அத்தியாயம் 7
வாழ்க்கை ஒரு பரிசு. அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
-பகவத் கீதை.
அதற்குள் குந்தவைப் பயந்து கத்திய கத்தலில் அமிர்தவள்ளியும், தேன்யாழியும் வெளியே ஓடி வந்து பார்த்தால், செந்தூரனின் சட்டையில் அப்படியே தன் கைத்தடம் பதித்திருந்தாள் குந்தவை.
“சாரி தெரியாம” என குந்தவை சொல்லிக் கொண்டிருக்கையில்,
“விடு தங்கச்சி” என அவன் சொல்ல
“என்னது தங்கச்சியா? அவ சித்தி நம்ம குமாருக்கு அத்தை டா! உனக்கு எப்படி அவ தங்கச்சி ஆவா?” என்று அமிர்தவள்ளி திட்டினார்.
“இப்ப இது ரொம்ப முக்கியம் போம்மா அங்கிட்டு.” என்ற செந்தூரன் தனது துணிகளை எடுத்துக்கொண்டு, மீண்டும் குளிப்பதற்குப் போர்செட் சென்றான்.
அமிர்தவள்ளி சிரித்துக் கொண்டே செல்ல,
“ச்ச மருதாணி போச்சே” என்றாள் குந்தவை வருத்தமாக.
“வேணும்னா எங்க அண்ணன் சட்டையை வாங்கிட்டு வா, அதுல உள்ளதை வச்சு விடுறேன்” என்று தேன்யாழி கிண்டலாய் சொல்லவும்
“ஆமாம்ல அது வேஸ்டா தானே போகும், இரு வாங்கிடுவோம்” என சீரியசாய் சொன்னாள் குந்தவை.
“அம்மா தாயே!! தெரியாம சொல்லிட்டேன், மருதாணி நிறையா இருக்கு, நீ கையை கழுவு. திரும்ப வச்சு விடுறேன்” எனவும் அவள் அங்கு வாசலில் வைத்திருந்த குடத்தில் நீர் எடுத்துக் கை கழுவினாள்.
“ஏன் டி எரும! நயன்தாரா நமீதான்னுலாம் சொன்னியே, இந்த நாய் இருக்கறதை ஏன் டி சொல்லல? எனக்கு அது கிட்ட வந்ததும் அப்படி பயமாயிடுச்சு” என முறைத்தபடி குந்தவை சொல்ல,
“கூவுறதுக்குக் கோழியும் ,குரைக்கிறது நாயும் வீட்ல இருக்கனும்னு எங்க அம்மா சொல்லும், அதனால இங்க கோழி, ஆடெல்லாம் பூனை கிட்ட காப்பாத்த சில பேர் வீட்ல கண்டிப்பா நாய் இருக்கும், இப்ப டைமண்ட் வர மாட்டான், அவன் ஊர் சுத்தப் போயிட்டு நைட்டு தான் வருவான் நீ பயப்படாத” என்றாள் தேன்யாழி.
குந்தவையோ தீவிர பாவனையில், “ஏன் டி கோழி கொக்கரிக்கும், சேவல் தானே கூவும்?” என சந்தேகம் கேட்க
தேனோ, “அம்மாடியோவ் இங்கே பாருடி, பழமொழி சொன்னா அனுபவி ஆராயக் கூடாது. இதே எங்கம்மா ட்ட போய் கேட்டா என்னைப் பிச்சிப்போடும்” என்றாள் சிரித்தபடி.
“ஆமா ஆடு மாடுக்கெல்லாம் ஹன்சிகா ஆலியான்னு பெயர் வச்சிருக்கீங்க, நாய்க்கு மட்டும் டைமண்டா?! உங்க அண்ணன் அப்படி தான் சொன்னாரு” என குந்தவை கேட்க
“இது நான் வச்ச பெயர், நாய்க்கு எங்க அண்ணன் பெயர் வச்சார். நாங்க எங்க போனாலும் பின்னாடியே வரும். டெய்லி பஸ் ஏறப்போனா, என்னை ஏத்தி விட்டுத்தான் வீட்டுக்கு வரும் எங்க வீட்ல ஒருத்தர் மாதிரி.” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மருதாணியை வைத்து விட்டாள்.
குந்தவை அங்கே நன்றாய்க் காற்று வருவதால் அங்கேயே இருப்பதாய் சொல்ல, தேன்யாழி உள்ளே சென்றாள்.
அந்த தென்னங்கீற்றின் இசையும் தென்றலின் தீண்டலும் அவள் அகவோரங்களை ஆறுதலாய் வருடி செல்ல, மருத காற்றில் மனத்தில் ஒரு மாருதம் தோன்ற, அப்படியே மெய் மறந்து அமர்ந்திருந்தவளை, செந்தூரனின் காலடி ஓசை கலைத்தது.
தன் மீது தன்னலமில்லா தாயன்பு காட்டும் தோழியை, அவன் வருத்துகிறானே என்ற வஞ்சம் நெஞ்சினில் தோன்ற, அவனைக் கொஞ்சமாவது சீண்டிட சிந்தை சிந்தனை செய்து,
செந்தூரன் அவளை கடந்து செல்கையில், “என்னை தங்கச்சின்னு கூப்பிட என் அண்ணன் இருக்கான், நீங்க கூப்பிட வேண்டியதில்லை.” என அன்னியத்தன்மையும் அலட்சியமும் கலந்த பாவனையில் பாவை சொல்ல,
அவள் நேரெதிரில் வந்து நின்றான் செந்தூரன் பாண்டியன். இவள் தங்கை முறையே கிடையாது என்பதால் இவனும் தங்கை என்று சொல்ல போவதில்லை. ஆனால், அவளின் விழியும் மொழியும் எப்போதும் அவனிடம் மல்லுக்கட்டுவது போல் இருக்க,
செந்தூரன் குந்தவையின் கண் பார்த்தபடி, “ஏய்! இங்க பாரு அது என்ன அன்னிக்கும் என்னைப் பார்த்து முறைச்ச? இன்னிக்கும் இப்படி பேசற, உனக்கு என்னைப் பிடிக்கலன்னு தெரியுது. அதுக்காக இந்த திமிர் காட்ற வேலையெல்லாம் வேண்டாம்” என்று கடினமாய் சொன்னான்.
“எஸ் பிடிக்காதுதான்” என்றாள் இவளும் திமிராய்.
செந்தூரன் குந்தவையிடம், “உனக்கு என்னைப் பிடிக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை! அவ ப்ரண்ட் நீ, அவளுக்கு இருக்க மாதிரியே திமிர்” என்று குற்றம் சாட்ட
“ஆமா நீங்களும் அவ அண்ணன் இல்ல, அதான் அவளுக்கு இருக்க மாதிரியே திமிர்.” என அவனைப் போலவே சொல்ல, செல்கள் அனைத்திலும் ஏறுகிறது அடங்காமையும் ஆத்திரமும்.
இருந்தும் தாயில்லா பிள்ளை, விருந்தினராய் வந்திருக்கிறாள் என கட்டுக்கடங்கா தன் கடுங்கோபத்திற்குக் கட்டுப்பாடுகள் விதித்து,
“போடி!!” என்று மட்டும் முறைத்தபடி சொல்லிச் சென்றான்.
“பரவாயில்ல பாண்டியருக்குக் கோபம் வர வச்சாச்சு…என் ப்ரண்டை என்னமா இரிட்டேட் பண்ணுவ, ஊர்ல இருக்கவளாம் தங்கச்சியாம் போயா” என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.
அவன் காட்டும் அலட்சியங்கள் அனைத்தும் தாமரை மூலமாய் குந்தவைக்குத் தெரிய, முகம் காணும் முன்னே அவனுக்காக, அவளகத்தில் அடக்கப்பட்ட கோபங்கள் நிறைய நிறைந்திருக்க, இப்போது கொஞ்சமாய் அதைக் காட்டிய பின் அவளிடம் ஒரு நிறைவு வந்திருந்தது.
அன்றைய நாள் அப்படியாக கழிய, அன்று சனிக்கிழமை. சிக்னல் கிடைக்காததால் தனது அண்ணனிடம் பேச மாடிக்கு வந்தாள் குந்தவை.
அவனிடம் பேசி முடித்த பின் அப்படியே மாடியிலிருந்து கீழே இறங்க அவள் நினைக்கையில், யாரோ படியேறும் ஓசை. பார்த்தால் செந்தூரன் தான்.
இவளை அவன் கண்டுகொள்ளாது அங்கிருந்த ஒரு அறையில் புகுந்து கயிறுகளை எடுத்துச் செல்ல, அதைக் கண்டதும் நேற்று இரவில் நடந்த நிகழ்வு இவளுக்கு நினைவில் வந்தது.
இரவில் குந்தவை தேன்யாழியோடு அவளது அறையில் படுத்துறங்க போக, அப்போதுதான் அங்கிருந்த பல தரப்பட்ட புத்தங்களைக் கண்ட குந்தவை,
“என்னடா ஒரு குட்டி லைப்ரரியே வச்சிருக்க? இவ்வளவு புக்ஸ் அதுவும் கிராமத்துல! நிஜமா நீ இப்படி இவ்வளவு அறிவா திறமையா இருக்கறதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கேன். இப்ப பார்த்தா இவ்வளவு புக்ஸ் படிக்கிற நீ” என வியப்போடு கேட்டாள்.
“அது, சின்ன வயசுல அண்ணனும் முகலிக்காவும் அவங்க ஆத்தா வீட்டுக்கு லீவ்க்குப் போவாங்க, என்னால என்னவோ அங்க ஒட்ட முடியாது. அம்மா போனா மட்டும் தான் அவங்க கூட போவேன். இவங்க இரண்டு பேரும் லீவ் அப்போவெல்லாம் போய் ஒரு பதினைஞ்சு இருபது நாள்னு இருப்பாங்க. அப்போ நான் தனியா இருக்கேனு, எங்கப்பா என்னை லைப்ரரி அழைச்சிட்டுப் போவார். அவர் பேப்பர் படிக்க நான் குட்டி குட்டி புக்ஸ் படிப்பேன், அப்படியே புக்ஸ் மேல ரொம்ப ஈடுபாடு வந்ததும், எங்கம்மா நான் கேட்டா போதும் புக்ஸ் வாங்கி கொடுத்திருவாங்க. அவங்க ஸ்கூல்கே போனதில்லை. ஆனா நான் வச்சிருக்க புக் அதோட ஆத்தர் பேர் எல்லாம் கரெக்டா சொல்லுவாங்க ஏன்னா எனக்கு வாங்கிக் கொடுப்பாங்களே” என்றாள் கண்கள் மின்ன.
“அப்புறம் கொஞ்சம் பெரியவளானதும் முகலிக்கா நான் போகலன்னு அவளும் லீவ்வுக்குப் போறதைக் குறைச்சிட்டா நான் அக்கா, தாமரை இன்னும் சில பேர் சேர்ந்து விளையாட்டுனு புக்ஸை விட்டேன். இப்ப அவளுக்குக் கல்யாணம் ஆகி அஞ்சாறு வருசம் ஆகப்போகுது. அவ மெட்ராஸ் போனதும் திரும்பவும் வீட்ல போர் அடிக்க ஆரம்பிச்சதும் புக்ஸா வாங்கிட்டேன்.” என்ற தேன்யாழியின் பேச்சினில் அவள் தன் தனிமைக்குத் துணையாய்ப் புத்தங்களை நாடிக் கொண்டாள் என்பது புரிந்தது.
எப்படியாவது இவளுக்கு இவள் சந்தோசத்தை மீட்டுக் கொடுக்க வேண்டுமென மனம் தவிக்க, அதற்காகவே செந்தூரனிடம் தனியாய்ப் பேச எண்ணி
“ஒரு நிமிசம் உங்க கிட்ட பேசணும்” என்று சொல்ல, அவனோ கண்டுகொள்ளாமல் போக, அவன் முன்னே போய் விழி முறைத்து வழி மறைத்து நின்றாள் குந்தவை.
“இங்க பாருங்க உங்களுக்குப் பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வரும்னு எனக்குத் தெரியும், ஆனா இதை என்னால சொல்லாம இருக்க முடியல. நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல, அவ என்ன தப்பு பண்ணினான்னு இப்படி செய்றீங்க? தேனுக்கு உங்க மேல ரொம்ப பாசம், எல்லார்க்கிட்டையும் அவ ரொம்ப அன்பா நடந்துப்பா, ஆனா அவ எதிர்ப்பார்க்கிறது உங்க அன்பை! என் அண்ணன் எப்படி எங்கிட்ட நடந்துப்பான்னு தெரியுமா?” என்றது தான் போதும்.
கையில் வைத்திருந்த கயிறுகளைத் தூக்கி கீழே வீசிய செந்தூரன்,
“இங்க பாரு நீயும் உங்க நொண்ணனும் எப்படி வேணும்னாலும் இருங்க! நானும் அவளும் ஒன்னும், நீயும் உங்க நொண்ணனும் கிடையாது! அண்ணங்காரனுக்கு மரியாதைக் கொடுக்கத் தெரியல நீ பேசுறியாடி? இப்படி என் முன்னாடி வந்து இனி பேசின அவ்வளவுதான்.” என கடுமையாகப் பேசியவன் கயிறுகளை எடுத்துக் கொண்டு போனான்.
‘கொஞ்சம் ஓவராப் பேசிட்டோமோ? இல்ல இவன் ஓவரா கோவப்படுறானா?’ என யோசித்தபடியே மாடியில் இருந்து இறங்கி போனாள் குந்தவை நாச்சியார்.
அவள் கீழே சென்று பார்த்தால், தேன்யாழி தன் தாயிடம்,
“அம்மா! அண்ணனை இவளுக்கு ஒரு இளநீர் வெட்டித் தர சொல்லும்மா” என்று கேட்டாள்.
“செந்தூரா இந்த புள்ளைக்கு ஒரு இள நீர் வெட்டிக்கொடுடா.” என்று அமிர்தவள்ளி சொல்ல, கையில் இருந்த கயிற்றை மாட்டு வண்டி மீது போட்டான்.
அலக்கை எடுத்து தென்னை மரத்திலிருந்து நல்ல இளநீராய்ப் பறித்தான். அதைக் கண்ட குந்தவை,
“ஏன் டி உங்க அண்ணா மரம் ஏற மாட்டாரா? டீவியில எல்லாம் மரத்துலேயே ஏறி பறிப்பாங்க”
“அதெல்லாம் ஸ்டண்ட்ஸ் பெர்ஃபார்ம்ட் பை புரோபஷன்ல்ஸ் டி! எங்கண்ணன் சின்ன வயசுல கோச்சுக்கிட்டு மரத்துல ஏறி
கீழே விழுந்துட்டான், எங்கப்பா தார் கம்பாலயே அடிச்சுப் போட்டுட்டார், அதிலேர்ந்து அவர் ஏற மாட்டார்” என்றாள் மெதுவாய்.
அதற்குள் ஒரு இள நீரை அரிவாள் வைத்து சர சரவென வெட்டி குடிக்கும் வாகில் நடுவில் பொத்திட்டவன்,
“அம்மா” என்று குரல் கொடுக்க, தேன்யாழி எழுந்து செல்ல, அவளிடம் இளநீரை நீட்டினான்.
அமிர்தவள்ளி அத்தை என உறவு சொல்லி அழைக்க சொன்னதால், குந்தவை
“என்ன அத்தை அவங்க உங்களைக் கூப்பிட்டா இவ போறா” எனக் கேட்டாள்.
“எனக்கு என்ன ஓடுற பாம்பை கால்ல மிதிக்கிற வயசா? இவன் கூப்பிடதும் ஓடியாற…அதான் இவன் இப்படி கூப்பிடா இவ தான் போவா” என்று சொல்லும்போதே தேன்யாழி இளநீரைக் கொடுக்கவும்,
“பிள்ளைக்கு ரோட்டா(லோட்டா) கொடு டி, இப்படியே குடிக்குமோ என்னவோ” என அமிர்தவள்ளி சொல்லவும், தேனுவும் ரோட்டாவில் இளநீரை ஊற்றிக் கொடுக்க,
குந்தவையோ மிகவும் சீரியசாய், ”அது என்னடி ஓடற பாம்பை மிதிக்கிற வயசு? செத்துட மாட்டாங்க” என்று கேட்டாள்.
“இளநீரைக் குடி டி, அதெல்லாம் ஃப்ளோவுல எங்கம்மா சொல்றது. அப்படின்னா ரொம்ப சின்ன வயசு, சுறுசுறுப்பா இருக்காங்க அப்படிங்கற மாதிரி” என்று திட்டினாலும் பொருள் சொல்ல
“அம்ம்மா” என்ற செந்தூரன் குரல் கேட்க, ஓடினால் இன்னொரு இளநீரை அவன் தர, அதைக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தாள்.
“நீ குடி தேனு” என அமிர்தவள்ளி சொல்ல
“அண்ணன் உனக்குத் தான் கொடுத்திருக்கும் நீ குடிம்மா” என்று அவள் சொல்கையிலேயே மீண்டும் ஒரு இளநீரோடு அவன் குரல் கொடுக்க, உள்ளம் குதூகலிக்க ஓடிச் சென்று அதனை தனக்காய் வாங்கிக் கொண்டாள் தேன்யாழி.
“பரவாயில்லையே உனக்காக கொடுத்திருக்காரே.” என குந்தவை ஆச்சரியமும் ஆனந்தமுமாய்ச் சொல்ல
“கொடுக்காம எங்க போவான்? என் வூட்டு மரம் என் பொண்ணுக்கு இல்லாத இளநீயா?” என்று அமிர்தவள்ளி சொல்லிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்தான் செந்தூரன். அவனின் முகமே அவன் தாய் பேசியதைக் கேட்டுவிட்டான் என்பதை சொல்லிவிட, தேன்யாழி தாயை முறைத்தாள்.
செந்தூரனோ தனது வேட்டியை மடித்து ஒரு காலை ஊன்றி உட்கார்ந்தவன், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்துப் போட்டு அதில் குந்தவைக்கு வெட்டி வைத்த இளநீரை வைத்து நடுவில் ஒரே போடாய்ப் போட, அது இரண்டாய்ப் பிளவுப்பட்டது. வழுக்கையைக் கீறி, தேங்காயின் ஓரத்தில் இருப்பதை லாவகமாய் வெட்டி அதன் மூலம் வழுக்கையைத் தின்பதற்கு ஏதுவாய் வைத்தான். முதலில் செய்தது போலவே தேனும் அமிர்தவள்ளியும் குடித்து விட்டு வைத்த இளநீருக்கும் செய்து வைத்தவன், தன் தாயை ஒரு பார்வைப் பார்த்து அங்கிருந்த மரத்தின் மீது அரிவாளை கோபத்தில் ஓங்கி குத்தி விட்டுப்போனான்.
அவன் வெட்டிய வேகமே அவனது கோபத்தின் கொள்கைப் பரப்பு செயலாளராய் இருந்தது.
குந்தவையோ,
‘இவன் இவங்கம்மா மேல உள்ள கோவத்துல வெட்டுறானா? இல்லை என்னை வெட்ட முடியாதுன்னு இளநீரை இப்படி வெட்டுறானா?’ என யோசித்தாள்.
அவன் சென்றதும், அமிர்தவள்ளி ,
“இந்த பயலுக்கு ரொம்பத்தேன் கோபம் வருது, மரத்துல அரிவாள சொருகிறான் பாரு! யாராச்சும் களவாணிப்பய தூக்கிட்டுப் போவ” என்றபடி அதை எடுத்தவர் சமையல் வேலைப் பார்க்கச் சென்றார்.
அவர் சென்றதும் குந்தவை சுற்றி முற்றிப் பார்த்து விட்டு,
“உங்க அண்ணன் என்ன சீவு சீவுறார்டி? அவரு செந்தூரப் பாண்டின்னு நினைச்சேன், இன்னிக்குத்தான் சீவலப்பேரி பாண்டின்னு தெரியுது, கிழக்கு செவக்கையிலேயே இளநீ வெட்டையிலே” என குந்தவை ராகமாய்ப் பாட,
தேன்யாழி, “உனக்கு வாய்டி! எங்கண்ணனைக் கலாய்க்கிறியா? தாமரை கூட அண்ணனைப் பார்த்தா அண்ணா தவிர எதுவும் சொல்ல மாட்டா, அப்படி பயப்படுவா! எங்கண்ணன் சீவலப்பேரி பாண்டியா?” என்று அவளைக் கிள்ளினாள்.
குந்தவையோ “ நான் ஏன் பயப்படனும்? சோழ நாட்டு குந்தவை பாண்டியனைப் பார்த்துப் பயம் கொள்வதா நெவர்” என்று சிரித்தாள்.
“உனக்குக் கொழுப்புடி அவனும் சோழ நாடு தான்” என்று திட்டினாலும் அவளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்படி பேச்சும் சிரிப்புமாய்ப் பொழுது போனது.
அவர்கள் ஊரினில் திருவிழாவிற்கு முதல் நாள் தேரோட்டம் இருக்க, அவர்கள் வீடு இருக்கும் இடத்திற்குத் தேர் வந்த போது இரவு மணி இரண்டாகிவிட்டது.
ஒன்பது மணிக்கே உறங்கச் சென்று, வான வேடிக்கையும் வெடி சத்தமுமே இவர்கள் தெருவிற்குள் தேர் வரப்போவதை அறிவிக்க, அமிர்தவள்ளி எல்லோரையும் எழுப்பினார்.
குந்தவையைக் கஷ்டப்பட்டு எழுப்பி, செந்தூரன் தேரின் பின் சென்றுள்ளதால் அவனது கயிற்றுக் கட்டிலில் தான் தோழிகள் இருவரும் உட்கார்ந்திருந்தனர். உட்கார்ந்த வாகினிலேயே தேன்யாழி மேல் சாய்ந்து அப்போதும் குந்தவை உறங்கினாள்.
தேர் வந்தால் உடைப்பதற்குத் தேங்காய், பூ, பழம் போன்றவற்றை எடுத்து வைக்க அமிர்தவள்ளி கூப்பிட, தேன்யாழி குந்தவையை விட்டு எழுந்து செல்ல,
“போடி” என்ற குந்தவை தலையைக் குனிந்து கொண்டு கைகளினால் தாங்கிய வண்ணம் உறக்கத்தைத் தொடர, அவர்கள் தெருவிற்குள் தேர் வரப்போவதை அறிவிக்க வேண்டி செந்தூரன் வீடு வந்தான்.
இவள் இப்படி தூங்குவதைக் கண்டவனுக்குச் சிரிப்பு வர, தன் தாயை அழைத்து வந்தான்.
அவரும் தேன்யாழியும் தேர் வாசலுக்கு வந்த பின் குந்தவையை அழைக்கலாம் என அவளை அப்படியே தூங்க விட, செந்தூரனோ
‘திருவிழாவுக்கு வந்துட்டு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு? இப்ப தானே இந்த குயிலாட்டம் ஓயிலாட்டமெல்லாம் பார்க்கலாம், மத்தியானம் என்னமா வாயடிச்சா இப்ப பாரு கும்பகர்ணி குந்தவை’ என மனதினுள் திட்டியவன் அவளை எழுப்பி விட எண்ணி, கள்ளச்சிரிப்போடு,
“ஹேய் டைமண்ட்” என சத்தம் போட்டான்.
“ஐயோ நாய்” என்றபடி வேகவேகமாய் உட்கார்ந்திருந்த குந்தவை கயிற்றுக் கட்டிலில் ஏறி நிற்க, தூக்க கலக்கத்தில் கயிறு லூசாக இருந்த இடத்தில், அவள் காலை வைக்கத் தடுமாறி விழப்போனாள்.
‘உன்னைப் பார்க்க கூடாது என
கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணைப் பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்’