எதுவும் பிடிக்கவில்லை.
“என்னால என் காதல கடக்க முடியல அருவி நிஜமா, நட்புன்ற எல்லை இனி எனக்கு இல்லை. அதைத் தாண்டி ரொம்ப நாளாச்சு” என்றான் பார்வையில் பாவைக்கான பாசத்தைத் தேக்கி வைத்தவனாக.
“எங்கப்பா அண்ணாக்கு அப்புறம் உங்க கிட்ட நல்ல நட்பை நான் உணர்ந்தேன், ஆனா ப்ச். ஏன்? எப்படி? இது எங்க வந்துச்சு?” என்றாள் தாங்க முடியாதவளாக. காதல் என்று சொல்ல கூட முடியவில்லை.
“உனக்கு என் மேல நட்பை தாண்டி எதுவும் வரல இல்லையா, அதுக்கு காரணம் கிடையாது. அது மாதிரி எனக்கும் உன் மேல நட்பை தாண்டி வந்த இந்த உணர்வுக்குக் காரணம் கிடையாது. ஆனா அதே சமயம் உன்னை நிர்ப்பந்திக்கிறது என்னோட அன்புக்கு அழகில்ல, ஸோ இப்படியே தனியா இருப்போம்” என்று அவன் தெளிதென சொல்லிட, அருவி கோபமாக வீட்டிற்குள் போனாள்,
‘கோடி அருவி கொட்டுதே அடி உன்னால…
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால’
என்று பாடல் கேட்க, அகத்தியன் அவனது ட்ராக் சூட்டிலிருந்து செல்பேசியை எடுத்தான். அது அழைத்துக் கொண்டே இருக்க, அவன் அழைப்பை ஏற்கவில்லை.
மீண்டும் இசைத்தது கோடி அருவி. அவன் அகத்தின்னுள்ளும், அலைப்பேசியினுள்ளும்.
அருவியின் அகன்ற விழிகளில் ஆச்சரியம் அரங்கேறியிருக்க அவனைப் பார்த்திட, அதைக் கண்ட அகத்தியன் விழிகளுக்குள் அருவிக்கென ஆர்கழியெனக் காதல் நிறைந்திருந்தது.
அகத்தியன் புருவம் உயர்த்தி குறும்பு குடியிருந்த, அவன் குறு விழிகளில் அவளை நோக்கி தன் காஃபியைக் காண்பித்து,
“ஷேரிங்” என்று அவன் இதழ் அசைக்க,
அவன் செயலில் அருவி அகத்தியனை முறைத்துப் பார்த்திட, அவனோ கண்ணடித்து விட்டு அலைப்பேசியை ஆன் செய்தான்.
அவனின் செயலில் அவளுக்குள் புதிதாய், புதிராய் சில உணர்வுகள் புலரும் நிலையில்.